மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பொங்கல் கவியரங்கம்

முனைவர் மு.பழனியப்பன்

Jan 16, 2021

வாழ்த்து மலர்களால்

siragu pongal2பொங்கல் இனிக்கிறது

வாழ்த்து மலர்களால்

தை மகள் வருகிறாள்

புத்தம் புதுப் பொலிவுடன்

தை மகள் வருகிறாள்

 

தோட்டமெல்லாம்

பூசணிப் பூக்கள்

மஞ்சள் வண்ணம் பரப்புகின்றன

 

வயலெல்லாம் செங்கரும்பு

பூத்து நிற்கின்றன.

 

பொங்கல் பூ

தெருவெல்லாம்

வெள்ளைப் பட்டு விரிக்கிறது

வயலெல்லாம்

நெல் விளைச்சல்

பொலிகின்றது

 

வாழ்த்துகளால் நம்

மனம் நிறைகிறது

 

கண்டம் விட்டு

கண்டம் சென்ற பிள்ளைகளுக்கு

வாழ்த்துச் சொல்லும்

நேரலைகளில்

மகிழ்ச்சி பொங்குகிறது

 

அந்த காலத்தில்

வாழ்த்து அட்டைகள்

வாழ்த்துகளைக் குவித்தன

இப்போது

தொலைபேசிகள் இனிதாய் அழைத்து வாழ்த்துகளை ப்

பரிமாறுகின்றன.

 

நேருக்கு நேராய்

இணையம் நின்று

இனிதாய் பொங்கல் வாழ்த்து சொல்கிறது

 

புதிய மணமகள்

பொலிவாய் ஆடை உடுத்தி

பெற்றோர்களிடம் ஆசி பெறுகிறார்கள்

 

படிக்கும் பிள்ளைகள்

வெற்றியைப் பெற

ஆசி பெறுகிறார்கள்

மக்கள் மனதில்

வாழ்த்துகள்

வசந்தங்கள்

 

பொங்கல் வாழ்த்துகளால்

பொங்குகிறது  வாழ்க்கை

கரும்புச் சொற்களில் வாழ்த்தால்

இனிக்கிறது வாழ்க்கை

மஞ்சள் மணத்தால்

வீடு நிறைகிறது

மாக்கோலத்தால்

வாசல் பொலிவாகிறது

வாழ்த்துங்கள்

வாழ்த்தப் படுவீர்கள்

ஒரே ஒரு வேண்டுகோள் மட்டும்

பொங்கல் வாழ்த்தை நல்ல

தமிழில் சொல்லுங்கள்

ஹாப்பி பொங்கல்

வேண்டாம் தோழர்களே

 

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.

 

மஞ்சள் மங்கலத்தால்

siragu pongal3பொங்கல் இனிக்கிறது

மஞ்சள்  மங்கலத்தால்

தை பிறந்தால் வழி பிறக்கும்

தைமகள் வந்துவிட்டாள்

மங்கலங்கள் தானாய் வந்து சேரும்

வெற்றிகள் தானாக வந்து குவியும்

 

மண்ணில் பிறந்து

மஞ்சள் மணக்கிறது.

மஞ்சள் நிறத்தால் பொலிகிறது

மஞ்சள் குணத்தால் சமையல் மணக்கிறது

மஞ்சள் பூச்சால்

முகம் பொலிவாகிறது

மஞ்சளுக்கு எத்தனை  தன்மைகள்

மஞ்சளால் எத்தனை நன்மைகள்

 

நோய் விலகும்

உணவு சுவைபடும்

மணம் கூட்டும்

அத்தனையும் மஞ்சளால்

 

பொங்கலின்போது

மஞ்சள் மங்கலத்தின் அடையாளம்

பொங்கல் பானையின் கழுத்தில்

மஞ்சள் கிழங்கு

பெண்களின் கழுத்திலும்

மஞ்சள் கிழங்கு

 

மஞ்சளே நீ

கற்பின் அடையாளம்

எங்கள் பெண்களின் அணிகலன்

 

மஞ்சளே

உன்னில் குளித்துத் தான்

பிராய்லர் கோழியும்

நல்ல உணவாகிறது

பிராய்லர் கோழியும்

மஞ்சள் குளிக்கிறது

 

கன்னியர்க்குத் திருமணம் என்னும் மங்கலம்

மாணவர்க்கு படிப்பில் வெற்றி என்னும் மங்கலம்

குடும்பத்திற்குச் செல்வம் என்னும் மங்கலம்

உலகிற்கு நோயற்ற வாழ்வு என்னும் மங்கலம்

மங்கலம் எங்கும் பொலியட்டும்

மங்கலம் எங்கும் தங்கட்டும்

மங்களம் பாடி முடிக்கின்றேன்.

