தமிழர் சிக்கல்கள் – ஓர் அலசல்
ஆச்சாரிMar 22, 2014
ஐநாமனிதஉரிமைமன்ற 25வதுகூட்டத்தொடர்
அடுத்த வாரம் செனீவாவில் ஐநா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா தலைமையிலான 5 நாடுகள் இலங்கையில் நடந்தேறிய மனித உரிமை மீறல்களை ஆராயும் வகையில் தீர்மானம் ஒன்று உறுப்புநாடுகளின் வாக்களிப்பிற்கு வருகிறது. இதை குறித்து பலர் (நானும்) பலமுறை எழுதியாகிவிட்டது. இத்தீர்மானத்தினால் ஈழம் கிடைத்துவிடுமா? அமெரிக்கா அயோக்கியநாடு எனவே அது கொண்டுவரும் தீர்மானமும் அயோக்கியத் தீர்மானம் அதனால் தமிழர்களுக்கு விடிவொன்றும் வராது என்று ஒரு அணியும், இந்த தீர்மானத்தினால் தமிழர்க்கு என்னென்ன பலன் என்று ஆராய்ந்து, குறைந்தபட்சம் இத்தீர்மானத்தினால் ஒரு பன்னாட்டு புலனாய்வு கிடைக்க வாய்ப்புள்ளது எனவே இத் தீர்மானம் வெற்றியடைய வேண்டும் என்று மற்றொரு அணியும் போராடிக்கொண்டு இருக்கின்றன. தீர்மானம் தோல்வியடைய வேண்டும் என்று தமிழகத்தில் ஒரு சாராரும், இலங்கையின் கஜன் பொன்னம்பலம், தமிழ்நெட்.காம் போன்றவர்கள் கூறிவருகின்றனர். இத்தீர்மானம் நாம் எதிர்பார்த்த வகையில் அமையாவிட்டாலும், இத்தீர்மானத்தினால் (OP8) மனித உரிமை ஆணையர் ஒரு தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வை அமைக்க வாய்ப்புள்ளதாலும், ஓராண்டில் அந்த அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் கூறியிருப்பதால் அத்தீர்மானம் வெற்றியடைய வேண்டும் என்று, இலங்கையில் தமிழ்த் தேசிய முன்னனியினரும், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆத்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் செயல்பட்டுவரும் தமிழ் அமைப்புகளும், தாய்த்தமிழகத்தில் சில அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றன.
இத்தீர்மானத்தின் வெற்றி/தோல்வி இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். இந்தியாவும் இதை ஆதரிக்க முன்வந்துள்ளது, ஆனால் எதிர்பார்த்தபடி இந்தியா இத்தீர்மானத்தை நீர்த்துப்போகவைக்கும் பணியை திறைமறைவிலிருந்து செவ்வனே செய்து வருகிறது. இதை முறியடிக்க பல அமைப்புகள் செனிவாவிலும், உலகெங்கிலும் உழைத்து வருகின்றன. இத்தீர்மானம் வெற்றியடைய வேண்டுமென்று அமெரிக்காவின் இலங்கைத் தமிழ்ச் சங்கம், உலகத் தமிழ் அமைப்பு, அமெரிக்கத் தமிழர் அரசியல் செயலவை, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை போன்ற அமைப்புகள் பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டுவருகின்றன. இத்தீர்மானத்தை தோல்வியுறச் செய்யும் நாடுகளில் உருசியா, பாக்கித்தான், சீனா, கியூபா, சௌதி அரேபியா, பங்களாதேசம் போன்ற நாடுகளுடன் இலங்கையும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இக்கயவர்களின் விருப்பப்படியே தமிழகத்தில் சிலரும், இலங்கையில் கஜன் போன்றோரும் செயல்பட்டு வருவது வேதனையைக் கொடுக்கிறது.
இத்தீர்மானத்தை ஆதரிக்கும் பலர் இத்தீர்மானத்தினால் ஈழத்தை அடைந்துவிடுவோம் என்று என்றுமே கூறியதுமில்லை, நினைத்ததுமில்லை. ஆனால் இலங்கையின் கழுத்தைத் தொடர்ந்து நெறித்துக்கொண்டிருக்கவும், பன்னாட்டு புலனாய்வினால் நடந்த உண்மை வெளிவரும் என்பதாலும் ஆதரிக்கின்றனர். அமெரிக்காவை நன்கு அறிந்தவர்கள் இவர்கள். ஐநா மன்றத்தின் வழிமுறைப்படி இவர்கள் போராடிவருகின்றனர். இத்தீர்மானம் தமிழர்க்கு கிடைத்த ஒரு சிறிய அடுத்தப்படி, பல படிகள் ஏறவேண்டியிருக்கிறது. கீழே விழுகிறவன் எது கிடைத்தாலும் பிடித்துக்கொள்ளத் தோன்றுவது போலத்தான் இத்தீர்மானத்தை புலம்பெயர்ந்தோர் பார்க்கிறார்கள். இத்தீர்மானத்தினால் சிறுநன்மை இருப்பதை ஒருவரும் மறுக்க முடியாது. வரும் ஆண்டுகளில் இன்னும் பல தீர்மானங்களை நாம் பார்க்கவுள்ளோம். எனவே கிடைத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இலங்கையைத் தொடர்ந்து நெருக்கடியில் வைத்துக்கொள்வது நம் கடமை.
