மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மனித உடல் ரகசியங்கள்

ஆச்சாரி

Jan 11, 2014

மனிதன், பஞ்ச பூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் தன்மையால் ஆனவன். மனிதன், குழந்தையாகப் பிறந்து நிலத்தில் உழல்கிறான். உணவுப் பொருள்களில் நீரைச் சேர்த்து, நெருப்பில் இட்டு சுவையாக அருந்தி, இதமாக வருடிச் செல்லும் காற்றைச் சுவாசிக்கிறான். சந்தோஷமாக,வளமான வாழ்க்கையில் தன்னை மறந்த நிலையில் அவன் ஆகாயத்தில் ஆனந்தமாகப் பறக்கிறான்.

ஒரு மனிதனை, பஞ்ச பூதங்கள் அரவணைத்துச் சென்றால் அவன் வாழ்கிறான் இல்லையெனில், நிலத்தில் சடலமாக வீழ்கிறான். ஒருவனுடைய உயிர், நீரோட்டம் போன்றது. உயிரற்ற உடலை மண்ணில் புதைப்பதும், நெருப்பில் எரிப்பதும் நிகழ்கிறது. மண்ணில் புதைத்தாலும்,எரித்தாலும் உயிரானது காற்றில் கலந்து, ஆகாயத்துக்குச் சென்றுவிடுகிறது.

உடலை வைத்துத்தான் இந்த உலகத்தில் நமக்கு இருப்பிடம். இதை எல்லோரும் உணர வேண்டும். ஒருவரின் லட்சியங்கள் எவ்வளவு உயர்ந்ததாக வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் உடல் நலம் ஒத்துழைக்கவில்லை என்றால், பாதிக்கிணறு தாண்டிய கதைதான். எனவே, உடலைப் பாதுகாத்து, நோயில்லா நெறியை நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

சித்தர் பாடல்:

     ‘கூறுவேன் தேகமது என்னவென்றால்

        குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி

      மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு

         வன்மையுடன் நரம்பினால் வலித்துக் கட்டி

      தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி

          தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி

      ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி

           அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே’

மனித உடலில் ரகசியத்தைச் சொல்லும் இந்த எட்டு வரி பாடலில் மனிதனுடைய உடலைப் பற்றிய சித்தர்களின் நுண்ணறிவு துல்லியமாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.

உடல் என்பது, எலும்புகளை கை கால்களைப் போட்டு நீட்டி வைத்து, அவற்றின் ’இருப்பிடம்’ மாறிவிடாமல் இருக்க நுண்ணிய துவரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, தோலால் மூடி, அவற்றுக்கு இடையே தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை உள்ளடக்கி, உடல் என்ற ஓர் உருவம் உருவாக்கப்பட்டிருப்பதாக மேற்கண்ட சித்தர் பாடல் நமக்கு விவரிக்கிறது.

மேலே உள்ள சித்தர் பாடலில் சில வார்த்தைகள் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கான விளக்கம் என்ன என்றால்.

எலும்புதனை – எலும்பு மண்டலம்

நரம்பினால்  – நரம்பு மண்டலம்

இரத்தமதை  -ரத்த ஓட்ட மண்டலம்

தோலை மூடி -தசை மண்டலம்

வாய்வுதலை – மூச்சு மண்டலம்

அதாவது, இந்த ஐந்து மண்டலங்களால்தான் தேகம் என்ற உடல், கடமையின் பொருட்டு இந்த உலகில் நடமாடுவதாக சித்தர்கள் கூறுகின்றனர். இந்த மண்டலங்கள் ஒவ்வொன்றும் தமது பணியைச் சரிவர செய்துவந்தால்தான், நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதை நாமே உணர முடியும்.

ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள உறுப்புகள் அந்த மண்டலத்தில் உள்ள மற்ற உறுப்புகளோடும்,வேறு மண்டலத்தில் உள்ள மற்ற உறுப்புகளோடும் ஏதாவது ஒரு வகையில் ‘இணைந்திருக்கிறது’. உதாரணத்துக்கு, உடலில் எலும்புகள் உறுதியாகவும், வலுவாகவும் இருந்தால், நரம்புகளும் தன்னளவில் தளர்வில்லாமல் உறுதியாகவும்,வலுவாகவும் இருக்கும்.

 நரம்புகளும் எலும்புகளும் உறுதியாக, வலுவாக இருக்கும் பட்சத்தில் ரத்தக் குழாய்களில் ரத்தம் எந்தத் தடையும் இல்லாமல் சுற்றி வரும். முறையான ரத்தச் சுழற்சியினால், இதயம் என்றும் இளமையுடன் தனது சுத்திகரிப்பு பணியைச் செய்யும்.

ரத்தச் சுழற்சியை முறையாக இயக்கும் பெரிய பொறுப்பு தசைகளைச் சார்ந்தது. அந்தத் தசை மண்டலத்துக்கு, எலும்பு, நரம்பு, ரத்த ஓட்ட மண்டலங்கள்தான் ஆதாரம்.

ஆக, இதில் இருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால்,எலும்பு,நரம்பு, ரத்தம்,தசை இவற்றின் நிலைத்த தன்மை,உறுதி,செயல்படும் தன்மை ஆகியவற்றை வைத்தே வாயு எனப்படும் மூச்சு, உயிராக உடலில் நிலைக்கொள்ளும்.

அந்தவகையில், இந்த ஐந்து மண்டலங்களின் அடிப்படையில் உருவான மனித உடலை உலகில் நிலைநிறுத்தும் உன்னத பணியைப் பின்வரும் மண்டலங்கள் கவனிக்கின்றன அவை:

  1. ஜீரண மண்டலம்
  2. சிறுநீரக மண்டலம்
  3. இனப்பெருக்க மண்டலம்

இப்படி, மனிதனுடைய உடலில் இயங்கும் ஒன்பது மண்டலங்களைப் பற்றியும் அவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றியும், அவற்றுக்கான சித்த மருந்துகள், அவை தயாரிக்கும் விதம், சாப்பிடும் அளவு எனப் பல விசயங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ள இருக்கிறோம். இந்தப் பகுதியில், மண்டலங்களைப் பற்றிய தகவல்களை மட்டும் பார்போம்.

எலும்பு மண்டலம்:

நமது உடலை ஒரு கட்டமாக உருவகப்படுத்திப் பாருங்கள்.

எலும்பின் முக்கியமான மூலப்பொருள்(சத்து) கால்சியம் எனப்படும் சுண்ணாம்பு. பழங்கால வீடுகளுக்கு சுண்ணாம்பு எனப்படும் வெந்த கற்களை(இன்றைய சிமெண்டுக்கு மாற்று) பாலில் நீர்த்து, அத்துடன் கடுக்காய், பனை வெல்லம் சேர்த்து குழைத்துக் கட்டடம் எழுப்புவர்.

வேகவைத்த சுண்ணாம்புக் கற்களை பால், இளநீர் சேர்த்து கரைப்பதால், பாலில் உள்ள சுண்ணாம்புச் சத்தும் (CALCIUM),இளநீர் உள்ள சுண்ணாம்புச் சத்து சேர்த்து சுண்ணாம்புக் கற்களுக்கு மேலும் வலுசேர்க்கின்றன. இத்துடன் நின்று விடவில்லை. கடுக்காய் சேர்க்கப்படுகிறது. அந்தக் கடுக்காயில் என்ன இருக்கிறது?.

சுண்ணாம்புச் சத்தை இரும்பைப்போல் இறுத்தும் தன்மை கடுக்காய்க்கு உண்டு. கடுக்காயின் துவர்ப்புத்தன்மை, சுண்னாம்புச் சத்துடன் சேரும்போது கட்டடத்தின் ஆயுள் நீட்டிக்கப்படுகிறது. எல்லாம் சரி, பனை வெல்லம் சேர்ப்பது ஏன்?.

