முக்கோற்பகவர் யார்?
தேமொழிMar 25, 2023
முன்னுரை:
கலித்தொகையில் முக்கோற்பகவர் (Mukorpagavar) குறித்து விவரிக்கும் பாடல் ஒன்று உண்டு. பாடலின் முதல் ஐந்து வரிகள் முக்கோற்பகவர் தோற்றத்தை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
இப்பாடல் விளக்கும் காட்சி . . .
தம்முள் காதல் கொண்ட தலைவனும் தலைவியும் தங்கள் வாழ்வைத் தொடங்க எண்ணி வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்கள். காதலனுடன் உடன்போக்கு செய்கிறாள் தலைவி. அவளை வளர்த்த செவிலித்தாய் மனம் பொறாமல் காட்டு வழியில் அவர்களைத் தேடி அலைகிறாள். அப்பொழுது இடைச்சுரத்தில் எதிர்கொண்ட முக்கோற்பகவரைக் கண்டு என் மகளையும் அவள் காதலனையும் இவ்வழியில் கண்டீர்களா என்று செவிலித்தாய் வினாவுகிறாள்.
எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்
உறி தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்
நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்து
குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர்
வெவ் இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இ இடை 5
என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்
தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்
அன்னார் இருவரை காணிரோ பெரும
காணேம் அல்லேம் கண்டனம் கடத்து இடை
ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய 10
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்
பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும்
நினையும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை 15
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும்
தேரும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும்
சூழும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே 20
என ஆங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்-மின்
சிறந்தானை வழிபடீஇ சென்றனள்
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே
— கலித்தொகை-9
“இஃது உடன்போய தலைவிபின் சென்ற செவிலி இடைச்சுரத்து முக்கோற்பகவரைக்கண்டு இவ்வகைப்பட்டாரை ஆண்டுக்காணீரோவென வினவியாட்கு, அவரைக் கண்டு அஃதறமெனவே கருதிப் பேர்ந்தேம், நீரும் அவர் திறத்து எவ்வம்பட வேண்டாவென எடுத்துக்காட்டி அவர் தெருட்டியது” என்று நச்சினார்க்கினியர் அருளிய உரை விளக்கம் தருகிறது [1] .
இப்பாடலின் பொருள்; எறிக்கின்ற கதிரவனின் தாக்கத்தைக் கையில் ஏந்திய குடையின் நிழலால் தடுத்துக் கொண்டு, உறியில் தொங்கும் நீர்ப் பானையையும், புகழ் பெற்ற முக்கோலினையும், முறைப்படி தோளில் சுமந்தவாறு மற்றவருக்கு நன்மையைத் தவிர வேறு எதையும் நினைத்திடாத உள்ளத்துடன், ஐம்பொறிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இயல்பையும் கொள்கையையும் நன்னெறியையும் கொண்ட அந்தணர்களே என்று செவிலித்தாய் இடைச்சுரத்தில் எதிர்ப்படும் அந்த முக்கோற்பகவர்களை விளிக்கிறாள்.
நீங்கள் வெப்பம் மிக்க காட்டுவழியை இயல்பாகக் கடந்து செல்பவர்கள், என் மகள் ஒருத்தியும், மற்றொருத்தியின் மகன் ஒருவனும் காதலித்து பிறர் அறியும்படி இணைந்தனர், இந்த வழியில் அவ்விருவரையும் கண்டீர்களா பெருமக்களே என்று ஆவலுடன் கேட்கிறாள்.
அவர்களும், ஆம் நாங்கள் அவர்களைக் காணாது இருக்கவில்லை. நாங்கள் கண்டோம் அவர்களை இந்தக் காட்டு வழியில். சிறந்த ஆணழகன் ஒருவானோடு கடப்பதற்கு அரிய இக்கட்டு வழியில் செல்லத் துணிந்த நற்குணத்தை அணிகலனாகக் கொண்டிருந்த அந்த இளம் பெண்ணின் தாய் நீங்கள்தானோ என்று கேட்டு செவிலித்தாய் மனவருத்தத்தை நீக்கத் தேறுதல் மொழிகள் சொல்கிறார்கள்.
அம்மையே, இனிய மணம் தரும் சந்தனக்கட்டைகள் தன்னை அரைத்து மேனியில் பூசிக் கொள்பவர்களுக்கு அல்லாமல் அவை தான் பிறந்த மலைக்கு நறுமணம் தராது. உன் மகளும் அத்தகையவளே.
