மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-14

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Feb 25, 2017

siragu-panjathandhira-kadhaigal

சக்கரம் தலையில் சுழன்று கொண்டிருந்தவனை நோக்கி, நாலாவது வேதியன் துணுக்குற்றான். “நீ யார்? உன் தலைமேல் இந்தச் சக்கரம் சுழல்வதன் காரணம் என்ன?” என்று அவனைப் பார்த்துக் கேட்டான். கேட்ட அளவிலே அந்தச் சக்கரம் அவனை விட்டு இந்த வேதியன் தலைமேல்வந்து சுற்றலாயிற்று. “இதென்ன? கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக இருக்கிறதே” என்று கவலையுற்றான் நாலாவது ஆள். பழைய ஆளைப் பார்த்து, “இது ஏன் இப்படி ஆயிற்று? உன் தலைமீதிருந்த சக்கரம் என் தலைமேல் சுற்றக் காரணம் என்ன?” என்று கேட்டான்.

பழைய ஆள்: பலப்பல ஆண்டுகளாக இப்படித்தான் என் தலையில் இச்சக்கரம் சுற்றியவாறு இருந்தது. “இந்தச் சாலையில் மற்றொருவன் வந்து உன்னை விசாரிப்பான். அப்போது உன் தலையில் உள்ள இந்தச் சக்கரம் அவன் தலையில் பற்றிக் கொள்ளும்” என்று குபேரன் எனக்குக் கூறினான். அதன்படி ஆயிற்று.

புதிய சக்கரத் தலையன்: நீ இங்கே வந்து எத்தனை நாளாயிற்று?

பழையவன்: எனக்குக் காலக் கணக்கெல்லாம் தெரியாது. இராமன் அயோத்தியில் ராஜ்யம் புரிந்தபோது இவ்வாறு எனக்கு ஏற்பட்டது.

புதியவன்: இங்கே உனக்கு தினமும் உணவு எப்படிக் கிடைத்தது?

பழையவன்: பசி தாகம் ஒன்றும் இங்கே என்னை வருத்தியதில்லை. இந்தச் சக்கரம் சுற்றுவதால் ஏற்படும் காயங்களையும் வலியையும் தாங்கிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவுதான். இது குபேரனுடைய இடம். இங்கே அவனுடைய செல்வத்தைக் கவர வருபவர்களை அச்சுறுத்தவே இவ்வித ஏற்பாடு அவனால் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அச்சத்தால் யாரும் இங்கு வருவதில்லை. வந்தாலும் என்னைக் கண்டவுடனே ஓடிவிடுவார்கள். சரி, இப்போதும் எனக்கு இரத்த காயத்தினால் துன்பமாக இருக்கிறது. ஆகவே நான் போகிறேன்.
என்று கூறிப் பழைய சக்கரத்தலையன் போய்விட்டான்.
அச்சமயம் இவனுடன் வந்த மூன்றாவது ஆள் (பொன் கிடைத்த பிராமணன்), நீண்ட நேரம் இவன் திரும்பிவருவான் என்று காத்திருந்தான். வராமையினால், அவனே தேடி வந்தான். “நண்பனே, இது ஏன் இப்படி ஆயிற்று?” என்று கேட்டான்.

சக்கரத் தலையன்: இது என் பேராசையின் பயன்.

மூன்றாவது பிராமணன்: ஓஹோ, பிள்ளைவரத்துக்குப் போன இடத்தில் புருஷனைப் பறிகொடுத்த கதையாக முடிந்ததே. முட்டாள்களாக இருப்பவர்களுக்குக் கல்விப் பயிற்சி இருந்தாலும் பயனில்லை. மற்றவர்கள் அறிவுரையைக் கேட்காமல், செத்த சிங்கத்தை உயிர்ப்பித்தவர்கள் போலக் கெட்டுப் போவார்கள்.

சக்கரத் தலையன்: அது எப்படி?

