மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பரம்பிக்குளம் ஆளியாறு திட்டம் – கேரளத்திடமிருந்து தமிழ்நாடு நீர் வாங்கிய வரலாறு

ஆச்சாரி

May 31, 2014

aaliyaar thittam1பெரியாறு அணை கட்ட பென்னி குயிக் என்கிற ஆங்கிலேய அதிகாரியின் அபரிதமான முயற்சியையும், பல்லாயிரக்கணக்கான ஏழை தொழிலாளர்களின் தியாகத்தையும் சிறகில் முந்தய இதழ்களில் பார்த்தோம்.இன்று பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த பல்லாண்டுகளாக நடக்கும் பிரச்சனை பற்றியும், பல்வேறு நதி நீர் பங்கீடு விஷயத்தில் அரசியல் புகுத்தப்பட்டு தீர்வின்றி இழுத்து கொண்டு இருப்பதையும் தமிழகத்தில் இருந்து விவசாயம் சிறிது சிறிதாக அழிந்து வருவதையும் காண்கிறோம். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன் தமிழத்தில் இருந்த இரு மதிநுட்ப அரசியல்வாதிகள்சுதந்திரத்திற்குப் பிறகும்கூட கேரளத்திலிருந்து நதிநீரை பேச்சுவார்த்தை மூலம் வெற்றிகரமாக வாங்கி கொடுத்திருக்கிறார்கள் என்ற செய்தியை கேட்கவே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா?அந்த இரு அரசியல்வாதிகள் சி.சுப்ரமணியம் மற்றும் காமராசர் ஆகியோர் ஆவார். அவர்கள் கேரள அரசிடம் நயமாகப் பேசி தமிழகத்தின் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசனவசதி பெரும் வகையில் பாசனநீரைஅப்போதைய கேரள ஆட்சியாளர்களுக்கு உண்மை புரியும் படியும் அவர்களது மனநிலை அறிந்து அதற்கேற்றவாறு சாதுர்யமாகப் பேசி தமிழகத்துக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றினர்.

aaliyaar thittam2(C.Subramaniyam)சி.சுப்ரமணியம் பரம்பிகுளம் ஆளியாறு திட்டத்தைநிறைவேற்றிய விதத்தை தனது சுய சரிதையான “திருப்பு முனை” என்ற நூலில் அழகாக விளக்குகிறார். அந்த புத்தகத்தில் உள்ளதை அப்படியே பதிவிடுகிறேன். இன்றைய அரசியல்வாதிகளும், இளைய தலைமுறையினரும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை.

சி.சுப்ரமணியம் அவர்களின் சுயசரிதை(திருப்பு முனை)யிலிருந்து –

பரம்பிக்குளம் திட்டம்:

மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தி ஆகி மேற்கு நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நதிகளின் நீரைக் கிழக்கு திசையில் திருப்பி விடுவதற்காக ஒரு திட்டம் மேற்கொள்ளப்பட்டது. அது தான் பரம்பிக்குளம் திட்டம். சில நதிகள் தமிழ் நாட்டில் உற்பத்தியாகி, மேற்கு நோக்கிச் சென்று கேரளத்தில் பாய்கின்றன. கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரபல காங்கிரசாரும், கோவை மாவட்ட போர்டின் தலைவராய் இருந்தவருமான வி.கே.பழனிச்சாமி கவுண்டர் பரம்பிக்குளம் திட்டம் பற்றி சிறிது காலமாக வற்புறுத்தி வந்தார். 1952 -ம் ஆண்டில் சென்னை மாகானச் சட்ட பேரவை உறுப்பினராக பழனிச்சாமி கவுண்டர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சட்டப்பேரவையில் உரையாற்றுகையிலும் இந்தத்திட்டம் பற்றி அடிக்கடி குறிப்பிட்டார். எனக்கு இந்த திட்டம் பற்றியோ அதன் இட அமைப்புக் குறித்தோ அப்போது எதுவும் தெரியாது. அந்தத்திட்டத்தை எங்கே அமைக்கலாம் என்பது பற்றிப் பார்வையிட வருமாறு பழனிச்சாமி கவுண்டர் என்னை அழைத்தார். மேற்கு தொடர்ச்சி மலைப்பாதையில் சுமார் 48 கி.மி தொலைவு நாங்கள் காரில் சென்றோம். பின்னர், யானைகள் மீது ஏறி சென்று நதிகளின் உற்பத்தி பகுதியை அடைந்தோம். அந்த பயணம் ஆபத்து நிறைந்ததாக இருந்தது என்ற போதிலும், பரம்பிக்குளம் திட்டத்தினால் ஏற்படக்கூடிய பயன்கள் குறித்து நான் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது.

