தமிழ் நாட்டில் அடிக்கடி பரவும் காய்ச்சலைத் தடுப்பது எப்படி ?
ஆச்சாரிNov 1, 2013
சிறகு இணைய இதழ் வாசகர்களுக்கு எனது அன்பான வணக்கம், நான் மருத்துவர் அருண்சின்னையா, மறுபடியும் உங்களோடு அளவளாவுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எவ்வளவோ தலைப்புகளைப்பற்றி நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம். இன்று நாம் எடுத்துக்கொண்ட தலைப்பு மிகவும் முக்கியமானது. தமிழக மக்களை அடிக்கடி பிடித்துக்கொள்ளும் அந்தக் கொடிய காய்ச்சல் என்ற நோயைப்பற்றிக் கூறப்போகிறேன்.
காய்ச்சல் எப்படி வருகிறது? அதை எப்படியெல்லாம் தடுக்கலாம்? என்பதைப் பற்றிப் இக்கட்டுரையில் கூறுகிறேன். காய்ச்சல் என்பது ஒரு நோயே கிடையாது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். உடம்பில் உஷ்ணநிலை திடீரென்று அதிகரிக்கக்கூடிய ஒரு தன்மைதான் காய்ச்சல். இதுவே நாடுகள் அடிப்படையில் வேறுபடும். அதாவது வளரும் நாடுகளில் காய்ச்சல் அதிகமாக இருக்கும். வளர்ந்த நாடுகளில் மிகக்குறைவாக இருக்கும். ஏனென்றால் வளரும் நாடுகளில் விழிப்புணர்வு பற்றாக்குறையாக இருக்கும், வளர்ந்த நாடுகளில் விழிப்புணர்வு சிறிது கூடுதலாக இருக்கும்.
ஆக வளரும் நாடுகள் தனக்கான கொள்கைகள், பாரம்பரியம் எல்லாவற்றையும் தனக்குள்ளே கொண்டிருந்தால் கூட அதை செயல்படுத்துவதில் இன்று சுணக்கமான நிலை இருக்கிறது. விழிப்புணர்வைக் கொண்டுபோகக்கூடிய தன்மை என்பது ஆளுகின்ற அரசு தான் செயல்படுத்த வேண்டும் என்று நாம் அடிக்கடி பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஒரு செயல்பாடும் இல்லை. சரி நம் விசயத்திற்கு வருவோம்.
காய்ச்சலுக்கான அறிகுறி :
ஒரு சராசரி மனிதனுடைய உடலில் உள்ள வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்கீட் கண்டிப்பாக இருக்கவேண்டும். இந்த வெப்பநிலையை விட கூடுதலாக ஆகும்பொழுது கிட்டத்தட்ட 100 ரைத்தாண்டி 101, 102 பாரன்கீட் க்குச் செல்லும்பொழுது உடலில் உஷ்ணநிலையை நாம் உணர ஆரம்பிப்போம். நம் அருகிலே இருக்கக்கூடிய நபர் நம்மைத் தொட்டுப் பார்க்கும்பொழுது, ஏன் உடல் சூடாக இருக்கிறது? என்னாச்சு? என்ற கேள்வி வருவது இந்த உஷ்ணநிலை வெளிப்பாட்டால்தான்.
எனவே சராசரி வெப்பநிலையைவிட நம் உடம்பில் வெப்பநிலை அதிகமாகும்பொழுது கண்கள், காதுகள், நாசித்துவாரங்கள் இவற்றில் இந்த உஷ்ணம் வெளிப்படும். அதேபோல் பேசும் பொழுது அந்த உஷ்ணநிலை வெளிப்படுவது, கை,கால் அசதி, சோர்வு உண்டாவது, திடீரென்று குளிர ஆரம்பிப்பது, நடுங்க ஆரம்பிப்பது இவைகள் எல்லாம் காய்ச்சலுக்கான அறிகுறிகளாக நாம் சொல்லலாம்.
காய்ச்சல் எப்படி வருகிறது?