Siragu pancha thanthira kadhaigal14-3

மூன்றாமவன்: துளசாபுரம் என்ற ஊரில் மதுரன், விதுரன், சதுரன், அதுரன் என்ற நான்கு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் யாவரும் ஒன்றாகக் கல்வி பயின்றனர். முதல் மூவர்க்கும் மந்திரசித்திகள் கைவந்துவிட்டன. நாலாமவனுக்கு மண்டையில் ஒன்றும் ஏறவில்லை. அப்போது,

மதுரன்: நாம் வித்தை கற்றதன் பயன், அரசனிடம் சென்று பொருளீட்டுவது அல்லவா?

விதுரன்: நம்மில் ஒருவனான அதுரனுக்குக் கல்வியறிவில்லை. நாம் நமது கல்வியறிவைக் காட்டிப் பரிசு வாங்கினால் இவனுக்கு எங்ஙனம் நாம் தர முடியும்? ஆகவே இவன் இப்போதே தன் வீட்டுக்கு ஓடிப்போவது நல்லது.

சதுரன்: இவனுக்குக் கல்வி அறிவில்லாவிட்டாலும், நம்மோடு குழந்தைப் பருவம் முதல் ஒன்றாக விளையாடி வளர்ந்தவன். மேலும் உலக விவகாரங்கள் நன்கு அறிந்தவன். அரசனிடம் வெறும் கல்வியறிவு பெற்றவர்கள் மட்டும் புகழ் எய்த முடியாது. உலகநடையும் தெரிந்திருக்க வேண்டும். ஆகவே இவன் நமக்குப் பயன்படுவான். நாம் இவனை உடன் அழைத்துச் செல்லலாம்.

மதுரன்: அப்படியே செய்வோம். சரி, வா எங்களுடன்.
நால்வரும் வேறு தேசம் நோக்கிச் சென்றனர். வழியில் ஒரு காடு. அங்கே ஒரு சிங்கத்தின் எலும்புகள் கிடந்தன.

சதுரன்: நாம் கற்றுக் கொண்ட வித்தையை இந்தப் பிராணியை உயிர்ப்பிக்கச் செய்வதன் வாயிலாகத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

அதுரன்: ஐயோ, இது சிங்கம் போலத் தோன்றுகிறது. வேண்டாம் இந்த வேலை.

மதுரன்: இல்லை, எங்களிடம் எல்லையற்ற மந்திர சக்தி இருக்கிறது.

அதுரன்: இந்தச் சிங்கத்தை நீங்கள் உயிர்ப்பித்தால் அது உங்களைக் கொன்று தின்னாமல் விடாது. ஆகவே உங்கள் கல்வியை இதனிடம் பரீட்சை செய்ய வேண்டாம்.

மதுரன்: பார்த்தாயா? உன் மூடத்தனத்தைக் காட்டுகிறாய். நாங்கள் கண்டிப்பாக இதற்கு உயிர்கொடுத்தே தீரவேண்டும்.

விதுரன்: உனக்கு எங்கள் மேல் உள்ள பொறாமையினால் இவ்விதம் பேசுகிறாய். எங்கள் சாதனையை நீ மேற்கொண்டு பார்.

அதுரன்: நல்லது சொன்னால் கேட்க மறுக்கிறீர்கள். நான் இந்த இடத்தை விட்டுப் போய்விடுவது நல்லது.
இவ்வாறு கூறி, சற்றே தொலைவுக்கு ஓடிச் சென்று ஒரு மரத்தின்மீது அதுரன் ஏறிக் கொண்டான்.

மதுரன்: இங்கே கிடக்கும் விலங்கின் எலும்புத் துண்டுகளை ஒன்றாகச் சேர்த்து அதன் எலும்புக்கூட்டை என்னால் உருவாக்க முடியும்.

விதுரன்: நான் அதற்குத் தசைமண்டலத்தையும் பிறவற்றையும் அளித்து நிஜமான பிராணி போலச் செய்வேன்.

சதுரன்: என்னால் அதற்கு உயிர்கொடுக்கவே முடியும்.
மூவரும் தாங்கள் கூறியவாறு செய்ததும் சிங்கம் உயிர்பெற்று எழுந்தது. உடனே அவர்களை அடித்துக் கொன்றது. ஆகவே கல்வியைவிட உலகியல் அறிவே பெரியது” என்று மூன்றாம் பிராமணன் கூறினான்.

