மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுற்றி நில்லாதே போ பகையே (கவிதை)

அதிரா

Feb 20, 2021

siragu tree2

 

கனம் கோர்ட்டார் அவர்களே…!

இது ஒரு வழக்கம் மாறிய வழக்கு

தினமும் காலையில்

கல்லூரிக்கு செல்கையிலே

ஒரு மன்மதனைக் காண்பதுண்டு.

சாலையோரம் நிற்பான்

வசீகரமானவன்

எத்தனைக் கண்களால்

கல்யாணம் முடிக்கப்பட்டவனோ தெரியாது

என்றாலும் அவன் யாரையும்

கண்எடுத்து காண்பானில்லை

அதில் அவனுக்கு விருப்பமில்லை

அதேசமயம் வெறுப்புமில்லை

நான் நினைப்பதுண்டு

அவன் அனாதை என்று

நாட்பட்ட பின்புதான் உணர்ந்தேன்

அவன் அனாதையல்ல

பிறரால் அனாதையாக்கப்பட்டவன்

பிறப்பால் அல்ல – பிறரால்

பின்பால் – அவன் அன்பால்

அங்கம் சம்மதித்து

இரண்டு மூன்று பேருக்கு

அப்பா ஆகிவிட்டான்

அருந்ததி பார்த்து அல்ல

அகம் பார்த்து

அவர்களும் அவன் இனத்தோர் அல்ல

பக்கத்து வீட்டு அனாதைகள் போல

அன்பால் குடும்பமான

அப்பாவும் – மழலைகளும்

அந்தக் குடும்பம்

சிலநாள் கழித்துச் செல்கையிலே

அவனை காணவில்லை

பக்கத்து வீட்டில் கேட்டேன்

அவன் கல்லறை சென்றான் என்றார்கள்

ஆம்!

அக்குழந்தைகளையும் அழைத்துச்செல்ல

அனுமதி அளித்தார்களாம் – அந்த அரக்கர்கள்

தெருவோரம் நின்றவனால்தான்

வாகனங்களுக்கு வசதி இல்லையாம்

அதனால் அவன் கழுத்தை அறுக்க

கவெர்மென்ட் (கத்தி கொடுத்து)

கட்டளை கொடுத்ததாம்

கனம் கோர்ட்டார் அவர்களே…!

மோட்டார் வாகனங்களுக்காக

போட்டார் சட்டத்தை;

இதை சற்றும் சகித்துக் கொள்ள முடியாது

இதுபோல் இன்னொருவனை

இழக்க என்னால் இயலாது

 

நீதி வேண்டும்….

நிதி வேண்டாம்…..

நீதி வேண்டும்…..

 

(இறக்கத் துணிந்த என் இனிய மரங்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்)

 

 


அதிரா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுற்றி நில்லாதே போ பகையே (கவிதை)”

அதிகம் படித்தது