தாயென தமிழ்நாடு பிறந்த நாள் ! (கவிதை)
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிNov 2, 2019
கலைகளின் நாடு தீரத்தின் வீடு
கன்னல் சாற்றின் மொழியது பாடு
காலம் கனியும் தென்றல் வீசும்
கீழ்வானம் சிவந்து மாரி பொழியும்
எழில் ஓவியமாய் காலமகள் வரைந்த
ஏட்டின் பக்கங்கள் வரலாறு படைக்க
ஏற்றமிகு மிடுக்கோடு பாரில் ஒளியேற்றி
எவ்வம் துடைத்திட்ட சில்லெனும் தூறலாய்
தூளியில் ஆடும் குழவியின் நெற்றியில்
மென்மை முத்தம் தந்தே களிப்பாய்
மகிழ்ந்து தவழ்ந்து பறந்து திரியும்
வானம்பாடி வண்ணமிகு மஞ்ஞை அழகோடு
நரம்பின் இசையாய் யாழ் ஒலிக்க
நாவின் ஓசை தமிழ் ஒலிக்க
நெல்லின் மணியாய் கண்ணின் ஒளியாய்
பைந்தமிழ் மணக்க தணல் வெப்பத்தில்
தமிழ்நாடு எனும் பெயர் உதித்த நாள்
தரணியில் தமிழ் தழைத்த நாள்
திராவிட முரசறைந்து கொண்டாட தமிழர்க்கு
தாயென தமிழ்நாடு பிறந்த நாள் !
போர்க்களம் காண காலம் துரத்தினாலும்
பயணத்தின் வலிகள் கால்கள் கண்டாலும்
பாலையின் வெம்மை முகம் தாக்கிட்டாலும்
பரந்த நிலமதிலிருந்து பகை துரத்துவோம்!
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தாயென தமிழ்நாடு பிறந்த நாள் ! (கவிதை)”