மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Dec 24, 2016

siragu-panjathandhira-kadhaigal1

ஆனால் துஷ்டபுத்தி தன் தந்தை கூறிய நல்லறிவுரையை ஏற்கவில்லை. வலுக்கட்டாயமாக அவரைத் தூக்கிக்கொண்டு சென்று மரப்பொந்தில் உட்கார வைத்தான். மறுநாள் காலையில் நீதிபதியையும் சுபுத்தி முதலான பிறரையும் அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று, “எனக்கு இந்த மரமே சாட்சி. இதைக் கேளுங்கள்” என்று கூறினான். அப்போது அந்த மரத்திலிருந்து, “பணம் அனைத்தையும் சுபுத்தியே கொண்டுசென்றான்” என்று ஒரு குரல் எழுந்தது.

சுபுத்தி (தனக்குள்): இது என்ன மோசமாக இருக்கிறது? மரம் எங்கேயாவது பேசுமா? ஒரு பிராணியும் இல்லாமல் இந்தச் சத்தம் எங்கிருந்து வந்தது? இது தெய்வ சக்தியாக இருந்தால் உண்மையை அல்லவா சொல்ல வேண்டும்? இதைச் சோதித்துப் பார்த்தால்தான் உண்மை விளங்கும்.

(நியாயதிபதியிடம்): ஐயா, மரம் பேசுவது என்பது இயற்கைக்கு மாறானது. நான் மேலே ஏறிச் சென்று சோதித்துப் பார்க்கிறேன்.

மரத்தில் ஏறியபோது கிழவரை ஒளித்துவைத்த பொந்து காணப்பட்டது. ஆனால் உள்ளே ஆள் இருப்பது தெரியவில்லை. இங்கேதான் ஏதாவது சூழ்ச்சி இருக்க வேண்டும் என்று எண்ணிய சுபுத்தி, அங்கு நெருப்பை மூட்டினான். உள்ளே இருந்த கிழவர், கொஞ்சநேரம் வரை நெருப்பின் வேதனையைப் பொறுத்துப் பார்த்தார். இயலாமல் போகவே வெளியே வந்து விழுந்தார். அங்கிருந்த எல்லோரும் “இது என்ன” என்று அவரைக் கேட்டனர்.

கிழவர்-என் மகன் துஷ்டபுத்தி நான் சொன்ன அறிவுரையைக் கேட்காமல் பலாத்காரமாக என்னை இங்கே கொண்டுவந்து உட்காரவைத்தான்.
என்று சொல்லிவிட்டு, மூச்சுத்திணறிய அந்தக் கிழவர் இறந்துபோனார்.

பிறகு துஷ்டபுத்தியின் வாய்மூலமாகவே எல்லாச் செய்திகளையும் அரசன் அறிந்துகொண்டு, அவனைக் கழுவில் ஏற்றினான்.

இவ்வாறு கரடகன் தமனகனிடம் சொல்லியது. பிறகு, “பாம்பை வெகுநாள் பாலூட்டி வளர்த்தாலும், அது வளர்த்தவனையே கடிக்கும். ஆகவே எனக்கு உன்னிடம் பயமாக இருக்கிறது. இனிமேல் உன்னிடம் தேவதத்தனைப் போலத்தான் நடந்து கொள்ள வேண்டும்” என்றது.

தமனகன்-தேவதத்தன் எப்படி நடந்துகொண்டான், சொல்.

