மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பைத்தியம் என்றால் கூட பயமில்லை, பத்தியம் என்றால்தான் பயம்

சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

Jul 11, 2015

Dr.Jeromeஒரு சித்த மருத்துவரிடம் கிட்டத்தட்ட அனைவரும் கேட்டுவிடும் கேள்வி இது, “டாக்டர், இதற்கு பத்தியம் இருக்கனுமா?”. இவர்கள் மனதில் இருக்கும் எண்ணம் என்னவென்றால், “சித்த மருந்துகள் சாப்பிடும்போது கண்டிப்பாக பத்தியம் இருக்க வேண்டுமாம், அப்படி பத்தியம் இருக்க தவறிவிட்டால் மிகவும் ஆபத்தாக எதுவும் நடந்துவிடும்” என நினைக்கிறார்கள். எப்படியோ தொன்றுதொட்டு இப்படி ஒரு பயம் மக்களிடம் பரவி இருந்து வருகிறது.

மேலும் ஒரு சிலர் இதனாலேயே சித்த மருத்துவம் எடுப்பதற்கு தயங்குகிறார்கள். இவையெல்லாம் தவறான புரிதல்.

paththiyam1பத்தியம் என்றால் என்ன?

இதற்கு மிக நீண்ட விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுருக்கமாக விளக்குகிறேன். ஒரு நோய்க்கு மருந்து இதுதான் என மருத்துவர் தீர்மானித்து, அதை நோயாளிக்கு கொடுக்க, நோயாளியும் அந்த மருந்தை சரியாக சாப்பிட்டு விடுவார். ஆனால் அந்த மருந்து அதன் முழுமையான வீரியத்தில் உடலில் உட்கிரகிக்கப்பட்டு செயல்பட்டால்தான் நோய் குணமாகும். அப்படி இல்லாமல், அந்த மருந்தின் செயல்பாட்டை குறைக்கும் விதத்தில் ஏதேனும் உணவுகளை அதனுடன் சேர்த்து சாப்பிட்டால் மருந்தின் வீரியம் கெட்டுவிடும். மருந்து உடலில் செயல்படாது அவ்வளவுதான்.

எனவே ஒவ்வொரு மருந்தைக் கொடுக்கும் போதும் அதன் செயல்பாட்டைத் தடுக்கும் விதத்தில் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்து விடுங்கள் என கூறுவோம். இதுதான் பத்தியம், மற்றபடி பத்தியத்தை கடைப்பிடிக்காவிட்டால் விபரீதமாக ஒன்றும் நடந்துவிடாது.

நோய் → அதற்கு மருந்து → அதற்கு பத்தியம் என, நோய் வந்த பிறகு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும், அதற்கு பத்தியம் இருக்க வேண்டும் என்பது, உங்களுக்குப் புதிதாக கடைபிடிக்க வேண்டிய ஒன்றாகத் தெரியலாம். ஆனால் அப்படியல்ல, நோய் இல்லாத நல்ல உடல் நிலையில் இருக்கும் போதும் நாம் உண்ணும் உணவுக்குக்கூட பத்தியம் உள்ளது. எல்லோருமே எல்லா நாட்களுமே ஒரு விதத்தில் பத்தியம் கடைபிடிக்கத்தான் வேண்டும்.

இதென்ன புது கதையாக இருக்கிறதே என நினைக்கிறீர்களா?

ஒரு புரிதலுக்காக திருவள்ளுவரை துணைக்கு அழைக்கிறேன்.

திருக்குறளில் ‘மருந்து’ என ஒரு அதிகாரம் உள்ளது. அதில்

“அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து” என்று ஒரு குறள் உண்டு.

மேலும்

“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு”

என்று ஒரு குறளும் உள்ளது.

இதில் “மாறல்ல துய்க்க” என்றால் மாறுபாடு இல்லாத, அதாவது ஒன்றுக்கு ஒன்று மாறுபடாத உணவை உண்ண வேண்டும் என்பது மிகவும் சாதாரணமான ஆரோக்கிய அறிவுரை.

மேலும் “மாறுபாடு இல்லாத உணவை சாப்பிடாமல் தவிர்த்து வந்தால் உடலுக்கு ஊறுபாடு (பாதிப்பு) இல்லை எனவும் பொருள்.

மாறுபாடு இல்லாத உணவுகள் என்றால் என்ன?

