மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Oct 28, 2016

siragu-panjathandhira-kadhaigal1

கதைகள் என்றால் ஆசைப்படாதவர்கள் இல்லை. சிறுவர்கள் மட்டுமன்றிப் பெரியவர்களுக்கும் கதை என்றால் ஆசைதான். ஆங்கிலத்திலும் பெரியவர்களும் சிறுவர் கதைகளான ஈசாப் கதைகள், ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் போன்றவற்றைப் படித்து மகிழ்கிறார்கள். தமிழிலும் இவ்வாறே அநேகக் கதைகள் உள்ளன. தெனாலிராமன் கதைகள், மரியாதை ராமன் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், விக்கிரமாதித்தியன் கதைகள் என்று எத்தனை எத்தனையோ. சிறுவயதில் இவற்றையெல்லாம் படித்து மகிழ்ந்தது உண்டு. இப்போது நிறைய பேருக்கு ஆங்கிலப் படிப்பின் காரணமாக இம்மாதிரிக் கதைகளின் தொடர்பு விட்டுப்போய் விட்டது.

பஞ்சதந்திரக் கதைகள், அரிய அறிவுரைக் கதைகளாகும். இவற்றில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலவற்றைச் சிறிய தொகுப்புகளிலும், யூ ட்யூப் முதலிய காணொளிகளிலும் இப்போது காண்கிறோம். அசலான கதைகளை அப்படியே எடுத்துரைத்தலும் சொல்லுதலும் படித்தலும் கேட்டலும் இல்லாமல் போய்விட்டது. யாருக்கும் நேரமில்லை! அதற்காகவே இந்தப் பகுதி. இது சிறுவர்களுக்கு மட்டுமல்ல, உறுதியாகப் பெரியவர்களுக்கும் பயன்தரும்.

தமிழில் முதன்முதல் பஞ்சதந்திரக் கதைகளை எழுதியவர் வித்துவான் தாண்டவராய முதலியார் ஆவர். இவர் புதுவைக்கு அருகிலுள்ள வில்லியனூரில் பிறந்தவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர். இளமையிலேயே தந்தை கந்தசாமி முதலியார் இறந்துவிட்டார். அதனால் பொன்விளைந்த களத்தூரில் தாய்மாமன் குமாரசாமி வீட்டில் வளர்ந்து கல்வி பயின்றார். தமிழன்றியும் வடமொழி, தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் இவருக்குப் பயிற்சி ஏற்பட்டது. அக்கால ராஜதானிக் கல்லூரியில் (இன்றைய பிரெசிடென்சி கல்லூரி) ஆசிரியர் பணி செய்தார்.

பின்னர் செங்கல்பட்டில் சுதேச நீதிபதி வேலையில் அமர்ந்தார். அப்போது பஞ்சதநதிரக் கதைகளை இயற்றினார். திருத்தணிகை மாலை, திருப்போரூர்த் திருப்பதிகம், கதாமஞ்சரி, இலக்கண வினாவிடை முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். திருக்குறள் பரிமேலழகர் உரை, நாலடியார், சீவக சிந்தாமணி, தொல்காப்பியம் முதலிய நூல்களைப் பதிப்பிக்கவும் செய்தார்.

“தமிழ் கற்கப் புக்கோர் தமிழில் எழுதி வழங்குகின்ற பஞ்சதந்திரக் கதையைக் கற்கப் புகுந்தால், குளிக்கப்போய் சேற்றைப் பூசிக்கொண்டாற்போல வழுக்களையே கற்றுத் தடுமாற்றமுறுதலால், சென்னைச் சங்கத்துத் தலைவராகிய மகாராஜஸ்ரீ ரிச்சட்டுக் கிளார்க்குத் துரையவர்கள் உத்தரவினால், மகாராஷ்டிரத்தில் அச்சுப் பதித்திருக்கின்ற பஞ்சதந்திரக் கதையைத் தமிழில்மொழிபெயர்த்துச் சொற்பொருளழகுறப் பலவிடத்துச் சில கூட்டியும், கற்போர் உலக நடையும் சில செய்யுள் நடையுமான தமிழ் நன்குணரவும், சுவையுற இம்மொழிபெயர்ப்புப் பஞ்சதந்திரக் கதை சாலீவாஹன சக வருடம், 1746மேல் செல்லாநின்ற பார்த்திவ வருடத்துக்குச் சரியான கிரித்து 1825ம் வருடம் செய்து முற்றுப்பெற்றது.”