இந்தக் காய்ச்சல் என்று பார்க்கும்பொழுது, வைரஸ், பாக்டீரியா, இன்னும் சில தொற்று என இந்த மூன்று விசயங்களால் மட்டுமே நமக்கு இந்தக் காய்ச்சல் வரும். இம்மூன்றும் நம் உடம்பில் ஒரு அந்நியப் பொருளாக ஊடுருவும்பொழுது நம் உடம்பின் செயல்பாடுகளைக் குறைக்கக்கூடிய தன்மை, இதனால் உண்டாகக்கூடிய நிலைதான் காய்ச்சல். வைரஸ், பாக்டீரியா, தொற்று இவைகள் சுற்றுப்புற சூழல்களால் ஒருபுறம் வந்தாலும்கூட, பிரதான அடிப்படையில் பார்க்கும்பொழுது உணவு அடிப்படையில் நிறைய நபர்களுக்கு இந்தப் பிரச்சனை வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
உணவின் மூலம் காய்ச்சல் வருவது எப்படி?
நாம் தினசரி நேரத்திற்கு எடுக்கின்ற உணவைத் தேவையான நேரத்தில், தேவையான அளவு எடுக்கும்பொழுது கண்டிப்பாக எந்தப் பிரச்சனையும் வராது. இதைத்தான் நாம் சொல்கிறோம் உணவைப் பிரதானப்படுத்தி ஒவ்வொரு நோயையும் நாம் அணுகும்பொழுது, கண்டிப்பாக நாம் அதற்கான ஒரு வழிமுறையைப் பார்க்க முடியும்.
இந்த வைரஸ் உணவு, குடிக்கின்ற தண்ணீர், சுவாசிக்கின்ற காற்று, நம் இருப்பிடத்தில் இருக்கக்கூடிய கழிவுகள் மூலமாகவும் வைரஸ் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. அதை எப்படியெல்லாம் தடுக்கலாம், நிவர்த்தி செய்யலாம் என்று பார்க்கும்பொழுது தான் காய்ச்சலிலிருந்து தப்பிக்க முடியும். ஆனால் பிரதான காரணி உணவுதான். இதை இனி நாம் முழுமையாக ஒரு ஆய்வு செய்வோம்.
எந்த உணவின் மூலம் என்ன காய்ச்சல் வரும்?
அடிக்கடி அசைவ உணவு, அதிகபட்சம் கொழுப்பு உணவு எடுக்கக்கூடியவர்களுக்கு காய்ச்சல் வரும். இன்று துரித உணவுகளை (பாஸ்ட்புட்) எடுத்துக்கொண்டால், தமிழகத்திலே இவ்வுணவு உண்பது ஒரு நாகரீகமாகிவிட்டது. பெருநகரங்களிலிருந்து சிறுநகரம் வரை கிடைக்கக்கூடிய ஒரு உணவாக பீட்சா, பர்கர், சிக்கன் 65 இவையெல்லாம் அதிகமாக விற்பனை செய்யக்கூடிய ஒரு காலம் இன்று தமிழகத்தில் உருவாகி இருக்கிறது.
தவிர்க்கவும், சேர்க்கவும் வேண்டிய உணவுகள்:
இன்று தமிழக கிராமங்களில், அனைவரும் கூடி அமரக்கூடிய அரசமரத்தடியில் கூட சிக்கன் 65 என்ற பொறித்த அசைவ உணவை, மாலை நேரங்களில் அனைவரும் உண்ணக்கூடிய அளவிற்கு நாம் முன்னேறியிருக்கிறோம். என்ன என்றால் பண்டைய உணவுமுறைகள் முழுமையாக சிதைக்கப்பட்ட காலத்தில் நாம் வாழ்வதாலும், சிதைந்த உணவுகளை நாம் தொடர்ந்து எடுப்பதாலும், அதன் மூலம் கிடைக்கக்கூடிய கலோரித்திறன் அதிகமாக இருக்கின்றதாலும், அதை எடுக்கக்கூடிய உணவுகளில் நம் உடல் அதீத உஷ்ண நிலை பெற்று பல நோய்கள் வரக் காரணமாகிறது.
