நான் கடவுளை கண்டேன்!(கவிதை)
ராஜ் குணநாயகம்Feb 27, 2016
என் தெய்வத்தாயின்
கருணை முகத்தினில்
நான் கடவுளை கண்டேன்!
தன்னலம் மறந்து
தம் குடும்ப நலம் இதயத்தில் சுமந்திடும்
பிதாவிடம் நான் கடவுளை கண்டேன்!
காதலாய்
உயிராய், உறவாய்
தாயாய், உயிர்த்தோழியாய்
எனை தன் இதய கோவிலில்
தெய்வமாய் பூசிக்கும்
என் துணையிடம் நான் கடவுளை கண்டேன்!
தன்னுயிரிலும் மேலாய்
இன்னுமோர் உயிர் சுமந்திடும்
தாய்மையிடம் நான் கடவுளை கண்டேன்!
தம்மாணாக்கரின் சாதனைகளும்
வெற்றிகளும் முன்னேற்றமும்
தம்பணியின் தலையாய கடமையென
ஐயம் தெளிந்திட போதித்து வழிகாட்டிடும்
குருவிடம் நான் கடவுளை கண்டேன்!
தம்தாய்மண்
தம்மக்கள் உரிமைகள்
சுதந்திரங்கள், விடியலுக்காய்
தன்னையே அர்ப்பணித்திடும்
தலைவனிடம் நான் கடவுளை கண்டேன்!
மழலைகளின் மொழியில்
அவர்கள் ஒவ்வோர் அசைவிலும்
நான் கடவுளை கண்டேன்!
உள்ளொன்றும் புறமொன்றும் வைத்து
பழகாத, எதுவித எதிர்பார்ப்புமற்ற
பள்ளிப்பருவத்து உயிருக்குயிரான நண்பர்களிடம்
நான் கடவுளை கண்டேன்!
உலகில்
எத்தனை ஆயிரம்
மொழிகள், இனங்கள், பண்பாடுகள்
கலைகள்,கலாச்சாரங்கள்
எத்தனை கோடி மக்கள்
அத்தனையும் வெவ்வேறு முகங்கள்
இவ் அற்புதத்தினில் நான் கடவுளை கண்டேன்!
ஒளியும் காற்றும் இல்லாத இவ்வுலகம்
நிலையாது நீண்ட காலம்
எனும் உண்மையில் நான் கடவுளை கண்டேன்!
சூரிய பகவான் தன்னொளி கொண்டு
பூமியில் கவர்ந்திடும் நீர்
மீண்டும் மழையாய் பொழிகையில்
ஒவ்வோர் மழைத்துளியிலும் நான் கடவுளை கண்டேன்!
விதைகள் பயிராகி
விருட்சமாகி பூக்கள், காய்கள், கனிகள் தந்து
மீண்டும் விதையாகி விருட்சமாகும்
இயற்கை நியதியில் நான் கடவுளை கண்டேன்!
பணம், பதவி, அதிகாரம் கொண்டு
அதர்மம், அநியாயம்
அழிவுகள் புரிந்து
ஆட்டம் போடும் மனிதம்
வெறுங்கூடாய் அழிந்து போகும்
மாய வாழ்வுதனில் நான் கடவுளை கண்டேன்!
புலம்பெயர் தேசங்களில்
மனிதர் இதயங்களும்
துருவப்பனிபோல் உறைந்தேயிருக்குமாம்
அங்கும் நான்
வெண்டாமரை போல் அன்பால் விரிந்த இதயங்களை
காண்கையில் அவர்களில் நான் கடவுளை கண்டேன்!
கூடவே இருப்போர்
நண்பர்கள் என்போர்
கூடவேயிருந்து குழிபறிக்கையில்
அறிமுகமே இல்லாத ஒரு மனிதன் உதவுகையில்
அம்மனிதர்களில் நான் கடவுளை கண்டேன்!
ஆபத்தில், அவசரத்தில்
ஏதோவொரு நன்மை செய்திடும்
தீயோரிலும் நான் கடவுளை கண்டேன்!
வாழ்வை வெறுத்து, வேதனையில் துவண்டு
இனியும் எழ முடியாது என வீழ்ந்து கிடக்கையில்
கை கொடுத்து மீண்டும் எழுந்திட உதவிடும்
மனிதர்களில் நான் கடவுளை கண்டேன்!
இக்கலியுலகில்
உண்மையாய்
கனவானாய்
வாழ்ந்திட போராடும் போதினில்
அடுக்கடுக்காய் துன்பங்கள், சோதனைகள்
வரும்போதெல்லாம்
புதிய புதிய வழிகள்
தானே திறந்திடும் போதெல்லாம்
அவ்வேளைகளில் நான் கடவுளை கண்டேன்!
“அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லுமாம்”
இக்கலியுலகில்
அடங்காத ஆட்டம் போடுவேரெல்லாம்
இன்றே இங்கே வாழ்ந்த சுவடுகளேதுமின்றி
அழிந்துபோகும் அவன் தீர்ப்பில் நான் கடவுளை கண்டேன்!
“கடவுள்” பொய் என்று கூறி
மண்ணையும் விண்ணையும் ஆளத்துடிக்கும் விஞ்ஞானம்
மண்ணிலும் விண்ணிலும் தோற்றுப்போகும்
பல நிகழ்வுகளில் நான் கடவுளை கண்டேன்!
கடவுள் வேறெங்கும் இல்லை
இங்குதான் இருக்கிறான்
இயற்கையோடு கூடவே இருக்கிறான்–
நம்மோடும் இருக்கிறான்
நம்மை நல் மனிதராக, கடவுளாக
மற்றவர் காணும்போதினில்!
நான் கடவுளை கண்டுகொண்டுதான் இருக்கிறேன்
இங்கு ஒவ்வோர் நாளும்……………………………………….
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “நான் கடவுளை கண்டேன்!(கவிதை)”