இந்தத்திட்டம் குறிந்து ஆரம்ப அறிக்கை ஒன்றை தயாரிக்குமாறு பாசனைத்துறை தலைமை பொறியாளரிடம் கூறினேன். இதற்கிடையே திட்டப் பகுதிக்கு நான் சென்றது பற்றி கேரள பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாயின. கேரள அரசின் அனுமதி இல்லாமல் நான் அங்கு எவ்வாறு செல்லலாம் என்று சில மலையாளப் பத்திரிக்கைகள் கேள்வி எழுப்பின. இதை கண்டு நான் வியப்புற்றேன். இந்திய பிரஜை ஒருவர் இந்தியாவின் எந்த பகுதிக்கும் செல்ல எவரிடம் இருந்தும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. எனினும் குறுகிய மனபான்மைக்குத்தான் எத்தனை விசித்திர முகங்கள்.

கேரள முதல்வர் இசைவு:

aaliyaar thittam2(namboothiripatஅப்போது ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் கேரள முதலமைச்சராக இருந்தார். பாசனத்துறை அமைச்சராக வி.ஆர்.கிருஷ்ணய்யர் பொறுப்பு வகித்து வந்தார். அவர்கள் இருவரும் எனது சிறந்த நண்பர்கள். 1932ம் ஆண்டில் வேலூர் சிறையில் நான் இருந்த போது நம்பூதிரிபாட் அங்கே இருந்தார். கேரள முதல்வரையும் பாசன துறை அமைச்சரையும் சந்திக்க ஏற்பாடு செய்து கொண்டு, நான் கேரளத்துக்கு சென்றேன். என்னுடன் அதிகாரிகள் எவரையும் அழைத்து செல்லவில்லை. பரம்பிக்குளம் திட்டம் பற்றி நம்பூதிரி பாட்டிடம் பேசினேன். அவர் கிருஷ்ணய்யரையும் எங்களது பேச்சில் கலந்து கொள்ள அழைத்தார். நாங்கள் பல்வேறு அம்சங்களையும் பற்றி விரிவாக விவாதித்தோம். இந்தத் திட்டம் பற்றி ஒரு முழுமையான அறிக்கையைத் தந்தால் இது குறித்து பரிசீலிப்பதாக நம்பூதிரிபாட் ஒப்பு கொண்டார். இவ்வாறு ஒரு அறிக்கையைத் தயாரிக்க தமிழ்நாடு அரசு பொறியாளர்கள் திட்ட பகுதிக்கு செல்ல வேண்டி இருந்தது. திட்ட பகுதியில் கேரளத்தில் உள்ள பகுதியும் அடங்கி இருந்தது. எனவே நமது பொறியாளர்கள் கேரள பகுதியையும் ஆய்வு செய்வதற்கு அனுமதி வேண்டினேன். அது உடனே ஒப்பு கொள்ளப்பட்டது. பின்னர், திட்டம் குறித்து முழுமையாக ஆய்ந்து, அறிக்கை தயாரிக்குமாறு தமிழ்நாடு பொறியாளர்களுக்கு கூறினேன். ஒரு பள்ளதாக்கிலிருத்து மற்றொரு பள்ளதாக்கிற்கு நீரோட்டத்தை மாற்றும் முயற்சி இந்தியாவிலேயே அப்போது தான் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பெரிய மலைகளைக் குடைந்து நீண்ட சுரங்க பாதைகளை அமைக்க வேண்டி இருந்தது. இந்த தொழிற்நுட்பம் நமக்கு புதிது. எனினும் இந்தத் திட்டத்தை தங்களால் செயல்படுத்த முடியும் என்று தமிழ்நாடு அரசு பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள். எனினும் திட்டத்தை செயல்படுத்த குறிப்பாகச் சுரங்க பாதைகளை அமைக்க ஓரளவு வெளி நாட்டு உதவி தேவைப்படும் என்று அவர்கள் கூறினர்.