கடின உணவுகளான இறைச்சி உணவுகளை உண்பதால், நாம் நிறைய வைரஸையும், பாக்டீரியாவையும் நம் உடம்பினுள் நாமே செலுத்துகிறோம் அதுதான் உண்மை. அது சார்ந்த உணவுகளை முழுமையாகத் தவிர்க்கும் பொழுது அல்லது குறைக்கும் பொழுது கண்டிப்பாகக காய்ச்சலை ஒரளவு தடுக்க முடியும், சில நேரங்களில் முழுமையாகவே தடுக்க முடியும். இதற்கு மாறாக பண்டைய தமிழர் உணவு என்னவென்றால், அன்றாட உணவில் ஒரு கீரை, பச்சடி, வத்தல், மெல்லியதாக ஒரு ஊறுகாய், வேண்டுமென்றால் சிறிது மோர், தயிர், ஒரே ஒரு குழம்பு இந்த மாதிரிதான் நம் தமிழ்ச் சமூக அமைப்பில் நமது உணவு முறைகள் இருந்தது.
நமது உணவுமுறைகளில் பூரி, பரோட்டா, சப்பாத்தி, பிராய்லர் கோழி இவைகள் எல்லாம் கிடையாது. ஆக உணவுமுறை மாற்றம் இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்தில் ஊடுருவி பாய்ந்ததால் நிறைய நோய்களுக்கு நாம் இன்று ஆட்பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆக இந்த உணவை முழுமையாகச் சீர்தூக்கி ஒழுங்கு செய்யும்பொழுது நாம் முழுமையாக காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து விடுபடமுடியும். 102 டிகிரி காய்ச்சல் பெரியவர்களுக்கு பாதிப்பாகத் தெரியாது. அதுவே ஒரு குழந்தைக்கு இருந்தால் கண்டிப்பாக காய்ச்சல் தெரியும். இந்த காய்ச்சல், குறிப்பாக வெயிலில் அதிகமாக அலைபவர்களுக்கு ஓரளவிற்குத் தெரியும்.
அடிக்கடி சளிப்பிடித்தவர்களுக்கும் இந்தக் காய்ச்சல் வரும். சளி, ஏன் பிடிக்கிறது என்றால் தொற்று, அதாவது கிருமிகளாலும், வைரஸ்களினாலும் வரக்கூடிய காய்ச்சல் உண்டு, தொற்றினாலும் வரக்கூடிய காய்ச்சல் உண்டு. எனவே தொற்று ஆகும்பொழுது கண்டிப்பாகக் காய்ச்சல் வரும். திடீரென்று உடம்பில் நீர் சத்து குறையக்கூடிய தன்மை அதிகமாக இருந்தால் காய்ச்சல் கண்டிப்பாக வரும். இந்த நீர்சத்து எப்பொழுது குறையும்? எனும்போது நான் அசைவ உணவைப் பற்றிக் கூறவேண்டியுள்ளது.
வட நாட்டு உணவால் வரும் காய்ச்சல்:
நம் உடலில் அதிகபட்சமான அசைவ உணவைச் சாப்பிடும்பொழுதும், அதிகமான, காரமான உணவுகளை சாப்பிடும்பொழுதும், நிறைய கேக்ஸ், பப்ஸ், பானிப்பூரி, பேல்பூரி, பீட்சா, பர்கர், தந்தூரி, நூடுல்ஸ் இந்த மாதிரியான எடுக்கும்பொழுது நம் உடம்பில் உள்ள நீர்சத்தின் அளவு குறையும். உடம்பில் நீர்சத்தின் அளவு குறைவதனால் உஷ்ண ஆதிக்கம் அதிகமாகும். அவ்வாறு உஷ்ணம் அதிகமாகும் பொழுது காய்ச்சலை உண்டாக்கக்கூடிய வைரஸ் கிருமிகள் நிறையும். காய்ச்சல் உண்டாகும். ஆக உணவுதான் பிரதானம். எனவே இந்த மாதிரியான உணவுகளை எடுத்தால் கண்டிப்பாகக் காய்ச்சல் வருவதற்கான அறிகுறி இருக்கிறது.