சக்கரத்தலையன்: அப்படியில்லை. அறிவுடையவன், வீட்டிற்குப் பல காவல்கள் வைத்திருந்தாலும் நாசம் அடைகிறான். பேதையாக உள்ள ஒருவன், காட்டில் தனித்திருந்தாலும் தப்பிக்கிறான். முன்பு ஆயிரம் புத்தி மல்லாந்த கதையையும், நூறுபுத்தி தொங்கினதையும், ஒருபுத்தி நீரில் துள்ளி விளையாடியதையும் கேட்டதில்லையா?

பொன்னெடுத்தவன்: அது எப்படி, கூறேன் கேட்கலாம்.

Siragu pancha thanthira kadhaigal14-1

சக்கரத்தலையன்: ஏதோ ஒரு மலர்ப் பொய்கையில் ஆயிரபுத்தி, நூறுபுத்தி என்ற இரண்டு மிகக் கொழுத்த மீன்கள் இருந்தன. ஒருபுத்தி என்ற தவளையும் அதில் இருந்தது. இவை மூன்றும் மிக நட்பாயிருந்தன. அப்போது அங்கே ஒரு வலைஞன் வந்தான்.

வலைஞன்: இவற்றில் கொழுத்தவையாக இருப்பனவற்றை நாளை பிடித்துப் போகலாம்.

ஒருபுத்தி: நண்பர்களே, நாளைக்கு இவன் வந்து நம்மையெல்லாம் பிடித்துக் கொண்டு போவான். ஆகவே நான் வேறிடம் போகிறேன். நீங்களும் வாருங்கள்.

ஆயிரபுத்தி: எனக்குப் பலவிதமான நீச்சல்கள் தெரியும். நான் எளிதாக மறைந்து கொள்வேன். ஆகவே வரவில்லை.

நூறுபுத்தி: எனக்கு வேறிடம் செல்ல இயலாது. நானும் வரவில்லை. இங்கே என்ன வருவதோ வரட்டும்.

ஒருபுத்தி: எப்படியோ போங்கள். நான் தப்பித்தாக வேண்டும்.
இவ்விதம் கூறி தவளை போய்விட்டது. மறுநாள் வலைஞன் வந்து ஆயிரபுத்தியையும் நூறுபுத்தியையும் வலைவீசிப் பிடித்து, ஆயிரபுத்தியைத் தலைமீது வைத்துக் கொண்டு, ஒரு கையில் நூறுபுத்தியின் வாலைப் பற்றிக்கொண்டு நடந்தான். இதைப் பார்த்த

ஒருபுத்தி (தன் கூட்டத்தாரிடம்): நான் சொன்னதைக் கேட்காததால் இவர்கள் இப்படி ஆனார்கள். நாம் போய் குளத்தில் நன்கு குதித்து விளையாடுவோம் வாருங்கள்.

ஆகவே அறிவு மிகுந்தவனுக்கும் ஊழ்வினையால் துன்பம் ஏற்படும்” என்று சக்கரத் தலையன் கூறினான்.

பொன்பெற்றவன்: நீள்செவியனை நன்மதி தடுத்தும் அது இசைபாடிக் கட்டுண்டது போல உனக்கு இந்தத் துன்பம் நேர்ந்தது.

சக்கரத்தலையன்: அது எப்படி நடந்தது?

Siragu pancha thanthira kadhaigal14-4

பொன்பெற்றவன்: நீள்செவியன் என்ற கழுதை, நன்மதி என்ற நரி இரண்டும் நட்பாயிருந்தன. இரண்டும் ஊரார் வயல்களுக்கும் தோட்டங்களுக்கும் சென்று நன்றாக மேய்ந்து வருவது வழக்கம். ஓர் இரவு இரண்டும் நன்றாக வயிறுபுடைக்க மேய்ந்துவிட்டு ஓய்வாக இருந்தன. அப்போது,

நீள்செவியன்: இந்த நிலாக்காயும் இராத்திரியில் பொழுது போகவில்லை. அதனால் நான் பாடப்போகிறேன்.