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்

 

வெல்ல விளையாட்டுகளால்

 

siragu pongal4பொங்கல் இனிக்கிறது

வெல்லப் போகும்  விளையாட்டுகளால்

 

மார்கழி தேய்ந்து

தைமகள் உருவாகிறாள்

மார்கழி மாதத்தில்

இள மஞ்சுவிரட்டு

தை மாதத்தில் வீரத்தின்

விளையாட்டு

மஞ்சுவிரட்டு

 

ஊர் கூடி நிற்கிறது

உழவுத் தொழில்  சிறக்க உதவிய

காளைகளுக்கு நன்றி செலுத்துகிறார்கள்

கரும்பு கட்டி பொங்கல்  பூச்சூடி

கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி

உடலெல்லாம் மஞ்சள் பூசி

காளையை வணங்குகிறது தமிழகம்

 

மஞ்சு விரட்டு வைத்து

காளைகளை வீரத்தின் விளைநிலமாக்குகிறது

தமிழகம்

 

சேவல் சண்டைகள் ஒருபுறம்

செழித்தே மக்கள் சண்டை தீர்க்கின்றன.

 

மாட்டுவண்டிப் பந்தயங்கள்

சிறு மாடு , பெருமாடு

எல்லாம் மாட்டு வண்டிப் பந்தயங்களும்

மகிழ்ச்சியை அள்ளித் தெளிக்கின்றன.

 

வடமாடு மஞ்சுவிரட்டு

சுற்றிச் சுற்றி வருகிறது

காளை

அடக்குகிறார்கள் இளைஞர்கள்

வீரம் இங்கே

இன்னமும்

சங்க காலத்தை நினைவு படுத்துகிறது

மருத நில வயல்கள்

இன்றும் சங்கப் பெருமை சொல்லும்

தங்கப்பெருமை சொல்லும்

ஊர்தோறும் விளையாட்டுப் போட்டிகள்

உவகை கொள்கிறது மனது

பொங்கல் வருகிறது

வீரமும் இணைந்தே வருகிறது

வெல்ல விளையாட்டுகள்

பொங்கலின் வெல்லம் போல் சுவை கூட்டுகின்றன.

நெய்யும்  திராட்சையும்

பொங்கலில் மணக்க

வீரமும், வேகமும் தமிழ் மண்ணில்

மணக்கிறது

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்

 

 

எண்ணக் கோலங்களால்

siragu pongal5

பொங்கல் இனிக்கிறது

எண்ணக் கோலங்களால்

 

தை ஒன்றில் திட்டமிடுகிறோம்

அந்த ஆண்டில் அந்தத் திட்டத்தைத்

திடமுடன் நிறைவேற்றப் பாடுபடுகிறோம்

இதற்கே வருகிறது

தை முதல் நாள்

 

அழகான கரங்கொண்டு

வீதியை அடைத்து

அலங்காரக் கோலம்

வரைகின்றனர் பெண்கள்

 

அரசி  மாக் கோலம்

வண்ண வண்ணக் கோலம்

வாசல் நிறைகிறது

மனமும் நிறைகிறது

 

கை நடுங்காமல்

புள்ளி மாறாமல்

கோலம் வரைகிற கலை

அருமையான கலை

 

அவை கோலம் மட்டும் அல்ல

பூக்கோலங்கள் வசந்த காலத்தை வரவேற்கின்றன.

சிக்கு கோலங்கள் சிக்கல்களைத் தீர்க்கின்றன

வண்ணக் கோலங்கள் மகிழ்ச்சியை வரவேற்கின்றன

 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எண்ணம்

கார் வாங்க வேண்டும்

நிரந்தர வேலை வேண்டும்

திருமணம் முடிய வேண்டும்

குழந்தை பிறக்க வேண்டும்

பணம் பெருக வேண்டும்

இன்னும் எத்தனை எத்தனையோ

 

எண்ணுங்கள்

எண்ணிக் கொண்டே இருங்கள்

நிச்சயம்

உங்கள் எண்ணம் வெற்றி பெறும்

நிறைவேறும்.

