மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்கள் தம் உடல் சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்ளும் கதைகள்

முனைவர் மு.பழனியப்பன்

Mar 25, 2023

siragu-pen-ezhuthalargal2-150x150

பெண்கள் தம் உடல் சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலையில் அவற்றைத் தீர்க்க வழி சொல்கின்றன அம்பையின் கதைகள்.

தமயந்தியின் துளசி என்ற கதையும் சமையல் சிறை பற்றிய கதை. குடும்பத்தில் சமையலறை எனும் சிறையில் சிக்கிக்கொண்டு ஒரு பிணைக்கைதியாக, புகுந்தகம் எனும் கொள்ளையரிடம் மாட்டி கடைசிவரை பிணைக்கைதியாகவே பெண்கள் போராடும் நிலை உண்டு. திருமணம் என்ற நிர்பந்தத்தில் பிணைக் கைதியாகும் பெண்ணின் நிலை என்ன? மீளமுடியுமா? வாழ்வா சாவா? என்ற போராட்டத்திலேயே அவள் காலம் கழிகிறது. இந்த நிலையைத் தமயந்தி துளசி என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிணைக்கைதி என்ற கதையில் காட்சிப்படுத்துகிறார். துளசியின் கணவன் பசவப்பா கொள்ளையர்களால் கடத்தப்படுகிறான். செய்தியைத் தொலைக் காட்சியில் பார்த்தோம் என்று கூறிக்கொண்டு துக்கம் விசாரிக்க வென்று மூத்த மாமியாரும் அவரது மருமகள்களும் குழந்தைகளும் படையெடுக்கின்றனர். மலைபோன்ற மாவைப் பிசைந்து உணவாக்கி அவர்களுக்குப் படைக்கிறாள். துக்கம் விசாரிக்கவென்று வந்தவர்கள் உல்லாசத்திற்காக ‘முத்தியாலமடு’ சென்று பார்த்து விட்டு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அங்கு அவர்கள் உண்பதற்காகத் துளசியால் உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது.

வேளா வேளைக்கு உணவுப் பண்டங்களும் காபியும் அவர்களுக்குத் தயாரிக்கும் பொறுப்பு. குழந்தைக்குப் பாலூட்டவோ, கணவனைப் பற்றி நினைத்துப் பார்க்கவோ நேரமின்றி சமையல் வேலை. அனைத்து வேலையும் பார்த்துவிட்டு வருபவளுக்கு மிஞ்சுவதோ ஒரு வாய் சோறும் கழுவ வேண்டிய மலைபோல குவிந்த பாத்திரங்களுமே. வந்தவர்கள் உண்டு உண்டு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு ஏதேதோ பேசிக்கொண்டிருப்பதுதான் வேலை. கணவன் பற்றிய தகவலை அவளிடம் கூறுவோர் யாருமில்லை. மாமியார் அவளது மனவலியை, உடல்வலியை நினைத்துப் பாராமல் ஏசிக் கொண்டும் ஏவிக்கொண்டுமிருந்தாள். டிபன்கடை, காபிக்கடை என மாறிமாறி கடை போட்ட துளசி, வேலைகளை முடித்து, இரவு பத்து மணிக்கு மேற்பட்டு படுக்க வருகிறாள்.

கணவனை நினைத்து அழ முற்படும் அந்த நேரத்தில், தனது பெரியம்மா மகன் வந்திருப்ப தாகவும் அவனுக்கு உணவு ஏற்பாடு செய்யும்படியும் மாமியாரின் கட்டளை. தனது துன்பத்தைக்கூட வெளிப்படுத்தி ஆசுவாசப்பட முடியாத பிணைக்கைதியாய் அங்கிருப்பது துளசியே. இப்படி ஆணாதிக்க நோக்கில் உருவமைக்பட்ட சமையலறை முதலையாய்ப் பெண்களை விழுங்கிவிடுகிறது. மாயாஜால உலக வித்தைபோல, பெண்ணும் முதலையின் வயிற்றிலே வாழ கற்றுக்கொண்டிருக் கிறாள். சமையலறையே பெண்ணுக்கான, குடும்பத்தலைவிக்கான அங்கீகாரத்தையும் அதிகாரத்தையும் உருவாக்கித் தருவதாக நம்பி பெண்களும் அந்தப் பின்கட்டிலேயே தங்களை ஒடுக்கிக்கொள்கிறார்கள்.

