செல்ல மாட்டேன் வாக்களிக்க
ஆச்சாரிMay 18, 2011
இப்படித்தான் கூறிக்கொண்டு இருந்தார் அந்த இளைஞர், மெல்ல ஏன் என்று விசாரித்ததில் கட்டுச்சோறு அவிழ்ந்தது. இவரோ வேலை நிமித்தமாக சென்னை வந்து குடி இருக்கிறார், சென்னையில் இவருக்கு குடும்ப அட்டை கிடையாது, அதனாலே வாக்கும் கிடையாது சொந்த ஊர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த கிராமம் அங்கே சென்று குறிப்பிட்ட தொகுதிக்கான வேட்பாளருக்கு வாக்களித்தாகவேண்டும்.அவர் பணி செய்யும் நிறுவனம் ஒரு நாள் விடுமுறை அளித்து உள்ளது, ஆகையால் தேர்தலுக்கு முதல் நாள் இரவு வண்டி ஏறி ஊருக்கு சென்று வாக்களிக்கலாம் என்று புகைவண்டி அட்டவணை பார்த்து உள்ளார். எல்லா வண்டியும் நிறைகுடம், காலை வண்டி, மாலை வண்டி என்று எல்லாவற்றிலும் பொங்கி வழிகிறது கூட்டம். பொன்னான வாக்கை அளித்துவிட்டு திரும்பி வரவேண்டுமே, சென்னை வரும் எல்லா வண்டிகளும் முன்பதிவு முடிந்த நிலையில் இருக்கிறது. சரி பேருந்தில் செல்லலாம் என்று எண்ணும் போதே மயக்கம் வருகிறது, போக ரூபாய் 500 வர ரூபாய் 500 என்று 1000 ரூபாய் அழ வேண்டும். ஊரில் ஆகும் செலவையும் கணக்கு பார்த்தால் 2000 ரூபாய் கணக்கில் இருந்து காணாமல் போகும். வரும் மெல்லிய சம்பளத்தில் இத்தனை காசை வாக்களிக்க அழுதால் மாத கடைசியில் பட்டினி விரதம் தான் இருக்க வேண்டும். வாக்களிக்காமல் இருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி குறுகுறுத்தாலும் ஒற்றை வாக்கின் விலையை எண்ணி குப்புற படுத்து குறட்டைவிட முடிவு செய்தார்.
தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருக்கிறதே, அது என்ன செய்து இருக்க வேண்டும், சென்னை, திருப்பூர், கோவை, ஹோசூர் போன்ற தொழில் நகரங்களுக்கு இடம் பெயர்ந்து இருக்கும் வாக்காளர்கள் இருந்த இடத்திலே வாக்கு அளிக்க வழி வகை செய்து இருக்க வேண்டாமா, இணையத்தில் வாக்களிக்க வசதி செய்து தந்தால் ஒரே தட்டில் தட்டி எறிந்து விடலாமே? எங்கே? ஆணையத்துக்கு வாகனம் பரிசோதனை செய்யவே ஆட்களும் நேரமும் போதவில்லை, எத்தனை கட்டுபாடுகள் போட்டாலும் அவசர வண்டி, காவல் வண்டி, பால் வண்டி என்று எல்லாவற்றிலும் பணத்தை கொண்டு திறம்பட விநியோகம் செய்வதை ஒரு கடமை போல செய்து கொண்டு இருக்கிறார்கள்.நீ கொடுக்கும் பிச்சை காசை வாங்க மாட்டேன் என்று காறித்துப்ப நமக்கு எல்லாம் யோக்கியதை இல்லை. பிறகு எப்படி வசதிகளும், வளர்ச்சியும் வரும்?
70% தான் வாக்களிப்பு நடக்கிறது, 100% வாக்களிப்பு நடக்க வேண்டும், அப்போது தான் மக்களாட்சி வலிமை பெறும் என்று பல காலமாக சொல்லி கொண்டு இருக்கிறோம், குறைவான வாக்களிப்புக்கான முதல் காரணமான இடம் பெயர்ந்துள்ள வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் வசதி செய்யாமல் வந்த வரை வரட்டும் என்று இன்னும் எத்தனை நாள் சோம்பிக்கிடக்க போகிறோம்?
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். சில வெளீநாடுகளில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை நடைமுறையில் உள்ளது. அது குறித்த ஆய்வுக் கட்டுரைகளை சிறகு போன்ற இணைய இதழ்கள் வெளியிட வேண்டும். அது நடைமுறைப்படுத்தப்பட்டால் கூட்டணித் தேர்தல் முறைகள் காணாமற்போகும். எல்லோரும் எந்தச்சூழலிலும் வாக்களித்தே தீருவர். நாடும் வளம்பெறும்.
வணக்கம் ராஜா
ராமன் ஆண்டாலும் கவலை இல்லை . ராவணன் ஆண்டாளும் கவலை இல்லை. ஏனா – அவங்க ரெண்டு பெரும் நல்லவங்க. சுயநலவாதிகள் கையில் நாடு சிக்கி மன்றாடிட்டு இருக்குங்க
இது ஒருவருக்கு மட்டும் நடந்த நிகழ்வாக இருக்காது. வெளியூரில் இருந்து சென்னையில் வந்து வேலை பார்க்கும் பலருக்கு இந்த நிலைதான்! வெளிநாடுவாழ் தமிழர்கள் அது பற்றி சிறிதும் சிந்திப்பது இல்லை. ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன ? என இருந்தால் , நட்டம் நமக்குத்தான்