நீரில் பிறந்த சிறப்புப் பொருந்திய நல் வெண்முத்துக்கள் அவற்றை அணிபவருக்குப் பயன் தருமே அன்றி அதன் பிறப்பிடமான நீருக்கு அவற்றால் பயன் எதுவும் இல்லை. உனது மகளும் உனக்கு அவ்வாறே.
யாழின் ஏழு நரம்புகளால் கூட்டி எழுப்பும் இனிய இசையால் இசைப்பவர் மகிழ்வாரன்றி, அதனால் யாழுக்கு எந்தப் பயனும் இல்லை. உன் மகளுக்கும் உனக்கும் உள்ள தொடர்பும் யாழ் எழுப்பும் இசைக்கும் யாழுக்கும் உள்ள தொடர்புதான்.
தன் காதலனுடன் உயர்ந்த கற்புநெறி மேற்கொண்டு சென்றுவிட்ட சிறந்த பண்பினை கொண்டவளுக்காக வருந்தாதீர்கள். சிறந்தவனைப் பின்பற்றிச் சென்றுள்ளாள் தங்கள் மகள், அறநெறி தவறாத ஒழுக்கமும் அதுவே. அவர்களுக்குத் துன்பம் தராமல் திரும்பிச் செல்லுங்கள் என்று செவிலித்தாய்க்கு ஆறுதல் கூறுகிறார்கள் அந்த முக்கோற்பகவர்கள்.
இந்தப் பாடல் குறிப்பிடும் ‘முக்கோல்’ என்பதன் அமைப்பு எவ்வாறு இருக்கும்?
செவிலித்தாயால் ‘அந்தணீர்’ என அழைக்கப்படும் முக்கோற்பகவர் என்பவர் யார்?
என்ற கேள்விகள் இயல்பாக எழுகிறது.
இப்பாடல் மூலம் தெளிவாகத் தெரிவது முக்கோலை ஏந்திய பகவர் என்பாரும் அந்தணர் என்பாரும் ஒருவரே.
(I) முக்கோல்-விளக்கங்கள்:
முக்கோல் குறித்து பாட்டும் தொகையுமான சங்கப் பாடல்களில் கலித்தொகையில் இருமுறையும் முல்லைப்பாட்டில் ஒருமுறையும் என மூன்று இடங்களில் முக்கோல் குறித்த செய்தி இருப்பதைக் காண முடிகிறது. முக்கோல் குறித்து தமிழின் தொன்மையான நூலை எழுதிய தொல்காப்பியரும் அந்தணர்க்குரியவை எவை என்பதைக் குறிப்பிடுகையில் ஒரு நூற்பாவில் குறிப்பிடுகிறார்.
“நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரிய.”
— தொல்காப்பியம் பொருளதிகாரம் 9.71
என்று தொல்காப்பிய நூற்பா குறிப்பிடுகிறது.
அதாவது; நூல், கரகம், முக்கோல், மணை என்பவற்றை அந்தணர்கள் கொண்டிருந்தனர் என்று குறிப்பிடுகிறார் தொல் காப்பியர். இதில் நூல் என்பது பூணூலைக் குறிப்பதாகவே பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் அந்த விளக்கம் ஏற்புடையதல்ல என்று பேராசிரியர் ஜவகர் பிரேமலதா விளக்கம் தருகிறார். அவர் விளக்கம் அவ்வாறே கீழே கொடுக்கப்படுகிறது:
“பெரும்பாலும் உரையாசிரியர்கள் அனைவரும் நூல் என்பதற்குத் தோளில் அணியும் பூணூலையேக் குறிப்பதாகக் கருதி உரை வகுத்துள்ளனர். அதை அடிப்படையாகக் கொண்டே விவாதங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆனால், பூணூலைத்தான் நூல் என்ற சொல் குறிக்கிறதா என்பதைச் சங்கப் பாடல்களைக் கொண்டு ஆராய்ந்தால், நூல் என்னும் சொல் பூணூலைக் குறிக்கவேயில்லை என்பது தெளிவாகப் புலப்படும். நூற்பாவினை ஊன்றிக் கவனமாகப் படித்துப் பார்த்தால் ஒரு செய்தி புலப்படும். தொல்காப்பியர் கையில் எடுத்துச்செல்லும் பொருட்களைத்தான் பட்டியலிடுகிறார்.
நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங் காலை அந்தணர்க் குரியஅந்தணராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி பூணூலைக் கையில் எடுத்துச் செல்ல மாட்டார்கள். தோளில்தான் அணிவார்கள். ஆனால், தொல்காப்பியர், அந்தணர் கையில் எடுத்துச் செல்லும் பொருட்களாக நூல், கரகம், முக்கோல், மணை முதலானவற்றைக் குறிப்பிடுகிறார்.
கையில் நூலை எதற்காக எடுத்துச் செல்ல வேண்டும்? நூலை அடுத்து கரகம் இடம் பெற்றிருப்பதால், அது கரகத்தை எடுத்துச் செல்வதற்குரிய நூலையேக் குறிக்கிறது.சங்க இலக்கியப் பாடல்களில் இதற்கு சிறப்பான உதாரணம் உள்ளது. பல மெல்லிய நூல்களைக் கொண்டு முறுக்கப்பட்ட கயிறு ‘புரிநூல்’ என்று அழைக்கப்பட்டுள்ளது. இப்புரிநூல் சிறிய பொருட்களைக் கட்டி எடுத்துச் செல்வதற்கு உறியாகப் பயன்பட்டுள்ளது. முனிவர்கள் ‘கரண்டை’ எனப்படும் சிறிய பானையை நீர் எடுத்துச் செல்லப் பயன்படுத்தியுள்ளனர். இக்கரண்டையானது கல்லில் பொத்தல் ஏற்படுத்தினாற் போன்ற சிறிய வாயினை உடையது. கரண்டை கீழே சாய்ந்தாலும் சிறிய அளவு நீரே வீணாகும். இக்கரண்டை எனப்படும் சிறிய பானையைப் பல வடங்களுடையப் புரி நூலால் செய்யப்பட்ட உறியில் வைத்துக் கையில் எடுத்துச் சென்றுள்ளனர். பல வடமுடையப் புரிநூலால் ஆன உறியானது ‘சிமிலி’ என அழைக்கப்பட்டுள்ளது [2].”
இவ்வாறு தொல்காப்பியம் நூற்பாவிற்கு விளக்கம் தருகிறார் முனைவர் ஜவகர் பிரேமலதா. இந்த விளக்கத்தைப் போன்றே செவிலித்தாய் அந்தணீர் என்று அழைக்கும் முக்கோற்பகவர்களும் “உறி தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும்” வைத்திருப்பாகப் பாடல் சொல்வதைப் பொருத்திப் பார்க்க முடிகிறது.
(II) பகவர்-விளக்கங்கள்:
பகவர் என்ற சொல் வைதீகத்தில் கடவுளுக்கும் துறவிகளுக்கும் பொதுவாக எடுத்தாளப்படுகிறது.
எடுத்துக்காட்டாக;
பதினெண்கீழ்க்கணக்கு-இன்னாநாற்பது நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்;
“முக் கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா;
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா;
சக்கரத்தானை மறப்பு இன்னா; ஆங்கு இன்னா,
சத்தியான் தாள் தொழாதார்க்கு.”
முக்கட் பகவன் என்பது இப்பாடலில் சிவனைக் குறிப்பதைக் காணலாம். ஆனால் துறவியை அல்ல. பொதுவாகவே பகவானே என்றால் அது கடவுளைக் குறிக்கும் வழக்கமாக உள்ளது குரு பகவான், சந்திர பகவான், சூரிய பகவான், சனி பகவான் உட்பட. இக்காலத்தில் ஏசு பகவான் என்பது கூட இதன் நீட்சியே.
“மேவித் தொழுதுய்ம்மின் நீர்கள் வேதப் புனித விருக்கை
நாவிற்கொண் டச்சுதன் தன்னை ஞான விதிபிழை யாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும்அடி யாகும் பகவரும் மிக்க துலகே.”
— திருவாய்மொழி (5. 2: 9)
இப்பாசுரத்தில் ஆழ்வார் கூறும் பகவர் துறவு மேற்கொண்டவர். ஆனால் இவ்வரி குறிப்பிடுவது இறைவனை அல்ல. பகவான் ராமகிருஷ்ணர், பகவான் ரமணமகரிஷி போன்ற வழக்குகளும் இந்த முறையின் தொடர்ச்சியே.
திருக்குறளின் முதல் குறளே;
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
ஆதிபகவன் முதன்மையானவன் என்று குறிப்பிடுகிறது. இந்த ஆதிபகவன் யார் என்று ஒவ்வொரு சமயத்தவரும் ஒவ்வொருவகையில் விளக்கம் அளித்தும் வருகிறார்கள்.