நன்மதி: உழவர்கள் யாராவது விழித்துக் கொண்டால் உன்னை வந்து நன்றாக அடிப்பார்கள். வாயை மூடிக் கொண்டிரு.

நீள்செவியன்: உனக்கு அழகுணர்ச்சி இல்லை என்பதால் இப்படிப் பேசுகிறாய். நான் பாடுவதைத் தடுக்கிறாய்.
இவ்வாறு கூறி, கழுதை தன் வாயைத் திறந்து மிக விசையாகக் கத்தலாயிற்று. அங்கு சில உழவர்கள் காவல் இருந்தனர். அவர்கள் ஓடிவந்து கழுதையைக் கயிற்றால் கட்டி நன்றாக அடித்துப்புடைத்தனர். இதைக் கண்டது நரி.

நரி: மாமா, என் பேச்சைக் கேட்காமல் இசைபாடி இந்த நிலையை அடைந்தாயே.
என்று இகழ்ந்துரைத்தது” என்று பொன்னுடையோன் கூறினான்.

சக்கரத்தலையன்: ஒரு நகரத்தில் சாலியன் ஒருவன் துணிநெய்து தன் மனைவியோடு வாழ்ந்துவந்தான். ஒரு நாள் அவன் தறி முறிந்துபோய் விட்டது. அதற்காக மரத்தைத் தேடிக் காட்டுக்குள் சென்றான். ஒரு பெரிய வாகை மரத்தைக் கண்டு வெட்டப்போனான். அப்போது அந்த மரத்தில் யட்சன் ஒருவன் வசித்துவந்தான்.

யட்சன்: இது என் இடம். என் இடத்தை நீ வெட்டிவிடாதே. உனக்கு வேண்டியதைக் கேள். நான் தருகிறேன்.
சாலியனுக்கு புத்தி மட்டு. அவன் வீட்டிற்குச் சென்று கேட்டுவருவதாகச் சொல்லிச் சென்றான். வழியில் அவன் சிநேகிதன் குயவன் ஒருவன் எதிரில் வந்தான்.

சாலியன்: எனக்கு ஒரு யட்சன் ‘கேட்பதைத் தருவேன்’ என்று கூறினான். என்ன கேட்கட்டும் நான்?

குயவன்: நீ ராஜா ஆகவேண்டும் என்று கேள். நான் உனக்கு மந்திரியாக இருக்கிறேன்.
சாலியன் வீட்டுக்குப் போய் மனைவியிடம் கேட்டான்.

மனைவி: ராச்சியத்தை எல்லாம் நம்மால் சமாளிக்க முடியாது. நீ உனக்கு இன்னொரு தலையும் இன்னும் இரண்டு கைகளும் கேட்டு வாங்கிவந்தால் இரண்டு மடங்கு துணி நெய்ய முடியும். நமக்குப் போதிய பணமிருக்கும்.
மனைவி சொல்லே மந்திரம் என்று நினைத்த சாலியன், திரும்பிக் காட்டுக்குச் சென்றான். மனைவி கேட்டவாறே யட்சனிடம் இரண்டு தலை, நான்கு கைகள் கேட்டுப் பெற்றான். வீடு திரும்புகின்றபோது ‘இவன் யாரோ ராட்சஸன், இவனைக் கொல்லுவோம்’ என்று ஊரார் அவனை அடித்துக் கொன்றனர்.

ஆகவே வருவதை எவராலும் தடுக்க இயலாது என்று வல்லவர்கள் வீண் ஆசை கொள்வதில்லை. ஆனால், கிருபணன் என்ற ஒருவன் என்போல் வீண் ஆசை கொண்டு கேடு அடைந்தான்.

பொன்பெற்றவன்: அது எப்படி, சொல்வாயாக.

சக்கரத்தலையன்: பண்டரிபுரத்தில் கிருபண சர்மா என்ற பிராமணன் இருந்தான். அவன் பிச்சையெடுத்து, தினந்தோறும் அரிசி பெற்று வருவான். தனக்குச் சமைத்ததுபோக, மீதியை ஒரு பானையில் கொட்டி மூலையில் வைத்திருந்தான். ஏறத்தாழ அது நிரம்பியிருந்தது.