என்று தம் நூலுக்கு முன்னுரை எழுதியுள்ளார். இதன்பின் ஓராண்டு கழித்து 1826இல் இந்நூல் பதிப்பிக்கப் பெற்றது. தமது குழந்தைகளும் தம்மைச் சேர்ந்தவர்களும் நல்ல தமிழ்நடை பயின்று தேறுவதற்காகவே இவர் பஞ்சதந்திரக்கதையை எளிய நடையில் தொடங்கிக் கடினமான நடையில் எழுதிமுடித்தார் என்று சிலர் கூறுவர்.

இப்போது அசலான பஞ்சதந்திரக் கதைகள் சந்தையில் கிடைப்பதில்லை. அவரவர் மனம்போன போக்கில் எதையோ பஞ்சதந்திரக்கதைகள் என்று வெளியிட்டுப் பணம் சம்பாதிக்கின்றனர். அதற்காகவே இந்தப் பதிப்பு, இன்றைய தமிழில் வெளியிடப்பெறுகிறது.

பஞ்சதந்திரம்

வரலாறு

கல்வியிலும் செல்வத்திலும் குறைவற்றவர்கள் வாழ்ந்துவந்த பாடலிபுரம் என்னும் ஊரில் எல்லாவித நற்பண்புகளுடனும் கூடிய சுதரிசனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அவனுடைய பிள்ளைகள் படிக்காத மூடர்களாக இருந்தார்கள். அதைக் கண்டு கவலைப்பட்டான் அரசன். ஒருநாள் சபையிலேயே சிந்திக்கத் தொடங்கினான்.

“கல்வியும் நல்ல பண்பும் இலலாத பிள்ளைகள் இருந்து ஆகக்கூடியது என்ன? பால் கொடுக்காத எருமைகளைக் காப்பாற்றி என்ன பயன்? வேத சாத்திரம் அறிந்தவனாக ஒரே ஒரு மகன் இருந்தாலும் அவனால் குடும்பம் முழுதும் சுகம் அடையும். இவ்வாறற்ற பிள்ளைகள் கர்ப்பத்தில் அழிந்தாலும் நல்லது, அன்றிப் பிறந்தவுடனே இறந்துவிட்டாலும் நல்லதே. குலத்தில் அயோக்கியனான பிள்ளை பிறக்கலாகாது. பல பிறவிகளில் செய்த புண்ணியத்தினால், இம்மையிலும் மறுமையிலும் சுகம் கொடுக்கும் மகன் பிறக்கிறான். பாவம் செய்திருந்தால், குலத்தைக் கெடுக்கும் மகன் பிறக்கிறான். இந்தப் பிள்ளையைப் பெற்றவர்களஎன்ன தவம் செய்தார்களோ என்று கண்டவர்கள் சொல்லும்படி நடப்பவன் அல்லவா பிள்ளை?” என்று தனக்குள் ஆலோசித்துவிட்டு, சபையை நோக்கிச் சொல்லல் ஆயினான்.

“இளமையும் செல்வமும் ராஜச குணமும் அறிவில்லாமையும் ஆகிய இந்த நான்கினுள் ஒவ்வொன்றும்கேட்டுக்குக் காரணமாகும். இந்த நான்குமே ஒருவனிடம் இருந்தால் அவன் என்ன பாடுபடமாட்டான்? கெட்டவழியில் நடக்கின்ற என் பிள்ளைகளுக்கு நீதி சாத்திர உபதேசத்தினால் எந்த மகாபுருஷன் மறுபிறவி எடுக்குமாறு செய்வான்?”