திருக்குறள் அந்தணர் குறித்தும் விளக்குகிறது.
“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்”
(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:30)
அந்தணர் எவ்வுயிர்க்கும் கருணை காட்டுபவர்கள் ஆதலால் அவர்கள் அறவோர் ஆவர் என்பது இக்குறளுக்கான விளக்கம்.
“அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்”
(அதிகாரம்:செங்கோன்மை குறள் எண்:543)
அருளாளர் நூலுக்கும் அறத்துக்கும் காரணமாய் நிற்பது அரசனின் செங்கோல் ஆட்சி என்பது இக்குறளுக்கான விளக்கம்.
அந்தணர் என்பவர் பார்ப்பனர் என்ற பொருளில் இக்காலத்தில் வழங்கப்படும் முறை இருந்தாலும், இக்குறள்கள் அந்தணர் என்பவர்கள் துறவிகள் என்ற பொருளே தருகிறது.
சமண சமயத்தில் முதல் தீர்த்தங்கரராகிய ரிஷபதேவர் ஆதிபகவன் என்று அழைக்கப்படுவார்[3]. பௌத்த சமயத்தின் கௌதம புத்தர் புத்த பகவான் என்று அழைக்கப்படுவதை அனைவரும் அறிவோம். பள்ளி நாட்களிலேயே புத்த பகவான் அருளிய போதனைகள் என்று படித்ததை நினைவு கூர்க.
(III) முக்கோற்பகவர்-விளக்கங்கள்:
தொல்காப்பியம் குறிப்பிடுவது போல அந்தணர்கள்/துறவிகள் முக்கோல் ஏந்துவர் என்பது வழக்கம். முக்கோல் வடமொழியில் திரிதண்டம் என்று குறிப்பிடப்படும், பொதுவாக காவியுடை துறவிகள் கையில் ஏந்தியிருப்பது முக்கோல். “முக்கோற்பகவர்” என்ற சொல்லுக்கு யோக தண்டமாகிய “திரிதண்டந் தாங்கிய துறவியர்” என்று அகராதி பொருள் விளக்கம் தருகிறது.
“முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல்”
— கலித்தொகை – 126
முக்கோலை ஏந்திய அந்தணர்கள் தம் மறையை நினைத்து அமர்ந்திருப்பதைப் போல என்கிறது மற்றொரு கலித்தொகை பாடல்.
வைணவ இராமானுஜர் மற்றும் ஜீயர் போன்ற வைணவத் துறவிகளின் கையில் வைத்திருக்கும் திரிதண்டம் மூன்று கோல்கள் பிணைத்துக் கட்டப்பட்டவை. சொல், செயல், சிந்தனை ஆகிய மூன்றையும் அடக்கியவர் என்ற கட்டுப்பாட்டைக் குறிக்கும் வண்ணம் முக்கோலை ஏந்தியுள்ள பகவர் திரிதண்டி எனப்படுவார் என்பது முக்கோல் தாங்கி இருப்பதற்கான விளக்கம்.
(IV) முக்கோல் அமைப்பின் விளக்கம்:
முக்கோற் பகவர்களை பத்துப்பாட்டில் ஒன்றாகிய முல்லைப் பாட்டும் பேசுகின்றது.
“கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான்
முக்கோல் அசை நிலை கடுப்ப நல் போர்
ஓடா வல் வில் தூணி நாற்றி”
— முல்லைப்பாட்டு (37-39)
காவிக்கல்லைத் தோய்த்து துவராடையாக்கி காவியாடையை உடுத்திய, விரதங்களையுடைய பார்ப்பான்(இங்குத் தெளிவாகவே பார்ப்பான் என்று குறிப்பிடப்படுவதைக் காணலாம், காவியாடை அணிந்த பார்ப்பனத் துறவி எனக் கொள்ளலாம், காவியாடை துறவறம் மேற்கொள்வோர் அணிவது), தனது முக்கோலில் அந்தக் காவியாடையை நழுவி விழாத வகையில் இட்டுவைத்த தன்மையை ஒக்க, போரில் நழுவி விழாத வகையில் ஊன்றப்பட்ட வில்லில் அம்புக்கூடுகளைத் தூக்கி வைத்திருக்கிறார்கள் என்று முனைவர் பாண்டியராஜா இந்த முல்லைப்பாட்டு வரிகளுக்குப் பொருள் சொல்லி, படவிளக்கம் தருகிறார் [4], [5].