இருப்பினும் புற உலகு, தன்னுலகு இவற்றைத் தக்கபடி புரிந்து கொண்டு வாழும் மேன்மை பெற்றவர்கள் பெண்கள் என்பதை இக்கதை காட்டுகின்றது,

அம்பையின் பூப்படையாத தங்கம் அத்தை போல ஒரு பாத்திரம் வடு என்ற கதையில் இடம்பெறுகிறது. பூங்கொடி வயதுக்கு வரவில்லையென்று பரிகாரம் செய்வதற்காகப் பூசாரியுடன் ஓர்இரவு தனியாக விடப்படுகிறாள். அவன் அவளைச் சாட்டையால் அடித்துத் துன்புறுத்திப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துகிறான். சிறுமி என்றும் பாராமல், மறுநாள் அவளை அழைத்துச் செல்ல வந்த தாயிடம், அவன் இன்னும் நான்கு இரவுகள் இதுபோல் அழைத்துவந்து விடவேண்டுமென்கிறான். அவன் முகத்தில் தட்டால் தாக்கிவிட்டு அவ்விடத்திலிருந்து ஓடுகிறாள் பூங்கொடி.
தாயிடம் சொல்லமுடியாத அவஸ்தையைத் தட்டினால் தட்டிவிடுகிறாள் பூங்கொடி. இக்கதையை எழுதியவர் உமாமகேஸ்வரி.

பாமாவின் ‘பொன்னுத்தாயி’ என்ற கதையில், ஆணாதிக்கத்தால், கணவன் என்ற அதிகாரத்தால் பாதிக்கப்பட்ட பொன்னுத்தாயி எல்லா மரபார்ந்த, சமூகம் சார்ந்த மூடத்தனத்தைக் கடந்து யதார்த்தமான நிலையில் வாழமுற்படுபவளாக வெளிப்படு கிறாள். இதுவே சமுதாயத்திற்குப் பொன்னுத்தாயி தரும் ஆளுமைக்குரல் ஆகும்.

குடித்துவிட்டு, அடித்துக் கொடுமை செய்யும் கணவனை விட்டுப்பிரிகிறாள். குழந்தைகளையும் அவனிடம் விட்டுவிடு கிறாள். சுயதொழில் செய்து வாழ முற்படுகிறாள். இதற்காகத் தான் வாழும் சமூகத்தால்(ஆண்கள்+பெண்கள்) ஏளனப்பேச்சிற்கு உள்ளாகிறாள். ‘கல்லயும் புல்லயும் கெட்டிகிட்டு இம்புட்டு நாளா நாம்பட்டது போதும்’ என்று பொன்னுத்தாயி கூறுவது, கல்லானா லும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று போதிக்கப்படும் ஆண்சார்ந்த அறிவுரையைத் தகர்க்கச் செய்வதாக உள்ளது. பண்பாடு சார்ந்து கழுத்தில் சுமையாகக் கிடக்கும் அந்தத் தாலியினால் வெறொரு பயனுமில்லை என்பதை உணர்ந்தவளாய் அதை அறுக்கிறாள். தாலியை விற்று, முதலீடாக்கி சிறு கடையை உருவாக் குகிறாள். கல்வி பெறாதவளாகப் பொன்னுத்தாயி இருப்பினும் யதார்த்தத்தை, சுயத்தை உணர்ந்தவளாக ஆதிக்கத்தை மீறுவதாக அவளது செயல்பாடுகள் உள்ளன.