நீர் பகிர்வு:

aliyaar thittam7திட்டத்தின் முதற் கட்டத்தில் பிரதான நதியான பரம்பிக்குளம் திசையைத் திருப்ப வேண்டி இருந்தது. திட்டத்தின் இரண்டாவது, மூன்றாவது கட்டங்களில் மூன்று சிறிய நதிகளை இந்த பிரதான திட்டத்துடன் ஒருங்கிணைக்க தீர்மானிக்கப்பட்டது. ஒரு ஆண்டில் மொத்தம் எவ்வளவு நீர் கிடைக்கும் என்பதை மதிப்பிட வேண்டியிருந்தது. முப்பது ஆண்டுகளில் திட்டப் பகுதிகளில் பெய்த மழை சம்பத்தமான புள்ளி விபரங்களை கருத்தில் கொண்டு, மதிப்பீடு செய்யபட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கிடைக்கக் கூடிய நீரைத் தமிழ்நாடு, கேரளாவும் எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது பற்றி அரசியல் அளவிலும், தொழில்நுட்ப நிபுணர்கள் அளவிலும் மிக விரிவான பேச்சுகள் நடந்தன. கேரள முதலமைச்சர் ஒத்துழைத்ததால் திட்டத்தின் முதல் கட்டம் சம்பந்தமாக இந்த விஷயத்தில் ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இரண்டாவது, மூன்றாவது கட்டங்கள் அமலாகத் தொடங்கியதும், மேற்கொண்டு பேச்சுக்களை நடத்துவது என்று முடிவு செய்யபட்டது. மத்திய அரசின் தலையீடு அல்லது பேச்சுவார்த்தை எதுவும் இல்லாமல் இரு மாநிலங்களுக்கு இடையே இவ்வாறு ஓர் உடன்பாடு உருவானது, உண்மையிலேயே பெருமைக்குறிய விஷயம் ஆகும். இந்த உடன்பாட்டை தொடர்ந்து பரம்பிக்குளம் திட்டம் மிகவும் தீவிரமாக செயல்படுத்தபட்டது. ஒரு கட்டத்தில் திட்டப் பகுதியை பார்வையிட வருமாறு நேருவை நான் அழைத்தேன். திட்டம் செயல்படுத்தப்பட்ட இடத்தில் ஒரு விருந்தினர் விடுதியை சிறந்த முறையில் அமைத்திருந்தோம். அதைத்திறக்க வருமாறு நேருவை அழைத்தோம். நேரு வந்து அதைத்திறந்து வைத்தார். அந்தத்திட்டம் அவரை பெரிதும் ஈர்த்தது. தமிழ்நாடு பொறியாளர்களின் திறமையை நேரு பாராட்டினார்.

இரண்டாவது கட்டம்:

பின்னர் இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டம் குறித்து பேச்சு நடத்தவேண்டி இருந்தது. இதற்கிடையே கேரளத்தில் கம்யூனிஸ்ட் அமைச்சரவை விழுத்து விட்டது. காங்கிரஸ் ஆதரவுடன் பிரஜா சோசியலிஸ்ட்டு கட்சியின் சார்பில் ஒரு அமைச்சரவை அமைக்கப்பட்டிருந்தது. பட்டம் தாணுப்பிள்ளை முதலமைச்சராக இருந்தார். நான் அவருடன் பேச்சு நடத்தினேன். கம்யூனிஸ்டு அமைச்சரவையுடன் சுமூகமாக பேசி உடன்பாடு கண்ட எனக்கு,பட்டம் தாணுப்பிள்ளையைச் சமாளிப்பது சிரமமாக இருந்தது. நானும் பட்டம் தாணுப்பிள்ளையும் உடன்பாடு காண முடியவில்லை. எனவே தலையிட்டு தீர்த்துவைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் கோவிந்த வல்லப பந்த்தை நாங்கள் கேட்டுக்கொண்டோம். இரு தரப்பினரையும் அவர் டெல்லிக்கு அழைத்தார். பட்டம் தாணுப்பிள்ளையும், அவரது பாசனத்துறை அமைச்சரும், கேரள பொறியாளர்களும் டெல்லிக்கு சென்றார்கள். காமராஜரும், நானும் தமிழ்நாடு அரசு பொறியாளர்களுடன் டெல்லிக்கு பயணமானோம்.

