தமிழில் வடமொழிச் சொற்கள்
ஆச்சாரிNov 1, 2011
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் வட மொழிச் சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. நம் முன்னோர்களின் மொழிப்பற்றாலும் தமிழறிஞர்களின் தொண்டாலும் வடமொழிச் சொற்களால் தமிழில் பெரிய பாதிப்பு உருவாகவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல வடமொழிச் சொற்கள் கைவிடப்பட்டு எளிய தமிழ்ச் சொற்கள் மீண்டும் பழக்கத்திற்கு வந்துள்ளன. இன்றைய கல்விச் சூழலாலும் ஊடகங்களாலும் நம்மில் பலருக்கு வடமொழிச் சொற்களுக்கும் தமிழ் சொற்களுக்கும் வேறுபாடே காண முடியாத நிலை உருவாகியுள்ளது. கீழ்கண்ட பத்து சொற்களில் வடமொழிச் சொற்கள் எத்தனை தமிழ்ச் சொற்கள் எத்தனை என்று கண்டறியுங்கள் பார்க்கலாம்.
ஆரம்பம்
கல்யாணம்
அவசரம்
அன்னியம்
ஞாபகம்
சந்தோசம்
கர்வம்
துரோகம்
பரம்பரை
யோக்யதை
மேலே கொடுக்கப்பட்டுள்ள பத்து சொற்களுமே வடமொழிச் சொற்களே. பல வடமொழிச் சொற்கள் தமிழில் வடமொழிச் சொற்களை எழுதுவதற்காகவே உருவாக்கப்பட்ட எழுத்துக்களை (ஜ, ஷ, ஸ, ஹ, க்ஷ, ஸ்ரீ) உள்ளடக்கியிருக்கின்றன. இது போன்ற சொற்களை வடமொழிச் சொற்கள் என்று எளிதாக கண்டறிந்துவிடலாம். உதாரணம்: நஷ்டம், ஆக்ஷேபம் போன்ற சொற்கள். ஆனால் பல வடமொழிச் சொற்கள் தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்துக்களை மட்டுமே கொண்டிருக்கின்றன. உதாரணம்: ஆரம்பம், கல்யாணம் போன்ற சொற்கள். இவற்றை பெரும்பாலானோர் தமிழ்ச் சொற்கள் என்றே எண்ணுகின்றனர்.
நம் வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தப்படும் வடமொழிச் சொற்களையும் அதற்கு இணையான தமிழ்ச் சொற்களையும் கீழே அட்டவணைப்படுத்தி உள்ளோம்.
வடமொழிச் சொல் | தமிழ்ச் சொல் |
இருதயம் | உள்ளம் |
ஆச்சர்யம் | வியப்பு |
ஆரம்பம் | தொடக்கம் |
அக்ஷேபம் | மறுப்பு |
சங்கீதம் | இன்னிசை |
கோஷ்டி | குழு |
அபிவிருத்தி | செழிப்பு |
அபூர்வம் | அருமை |
அர்த்தம் | பொருள் |
அவசரம் | விரைவு |
அவசியம் | தேவை |
அனாவசியம் | தேவையற்றது |
அற்புதம் | புதுமை |
அன்னியம் | அயல் |
அனுபவி | நுகர் |
ஆசீர்வாதம் | வாழ்த்து |
சந்தோசம் | மகிழ்வு |
கர்வம் | செருக்கு |
சகஜம் | இயல்பு |
சகோதரன் | உடன்பிறந்தவன் |
கல்யாணம் | திருமணம் |
சந்ததி | மரபு |
சீக்கிரம் | சுருக்க |
சுதந்திரம் | உரிமை |
சேட்டை | குறும்பு |
ஞாபகம் | நினைப்பு |
தருமம் | அறம் |
துரோகம் | இரண்டகம் |
நஷ்டம் | இழப்பு |
நிஜம் | மெய் |
பக்தன் | அன்பன் |
பரம்பரை | தலைமுறை |
பிரகாசம் | ஒளி |
பாபம் | தீவினை |
யோக்யதை | தகுதி |
ஜன்மம் | பிறவி |
ஸ்ரீ | திரு |
நாம் அனைவரும் வடமொழிச் சொற்களைத் தவிர்த்து தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும். தவிர்க்க இயலாமல் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தினால் அதற்கான விதி முறைகளுக்கேற்ப பயன்படுத்த வேண்டும். வடமொழி எழுத்துகளை தமிழில் பயன்படுத்த உதவும் சில விதிமுறைகள் கீழ்கண்ட அட்டவணையில் விளக்கப் பட்டுள்ளது.
வட எழுத்து | தமிழில் எழுதும் முறை | உதாரணம் |
ஜ | ‘ச’ அல்லது ‘ய’ | ஜயம் – சயம்
பங்கஜம் – பங்கயம் |
ஷ | ‘ச’ அல்லது ‘ட’ | ஷண்முகம் – சண்முகம்
விஷம் – விடம் |
ஸ | ‘ச’ அல்லது ‘ய’ | ஸபா – சபை
நேசம் – நேயம் |
ஹ | ‘அ’ அல்லது ‘க’ | ஹரி – அரி |
க்ஷ | ‘க்க’ அல்லது ‘ட்ச’ | பக்ஷி – பட்சி
பக்ஷம் – பக்கம் |
சொல்லிருதியில் வரும் ‘ஆ’ | ‘ஐ’ | மாலா – மாலை
கலா – கலை |
‘ர’ | ‘அ’ அல்லது ‘இ’ உடன் வரும் | ரங்கம் – அரங்கம்
ராமன் – இராமன் |
‘ல’ | ‘இ’ அல்லது ‘உ’ | லாபம் – இலாபம்
லோகம் – உலோகம் |
‘ய’ | ‘இ’ அல்லது ‘உ’ | யமன் – இயமன்
யுத்தம் – உயுத்தம் |
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
அபூர்வம் – அரிய,சரியாக இருக்குமா?, சீக்கிரம் -?, சுதந்திரம்-உரிமை சரியா?, பதிவுக்கு நன்றி
சகோதரன் தமிழ் சொல் என்றே எனக்கு தோன்று கிறது. சக + உதிரன்(குருதி) .. கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்து மதம் பார்க்கவும்.
அய்யா சக என்பதும் உதிரம் என்பதும் தமிழ் சொல் அல்ல
அருமையானப் பதிவு…. மிக்க மகிழ்ச்சி…
இந்த முயற்சி தொடரட்டும். இது பலருக்கும் நாம் பயன்படுத்தும் வடமொழியின் சொற்கள் தெரியவரும். மேலும் தமிழில் இருந்து வடமொழி எடுத்துக்கொண்ட சொற்களையும் வெளியிடுஙள். தமிழின் தொன்மை அணைவரும் அறியட்டும். நன்றி.
தமிழில் இருந்து வடமொழி எடுத்துக்கொண்ட சொற்களையும் வெளியிடுஙள்.
நல்ல பதிவு வாழ்த்துக்கள்,தொடரட்டும் உங்கள் படைப்புகள்
தமிழில் தமிழ் சொற்களை உபயோகிக்க வேண்டும், எந்த மாற்றுகருத்தும் இல்லை!
இன்றைய சூழலில் ஆங்கில சொற்கள் உபயோகிக்க மறுத்தலே அதிமுக்கியமென கருதிகிறேன்.
மிக நல்ல முயற்சி
மிக்க மகிழ்ச்சி