பனை மரத்தின் சீவிய பாளையில் இருந்து கிடைக்கும் பதநீருடன் தக்க அளவில் சுண்ணாம்பு சேர்த்து காய்ச்சிக் கிடைப்பதுதான் பனை வெல்லம். பனை வெல்லத்தில் உள்ள இனிப்புத்தன்மைக்குப் பதநீரும், சுண்ணாம்பும் தான் காரணம். பதநீரின் துவர்ப்பு, சுண்ணாம்பு இரண்டும் பனை வெல்லத்தில் இருப்பதால், இதைக் கடுக்காயுடன் சேர்த்து தூளாக்கி, சுண்ணாம்புடன் கலந்து வீடு அல்லது கட்டடம் கட்டும்போது அது உறுதியாக, பல நூறு ஆண்டுகள் நிலைத்திருக்கும்.

சுண்ணாம்பு (இயற்கைதாது) +பால் (இயற்கை) +இளநீர் (இயற்கை) +கடுக்காய் (இயற்கை) +பனை வெல்லம்(இயற்கை)என, இயற்கை மூலங்களால் உண்டான கட்டடங்களே பல நூறு ஆண்டுகள் உறுதியுடன் இருக்கும் போது, இயற்கை மூலகங்களில் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்தை நாம் உணவாகவோ, மருந்தாகவோ சாப்பிடும்போது நமது எலும்புகள் பலம் பெற்று, உறுதியாகி, உடல் வலிமையோடு நூறு ஆண்டுகள் வாழ முடியும் இல்லையா?.

இதுதான் சித்த சூத்திரம்.

ஆக, எலும்புகள் உறுதி பெற , இயற்கை மூலகங்களில் சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ள மூலிகைகள் மற்றும் உணவுகளைத் தொடந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகளில் உண்டாகும் கோளாறுகள் மற்றும் குறைபாடுகள் நீங்கும்.

இதுவே சித்தர்களின் தீர்ப்பு.

இந்த அடிப்படையில்தான், உடலுக்கு ஆதாரமான எலும்புகளைப் பலப்படுத்தும் மூலிகை மருந்துகள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

இனி கட்டடத்தின் அடுத்த கட்டம்.

நரம்பு மண்டலம்:

சுண்ணாம்பு சேர்த்து கட்டப்படும் கட்டடம் மேலும் உறுதியுடன் இருக்க, வரம் பாய்ந்த மரங்களைப் பயன்படுத்துவார்கள். இன்றைய காலகட்டத்தில், வீடுகள் கட்டுவதற்கு, செங்கல், சிமெண்ட், இரும்புச் சத்து உள்ள மருந்துகளும் வழங்கப்படுவதைக் கருத்தில்கொள்ளலாம்.

இதில் இருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், இரும்புச் சத்தின் மூலம் நமது உடல் நரம்புகளை முறுக்கேற்றலாம் என்பதுதான். இதனால்தான், சித்த மருந்துகளில் நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களுக்கு, இயற்கை மூலகங்களில் இரும்புச் சத்து அதிகம் உள்ள மூலிகைகளை வகைப்படுத்தியும், இரும்பு போன்ற இயற்கைத் தாதுக்களை முறைப்படி பஸ்பமாக செய்தும் வழங்கி வருகிறார்கள்.

வைரம் பாய்ந்த மரக்கட்டைக்கும் இரும்புக்கும் என்ன தொடர்பு?.

சந்தேகம் எழலாம்.

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் மரங்கள் சில உண்டு. கருங்காலி, கருவேங்கை, தேக்கு பொன்ற மரங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை. இந்த மரங்களை அவ்வளவு எளிதாக, சாதாரான மரங்களை வெட்டும் கோடாரியால் வெட்ட முடியாது. அந்த அளவுக்கு மரத்தின் அடிப்பாகம்,கிளைகள் எல்லாம் இரும்பைப் போன்று வலுவோடும் உறுதியோடும் இருக்கும்.