 அப்போது எல்லா நீதி சாத்திரங்களிலும் வல்லவனான சோம சர்மா என்பவன் எழுந்து, “இவர்களுக்குச் சமமான அறிவுடையவர்கள் இந்த உலகத்திலேயே இல்லை என்று சொல்லும்படி என்னால் ஆறுமாதத்தில் செய்யமுடியும். அதுவரை நீங்கள் பொறுத்திருந்தால் போதும்” என்றான்.

 அதைக் கேட்டு, நடுக்கடலில் திசைதப்பி மயங்கிய மாலுமி ஒருவனுக்குக் கரை கண்ணில் பட்டாற்போல அரசன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். சோம சர்மாவுக்கு உபசாரங்கள் செய்து தன் மகன்களை அவனிடம் ஒப்படைத்தான். உடனே அந்தப் பிள்ளைகளை சோம சர்மா தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, கருப்பஞ்சாற்றைக் காய்ச்சி ஒரு கட்டியாகச் செய்ததுபோல நீதி சாத்திரங்களை எல்லாம் பஞ்சதந்திரக் கதை என்ற கருப்பங்கட்டியாக்கி, அரசகுமாரர்களுக்குச் சொல்லத் தொடங்கினான்.

சோம சர்மா: அரச குமாரர்களே, உங்களுக்குச் சில வேடிக்கைக் கதைகள் சொல்லப் போகிறேன், கேளுங்கள்.

அரசகுமாரர்கள்: என்ன விதமான கதைகள் அவை?

சோம சர்மா: பஞ்ச தந்திரக் கதைகள்.

அரசகுமாரர்கள்: பஞ்ச தந்திரம் என்றால் என்ன? நாங்கள் கேள்விப் பட்டதில்லையே? எங்களுக்குத் தெரியச் சொல்லவேண்டும்.

சோம சர்மா: பஞ்ச தந்திரங்கள் என்பவை, மித்திர பேதம், சுகிர்லாபம், சந்தி விக்கிரகம், அர்த்த நாசம், அசம்பிரேட்சிய காரியத்துவம் என்பன.

மித்திர பேதம் என்பது சிநேகத்தைக் கெடுத்துப் பகையை உண்டாக்குதல்;

சுகிர்லாபம் என்பது தங்களுக்குச் சமமானவர்களுடன் கூடிப் பகையில்லாமல் வாழ்தல்;

சந்தி விக்கிரகம் என்பது பகைவருடன் உறவுகொண்டாடி வெல்லுதல்;

அர்த்த நாசம் என்பது கையில் கிடைத்த பொருளை அழித்தல்;

அசம்பிரேட்சிய காரியத்துவம் என்பது ஒரு காரியத்தைத் தெளிவாக ஆராயாமல் செய்தல்.

இவ்வாறு விளக்கியதும், “ஐயா, அந்தக் கதைகளை எங்களுக்கு நன்கு விளக்கமாகச் சொல்லவேண்டும்” என்று அரசகுமாரர்கள் கேட்க, அவர்களை ஆசீர்வதித்து, சோம சர்மா பின்வரும் கதைகளைச் சொல்லத் தொடங்கினான்.

பஞ்சதந்திரக் கதைகள்

முதலாவது, மித்ரபேதம் அல்லது நட்பைப் பிரித்தல்:

“ஒரு காட்டில் ஒரு சிங்கமும் எருதும் மிக ஒற்றுமையாக வாழ்ந்திருந்தன. அந்த நட்பைக் கோள் சொல்கின்ற, லோப குணமுள்ள ஒரு நரி வந்து கெடுத்தது” என்று தொடங்கினான் சோம சர்மா. “அதெப்படி” என்று ராஜ குமாரர்கள் கேட்க. விரிவாகச் சொல்லத் தொடங்கினான்.