இதே முல்லைப்பாட்டு வரிகளுக்கு, கல்லில் துவைத்துக் கட்டும் ஆடையை நோன்பிருக்கும் பார்ப்பான் முக்கோல் நடுவில் வைத்திருப்பது போல வில்லும் அம்பறாத்தூணியும் வைக்கப்பட்டிருந்தன. வேல்களை நட்டு அவற்றைக் கயிற்றால் பிணித்திருந்தனர் என்று முனைவர் செங்கை பொதுவன் அவர்களும் படத்துடன் விளக்கம் தருகிறார்[6].
இந்த முக்கோலுக்கு இந்த ஆய்வாளர்களால் கொடுக்கப்பட்டுள்ள படவிளக்கங்கள் காட்டுவது பெயருக்கு ஏற்றார் போல எண்ணிக்கையில் மூன்று கோல்களைக் கொண்ட ஒரு முக்கோல் அமைப்பு. இந்த முக்கோல் அமைப்பு பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு இருந்தது, அது ஏன் எவ்வாறு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதைத் தெளிவாக்கும் முறையிலும் உள்ள விளக்கமாக இப்பட விளக்கங்கள் அமைகிறது. பிற்காலத்தவர் திரிதண்டி என்பதற்கான ஒரு அடையாளக் குறிப்பாக ஒரு ஊன்றுகோல் போன்று கையில் ஏந்திச் செல்வதைப் போல அல்லாமல், அதாவது, மன்னவன் கையில் உள்ள செங்கோல் போன்ற ஒரு அடையாளக் குறிப்பு போல அல்லாமல், அக்காலத் துறவிகள் அந்த முக்கோலைத் தூக்கிச் செல்வதற்கான தேவையும் அதற்கென ஒரு பயனும் இருந்திருக்கிறது என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள வழி வகுக்கிறது முல்லைப்பாட்டின் வரிகள்.
(V) சிற்பச்சான்று:
துறவிகள் அவ்வாறு முக்கோல் அமைப்பைத் தங்களுடன் எடுத்துச் சென்ற நோக்கம் என்ன என்பதற்கான சான்றுகள் சிற்பங்களிலோ ஓவியங்களிலோ கிடைத்ததாகத் தெரியவில்லை, அதாவது பௌத்த சிற்பங்களைத் தவிர.
காந்தாரக் கலைவடிவ முறையில் இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டு குஷானப் பேரரசுக் காலத்தில் உருவாக்கப்பட்ட புத்தரின் பரிநிர்வாண புடைப்புச் சிற்பங்களில் பலவற்றில் முக்கோலும் அதில் தொங்கவிடப்பட்ட நீர்க்குடுவையும் காட்டப்படுகிறது. இலண்டன் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகம் (Victoria and Albert Museum, London) சேமிப்பில் உள்ள காந்தாரக் கலைவடிவ புத்தரின் பரிநிர்வாணச் சிலையில் கீழ் வரிசையில் இருப்பவர்களை விவரிக்கும் பகுதியின் விளக்கம் கீழே கொடுக்கப்படுகிறது [7].
PHYSICAL DESCRIPTION: [...] The last figure on the right is of a meditating monk with his hands wrapped in his robe in his lap with his eyes cast down. He has a cap-like hairstyle with the ends flicked back across the centre of his head and caught in a tassel-like arrangement over his forehead. He is presumably Subhadra, the last convert. He sits next to a netted water bag suspended from a tripod of three poles lashed together on the extreme right [https://collections.vam.ac.uk/item/O25034/death-of-the-buddha-sculpture-unknown/].
குறிப்பு: புத்தர் பரிநிர்வாண சிற்பங்கள் என்ற இணையத் தேடலில் கிடைக்கும் படங்கள் மேலும் பல உள்ளன. அவற்றில் சிலவற்றைக் காணும் சுட்டிகள் கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
முடிவுரை:
புத்தரின் பரிநிர்வாண பௌத்த புடைப்புச் சிற்பங்கள் பலவற்றின் அடிப்படையிலும், அவற்றின் காலத்தையும் கருத்தில் கொள்வதுடன், “நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க்குரிய” என்ற தொல்காப்பிய நூற்பாவை மீள்வாசிப்பு செய்தால், கலித்தொகை பாடலில் செவிலித் தாய்க்குத் தேறுதல் சொல்லும் துறவிகள் அல்லது முக்கோற்பகவர் என்பவர் பௌத்த துறவிகள் என முடிவு செய்யலாம்.