அத்தகைய மரக்கட்டைகளை உடைத்து துண்டுகளாக்கி, கஷாயம் செய்து, அதைப் பல மடங்குகளாகச் சுண்டச் செய்து, அந்த மரத்தின் இரும்புத்தன்மையை மருந்தாக மாற்றுவது சித்தர்களின் மரபு. இப்படி மருந்துகளைத் தயார் செய்து சாப்பிட்டால், நமது உடலில் நரம்புகள் இறுகி நன்கு முறுகேறும். எலும்பும், நரம்பும் இறுகிய உடலில் ரத்தக் குழாய்கள் தங்களுடைய பணியைச் செவ்வனே செய்யும்.

இடன் அடிப்படையில்தான்,நரம்புகளைப் பலப்படுத்தும் மருந்துகளும் , உணவுகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ரத்த ஓட்ட மண்டலம்:

நமது உடலில் ஓடும் ரத்தம்தான் உயிரோட்டமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம். ஒருவனுடைய உடலில் வளமையான ரத்தம் தேவையான அளவில் சுழன்று கொண்டிருந்தால், அவன் அபார தன்னம்பிக்கை கொண்டவனாகவும், எதற்கும் பயப்படாதவனாகவும் இருப்பான்.

இளமைப் பருவம் என்பது வளரும் பருவங்களில் மிக முக்கியமானது. வளர்ந்து வாலிப வயதை அடையும் போது , நமது உடலில் ரத்தம் மிகவும் வன்மையுடன் இருக்கும். இளமையில் உண்டாகும் அற்புதமான ரத்த ஓட்டத்தினால், மனமகிழ்ச்சி, மனக்களிப்பு, எதிர்பால் ஈர்ப்பு போன்றவை ஏற்படுகின்றன. இதயம், அன்பு, காதல் போன்ற வார்த்தைகளை உச்சரிக்கும் உதடுகளுக்குச் சொந்தமான உடலில் ரத்த ஓட்டம் ஒரு பகுதி கூடுதலாகவே இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆக, நமது உடலில் சுறுசுறுப்பை ஏற்படுத்துவது ரத்தம்தான்.

ரத்தம், தன்னம்பிக்கையின் தாரக மந்திரம். நமது உடலை ஒரு கட்டடமாகப் பார்த்தால், சுண்ணாம்பையும், மரக்கட்டைகளையும் இணைக்கப்பயன்பட்ட தண்ணீர்தான் ரத்தம். இதன் அடிப்படையில்தான், இயற்கை மூலகங்களில் ரத்தத்தைப் பெருக்கும் உணவுகள் மற்றும் மருந்துகள் வகைப் படுத்தப்பட்டுள்ளன.

தசை மண்டலம்:

ஒரு கட்டடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகும்,  அதில் உடனே குடியேறிவிட முடியாது. அதில் சில மேற்பூச்சுகள்,வண்ணங்கள் தீட்டுதல் போன்ற வேலைப்பாடுகளைச் செய்த பிறகுதான் வீட்டுக்குள் குடிபுக முடியும்.

லட்சக்கணக்கில் செலவழித்து வீட்டைக் கட்டி முடித்து, அதில் வெளிப்பூச்சு,உள்பூச்சு போன்றவற்றைச் செய்யவில்லை என்றால், அந்தக் கட்டடத்தில், மழைக்காலத்தில் நீர்க்கழிவு, கட்டடம் செதில், செதிலாக உரிவது, கட்டடத்தில் வெடிப்பு போன்றவை ஏற்படும். மேலும், கட்டடத்தின் ஆயுளும் குறையும்.