அதேபோல் எடுக்கக்கூடிய உணவின் அளவைவிட, நிறைய உடல் உழைப்பு அதிகமாக இருக்கும்பொழுது கண்டிப்பாக காய்ச்சல் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. சிறு குழந்தைகள் ஓடி, ஆடி, விளையாடிக் களைத்துப்போய் உடம்பில் உள்ள நீர்சத்துக்கள் எல்லாம் சுண்டியிருக்கும் நேரத்தில் வீட்டிற்கு வந்தவுடன் இன்று இருக்கக்கூடிய லேஸ், குர்க்குரே, போன்ற கார உணவுகளையும், மாசா, பேன்டா, கொக்கோகோலா, பெப்சி போனர் குளிர்பானங்களையும் கொடுத்து, அந்தப் பிள்ளைகளைக் கெடுக்கின்றோம்.
இந்த உணவுகளுக்கு மாற்றாக, குழந்தைகள் ஓடி, ஆடி, விளையாடி வரும்பொழுது காராமணி, சுண்டல், பச்சைப்பயிறு இவற்றையெல்லாம் வறுத்தோ அல்லது அவித்துக் கொடுத்துப் பிள்ளைகளை வளர்த்தோமென்றால் குழந்தைகளுக்குக் கிருமித் தொற்று ஏற்படாது. ஆக அதிக உடலுழைப்பைச் செலுத்திட்டு அடுத்து எடுக்கக்கூடிய உணவில், உணவுத் தொற்றை உடலில் உண்டுபண்ணக்கூடியதாக இருக்கக்கூடாது. மேலும் மிகவும் களைப்பாக இருக்கின்ற நேரத்தில், அதிகமாக எடுக்கின்ற அசைவ உணவும், கார உணவும், துரித உணவும் கண்டிப்பாகக் காய்ச்சலைக் கொண்டுவரும். ஆக இதை முழுமையாக நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
உஷ்ணக் காய்ச்சல்:
அடுத்து உடம்பில் சூட்டுக்கட்டி, சிலருக்கு பார்த்தீர்கள் என்றால் அக்கிள் எனும் கட்டியானது, தொடை இடுக்கில் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. காலில் சிறிது அடிபட்டால் கூட அந்த அடிபட்ட இடத்திற்கு மருந்துபோடுவோம். ஆனால் இரவு நேரத்தில் குளிர் காய்ச்சல் வர ஆரம்பித்துவிடும். அடிபட்டதால் இரத்த நாளத்திசுக்களில் சில பாதிப்புகள் உண்டாகி கால் இடுக்குகளில் நெரிகட்டிக்கொண்டு, கட்டியாக மாறி குளிர் காய்ச்சல் வர ஆரம்பித்துவிடும்.
என்னவென்றால் தொற்று, ஒரு இடத்தில் குவியும் பொழுது கண்டிப்பாகக் காய்ச்சல் வரும். தொற்று எங்கெல்லாம் குவியும் என்று பார்த்தோமென்றால் ஒரு சிலருக்கு காய்ச்சலுக்கு முன்னால் தொண்டை பாதிப்பு வரும். தொண்டையில் வைரசோ, பாக்டீரியாவோ குவியும்பொழுது, அல்லது அது அதிகமாகும் பொழுது, உடம்பில் உஷ்ணத்தை அதிகப்படுத்திக் காய்ச்சலாக வெளிப்படும். அதே போல் நுரையீரலில் நிறைய சளி கட்டிக்கொள்ளும் பொழுது, நுரையீரலில் தொற்று அதிகமாக குவியும். அப்பொழுதும் நிமோனியா போன்ற காய்ச்சல் வரக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது.
