நகரம் பாதி கிராமம் பாதி – ஓஸ்லோ
ஆச்சாரிMay 16, 2011
நோர்வேயின் தலைநகர் ஓஸ்லோவிற்கு வேலை நிமித்தமாக வந்திருந்த நான் ஒரு சனிக்கிழமை காலையில் ஊர் சுற்றிப் பார்க்கலாம் என கிளம்பினேன், வெளியே வந்த நான் அந்த நகரின் அழகை கண்டு உறைந்து போனேன். முன் தினம் பெய்த பனி, நகர் முழுவதும் மூடியிருந்தது. அதில் சூரிய வெளிச்சம் பட்டு தெறித்த காட்சி! அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இலையை இழந்த மரங்களில் படர்ந்து இருந்த பனி, மலரை விட பல மடங்கு அழகான வடிவங்களை ஏற்படுத்தி இருந்தது. நகரை சுற்றி இருந்த மலைகளும் கூட வெண்மையாகக் காட்சி தந்தன. ஓஸ்லோவின் புகழ் பெற்ற கார்ல் யோகன்ஸ் தெருவில், கடுங்குளிரில் நடுங்கியபடி, மெதுவாக ஒரு முனையில் இருந்து அடுத்த முனைக்கு, சுற்றி இருந்த காட்சிகளின் அழகை அசை போட்டபடி நடந்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. ஆகா, அப்படி ஒரு அழகு!!
உலகின் மற்ற பெருநகரங்களில் இருந்து ஓஸ்லோ வித்தியாசமானது. இங்கு லண்டன், நியூயார்க் அல்லது சென்னை போல பரபரப்பான வாழ்க்கை இல்லை. வானுயர கட்டிடங்கள் இல்லை. மணிக்கணக்காக கார்கள் அடைபட்டு நிற்கும் சாலைகள் இல்லை. ஓஸ்லோ ஒரு பெரிய நகரம். ஆனால் அதே நேரம் ஒரு கிராமம். ஓஸ்லோ நகர் அழகின் வனப்பை இன்னதென வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.
இந்த நகரில் எங்கு இருந்தாலும் ஒரு ஏரிக்கோ அல்லது மலைக்கோ அல்லது காடுகளுக்கோ கால் மணி நேரத்தில் சென்று விடலாம். உங்கள் மனம் விரும்பும் வரை இயற்கையோடு இருந்து ரசித்து விட்டு வரலாம். கோடை காலத்தில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் இங்கு சூரியன் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு மறைந்து காலை இரண்டு அல்லது மூன்று மணிக்கு வந்து விடும். இந்த மாதங்களில் தட்பவெட்ப நிலையும் மிதமாக இருக்கும். அந்த நேரங்களில் மணிக்கணக்காக காடுகளில் நடந்து திரியலாம். ஏரிகளில் படகு விடலாம். மிதி வண்டியில் சுற்றலாம். இங்கு உள்ள
காடுகளில் இன்னொரு சிறப்பு அம்சம் யாதெனில் பாம்பு , விஷ பூச்சிகள் அல்லது காட்டு மிருகங்கள் மிகக் குறைவு. அதனால் நாம் எந்தக் கவலையும் இன்றி சுற்றலாம். வழி தவறுவது ஒன்று தான் ஒரே பிரச்சினை. அதுவும் இப்போது உள்ள நவீன ஜி.பி.எஸ் கருவிகளோடு சென்றால் மிக சுலபமாக வழி கண்டு பிடித்து விடலாம். உங்களுக்கு காட்டில் சுற்றுவது போதும் என தோன்றினால் ஒரு இருபது நிமிடத்தில் ஓஸ்லோ நகரின் கோடை கால கொண்டாட்டங்களில் பங்கேற்கலாம். உலகின் எந்த நகரில் இப்படி வசதிகள் இருக்கும்? (படிக்கும்போதே பாக்கணும் போல தோணுதே..)
இங்கு வைகிங் (?) மக்களின் வாழ்க்கையை விளக்கும் பல அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. உலகின் பனிச் சறுக்கு ரசிகர்களுக்கு மிகவும் பழக்கமான ஹோல்மேன் கோலன் பனிச் சறுக்கு இடம் இங்கு தான் இருக்கிறது. பல சிற்பக் காட்சியகங்கள் இருக்கின்றன. அமைதிக்கான நோபெல் பரிசு கொடுக்கும் அமைப்பு இங்கு தான் இருக்கிறது.