மத்திய உள்துறை அமைச்சர் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் அடுத்த நாள் நடைபெறுவதாய் இருத்தது. அதற்கு முன்னர்,பட்டம் தாணுப்பிள்ளையைத் தனியாகச் சந்தித்துப் பேசலாம் என்று எனக்கு ஓர் யோசனை தோன்றியது. உடனே அவருக்கு டெலிபோன் செய்தேன். அவர் தங்கி இருந்த கொச்சி இல்லத்தில் என்னை சந்திக்க அவர் உடனடியாக ஒப்பு கொண்டார். அவ்வாறே அவரைச் சந்தித்தேன். பரம்பிக்குளம் திட்டத்தின் முதல் கட்டம் குறித்து மத்திய அரசின் தலையீடு இல்லாமல் கேரளமும், தமிழ்நாடும் ஒரு உடன்பாட்டுக்கு வர முடிந்ததை அவருக்கு சுட்டி காட்டினேன். இந்த கட்டத்தில் மத்திய அரசு இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்வதை நான் விரும்பவில்லை என்றும், கேரளமும் தமிழ்நாடும் மத்தியஸ்தம் இல்லாமல் முடிவு செய்வதையே நான் விரும்புகிறேன் என்று சொன்னேன்.

கேரள முதல்வர் ஏற்றார்:

aaliyaar thittam4 (danupillai)பட்டம் தாணுப்பிள்ளை உடனடியாக ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.. உடன்பாடு காண்பதில் நாங்கள் ஏற்கெனவே தோல்வி அடைந்துவிட்டோம் என்றும் மீண்டும் பேச்சு நடத்துவதில் பயனில்லை என்றும் அவர் கூறினார். “நீங்கள் கேரள முதமைச்சர் மட்டுமல்ல,நீங்கள் ஒரு தேசிய தலைவர் என்ற வகையில் நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதை நான் ஏற்க தயாராக இருக்கிறேன்.” என்று நான் கூறினேன். எனது பேச்சு பட்டம் தாணு பிள்ளையை திடுக்கிட வைத்தது. தகராறின் விவரங்கள் அவருக்கு முழுமையாக தெரியாது என்பதை அறிந்தேன். “திரு. சுப்ரமணியம் அவர்களே! எது சிறந்த தீர்வாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?” என்று அவர் சிறிது நேர யோசனைக்குப் பிறகு அவர் கேட்டார். இந்தத் திட்டத்தின் மூலம் ஏராளமான நீர் கிடைக்கும். ஆனால் தகராறு ஒரு சிறிய அளவு நீர் பற்றியதே என்று நான் குறிப்பிட்டேன். நீரை இரு மாநிலங்களும் நியாயமாக பகிர்ந்து கொள்ள என்ன முறையைப் பின் பற்றலாம் என்று அவர் கேட்டார். நான் ஒரு திட்டத்தை அவரிடம் சமர்ப்பித்தேன். அவர் அதை ஒப்புகொண்டார். அவர் எந்த முடிவை எடுத்தாலும் அதை நான் ஏற்பேன் என்று நான் முதலில் மனந்திறந்து கூறியதால் தான் அவர் எனது திட்டத்தை ஏற்றுக் கொண்டார் என்று கருதுகிறேன். எனது திட்டம் இரு மாநிலங்களுக்கும் நியாயமாக இருக்கும் என்று அவர் கருதி இருக்கக்கூடும்.