இதேபோல்தான், உடலானது என்னதான் எலும்பு ,நரம்பு, ரத்தம், இவற்றால் முக்கியத்துவம் பெற்றாலும், இவற்றுக்கு ஓர் உருவம் கொடுப்பது தோலும், தசைகளும் தான். உடலை ஒழுங்காக இயக்குவது இந்த்த் தசைகள்தான். இதயத்தைச் சீராக இயக்கி,நமகாக வாழ்நாள் முழுவதும் செயலாற்றுவதும் இந்தத் தசைகள் தான்.

பூசப்படாத கட்டடத்தில் உண்டாகும் குறைகளைப்போல்,தசைகளின் செயல்பாடு குறையும்போது, படை, அரிப்பு, சொரி, சிரங்கு, பரு, அரையாப்புக் கட்டிகள்,பித்த வெடிப்பு,குஷ்டம்(LEPROSY),காயங்கள்,புண்கள்,போன்ற குறைகள் உண்டாகும். இதுபோன்ற குறைகளுக்கு நிவாரணம் தரும் மூலிகைகள், உணவுகள் , தசை மண்டலப் பகுதியில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சுவாச மண்டலம்:

இப்படி, எலும்பு,நரம்பு,ரத்தம், தசை இவற்றால் வேயப் பட்ட’வீட்டில்’ தான் சிவனாகிய சீவன் வாயுவாகக் கூடிகொள்வான். உடலில், பிராணன் முறையாகச் சுழன்று வந்தால் மட்டுமே உயிர் நிலைப்படும். பிராணன் அற்ற உடலில் உயிர் இருப்பதிலை. பிராணக் குறைபாட்டுக்கு சுவாச மண்டலக் குறைகளே காரணமாகும். இவையும்,இயற்கை மூலகங்களை மருந்தாக்கிப் பயன் பெறலாம் என்பதும் சுவாச மண்டலப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.

இதுவரை, உடலை ஒரு கட்டிடமாக உருவகப்படுத்தி கட்டிடத்துக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை தெளிவாகப் பார்த்தோம். அடுத்து, முழுமையாகக் கட்டப்பட்ட கட்டிடத்துக்குள் தேவையான வசதிகளைச் செய்துகொண்டு வசிப்பது போல், நாம் நலமோடு இருப்பதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் அடுத்த நான்கு மண்டலங்களின் செயல் பாடுகளை அடுத்து பார்ப்போம்.

மனித உடல் – ஒரு மாயாசால இயந்திரம்

மனித உடல் – நடமாடும் இறைவனின் கோவில்

மனித உடல் -  ஆத்மாவுக்கான ரதம்

மனித உடலின் கட்டமைப்பையும், அதன் இயக்கத்தையும் நம் நுண்ணறிவு கொண்டு தீவிரமாகச் சிந்தித்தால் நாம் அதிசயத்து மலைத்துப்போய்விடுவோம். மனித உடலை, இறைவன் குடியிருக்கும் கோயிலாக சித்தர்கள் கருதினர்.

‘நட்ட கல்லைத் தெய்வம் என்று

நாலு புஷ்பம் சாத்தியே

சுர்றிவந்து முணுமுணென்று சொல்லு

மந்திரம் ஏதடா

நாதன் உல்லிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம்

கறிச்சுவை அறியுமோ’

             -சிவ்வாக்கியர்

உடலை ஆலயம் என்று சித்தர்கள் சொன்னதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் தேவையில்லை.

சுவையாகச் செய்யப்பட்ட உணவின் சுவையைப் பாத்திரம் அறியாததுபோல்,உளிகொண்டு கல்லில் செதுக்கிய சிலையில் கடவுளைக் காண இயலாது. உண்மையான கடவுளாகிய ’நாதன்’ உனக்குள்,உன் உடலில் இருக்கிறார். எனவே, இறைவன் உறைந்துள்ள உன் உடலை நீ பேணிப் பாதுகாத்து வா என்பதே சித்தர்களின் கட்டளை.