ஓஸ்லோவில் பலரும் குறை சொல்வது இந்த நகரின் குளிர் காலத்தின் குளிரையும் , இருளையும் தான் . ஆனால் உண்மையில் ஓஸ்லோவின் கோடை கோலத்தை அனுபவிப்பது போலவே, குளிர் காலத்தையும் அனுபவிக்கலாம். குளிர் காலத்தில் ஓஸ்லோவின் அழகு நம்மை மெய் மறக்கச் செய்துவிடும். ஓஸ்லோவின் குளிர் காலத்தின் அமைதியும்,
தூய்மையான காற்றும் மனதில் ஆழமான அமைதியை ஏற்படுத்தும் ஆற்றல் படித்தவை. அதே சமயம் என்னைப் பொறுத்த வரை இந்தக் குளிரினால் மக்களுக்குப் பெரிதாக சிரமம் இல்லை.
இங்கு வீடுகள் எத்தகைய குளிரையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. உங்களுக்கு வீட்டினுள் குளிர் கொஞ்சம் கூட தெரியாது. இந்தக் குளிரில் எப்படி வெளியே செல்வது என நினைப்பவர்களுக்கு நோர்வேஜியன் மக்கள் சொல்லும் ஒரு பழமொழியை சொல்கிறேன். “குளிர் என்பது நீங்கள் அணியும் ஆடையை பொறுத்தது”. இந்தப் பழமொழி, குளிரைக் கண்டு பயந்து வீட்டினுள் அடைந்து கொண்டு இருந்த என்னை, குளிர் காலத்தை நேசிக்கக் கற்றுக் கொடுத்து இருக்கிறது. குளிர் காலத்தில் வெளியே செல்ல ஆரம்பித்த பின்பு தான், குளிர் காலத்தை எந்த அளவுக்கு அனுபவிக்கலாம் எனத் தெரிந்தது. இங்கு குளிர் காலத்தின் மிகப் பெரிய பொழுதுபோக்கு பனிச்சறுக்கு. ஓஸ்லோ மக்கள் குளிர் காலம் ஆரம்பித்துவிட்டால், பனிச் சறுக்கு விளையாடலாம் என்ற ஆசையில் பனி எப்போது வரும் எனக் காத்திருப்பார்கள். நோர்வே நாட்டின் மலைகள் குளிர்காலங்களில் பனிச்சறுக்கு இடங்களாக மாறி விடுகின்றன. மூன்று வயது குழந்தை முதல் எண்பது வயது முதியவர் வரை அனைவரும் பனிச்சறுக்கு விளையாடுகிறார்கள். விடுமுறை நாட்களில் ஓஸ்லோ நகரம் வெறிச்சோடிக் காணப்படும். பெரும்பாலனோர் அருகிலுள்ள மலைகளுக்குச் சென்று பனிச்சறுக்கு விளையாட விடுவர். (பார்ரா..)
ஒஸ்லோ வில் கிட்டத்தட்ட எட்டாயிரம் தமிழர்கள் வசிக்கிறார்கள். பெரும்பாலோனோர்கள் ஈழத் தமிழர்கள் .தமிழ்ப் பள்ளிகள் நிறைய இருக்கின்றன. தமிழ்க் குழந்தைகள் நான்கு வயது முதல் தமிழ் படிக்க ஆரம்பித்து விடுகின்றனர். தமிழர்களிடையே நெருக்கமான சமூகப் பிணைப்பு இருக்கிறது. அதனால் நகருக்கு புதிதாக வரும் தமிழர்கள் சிரமம் இல்லாமல் வாழ்க்கையைத் தொடங்கலாம்.
ஒரு நகரம் எப்படி இருக்க வேண்டும் , இயங்க வேண்டும் என்பதற்கு ஒஸ்லோ நகரம் ஓர் எடுத்துக் காட்டு. (நம்ம சென்னை மாதிரின்னு சொல்லுங்க..)
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “நகரம் பாதி கிராமம் பாதி – ஓஸ்லோ”