நம்பிக்கையின் பயன்:

பட்டம் தாணுப்பிள்ளை எனது திட்டத்தை ஏற்று கொண்டார் என்று காமராஜரிடம் டெலிபோன் மூலமும், பிறகு நேரிலும் தெரிவித்தேன். காமராஜர் மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தார். விவகாரத்தை நாங்கள் சுமூகமாக தீர்த்து கொண்டோம் என்றும், மத்திய அரசின் மத்தியஸ்தம் அவசியம் இல்லை என்றும் அடுத்த நாள் மத்திய உள்துறை அமைச்சர் பந்த் அவர்களிடம் தெரிவித்தோம். முதல் நாள் மாலை கொச்சி இல்லத்தில் என்ன நடந்தது என்பதையும் பந்த் அவர்களிடம் விவரமாக கூறினேன். பந்த் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இரு தரப்பினரையும் அவர் பாராட்டினார். “நம்பிக்கை வைத்தால் நம்பிக்கை பிறக்கும்” என்ற முதுமொழி மிகவும் சரியே என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.

இன்று தீர்க்கப் படமுடியாதவை என்று கருதப்படும் பல விஷயங்களுக்கு நம்பிக்கை, நல்லெண்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் தீர்வு காணலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு.

ஆளியாறு திட்டம்:

பட்டம் தாணுப்பிள்ளை தலைமையிலான கேரள அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் மேற்குறிப்பிட்டவாறு உடன்பாடு ஏற்பட்டதும், திட்டத்தின் இரண்டாவது கட்டம் அமல் செய்யபட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுமார் 70000 ஏக்கர் புஞ்சை நிலங்களுக்குப் பாசனவசதியும், ஆளியாறு நதி ஏற்கனவே பாசன வசதி அளித்துவந்த சுமார் 70000 ஏக்கர் நிலங்களுக்குத் தண்ணீர் தங்கு தடையின்றி கிடைக்கும் ஏற்பாட்டையும் திட்டத்தின் இரண்டாவது கட்டம் அளித்தது. பழைய ஆளியாறு திட்டமும் பரம்பிக்குளம் திட்டமும் ஒருங்கிணைக்கப்பட்டன. இவ்வாறு இதற்குப் பரம்பிக்குளம்-ஆளியாறு திட்டம் என்று பெயர் வந்தது.

மூன்றாவது திட்டம்:

தி.மு.க ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு இந்தத் திட்டத்தின் மூன்றாவது கட்டம் குறித்து உடன்பாடு காண முயற்சி நடந்தது. ஆனால் இப்போது கூட (1994) எந்தவிதமான தீர்வும் ஏற்படவில்லை. ஆயக்கட்டு பகுதி நிர்ணயிக்கப்பட்டு இதற்கான கால்வாய்களும் தோண்டப்பட்டப் பிறகு, கோயம்புத்தூர் மாவட்டத்தில் இதர வறண்ட பகுதிகளுக்கும் பாசன வசதியை விரிவு படுத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. தி,மு.க அரசும் அதற்கு பிறகு அ.இ.அ.தி.மு.க அரசும், கூடுதல் நீர் எதுவும் இல்லாமல் புதிய கால்வாய்களை வெட்டி ஆயக்கட்டு பகுதியின் பரப்பை அதிகப்படுத்திக் கொண்டே வந்தன. இப்போது (1994) இந்தத் திட்டத்தின் ஆயக்கட்டு பகுதியின் பரப்பு 2.5 லட்சம் ஏக்கர்களுக்கும் அதிகம். ஆனால் இவ்வளவு பெரிய ஆயக்கட்டு பகுதிக்கு போதிய நீர் வரத்து இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும், சுமார் 3 மாதங்களுக்கு தண்ணீர் விடப்படுகிறது. ஆயக்கட்டு பகுதிக்காக கால்வாய்களை வெட்டுவதற்கு அவசியமற்ற செலவு செய்யபட்டுள்ளது. ஏரளமான பரப்பு நிலம் பாசன கால்வாய்களாக தோண்டபட்டிருக்கிறது. தேர்தலில் அந்தப் பகுதியை சேர்ந்த மக்களின் வாக்குகளை பெறுவதற்காக தேர்தல் நேரத்தில் இந்த கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன.