 

சூரியனுக்கு முன்னே

அரசி மா இழைக் கோலம் இட்டு

அடுப்பிற்கும் கோலமி்ட்டு

வரவேற்பு  பாடலைப் பாடி வைத்து ப்

பொங்கலை வரவேற்கும் பராம்பரியம்

நம் தமிழர் பாரம் பரியம்

 

தமிழர் பாரம்பரியம் காப்போம்

பண்பாடு காப்போம்

தை மகளை  கோலங்களால்

வரவேற்போம்

எண்ணக் கோலங்களால் வரவேற்போம்

 

பொங்கும் (பொங்கல்) மகிழ்ச்சியால்

siragu pongal6

பொங்கல் இனிக்கிறது

பொங்கும்  மகிழ்ச்சியால்

 

பால் பொங்கியதா

இதுவே பொங்கலின் அடையாளம்

உங்கள் வீட்டிலும் பால் பொங்கியதா

உங்களுக்கும் வாழ்த்துகள்

 

புது அரிசி

புதுப்பானை

புதிய நீர்

எல்லாம் புதிது

பால் பொங்கி

வரும் வேளை

பொன்னான வேளை

பொங்கலோ பொங்கல் என்றுக்

கூவிப் பொங்கல்

செய்வோம்

பொங்கிய பொங்கலை

அனைவருக்கும் பகிர்ந்தளித்து

மனிதநேயம் காப்போம்

இவற்றால்

நாம் புதிதாகிறோம்

 

நல்ல சர்க்கைப் பொங்கல்

சூரியன் என்னும் இயற்கைக்குப் படைத்து

இன்னும் எங்களை நலமாய்க் காப்பாய் என்று

நன்றிப் பொங்கலை நாம் வைக்கிறோம்.

 

இனிய பொங்கல் அது

சர்க்கரைப் பொங்கல் அது

நெய்ப் பொங்கல் அது

பால்ப்பொங்கல் அது

புதிதாய்  நம்மைப் புதுப்பிக்கும் பொங்கல் அது

 

வீ்ட்டை வெள்ளை அடித்து புதுமை யாக்கினோம்

நம் மன வீட்டை நல்ல செயல்கள் செய்யச் சொல்லி

புதுமையாக்கினோம்.

புத்தாடை அணிந்து  நாம் புதுமையானோம்

புதுப்பொங்கல் புதிய பொலிவாய் அமையும்

நம்பிக்கை நமக்குள் எழும்

எழட்டும்

 

நாள்தோறும் பொங்கும் சோற்றைவிட

சத்தான பொங்கல் இது

நாள்தோறும் உண்ணும் சோற்றைவிட

சுவையான  பொங்கல் இது

நாள்தோறும்

விடியும் விடியலை விட

புதிய விடியல் இது

நாளும் நல்ல நாள்

பெரிய நாள்

இன்று தொடங்கி மூன்று நாளும் பொங்கல்

மாடுகளுக்கு நன்றி சொல்லி

மாட்டுப் பொங்கல்

உற்றார் உறவினரைக் கண்டு

பொங்கும் பொங்கல் காணும் பொங்கல்

 

திருவள்ளுவரின் திருநாளும் இப்போது தான்

நம் தமி்ழ் மறை தந்த வள்ளுவருக்கும்

இந்தப் பொங்கல் சமர்ப்பணம்

வாழ்க தமிழ் வாழ்க பொங்கல்

வாழ்க தமிழ் மக்கள்

 

 

செங்கரும்புச் சேர்க்கையால்

 

siragu pongal8பொங்கல் இனிக்கிறது

செங்கரும்புச் சேர்க்கையால்

நண்பர்கள் இன்றி

எது சிறக்கும்

 நண்பர்கள் இருந்தால்

எல்லாம் சிறக்கும்

பொங்கல் மட்டும் இருந்தால் சிறப்பேது

கரும்பும் இருந்தால் தானே அது பொங்கல்

தீபாவளி என்றால் பட்டாசு

பொங்கல் என்றால் கரும்பு

 

கரும்பின் சுவை இனிப்பு

நண்பர்களின் சேர்க்கையும் இனிப்பு

 

கரும்ப வளமையின் அடையாளம்

மன்மதனுக்குக் கரும்பு வில்

கரும்பு வில் வளமையின் அடையாளம்

வீட்டின் வாசலில் கரும்பு

வளமையின் குறியீடு

 

வெட்டித் தின்றாலும்

சாறு பிழிந்தாலும்

கரும்பின் சுவை மாறாது

 

அடிக்கரும்பு  இனிக்கிறது

நுனிக்கரும்பு குறைகிறது

நட்பின் ஆழம் இனிக்கிறது

அகத்தின் அன்பு அதுவே

முகத்தின் நட்பு

நுனிக்கரும்பாகிறது

 

நட்பின் ஆழத்தை அளந்து சொல்கிறது

கரும்பு

நெல்லும் கரும்பும்

மண்ணின் வளத்தைக் காட்டுகின்றன

 

கரும்பின் சாறு வெல்லமாகிறது

வெல்லம் பானைக்குள்ளும்

கரும்பு வீட்டுக்கு வெளியிலும்

பொங்கலை வரவேற்கிறது

பொங்கலே வருக

நட்பின் பெருமை சொல்லி

இனிக்கட்டும் பொங்கல்

 


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பொங்கல் கவியரங்கம்”

அதிகம் படித்தது