மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நினைவலைகள் (கவிதை)

முனைவர்.கு.பாக்கியம்

Apr 21, 2018

மார்கழித் திங்கள்

பனிப்படர்ந்த அதிகாலை

அனல் கக்கும் அடுக்களை

மனமோ இருபது ஆண்டுகளுக்கு

பின்னோக்கியே பையப்பைய …

siragu ninaivalaigal2

 

இச்சே

நகர வாழ்க்கை நரக வாழ்க்கை

அமைதியில்லா மாசு நிறைந்த

வாகன ஓசை… இயந்திரமயமாய்…

அறிமுகமில்லா அண்டைவீட்டார்

 

தீப்பெட்டியின் குச்சியாய்

சிறு சிறு அறையில் மனிதக்குடியிருப்பு

தாய் தந்தையர் சகோதர சகோதரி

மனிதர்களோடு பேச்சுக்களே இல்லை

மனிதநேயம் இல்லவே இல்லை

 

siragu neramillai1

 

தொலைக்காட்சிப் பெட்டி கைபேசியுடன்

காலங்கள் நகர நகர

தனிமையில் பித்தர்களாய் – நடைபாதையில்

யார் வந்தாலென்ன போனாலென்ன

கைபேசியில் சிரிக்கும் தனியுலகம்…

 

மனம் சிட்டாய் சிறகடிக்க

கிராமப்புற சொந்த இடத்தில்

ஒற்றையடிப் பாதை – இருபுறமும்

கலப்பை பிரண்டை கோவை

மூலிகைச் செடிகள் விருந்தளிக்க

 

குருவி காகம் குயில்களோடு

பனித்துளியுடன் சிலிர்க்கும்

மரம் செடி கொடிகள் கண் அசைத்துக் கைநீட்ட

நினைவுகளைச் சுமந்தவாறே

 

காணி நிலம் நோக்கியே

பலகாத தூரம்…

மலரும் நினைவுகளுடன்

ஒட்டி உறவாடியே

இறக்கை கட்டிய மனம்

 

பெற்றோர் அரவணைப்பில்

உடன்பிறப்புகளோடு

சுற்றித் திரிந்த வயல்வெளிகள்

காலை மாலையென

பள்ளி நேரம் போகவே…

 

கரும்பு நெல் பருத்தி ராகி கம்பு

சோளம் மஞ்சள் பெல்லாரி மிளகாய்

நிலக்கடலை அன்று விளைநிலமாய்

இன்று பாதம்பட்டதும் புல்லரித்ததே

உச்சி முதல் உள்ளங்கால் வரை…

 

கலத்து மேட்டில் கண்படர

ஆடு மாடு குதிரை எருது

இருபதற்கு மேல் நட்புடன்

பழகிய கட்டுத்தறி

வெறிச்சோடிய நிலையில்

 

கலங்கின கண்கள் கனத்தது இதயம்

களத்தை நோக்கிட

சாணத்தால் மெழுகியே

மாக்கோலமிட்டே

பொங்கல் வைத்த நினைவலைகள்

நீண்டிட நீண்டிட

 

கண்களில் முட்டி மோதிய திவலைகள்

மழை பொய்த்ததால்

புதர்கள் நிறைந்த கிணறு பம்ப்செட்

வரண்டு பிளந்த நீர்த்தொட்டி

உருக்குலைந்த வாய்க்கால்கள்

siragu ninaivalaigal3

 

துடிக்கும் இதயத்தோடு

காணி  நிலம் நோக்கியே வடக்குத்தோட்டம்

ஐம்பதிற்கும் மேல் தென்னை

இடையிடையே வகை வகையாய்

அழகிய செம்மண் நிலத்தில்

 

மா பலா கொய்யா பப்பாளி

ஆரஞ்சு எலுமிச்சை சப்போட்டா

நெல்லி பிளம்ஸ் செரி

முருங்கை கறிவேப்பிலை செண்பகம்

இரண்டாம் அகவையில் அசைந்தாட

 

சொட்டு நீர் பாசனத்தில்

மகிழ்ந்தவாரே மயில் கிளி குயில்

முயல் காடை கொக்கென

கண்களுக்கு விருந்தளித்தே

உல்லாசமாய் உலவிடவே

 

பழமையை மீட்டெடுக்கும் ஆவலில்

பல மணிநேரம் ஆனந்தமாய்

இயற்கையோடு இயற்கையாய்

ஆரவாரமில்லா ஆனந்தக் களிப்பில்

காற்று தென்றலாய்த் தவழ

 

பசியை மறந்தேன் பகையை மறந்தேன்

நாட்புறக் கம்பி வேலியிலே படர்ந்த

பீர்க்கை, பாகை, சுரை, புடலை

சல சலத்து ஓசையிட இடையே

குஞ்சுகளுக்கு உணவு தேடிய தாய்ப்பறவை

 

கடமை உணர்வு நினைவினைத்தட்ட

காய்கறி பழ வகைகளை

அள்ளிய படியே வந்து குதித்தது மனம்

தோசைக்கல் சட்டுவத்திற்கிடையே

கையளவு வயிறு கடலளவு உழைப்பு

 

என்ன உலகம் விந்தை மிகு உலகம்

லட்சங்கள் கோடிகள்

இல்லவே இல்லை

பல லட்சங் கோடிகள்

தொலைக் காட்சிப் பெட்டியில்

வாய்கிழிய புலம்பல்கள்

 

பணம் பத்தும் செய்யும்

பணம் பாதாளம் மட்டும்

பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

பணமில்லாதோர் பிணம் கேள்விபட்டதுமுண்டு

 

அறம் வெல்லும் பாவம் தோற்கும்

படித்ததுண்டு அன்றொரு நாள்

மனனம் செய்தே தேர்வு எழுதினேன்

மதிப்பெண் பெறவே…

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?

 

 

 

 

 

 

 

 


முனைவர்.கு.பாக்கியம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நினைவலைகள் (கவிதை)”

அதிகம் படித்தது