Siragu pancha thanthira kadhaigal14-2

ஒரு நாள் சமைத்துச் சாப்பிட்டுவிட்டுத் தானும் மூலையில் படுத்தவன் பகல் கனவு காணலானான். “பானையில் அரிசி நிரம்பியதும் அதைக் கொண்டு விற்று, ஓர் ஆடு வாங்குவேன். அது பல குட்டிகள் ஈனும். அவற்றை விற்று நான் ஒரு பசு வாங்குவேன். அதுவும் பல கன்றுகள் போடும். அவற்றை எல்லாம் விற்று ஒரு குதிரை வாங்குவேன். குதிரையும் பல குட்டிகள் ஈனும். அவற்றை எல்லாம் விற்றால் எனக்கு நிறையப் பணம் கிடைக்கும். அந்தச் சமயத்தில் ஒரு நல்ல அழகான பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்துகொள்வேன்.

அவளுக்கு ஓர் ஆண்குழந்தை பிறப்பான். நான் மந்திரம் சொல்லும்போது அவன் தவழ்ந்து என்னிடம் வருவான். நான் “அடி பெண்ணே, இவனைக் கொண்டு போ” என்று சொல்வேன். அவள் கைவேலையாக இருப்பதால் வர மாட்டாள். அப்போது சென்று இப்படி அவளை நன்றாக உதைப்பேன்” என்று மூலையில் இருந்த பானையை எட்டி உதைத்தான். பானை உடைந்து அரிசி முழுவதும் தரையில் கொட்டி வீணாகப் போயிற்று. எனவே வீண் கற்பனை கூடாது.

பொன்பெற்றவன்: உன்னைச் சொல்லிக் குற்றம் இல்லை. இது பற்றுமிகுந்த உள்ளத்தின் செயல். இதேபோன்ற செயலினால் சந்திரசேனன் என்னும் அரசன் மிகவும் துன்பம் அடைந்தான்.

சக்கரத்தலையன்: அவன் யார்? அது என்ன கதை?

பொன்பெற்றவன்: சந்திரசேனன் என்று ஓர் அரசன் இருந்தான். அவனுடைய மகனுக்குக் குரங்குகளுடன் விளையாடுவதில் மிகுந்த விருப்பம். ஆகவே அரண்மனைக்கு அருகில் உள்ள தோப்பில் நிறையக் குரங்குகளைக் கொண்டு வந்து வளர்த்து அவற்றோடு விளையாடி வந்தான். அந்த இடம் அரசனின் மடைப்பள்ளிக்கு மிக அருகில் இருந்ததால், மிச்சமீதியான உணவு வகைகள் எல்லாவற்றையும் அந்தக் குரங்குகளுக்கு வேலைக்காரர்கள் போடுவார்கள். அப்போது ஒருநாள் ஒரு சமையல்காரனுக்கும் ஒரு வேலைக்காரனுக்கும் பெரிய சண்டை உண்டாயிற்று.

அதைக் கண்ட புத்திசாலியான ஒரு முதிய குரங்கு, “இங்கே சண்டை வந்துவிட்டதால் நாம் இந்த இடத்தில் இனிமேல் இருக்கலாகாது. நாம் காட்டுக்குப் போவோம்” என்றது.

மற்ற குரங்குகள்: உனக்கு வயதாகிவிட்டதால் புத்தி தடுமாறிவிட்டது. நாம் இங்கே அரசனை அடுத்து இருந்து மிக நல்ல உணவுகளைப் பல ஆண்டுகளாகச் சாப்பிட்டு வந்தோம். இப்படிப்பட்ட வசதியை விட்டுக் காட்டுக்குச் சென்று கனிகளைத் தேடிக் கொண்டு யார் இருப்பார்கள்? எது வந்தாலும் எங்களுக்கு இங்கேயே வரட்டும்.
இதைக் கேட்ட கிழக்குரங்கு மற்ற குரங்குகளை விட்டுவிட்டுத் தன் சுற்றத்தோடு காட்டுக்குப் போய்விட்டது.

(தொடரும்)


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-14”

அதிகம் படித்தது