 சிங்கம் எருதின் ஒலி கேட்டு மயங்கியது

தென்னாட்டில், மகிழாருப்யம் என்னும் பட்டணத்தில் வர்த்தமானன் என்று ஒரு வியாபாரி இருந்தான். அவனிடம் நிறையப் பணம் இருந்தது. இருந்தாலும், இன்னும் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆசையினால், சிந்திக்கலானான்:

“எதைச் சம்பாதிப்பது மிக அருமையோ (அபூர்வமோ) அதைச் சம்பாதிக்க வேண்டும். சம்பாதித்ததைக் காப்பாற்ற வேண்டும். காப்பாற்றியதைப் பெருகச் செய்யவேண்டும். பெருக்கிய செல்வத்தைத் தானும் அனுபவித்து, தக்கவர்களுக்கும் கொடுத்துச் செலவழிக்க வேண்டும்.

காப்பாற்றாத பொருள் நாசமாகும்

பெருகச் செய்யாத பொருள் குறையும்

தானும் அனுபவித்து, நல்லவழியிலும் செலவழிக்காத செல்வம் வீணாகும்

என சோம சர்மா நூல்கள் சொல்கின்றன. மேலும், மனிதருக்குள் இன்பமும், புண்ணியமும், கீர்த்தியும், பெருமையும், உறவும், நினைத்தது முடித்தலும் யாருக்கு உண்டு? திரளாகப் பணம் சேர்த்தவர்களுக்கே உண்டு. இல்லாதவர்கள் உலகத்தில் நடைப் பிணங்கள் ஆவர். ஆகையினால் மேன்மேலும் சம்பாதிப்பதே யோக்கியம்”

என்று யோசித்து, தன்னிடத்திலிருந்த சரக்குகளை வண்டியில் ஏற்றி, அதில் சஞ்சீவகன், நந்தகன் என்னும் பெயர்களைக் கொண்ட இரண்டு எருதுகளைப் பூட்டி நடத்திக்கொண்டு வேறு நாட்டுக்குப் போனான்.

போகும் வழியில், ஒருநாள், அடர்ந்த காட்டில், பாரம் தாங்காமல் சஞ்சீவகன் என்ற எருது கால் இடறி விழுந்து நொண்டி ஆயிற்று. வர்த்தமானன் அதை அவிழ்த்துவிட்டு, அதற்கு ஒரு வேலையாளைக் காவல் வைத்து, வேறொரு எருதைக் கட்டி வண்டியைச் செலுத்திக் கொண்டு சென்றான். அந்த வேலையாள், இரண்டொரு நாள் கழித்து, எஜமானனிடம் ஓடிவந்து, “அந்த எருது செத்துப் போய்விட்டது” என்று பொய் கூறினான்.

ஆனால் காட்டில் விடப்பட்ட எருது சாகவில்லை. புல்முதலிய மேய்ச்சல் நன்கு கிடைத்ததால் மிகவும் கொழுத்திருந்தது. உடைந்த காலும் தானாகக் கூடி, காட்டில் அது தன்னிச்சையாகத் திரிந்துகொண்டிருந்தது.

காட்டுக்கு அரசன் சிங்கம் என்பது ஒரு கதை மரபு. அதன்படியே இந்தக்காட்டிலும் தன் வலிமையினால் அரசனாக மதிக்கப்பட்ட பிங்கலன் என்ற ஒரு சிங்கம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. ஒருநாள் அது தண்ணீர் குடிக்க யமுனை ஆற்றங்கரைக்குப் போயிற்று. திடீரென அந்த எருது அப்போது பேரிடி முழக்கம் போல முக்காரம் செய்தது. அந்த சத்தத்தைக் கேட்டு சிங்கம் “இது என்ன புதிதாக இருக்கிறதே” என்று பயந்துபோய், நடுநடுங்கித் தண்ணீர்கூடக் குடிக்காமல் அசையாமல் நின்றது.

(தொடரும்)


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்”

அதிகம் படித்தது