கட்சி அரசியல்:

நமது நட்டில் வளர்ச்சி திட்டங்களில் கூட கட்சி அரசியல் நுழைந்து சரியான முடிவுகளை எடுக்கமுடியாமல் சிரமங்களை உண்டாக்குகிறது. செலவுகளுக்கு ஏற்ற பயன்கள் கிடைக்குமா என்பது கவனிக்கப்படாமல், பணம் விரயம் செய்யபடுகிறது. இதனால் தான் நமது நாட்டில் பல பாசன திட்டங்கள் எதிர்பார்க்கப்படும் பயன்களை தருவது இல்லை.பொருளாதார ரீதியில் அவை கட்டுபடியாகவும் இருப்பது இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு பயன் தரும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டபோது தேர்தலில் வாக்காளர்களின் ஆதரவை அவை பெறவில்லை. பாசன திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போது, சில சந்தர்ப்பங்களில் தண்ணீர் மிகவும் தேவைப்பட்ட பகுதிகளுக்கு அது கிடைக்காமல் போயிற்று என்பது இதற்கு ஒரு காரணம். பாசன வசதியைப் பெற்றவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் பாசன வசதி பெறாதவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள் என்பதும் உண்மை.

அரசியல் காரணங்கள்:

புதிய திட்டங்களை வகுக்கும் போது இதை கருத்தில் கொள்ளவேண்டும். தேர்தலில் வாக்குகளை பெற உதவும் என்ற நோக்கம்,எந்தத் திட்டத்திற்கும் அடிப்படையாக இருக்க கூடாது. அரசியல் நோக்கங்களை மறுத்துவிட்டு,ஒவ்வொரு திட்டத்தையும் அதன் தகுதியின் அடிப்படையில் தான் முடிவு செய்யவேண்டும்,ஏனெனில் ஒரு திட்டத்தினால் ஒருவர் பயனடைந்தால் ஏமாற்றம் அடைபவர்கள் பலர் இருப்பார்கள். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போது அன்றைய சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த பனகல் ராஜா “ஒருவரின் நியமனம் பத்து பேருக்கு ஏமாற்றம்” என்று கூறுவது வழக்கம், அரசியல்வாதிகள் இதை கருத்தில் கொண்டு ஒரு திட்டத்தினால் மக்கள் ஆதரவு கிடைக்கிறதா அல்லது அரசியல் ரீதியாக பலம் பெருகுமா என்றெல்லாம் பார்க்காமல், பாரபட்சம் இல்லாமல் செயல்படுவது நலம். ஓர் அரசியல் கட்சியின் அல்லது ஒரு தனி நபரின் சாதனைகள் குறித்து வருங்கால சந்ததியார் முடிவு செய்ய விட்டுவிட வேண்டும்.

சி.சுப்ரமணியம் அவர்களின் சுயசரிதையிலிருந்து மேற்கூறிய பகுதிகளை எடுத்து பதிவிட்டுள்ளேன்.

புத்தகம் பெயர்: என் வாழ்க்கை நினைவுகள் . முதல் தொகுதி-திருப்பு முனை.

தமிழர்களின் நலனுக்காக ஒரு காலத்தில் தமிழக காங்கிராசார் போராடினார் என்ற செய்தியே இந்த தலைமுறையினருக்கு வியப்பாக இருக்கும்,சி.சுப்ரமணியம் போன்ற அரசியல்வாதி மீண்டும் தமிழகத்துக்கு கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

This can be a recipe for shocking bills www.topspying.com/ and credit card statements, especially for younger teens who often overlook purchase information

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பரம்பிக்குளம் ஆளியாறு திட்டம் – கேரளத்திடமிருந்து தமிழ்நாடு நீர் வாங்கிய வரலாறு”

அதிகம் படித்தது