நாடாளுமன்றத்தேர்தல்களம்
தேர்தல் விழா வந்துவிட்டது. அனைத்துக் கட்சிகளும் கொள்கைகளை தூர எறிந்துவிட்டு ஒழுக்கமற்றக் கூட்டணி அமைத்து இத்தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவிட்டன. கடந்த காலத்தில் ஒருவரை தரம்தாழ்ந்து தாக்கிக்கொண்டவர்கள், கொள்கையின் படி எதிரானவர்கள் கேவலம் பதவிக்காக கூட்டணி அமைத்துள்ளனர். இதில் ஏமாறுபவர்கள் மக்கள்தான். ஆனால் மக்களும் ஒருவிதத்தில் ஒழுக்கமிழந்துதான் உள்ளனர். எவர் அதிக பொருள் கொடுப்பார் என்று எதிர்பார்த்துள்ளனர். பணம் உள்ளவர்தான் இத்தேர்தலிலும் வெல்ல வாய்ப்புள்ளது. மக்கள் என்று நாட்டு நலனைக் கருத்தில்வைத்து நல்லவர்களுக்கு வாக்களிக்கிறார்களோ அன்றுவரை இந்த அவலம் தொடரும், அதுதான் நம்நாட்டின் தலையெழுத்து.
இருந்தாலும் நல்லவர்கள் வெற்றியடைய நாம் செயல்படவேண்டும். இத்தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிடும் முனைவர் சு.ப. உதயகுமாரன், விருதுநகரில் போட்டியிடும் திரு வைகோ, சிதம்பரத்தில் போட்டியிடும் திரு. திருமாவளவன் போன்றோர் வெல்ல வேண்டும். நாடாளுமன்றத்தில் இவர்கள் குரல் தமிழர்க்கு ஆதரவாக ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும். மற்ற மாநிலங்களைப் பொருத்த மட்டில், கேரளாவில் போட்டியிரும் திருமதி. அனிதா பிரதாப், மும்பையில் போட்டியிடும் திருமதி. மேதா பட்கர், பெங்களூரில் திரு. பாலகிருஷ்ணன், திரு. அரவிந்து கெஜ்ரிவால் போன்றோர் வெற்றியடைய வேண்டும். இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஓரளவிற்கு வெற்றியடைந்து அடுத்து வரும் அரசிற்கு நல்ல வகையில் நெருக்கடி தந்து நாட்டை நல்ல முறையில் கொண்டு செல்வார்கள் என்று நம்புவோம்.
ஈழத்துஉறவுகளின்நிலைமேம்படுத்தவேண்டும்
ஈழத்தின் அவலத்திலிருந்து தப்பிவந்த நமது தொப்புள் கொடி உறவுகள் தமிழக அகதிகள் முகாம் என்கிற பெயரில் செயல்பட்டுவரும் சித்ரவதை முகாம்களில் அடைந்துவரும் அவலங்களை நீக்க நாம் அனைவரும் முயலவேண்டும். மாநில அரசிற்கு நெருக்கடி கொடுத்து முகாம்கள் நிரந்தரமாக மூடப்படவேண்டும். அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு உடனே தகுந்த அனுமதியளித்து அவர்கள் தமிழ்கத்தில் வாழும் அனைவர் போல வாழ ஏற்பாடு செய்து கொடுக்க தமிழக அரசை நாம் நிர்பந்திக்க வேண்டும். சிறப்பு முகாம்கள் அனைத்தும் சித்ரவதைக்கூடங்களே, அதை உடனே மூடி அங்கிருக்கும் அனைவரையும் உடனே விடுவித்து அவர்களுக்கு வாழ ஆதரவளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் இந்த பிரச்சினையில் தங்களின் நிலையை உடனே அறிவித்து போராடி நமது உறவுகளுக்கு வாழ வசதிசெய்து கொடுப்பது அவர்களது கடன். ஈழத்தில் கொலைகார சிங்கள அரசை எதிர்த்துப் போராடிவரும் நாம், நம் கண்முன்னே நடக்கும் அவலத்தைக் கண்டும் காணாமல் இருப்பது மனித நேயமா? விருந்தோம்பலுக்கு இலக்கணம் வகுத்த நாம் நமது உறவுகளையே சிறைக்கைதிகளாக வைத்திருப்பதை எத்தனைக்காலம் பொறுத்திருப்போம்?
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழர் சிக்கல்கள் – ஓர் அலசல்”