மருந்துகள் மட்டுமல்ல ஒவ்வொரு உணவுப்பொருட்களும் உடலில் ஒரு செயலை செய்கிறது. ஒரு குறிப்பிட்ட செயலை உடைய உணவையும், அதற்கு நேர் எதிரான செயல் உடைய உணவையும் ஒரே நேரத்தில் சாப்பிடும்போது அது உடலில் தவறான விளைவை உண்டுபண்ணுகிறது.

(ஊறுபாடு – Toxic)

paththiyam2உதாரணமாக பால் உண்டவுடன் அமிலத்தன்மை உள்ள (புளிப்புத்தன்மை) பழங்களை சாப்பிடக்கூடாது.

முள்ளங்கி, கீரை சாப்பிட்ட பிறகு பால் அருந்தக்கூடாது.

மீன் சாப்பிட்டவுடன் பால் அருந்தக் கூடாது.

தயிர்சாதம் சாப்பிட்ட பிறகு வாழைப்பழம் சாப்பிடக்கூடாது.

paththiyam3இப்படி பெரிய பட்டியல் கூறலாம். ஆனால் உதாரணத்திற்கு ஒன்றிரண்டைக் குறிப்பிட்டேன். இங்கே பால், தயிர், கீரை, மீன், வாழைப்பழம், முள்ளங்கி ஆகியவை மருந்துகள் இல்லையே.

ஆனாலும் இவைகளை கலந்து உண்பதால் அவைகளின் குணபேதங்களால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

உணவிலேயே இப்படி பத்தியம் இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட செயல்பாடுள்ள மருந்துகளுக்கு சில ஒன்றிரண்டு உணவுப்பொருட்களை தவிர்த்துவிடுங்கள் என கூறுவதுதான் வளர்ச்சியடைந்த மருத்துவமுறை.

எல்லா மருத்துவ முறைகளிலும் பத்தியம் கூறப்படுகிறது.

உதாரணமாக உங்களுக்குத் தெரிந்த சில பத்திய முறைகளையே கூறுகிறேன்.

-               சிறுநீரக நோயாளிகள் உப்பு தவிர்க்கவும்.

-               தோல் நோயாளிகள் மீன், கத்தரி தவிர்க்கவும்.

-               இதய நோயாளிகள் கொழுப்பு தவிர்க்கவும்.

-               ஆஸ்துமா நோயாளிகள் புகை, தூசு தவிர்க்கவும்.

-               கல்லீரல் நோயாளிகள் மது தவிர்க்கவும்.

-               சர்க்கரை நோயாளிகள் இனிப்பு தவிர்க்கவும்.

இப்படியெல்லாம் எல்லா மருத்துவ முறைகளிலும் கூறப்படுகிறது.

அப்படியானால் பத்தியத்தில் மற்ற மருத்துவ முறைகளுக்கும் சித்த மருத்துவ முறைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என நீங்கள் கேட்கலாம்.

மற்ற மருத்துவ முறைகளில் எல்லாம் நோய்க்குத்தான் பத்தியம் கூறப்படுகிறது. ஆனால் சித்த மருத்துவமுறையில்,

  • நோய்க்கும் பத்தியம் கூறப்படுகிறது.
  • மருந்து உடலில் நன்கு செயல்படுவதற்கும் பத்தியம் கூறப்படுகிறது.
  • நோயாளியின் நாடி அறிந்து அவர் வாத நோயாளியா, பித்த நோயாளியா, கப நோயாளியா என அறிந்து அதற்கு ஏற்பவும் பத்தியம் கூறப்படுகிறது.
  • நல்ல உடல்நிலையில் உள்ளவர்களுக்குக்கூட உணவை மாறுபாடில்லாமல் உண்பதற்கும் பத்தியம் கூறப்படுகிறது.

அந்த அளவிற்கு உணவையும், மருந்தையும் பற்றிய முழுமையான அறிவு சித்த மருத்துவத்திற்கு இருக்கிறது.

ஆக பத்தியம் என்பது ஒரு முன்னேறிய மருத்துவ அறிவுரைதானே தவிர அதில் பயன்படுத்துவதற்கு ஒன்றுமில்லை.

மருத்துவ ஆலோசனைக்கு:

Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D

சித்தமருத்துவ மையம்,

டாக்டர்ஸ் பிளாசா,

சரவணா ஸ்டோர் எதிரில்,

வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,

வேளச்சேரி, சென்னை.

அலைபேசி எண்: 9444317293


சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பைத்தியம் என்றால் கூட பயமில்லை, பத்தியம் என்றால்தான் பயம்”

அதிகம் படித்தது