கரடகன்-ஒரு நகரத்தில் தேவதத்தன் என்னும் வியாபாரி இருந்தான். அவனுடைய பணம் முழுவதும் நஷ்டம் ஏற்பட்டுக் கரைந்துவிட்டதால் மறுபடி பொருள் சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து, தன்னிடம் கடைசியாக இருந்த ஆயிரம் இரும்புக் கம்பிகளைத் தன் நண்பன் பகதத்தன் என்பவனிடம் வைத்துவிட்டுச் சென்றான். சென்ற இடத்திலும் அவனுக்குச் சரிவர வியாபாரம் நடந்து பணம் கிடைக்கவில்லை. ஆகவே சொந்த ஊருக்கே திரும்பிவந்து, தன் நண்பனிடம் தான் கொடுத்து வைத்திருந்த இரும்புக் கம்பிகளைக் கேட்டான். பகதத்தன் பேராசை பிடித்தவன். இவனை ஏமாற்ற நினைத்து, “இரும்புக் கம்பிகளை எலிகள் தின்றுவிட்டன” என்று சொன்னான். தேவதத்தன் இவன் சூழ்ச்சியை வேறு ஒரு உபாயத்தினால்தான் முறியடிக்க வேண்டும் என்று நினைத்து, நண்பன் சொன்னதை ஏற்றுக்கொண்டதுபோல் நடித்துச் சென்றுவிட்டான்.

மற்றொரு நாள், பகதத்தனின் மகனுடன் தேவதத்தன் விளையாடிக் கொண்டிருந்தான். அவனைக் கடைக்கு அழைத்துச் செல்வதுபோல் தொலைவாக அழைத்துச் சென்று வேறு ஒரு இடத்தில் ஒளித்து வைத்துவிட்டான். வெகுநேரம் ஆகியும் பிள்ளை வராமல் போகவே, பகதத்தன் தேவதத்தனிடம் வந்து, “என் மகன் எங்கே” என்று கேட்டான்.

தேவதத்தன்: உன் மகனைப் பருந்து தூக்கிக்கொண்டு போய்விட்டது.

பகதத்தன் இதைக் கேட்டு மிகவும் கோபமும் துக்கமும் அடைந்து, தேவதத்தனை இழுத்துக் கொண்டு நியாயத்தலைவரிடம் சென்றான்.

பகதத்தன்: இந்த துஷ்டன் என் மகனை எங்கேயோ ஒளித்து வைத்துவிட்டுப் பருந்து எடுத்துக் கொண்டு போய்விட்டதாகச் சொல்கிறான். தாங்கள்தான் என் மகனைத் திரும்ப வருவித்துத் தரவேண்டும்.
நியாயத்தலைவன் (தேவதத்தனிடம்): இவன் மகன் எங்கே இருக்கிறான்? சொல்.

தேவதத்தன்: இவன் மகனைப் பருந்து தூக்கிக்கொண்டு போய்விட்டது.

நியாய அதிகாரி (குலுங்கிக் குலுங்கிச் சிரித்து): இப்படி எங்கேயாவது நடக்குமா? இது மாதிரி உலகத்தில் நடந்ததே இல்லை. ஏன் இப்படிப் பொய் சொல்கிறாய்?

தேவதத்தன்: ஐயா, இதுபோய் ஒரு ஆச்சரியமா? கொஞ்ச நாளுக்கு முன்னால் என் இரும்புக் கம்பிகளை எல்லாம் எலிகள் கடித்துத் தின்றுவிட்டனவே. அப்படித்தான் இதுவும் நடந்தது.

இதைக் கேட்ட அதிகாரி, முன்பு நடந்த விஷயங்களை எல்லாம் விசாரித்து அறிந்தான். பிறகு, பகதத்தனிடம், “நீ அவனுடைய இரும்புக் கம்பிகளை எல்லாம் திரும்பக் கொண்டுவந்து கொடுத்தால், அவன் உன் மகனைத் திரும்ப ஒப்படைப்பான்” என்றான். இருவரும் அப்படியே செய்து தங்கள் தங்கள் இடங்களுக்குச் சென்றார்கள்.

இவ்வாறு சொல்லிய கரடகன், தமனகனிடம், “சொல்லிய பொருளைத் தெரிந்து கொள்ளாதவன் கல்லுக்குச் சமம். உனக்கு உபதேசம் செய்து பயனில்லை” என்றது.