கல்லீரல் காய்ச்சல்:
அதேபோல் கல்லீரலில் தொற்று, வைரஸ் எல்லாமே குவியும் பொழுது கல்லீரல் சார்ந்த காய்ச்சலும், அதன் கூடவே காமாலை போன்ற நோய்கள் வரும். அதனடிப்படையில் கல்லீரல் கெட்டுப்போகக்கூடிய தன்மை அதாவது சிரோசிசா (இதை பித்தசுரம் என்று சித்தமருத்துவத்தில் சொல்வோம்) இந்த மாதிரியான நோய்கள் எல்லாம் வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
அடுத்து மூட்டுவலி, மூட்டுகளுக்குப் பலன் தருவது கால்சியம், அந்த கால்சியம் முழுமையாக குறையக்கூடிய தன்மையில் கண்டிப்பாக காய்ச்சல் வரும். மூட்டுவலிக்காக கொடுக்கக்கூடிய சில மருந்துகள் ஸ்ட்ராய்டு அடிப்படையில் நவீன மருந்துகள் இருப்பதால், அந்த மருந்துகள் அடிப்படையிலும் காய்ச்சல் வரும்.
ஆங்கில மருந்து உண்பதால் வரும் காய்ச்சல்கள்:
இன்றைக்குப் பரவலாக இந்தியா முழுக்கவே காய்ச்சல் என்றால், பாராசெட்டமல், காம்பௌன்டு மெடிசின்ஸ் தான் நவீன மருத்துவமுறையில் கையாளப்படுகிறது. இது என்ன செய்யும் என்றால் கல்லீரலைக் கெடுக்கக்கூடிய தன்மை இம்மருந்துகளுக்கு உண்டு. நீங்கள் மருந்துக்கடைக்குச் சென்று மருந்து வாங்கும்பொழுது அந்த மருந்து அட்டையிலே (கான்ட்ரா இன்டிகேசன்) அதாவது விளைவு என்ன? இந்த மருந்து எவ்வாறு செயல்படும்? இந்த மருந்து எப்படியெல்லாம் பக்கவிளைவை உண்டாக்கும்? என்பதையெல்லாம் அங்கே போட்டிருப்பார்கள். இந்தத் தகவல்கள் எல்லாம் அந்த மருந்து அட்டையில், சிறு எழுத்தில், நம் கண்ணுக்குத் தெரியாத அளவில் இருப்பதனால் அதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு வருவதில்லை. ஆக காய்ச்சலுக்குக் கொடுக்கக்கூடிய நவீன மருந்துகள், கல்லீரலைக்கெடுக்கக் கூடியது என்பதுதான் உண்மை. ஒருமுறை காய்ச்சல் வந்துவிட்டால் இரண்டு, மூன்று நாட்கள் நவீன மருந்தை எடுத்துக் காய்ச்சலைச் சரிசெய்து விட்டால் கூட அடுத்து ஒருமாத காலத்திற்குக் கல்லீரலை பலப்படுத்தக்கூடிய சித்தமருந்துகளைக் கொடுக்க வேண்டும். இந்த மாதிரி, ஒருங்கிணைப்பான மருத்துவமுறை என்பது இந்தியாவில் சாத்தியமா? என்றால் கண்டிப்பாக சாத்தியம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் என்னுடைய மருத்துவமுறைதான் சிறந்தது என்று கூறிக்கொண்டு மனித உயிர்களோடு விளையாடுவதை நாம் வேடிக்கையாகக் கொண்டுள்ளோம்.
-தொடரும்
மேலும் தொடர்புக்கு:
சித்த மருத்துவர் அருண் சின்னையா
எண்: 155, 94 வது தெரு,
15 வது செக்டார், கே.கே.நகர்,
சென்னை – 78
அலை பேசி: 98840 76667
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ் நாட்டில் அடிக்கடி பரவும் காய்ச்சலைத் தடுப்பது எப்படி ?”