சிற்பங்களில் காட்டப்படுவது போல அந்த பௌத்த துறவிகளே முக்கோலையும், அதில் உறிபோல கயிற்றில் கட்டித் தொங்கவிடப்படும் நீர் கரகமும் கொண்டு சென்றார்கள் என்றும், அந்த அறிவோர்கள்தான் முற்காலத்தில் அந்தணர் என அழைக்கப்பட்டார்கள் என்றும் ஆவணப்படுத்தப் பட்டுள்ள சிற்பக் காட்சியின் அடிப்படையில் முடிவெடுக்கலாம்.
பௌத்த சமய சின்னங்கள், சங்கு சக்கரம் உட்பட, பிற்காலத்தில் வைணவத்தில் எடுத்தாளப்பட்டது; புத்தர் பாதங்கள் இராமர் பாதங்களாயின; நின்ற இருந்த கிடந்த புத்தர் சிலை அமைப்புகள் வைணவத்தில் திருமாலின் நின்ற இருந்த கிடந்த கோலங்களில் எதிரொலித்தன என்று பல பௌத்த அடையாளங்கள் வைணவத்தில் உள்வாங்கப்பட்ட முன்மாதிரிகள் இருப்பதை ஒட்டியே மூன்று கம்புகளை இணைத்த முக்கோலும், அவற்றுக்கான வேறு பொருள் விளக்கம் பெற்று வைணவத்தின் வழக்கத்திற்குள் வந்திருக்கிறது எனலாம். பிற்காலத்தில் புத்தரே பத்து அவதாரங்களில் ஒருவராகவும் சித்தரிக்கப்பட்டார் என்பது வைதீக மயமாக்கலின் உச்சக்கட்டம்.
சான்றாதாரங்கள்:
[1] கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்
https://www.tamilvu.org/slet/l1260/l1260exp.jsp?x=56&y=62&z=9
[2] தொல்காப்பியர் கூறும் நூல், முனைவர் ஜ.பிரேமலதா
https://vjpremalatha.blogspot.com/2015/04/blog-post_3.html
[3] சமணமும் தமிழும் (முதல் பாகம்), மயிலை சீனி. வேங்கடசாமி
https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0598.html
[4] முல்லைப்பாட்டு – அடிநேர்-உரை, முனைவர் ப. பாண்டியராஜா
http://tamilconcordance.in/table-SANG-05-text.html
[5] முல்லைப்பாட்டு – An illustrated commentary, முனைவர் ப. பாண்டியராஜா
https://groups.google.com/g/mintamil/c/VrvfaZgCQmU/m/r_LiEfRx-0UJ
[6] முல்லைப்பாட்டு – செய்தி, முனைவர் செங்கை பொதுவன்
http://vaiyan.blogspot.com/2014/11/blog-post_7.html
[7] Death of the Buddha
https://collections.vam.ac.uk/item/O25034/death-of-the-buddha-sculpture-unknown/
Buddha – Parinirvana -Pictures:
(1) File:Four Scenes from the Life of the Buddha – Parinirvana – Kushan dynasty, late 2nd to early 3rd century AD, Gandhara, schist – Freer Gallery of Art – DSC05119.JPG
https://commons.wikimedia.org/wiki/File:Four_Scenes_from_the_Life_of_the_Buddha_-_Parinirvana_-_Kushan_dynasty,_late_2nd_to_early_3rd_century_AD,_Gandhara,_schist_-_Freer_Gallery_of_Art_-_DSC05119.JPG
(2) File:Loriya Tangai Nirvana of the Buddha.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Loriya_Tangai_Nirvana_of_the_Buddha.jpg
(3) File:Death of the Buddha. Gandhara.Met.jpg
https://commons.wikimedia.org/wiki/File:Death_of_the_Buddha._Gandhara.Met.jpg
(4) Review of The Robert H. N. Ho Family Foundation Galleries of Buddhist Art at the V&A
http://www.vam.ac.uk/content/journals/research-journal/issue-no.-4-summer-2012/reviewof-the-robert-h.-n.-ho-family-foundation-gallery-at-the-v-and-a/
(5) Death of the Buddha
https://collections.vam.ac.uk/item/O25034/death-of-the-buddha-sculpture-unknown/
(6) X Sun-Cross. Solkors. Indo-Greek Buddhism Gandhara, the death Buddha, 100-300
தேமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “முக்கோற்பகவர் யார்?”