தொகுப்பு கவிதை (நாடோடியின் ஏக்கம், ஐக்கூவும் தமிழ்வார்ப்பே)
தொகுப்புApr 28, 2018
நாடோடியின் ஏக்கம்
-இல.பிரகாசம்
நெஞ்சமோ ஏக்கம் கொள்ளுதடி –என்
கண்ணிலோ துன்பம் கசியுதடி!
உழைச்சு வாழுங் குடிநாம் இருப்பதற்கோ
ஒருவீடு இல்லை யடியே!
ஊரோடு வாழக் குடிசையு மின்றி
தெருவே வீடென வாழவோ
ஏழை என்ற பெயரொடு நாம்வாழ
தனிதே சமொன்று உண்டோ?
கூழ்குடிப் பதற்கும் பஞ்சம் பொழப்பு
கூடிபெற்ற பிள்ளையும் பாவமோ?
ஓடி ஒடுங்கி தேகமிழைத் தாலும்
ஓடி வந்துசோ றிடுவரோ?
வாடி வதங்கி வெந்து போக
கோடி வாங்க பணமுண்டோ?
ஏழ்மை என்னுங் கொடிய நோய்தீர
கானிநிலம் கூட கிட்டாதோ?
காடு கொண்டு செல்ல எனக்கு
ஆறடி கூட கிட்டாதோ?
(கோடி- துணி)
(நிலமற்ற மக்களின் புலம்பல். மனித இனம் நிலத்தின் மீது
கொண்டுள்ள அதிகாரம் அரசியல் வீழ்ந்து ஒழிந்து சமத்துவம்
தோன்ற வேண்டும்.)
ஐக்கூவும் தமிழ்வார்ப்பே
-பாவலர்கருமலைத்தமிழாழன்
புதுக்கவிதை புதுக்கவிதை என்றே யின்று
புகழ்ந்திங்கே புகல்வோரே எண்ணிப் பாரீர்
புதுக்கவிதை தனிலுரைத்தால் மக்க ளுக்குப்
புரிந்துவிடும் எளிதாக எனச்சொல் வோரே
இதுதான்பா எனமரபில் பகர்வோர் தம்மை
இருட்டடிப்பு செய்திங்கே ஒதுக்கு வோரே
எதுகவிதை என்பதினைத் தமிழி லுள்ள
எழிற்கவிதை தனைப்படித்தே அறிந்து ரைப்பீர் !
அடியொன்றில் இயற்றிட்ட கவிதை தானே
அறநெறியைச் சொல்கின்ற ஆத்திச் சூடி
அடியிரண்டில் இயற்றிட்ட கவிதை தானே
அகிலமெல்லாம் போற்றுகின்ற மறையின் முப்பால் !
அடிநான்கில் முக்கருத்தைச் சொல்லும் பாட்டே
அழகுபழ மொழியென்னும் வெண்பாப் பாட்டு
கடிகையொடு ஏலாதி பஞ்ச மூலக்
கவிதையெல்லாம் எளிதாகப் புரியும் பாட்டே !
குறுந்தொகையின் பாட்டென்ன விளங்கா பாட்டா
குறுகியநல் சிந்தியலும் அகவல் யாப்பும்
நறுங்கருத்தை எளிமையாகச் சொல்லு தற்கு
நம்முன்னோர் கண்டளித்த எளிய பாக்கள் !
குறுமையெனும் ஐக்கூவும் லிமிரைக் காவும்
குட்டையான சென்ட்ரீயும் தமிழின் வார்ப்பே
கறுந்திரையாம் எண்ணத்தை கழற்றி விட்டுக்
கனித்தமிழின் மரபினிலே எழுத வாரீர் !
நாடோடியின் ஏக்கம்
நாடோடியின் ஏக்கம்
ஐக்கூவும் தமிழ்வார்ப்பே
தொகுப்பு
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தொகுப்பு கவிதை (நாடோடியின் ஏக்கம், ஐக்கூவும் தமிழ்வார்ப்பே)”