கணவனுக்கு அடங்கி ஒடுங்கியிருப்பது பெண்மையின் இலக்கணம் என்பது போலவே ஆணுக்கும் இலக்கணம் வகுக்கப்பட் டிருக்கிறது. ‘ஒரு பொம்பளய அடக்கமாட்டாதவனல்லாம் என்னய்யா ஆம்பள, இவனுக்கு மீச ஒரு கேடு’ என்ற சொற்கள் சமூகத்தின் ஆண்மை பற்றிய எதிர்பார்ப்பை முன்வைக்கின்றது. ‘இவெ ஒரு ஆம்பளையா? சரியான பொட்டப் பெய. போலிசுடேசன் வரைக்கும் போயி புருசன அடி வாங்க வச்சவள இன்னும் உசுரோட உட்டுட்டுப் பாத்துக்கிட்டு இருக்கானே. வெறும்பெய. நானா இருந்தா அங்ன டேசன்ல வச்சே அவா சங்க நெருச்சுக் கொன் றுப்பேன்’ என்று மூக்காண்டியைப் பிற ஆண்கள் ஏசுவதன்மூலம், பெண் உயிர் வாழ்வதே ஆண் போடும் பிச்சையினால்தான் என்று கருதும் நிலை வெளிப்படுகிறது. கணவன், மனைவியை அடிக்கும் பொழுது யாராவது தட்டிக்கேட்டால் இது குடும்பப் பிரச்சினை என்றுகூறி விரட்டும் சமூகம், மனைவி புகாரின் பேரில் கணவன் அடிவாங்கியதை மட்டும் சமூகப் பிரச்சினையாகவே பார்க்கிறது. ‘பெண் எழுச்சி’ என்பதை ஆணாதிக்க சமூகம் ஜீரணிக்கமுடியாமல், ஒருதலைப்பட்சமாக நின்று கொதிப்பதை வெளிக்கொணர்கிறது.

பொன்னுத்தாயி ஆணாதிக்கத்திற்கெதிரான கலகக்குரலை வெளிப்படுத்துகிறாள். பிள்ளைக என்ன எனக்கு மட்டுமா பிள்ளைக? அவெ அக்கருமத்தத் தணிக்கத்தான வருசயாப் பிள்ளைகளப் பெறவச்சான் வளத்துப் பாக்கட்டும் என தனக்குத்தானே பேசுவதும், பிள்ளைகளைத் தன்னிடம் ஒப்படைக்க நினைத்த கணவனிடம், பிள்ளைகளை ஏன் தன்னிடம் விடவேண்டும் என்று கேட்டும், பெத்தவாதான் பிள்ளைகளை வளர்க்கணும்னு சட்டமா என்ன? எனக் கேள்வி கேட்டு உறுதியாக மறுக்கிறாள். ‘இவள்ளாம் ஒரு பொம்பள தானா? கொஞ்சம்கூட பிள்ளப் பாசமே இல்லியே, ஆம்பள கெணக்காவுல மதம் புடுச்சுப்போயி அலைறா. எந்தக் காலத்துல புருசங்கிட்ட பிள்ளைகல உட்டுட்டு பொட்டச் சிறுக்கி இப்பிடி அலையக் கண்டோம்’ என்று பலரும் பொன்னுத்தாயின் செயல் பாட்டை எதிர்த்து ஏசுகிறார்கள். இதை பொருட்படுத்தாத பொன்னுத் தாயி தன்வலியை உணர்ந்து சுயமாக முடிவெடுக்கிறாள். மரபார்ந்த கட்டிலிருந்து விடுபட்டு இயல்பான சிந்தனையை முன்னெடுக் கிறாள். ‘தாய்மை’, ‘புனிதம்’ ‘பதிபக்தி’ என்ற ஆணாதிக்கச் சிலந்தி வலைப் பின்னல்களைத் துடைத்தெறிகிறாள்.

இவ்வாறு பற்பல கதைகள் பெண் படைப்புகளாக வந்து பெண்களின் ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்துகின்றன.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்கள் தம் உடல் சார்ந்த சிக்கல்களை எதிர்கொள்ளும் கதைகள்”

அதிகம் படித்தது