எலும்பு,நரம்பு,ரத்தம்,தசை இவற்றால் கட்டப்பட்ட உடம்பு என்ற ஆலயத்தில், ‘ஜீவன்’ என்னும் வாயுவால் உடலை இறைவன் இயக்கிக்கொண்டிருக்கிறான். எனவே, மனிதனின் தேகம் நிலைக்கும் பொருட்டும் காரிய மாற்றும் பொருட்டும் அவனுக்கு உணவு அவசியமாகிறது.

ஜீரண மண்டலம்:

மனித உடலிக்கு உணவில் இருந்துதான் சக்தி கிடைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ‘நாக்குக்கு’ அடிமையானவன்தான். அதனால்தான், எதைப்பற்றியும் கவலைப்படாமல் நன்றாக சாப்பிடுகிறோம். அதே நேரத்தில், நம் உணவின் தேவையை நம்மால் அனுமானிக்க இயலாதபோது அந்த உணவாலேயே நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன.’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சென்று’ பெரியவர்கள் சொன்னதில்தான் எவ்வளவு உண்மை.

உணவால் உடலில் ஏற்படும் மந்தநிலையே அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமாக அமைகிறது. உடலின் மந்தத்தில் இருந்து வாயுவும், வாயு மிகுதியால் மலச்சிக்கலும், மலச்சிக்கலால் உடலில் பல சிக்கல்களும் உண்டாவதாக சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதையே,

‘காணுமே மந்தம் கவளிக்கும் அன்னத்தால்

காணுமே மந்தம் கடுமா மிசம்மீறல்

காணுமே மந்தம் கலந்தமாப் பண்டத்தால்

காணுமே மந்தம் கடுமேதிப் பாலுக்கே’

என்கிறார் திருமூலர். உணவை நன்றாக மென்று வுழுங்க வேண்டும். அரைகுறையாக மென்று வேகமாக விழுங்கினால் மந்தம் உண்டாகும். அதேபோல், மாமிசம் உண்பதும் உடலுக்கு மந்தமாகும். அதையே அதிகம் சாப்பிட்டால் மந்தம் அதிகமாகும். மாவில் செய்த உணவுப் பொருட்களை அதிகமாகச் சாப்பிட்டாலும், எருமைப் பாலை உணவில் அதிகம் சேர்த்தாலும், உடலில் மந்தம் உண்டாகும் என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

உணவு என்பது வாழ்வுக்கான ஆதாரம். நம்மில் பலர் உணவினால் வாழ்வின் அச்சாணியையே முறித்துவிடுகின்றனர். உனவைச் சரியான முறையில் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டால் நம் ஜீரண உறுப்புகளில் பிரச்சனை ஏதும் உண்டாவதில்லை.

உணவில் காரமும், சாரமும் அதிகமானால் ஜீரண உறுப்புகளில் புண், அமிலச் சுரப்பு, வாயு, மலச்சிக்கல், மலக்குடல்களில் கோளாறு, மூல நோய்கள் போன்றவை உண்டாகும். இதனால், உடலின் கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகளுக்கு வேளைப்பளு அதிகமாகி, உடல் சமநிலைத் தன்மையை இழந்து நோய்வாய்ப்பட நேர்கிறது.

எனவே நாம் சாப்பிடும் உணவு நம் கட்டுக்குள் இருக்கவேண்டும். அதிகமாக சாப்பிடுவதாலும், தேவையான அளவு சாப்பிடாமல் இருப்பதாலும் நம்மை ஏராளமான நோய்கள் துரத்துகின்றன. இதற்குத் தீர்வாக, மூலிகைகள், மரங்களின் இலைகள் போன்றவற்றை மருந்தாக்கி , நோய்களைத் தீர்க்கும் முறைகளைச் சித்தர்கள் நமக்கு அளித்துள்ளனர்.

அந்த வகையில், உடலை ஆதாரமாக இயங்கச் செய்யும் ஜீரண மண்டலக் குறைபாடுகளுக்கு சித்தர்கள் அருளிய மருந்துகள் தொகுக்கப்பட்டுள்ளன.