இவ்வாறு கூறியபின், கரடகன், தமனகன் இரண்டும் சிங்கத்திடம் சென்றன. சிங்கம் அங்கே சஞ்சீவகனாகிய எருதைக் கொன்றுவிட்டு மிகுந்த வருத்தத்துடன் உட்கார்ந்திருந்தது.

siragu-pancha-thandhira-kadhai10தமனகன்: சுவாமி, தாங்கள் உங்கள் எதிரியைக் கொன்றுவிட்டு வருத்தப்படுகிறீர்களே, இது நியாயம் இல்லையே? எதிரியைக் கொல்லலாம் என்று சாத்திரங்கள் சொல்கின்றன. தந்தையாக இருந்தாலும், உறவினராக இருந்தாலும், மகனாகவே இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், யார் தன்னைக் கொல்ல முயற்சி செய்கிறார்களோ, அவர்களை அதிகாரத்தில் இருப்பவன் முதலில் கொன்றுவிட வேண்டும். சுதந்திரமாகத் திரிகிற மனைவியும், கெட்ட சிநேகிதனும், தாறுமாறாக நடக்கும் சேவகனும், அஜாக்கிரதையான மந்திரியும், நன்றிகெட்டவனும் இருக்கலாகாது. மேலும், மெய், பொய், கடுமை, மென்மை, கொலை, தயை, உதாரண குணம், உலோப குணம், பலவழிகளில் பொருளீட்டுதல், அதிக எண்ணிக்கையிலான நண்பர்கள் இப்படி பல பண்புகள் அரசனுக்கு இருக்கவேண்டும் என்று அரசநீதி சொல்கிறது. அப்படியே தாங்கள் இதைச் செய்தீர்கள்.

இவ்வாறு கூறி, தமனகன், சிங்கத்திற்கு மகிழ்வூட்டியது. சிங்கமும் முன்போலவே அந்தக் காட்டில் தனது அரசாணையை நடத்தியவாறு சுகமாக இருந்துவந்தது.
[மித்திரபேதம் என்னும் முதற்பகுதி முற்றிற்று.]

இரண்டாம் பகுதி—சுகிர்லாபம் அல்லது நட்புப் பேறு

நட்பின் அவசியம் பற்றி அரசகுமாரர்களுக்கு சோமசர்மா சொல்லத் தொடங்கினான். “காகமும் எலியும் ஆமையும் நட்பினால் ஒன்றை ஒன்று காப்பாற்றினாற் போல, புத்திசாலியாக இருக்கின்ற நண்பர்கள், செல்வமில்லாவிட்டாலும், வேறு கருவிகள் இல்லாவிட்டாலும், ஒருவர்க்கொருவர் உதவுவார்கள்” என்று அவன் சொல்ல, பிள்ளைகள், “அது எவ்விதம்?” என்று கேட்டார்கள். சோமசர்மா உடனே கதை சொல்லத் தொடங்கினான்.

கோதாவரி நதிக்கரையில் ஒரு பெரிய வன்னிமரம் இருந்தது. அதில் லகுபதனன் என்னும் காகம் வசித்துவந்தது. ஒருநாள் காலையில் அங்கு பயங்கரமான வேடன் ஒருவன் வந்தான். இவன் என்ன செய்வானோ தெரியவில்லையே, தெரிந்துகொள்வது நல்லது என்று காகம் நினைத்தது. இதற்குள் அந்த வேடன் தன் வலையை விரித்து, அதன்மீது தானியங்களைத் தெளித்துவிட்டு, தான் ஒரு செடி மறைவில் பதுங்கியிருந்தான். அப்போது சித்திரக்கிரீவன் என்னும் புறா தன் பரிவாரத்தோடு அந்த மரத்தில் வந்து அமர்ந்தது. புறாக்கள் அந்த தானியங்களைச் சாப்பிட விரும்பின. ஆனால் சித்திரக்கிரீவன் சொல்கிறது.

“ஆள் அரவமற்ற இந்தக் காட்டில் தானியம் எப்படி வரும்? யாராவது கொண்டு வந்து போட்டிருக்கத்தான் வேண்டும். அது நமக்குத் தெரியாதவரை நாம் இதைப் புசிக்கலாகாது. ஒரு பார்ப்பனன் பொன்னுக்கு ஆசைப்பட்டு புலியினால் எப்படி இறந்தானோ அதுபோல இதுவும் எனக்கு விபரீதமாகத் தோன்றுகிறது.”

siragu-pancha-thandhira-kadhai112

பிற புறாக்கள்-அது எப்படி மகாராஜா?

