முள்ளிவாய்க்கால் இன்னும் விடிவில்லை!(கவிதை)
ராஜ் குணநாயகம்May 17, 2016
சிங்களத்தின்
அதர்ம வெறித்தாண்டவத்தின்
நீண்ட தொடர்ச்சியாய்-
எம் இனத்தை
அடக்கி ஒடிக்கி
முடமாக்கி
குருடாக்கி
செவிடாக்கி
கொன்று தின்று புதைத்து
பைத்தியமாக்கி நடைப்பிணங்களாய்
திறந்த வெளி சிறைக்குள்
நாம் இன்றும்
எம் தாய் மண்ணில்–
உறவை இழந்து
ஊர் இழந்து
நிலம் இழந்து
நாடற்றவர்களாய்
அலைகிறோம்
கேட்பார் யாருமற்ற அநாதைகளாய்
புலம்பெயர் தேசங்களில்!
நம் தாய் மண்ணில்
நம்மை பொறுத்தவரை
சூரியன் வந்து போகிறான்
அவ்வளவுதான்
நிஜமான விடியல்
இன்னும் வரவில்லை!
நாம் பயந்து
மௌனித்து
அடங்கியிருக்கும் ஒவ்வொரு கணமும்
நமக்கும்
நம் பரம்பரைக்கும் சேர்த்தே
மரணக்குழிகள்
நாம் ஒற்றுமையோடு
ஓங்கி எழுந்து
வேகமாய் விவேகமாய்
போராடும் நேரமிது—
சூரியன் எழுமுன்
நாம் எழுவோமோ
சூரியன் தூங்கிய பின்பும்
நாம் விழித்திருப்போமோ
தமிழாய் மலர்ந்தோம்
தமிழாவோம்
தமிழாய் எழுவோம்
தமிழாய் விழுவோம்
தமிழாய் விதையாவோம்
தமிழாய் மீண்டே எழுவோம்
தமிழா!
எங்கள் சுதந்திர கனவு
மரணித்து புதையுண்ட போகவில்லை
விதைக்கபட்டது
முள்ளிவாய்க்காலில்
கலந்தது
இந்துமாகடலில்–
அலைகளுக்கு ஓய்வில்லாதவரை
விடியலுக்கு தடை போடாதவரை
எங்கள் சுதந்திர கனவுக்கும்
விடியல் தூரமில்லை
எரிந்த சாம்பல் கொண்டெழும்
பீனிக்ஸ் பறவைகள்
எங்கள் சுதந்திர தாகம்!
சுதந்திர தேசத்தின் விடியலுக்கு
சூரிய பகவானை யாரும்
செங்கம்பளம் விரித்து வரவேற்பதில்லை!
இன்னும் விடியவில்லை
இன்னும் விடிவுமில்லை………………….
-ஈழன்-
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “முள்ளிவாய்க்கால் இன்னும் விடிவில்லை!(கவிதை)”