சிறுநீரக மண்டலம்:

நமது சிறுநீரகங்கள் மிகவும் மென்மையானவை. தனி மனித நெறிமுறைகளைக் கொண்டே நமது சிறுநீரகங்களின் ஆரோக்கியத் தன்மையை நாம் உணரலாம்.

புகை மற்றும் போதைப் பழக்கம், மாமிச உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது போன்றவற்றால் நம் நுட்பமான உணர்வுகள் மேலும் மேலும் மழுங்கடிக்கப்பட்டு, உடலானது தேய்வை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிடுகிறது.

தேவையில்லாத கோபம், மன அழுத்தம், மன உளைச்சல், படபடப்பு, பயம் மற்றும் உணவில் அதிகக் காரம் , உப்பு, போன்றவற்றால் நமது உணர்வுப்பூர்வ உறுப்பான சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.

நமது உடலின் ரத்த சுத்திகரிப்பு பணியிலும், உடலின் கழிவுகளை முறையாக வெளியேற்றி உடலை நிலைக்கச் செய்வதிலும் நமது சிறுநீரகங்கள்தான் முன்னணியில் இருக்கின்றன, சிறுநீரக மண்டலம் சார்ந்த நோய்களுக்கு எத்தனையோ மூலிகை மருந்துகள் உள்ளன. அவை சிறுநீரக மண்டலத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

நாளமில்லா சுரப்பி மண்டலம்:

ஆண், பெண் இருபாலருக்கும் அந்தந்த வயதுக்கேற்ப உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு அதாவது , ஆண்களுக்கு மீசை முளைப்பது, பெண்களுக்கு மார்பகம் வளர்வது போன்றவற்றுக்கு முக்கியக் காரணமாக இருப்பது இந்த நாளமில்லா சுரப்பி மண்டலம்தான். மேலும் ஆணும் பெண்ணும் உறவுகொண்டு மகிழவும் இந்த மண்டலத்தில் உள்ள சுரப்பிகளே காரணம்.

இந்த மண்டலத்தில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. மேலும், அவற்றுக்கான மருந்துகள் கிடைப்பதும் மிகவும் அரிது.

அந்த மண்டலத்தில் உள்ள முக்கிய சுரப்பியான கணையம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் சர்க்கரை நோய், இன்று உலகத்தையே பயமுறுத்தி வருகிறது. தவிர, உடல் பருமன் , மாதவிலக்குகோளாறுகள் , தைராய்டு நோய்கள் போன்றவற்றை இம் மண்டலத்தில் ஏற்படும் மிக முக்கியமான நோய்களாகும்.

மேலும், சித்த உடற்கூறு தத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள ஆறு ஆதார உயிர் மையங்கள்தான், இம் மண்டலத்தில் உள்ள சுரப்பிகளைத் தூண்டிச் செயல்படுத்துவதாகச் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வகையில், சுரப்பிகள் அனைத்தையும் தூண்டும் மூலிகை மருந்துகள் நாளமில்லா சுரப்பி மண்டலம் பகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன.

இனப்பெருக்க மண்டலம்:

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் பிறப்பும், அவர்களுக்குக் குழந்தை பிறந்த பிறகுதான் முழுமை அடைகிறது . சந்ததியைப் பெருக்கும் முக்கியப் பணியைச் செய்யும் இந்த இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் ஆண் மற்றும் பெண் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் இனப்பெருக்க மண்டலத்தில் தொகுக்கப் பட்டு, பிரச்சனைகளுகான சித்த மருந்துகளும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

அன்றாட வாழ்வின் ஒழுக்க நியதிகளைச் சித்தர்கள் வரையறுத்துள்ளனர். நமது தினசரி வாழ்வியல் நெறிமுறைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது ’பதார்த்த குண சிந்தாமணி’ என்ற பழம்பெரும் நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