சித்திரக்கிரீவன்-நான் ஒரு சமயம் வேறொரு காட்டில் மேய்ந்துகொண்டிருந்த போது நடந்ததைச் சொல்கிறேன். கேளுங்கள். ஒரு கிழப்புலி, பலவீனத்தால் உணவு தேடமுடியாமல், ஒரு யுக்தியைச் செய்தது. நீராடிவிட்டு, ஏரிக்கரை ஒன்றில் கையில் தருப்பைப் புல்லை வைத்துக்கொண்டு உட்கார்ந்தது. அப்போது அந்த வழியாக ஒரு பார்ப்பனன் வந்தான். புலி அவனைப் பார்த்து, “ஓ பிராமணரே, நான் உமக்கு இந்தப் பொன் காப்பைத் தருகிறேன், வந்து பெற்றுக் கொள்ளும்” என்றது. பிராமணன் யோசிக்கலானான். “இந்தக் காப்பு வலிய நமக்குக் கிடைக்கிறது. புலியோ மனிதர்களைக் கொல்லக் கூடியது. ஆகையினால் இந்தக் காப்பின்மீது ஆசை வைக்கலாகாது. ஆனால், மரணத்திற்குப் பலவேறு வழிகள் இருக்கின்றதே. எவ்விதத்திலேனும் ஒருவனுக்கு மரணம் சம்பவிக்கலாம். ஆகவே முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லை” என்று நினைத்தான்.

பிராமணன் (புலியைப் பார்த்து): காப்பு எங்கே இருக்கிறது?

புலி (கையிலுள்ள காப்பைக் காட்டி): இதோ பாரும், பிராமணரே. என் கையில் உள்ளது.

பிராமணன்: நான் எப்படி உன்னிடத்தில் நம்பிக்கை வைத்து அருகில் வருவது?

புலி: நானும் பிராமணப் புலிதான். வைகறை எழுந்ததும் இந்தக் குளத்தில் நீராடி நித்தியதானம் செய்துகொண்டிருக்கிறேன். நான் நகமும் பல்லும் போன கிழவன். வேட்டல், ஓதல், கொடுத்தல், தவம், சத்தியம், உறுதி, பொறுமை, ஆசையின்மை என்னும் எட்டு தருமங்களையும் நான் அறிந்திருக்கிறேன். அதனால் எனக்குக் கிடைத்த இந்த அபூர்வப் பொருளை யாருக்கேனும் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போதும் உமக்கு என்னிடம் நம்பிக்கை வரவில்லையா?

பிராமணன்: நான் உன்னை நம்பலாம்தான். ஆனால் புலிகள் தீங்கு செய்பவை என்று உலக அபவாதம் இருக்கிறதே.

புலி: நான் தர்ம சாஸ்திரம் அறிந்த புலி. தன் உயிர் எப்படித் தனக்கு இனிக்கிறதோ அப்படித்தான் எல்லாருக்கும். இதை அறிந்ததால் சாதுக்கள் பிராணிகளிடமும் கருணை காட்டுகிறார்கள். தன்னைப் போல சுக துக்கங்களைப் பிறரிடமும் எண்ணிப்பார்க்கிறார்கள்.

நீ மிகவும் ஏழையாகக் காணப்படுவதால் உனக்கு இந்தக் காப்பைத் தர நினைத்தேன். ஏழைக்குக் கொடுப்பதுதானே முறை? செல்வர்களுக்குக் கொடுத்து என்ன பிரயோஜனம்? நோயுற்றவனுக்குத்தான் மருந்து செல்லும். நோயில்லாதவனுக்கு அது எப்படிப் பயன்படும்? ஆகவே நீ இந்த ஏரியில் நீராடிவிட்டு வா. உனக்கு இதைத் தருகிறேன்.
அந்த பிராமணனுக்குப் பின்புத்தி. ஆகவே ஏரியில் நீராட இறங்கினான். அது சேறுமிகுந்த இடம். ஆகவே அவன் கால் உளையில் சிக்கிக் கொண்டது.

புலி: பிராமணரே, கவலைப்பட வேண்டாம். நான் உம்மைக் காப்பாற்றுகிறேன்.

இவ்விதம் சொல்லியவாறே மெல்லச் சென்று அவனைப் பிடித்துக்கொண்டது.

பிராமணன் (தனக்குள்): கெட்டவர்கள் வேதம் படித்தாலும் தர்ம சாஸ்திரம் அறிந்திருந்தாலும், அவர்கள் வார்த்தையில் நம்பிக்கை வைக்கலாகாது. கூடப் பிறந்த குணம் எப்போதும் நீங்குவதில்லை. நமது சாதிக்கு இயல்பாக இருக்கின்ற பேராசைக் குணத்தினால் இந்த துஷ்டனிடத்தில் நம்பிக்கை வைத்து மோசம் போனேன்.

என்று அவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையிலேயே, புலி அவனைக் கொன்று தின்றது. ஆகையால் எதையும் மிகவும் சிந்தித்துத்தான் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் யாதொரு தீங்கும் நேரிடாது” என்று சித்திரக்கிரீவன் கூறியது.

siragu-panja-thandhiram-story1

மற்றொரு புறா: இப்படி ஆலோசித்தால் நமக்கு ஒரு இரையும் கிட்டாது. மேலும் வெட்கப்படுபவன், பொறாமை உள்ளவன், சந்தோஷப்படாதவன், குரோதம் உள்ளவன், தீராத சந்தேகம் உள்ளவன், பிறர் பொருளில் ஜீவனம் செய்பவன் ஆகிய இவர்கள் துக்கத்தையே அனுபவிப்பார்கள். ஆகவே நாம் இந்த தானியங்களைத் தின்னலாம் வாருங்கள்.
இதைக் கேட்ட பல புறாக்களும் தானியங்களைத் தின்னும் பொருட்டு இறங்கிக் கீழே வலையில் அகப்பட்டுக் கொண்டன.

சித்திரக்கிரீவன்: எல்லாரும் என் சொல்லைக் கேளாமல் போனார்கள். இப்போது அனுபவிக்கிறார்கள். ஆனால் நான் மட்டும் தனியாக இருந்து என்ன பயன்? அவர்களுக்கு வந்த கதி எனக்கும் வரட்டும்.
இவ்வாறு அதுவும் அந்த வலையில் சிக்கிக் கொண்டது. அப்போது வேடன் அந்த இடத்தை நோக்கி வரத்தொடங்கினான்.

புறாக்கள்: நாங்கள் நீசன் புத்தியைக் கேட்டு உன்னை அவமானம் செய்தோம். அதற்குப் பலன் இப்போது கிடைத்துவிட்டது.

சித்திரக்கிரீவன்: இப்போது வருத்தப்பட்டுப் பயன் என்ன? எனக்கு ஒரு உபாயம் தோன்றுகிறது. எல்லாரும் ஒரே சமயத்தில் வலையோடும் சேர்ந்து பறந்து வேறிடத்திற்குச் செல்லவேண்டும். அப்படிச் செய்தால்தான் நம் உயிர்களைக் காப்ப்ற்றிக் கொள்ள முடியும்.

இதைக் கேட்டவுடனே எல்லாப் பறவைகளும் சடுதியில் வலையோடு சேர்ந்து பறந்துபோயின. வேடன் இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். ஆனால், இவைகள் ஒன்றுக்கொன்று விரைவில் சண்டையிடும். அப்போது என் கையில் அகப்படும் என்று நினைத்தவாறு வலையைப் பின்தொடர்ந்து ஓடினான். ஆனால் புறாக்கள் கண்ணுக்கு மறைந்துவிட்டதால் வருத்தப்பட்டுத் திரும்பினான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த லகுபதனன் என்னும் காகம் புறாக்களைப் பின்தொடர்ந்து போயிற்று.

(தொடரும்)


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5”

அதிகம் படித்தது