திண்னமி ரண்டுள்ளே சிக்கல் டக்காமல்

பெண்ணின்பால் ஒன்றை பெருக்காமல்- உண்ணுங்கால்

நீர்சுருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி உண்பவர்தம்

பேருரைக்கில் போமே பிணி

இது தேரையர் என்ற சித்தர் எழுதிய பாடல். மலம், சிறுநீர் போன்ற உபாதைகளை அடக்காமல், அவ்வப்போது கழித்துவிட வேண்டும். புணர்ச்சியில் மிகுதியாக ஈடுபட்டு உயிர்த்துளி எனப்படும் விந்தை வீணாக்க்க் கூடாது. நீரைக் காய்ச்சியே பருக வேண்டும். தினசரி ஆகாரத்தில் ,நெய்யைச் சேர்த்து, நிறைய மோர் குடிக்க வேண்டும். இப்படிப்பட்ட வாழ்வியல் நெறிமுறைகளோடு வாழ்பவரின் பெயரைச் சொன்னாலே நோய்கள் நீங்கிவிடும் என்பதுதான் மேற்கண்ட பாடலின் கருத்து.

இவை தவிர , மேலும் பல விஷயங்களைச் சித்தர்கள் தங்கள் பாடல்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆணும், பெண்ணும் உடலில் மறைப்புகள் இல்லாத நிலையில், ஆசை,அன்பு,அரவணைப்பு, அதற்குப் பிறகு உடலுறவு என்று நிகழ்ந்தால் அப்படி உருவாகும் கருவானது ,தாய் , தந்தைக்கு உரிய சிறப்பு அம்சங்களுடன் உருவாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

‘அண்டத்தில் உள்ளதே பிண்டம்

பிண்டத்தில் உள்ளதே அண்டம்

என்பது சித்தர் மொழி. இந்த உலகில் உள்ளதுதான் நம் உடலிலும் இருக்கிறது.நம்முடைய உடலில் உள்ளதுதான் இந்த உலகிலும் இருக்கிறது என்று அர்த்தம்.

எனவே, உடலுக்கு ஏதாவது கேடு ஏற்பட்டால், உலகில் காணும் தாவர வர்க்கங்களை, ஜீவ வர்க்கங்களை மருந்தாக்கித் தேகம் நிலைக்கச் செய்ய வேண்டும் என்பது சித்தர்களின் வாக்காகும்.

பல கோடி ஆண்டுகளாக இந்த உலகமும், மனித வர்க்கமும் இருந்து வருகின்றன. மனிதன் இறப்பதற்காகப் பிறப்பவன். இடையில் அவன் வாழ்க்கை என்பது சமூகப் பரிணாம வளர்ச்சிக்காக, இறைவன் தந்த படிப்பினை. எனவே, பிறந்த மனிதன், வளர்ந்து, வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு மடிந்தே ஆக வேண்டும்.

நோயால் இடையில் மடிவதை, அதாவது இலக்கு அடையும் முன் மடிவதை இறைவன் விரும்பமாட்டான். இந்த உலகில் தோன்றியதன் நோக்கத்தைச் சாதிக்கும் பொருட்டு, நம் உடலுக்குச் சக்தி தேவை. அத்தகைய உயிர்ச்சக்தியை சித்தர்கள் அருளிய மூலிகைகள் நமக்கு அளிக்கின்றன.

எனவே, இறைவன் நமக்கு அளித்த அரிய வரம், இந்த உடல், நல்ல பழக்கவழக்கங்களால் இந்த உடலை இந்த உலகில் நிலைநிறுத்தி, காரியமாற்றி, இலக்கை அடைவோம்.

I received many comments on how much they had learned homework-writer.com/ from each other during the discussions and how this had made the learning process far more engaging and effective

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “மனித உடல் ரகசியங்கள்”
  1. karthick says:

    அருமையான தகவல், நன்ரிகல்

அதிகம் படித்தது