மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிப்பது சரியா?

ஆச்சாரி

Mar 22, 2014

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய முடிவு எடுத்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி கூறி தகவல் எழுதியதற்கு நண்பர்கள் பலரும் கடுமையான எதிர்வினைகளை தொடுத்தனர். ஒவ்வொருவருக்கும் புரிய வைப்பதற்கு அதிக நேரம் செலவிட வேண்டி இருந்தது. விளக்கிய உடன் சிலர் புரிந்து கொண்டனர், சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். புரிந்துகொண்ட நண்பர்களுக்கு நன்றியையும், புரிந்து கொள்ளாத நண்பர்களுக்கு மீண்டும் விளக்குவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விவாதங்களின் போது நன்றாக தெரிந்தது என்னவென்றால், இவ்வழக்கு தொடர்பாக எவற்றை எல்லாம் அனைவரும் அறிந்தவைகள் என்று நினைந்திருந்தோமோ அதில் சிறு துளி கூட நண்பர்கள் பலரும் அறிந்திருக்கவில்லை. இதில் நண்பர்களை குறை கூற இயலாது, அவர்கள் பார்த்து, வாசித்து வரும் ஊடகங்களின் செய்திகளை கொண்டே அவர்கள் நிலைப்பாடு எடுக்க முடியும். இவ்வழக்கில் ஒத்த கருத்துடைய மற்ற நண்பர்களுடன் பேசிய பொழுது அவர்களது நட்பு வட்டாரத்திலும் இதே போன்ற கேள்விகள் கேட்கப்படுவதாகவும் தெரிவித்தனர். நாம் சந்தித்த கேள்விகளை தொகுத்து எழுதலாம் என்ற சிறு முயற்சி இது.

கேள்வி: நமது நாட்டின் பிரதமர் ராஜீவ் காந்தியை கொடூரமாக  கொன்றவர்கள் இரக்கமின்றி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களின் விடுதலையை எப்படி மனசாட்சி இல்லாமல் கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றீர்கள்?

பதில்: தங்களின் நியாமான கேள்விக்கு பதிலளிக்கும் முன், கேள்விகளில் இருக்கும் இரு சொற்றொடர்களை விளக்க வேண்டி இருக்கின்றது.

நமது நாட்டின் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் என்று குறிப்பிடுகின்றீர்கள். திரு.ராஜீவ் காந்தி அவர்கள், படுகொலை செய்யப்பட்ட துயரமான செயல் நடந்த பொழுது, அவர் நமது நாட்டின் பிரதமர் அல்ல. அன்றைய நிலையில் முன்னாள் பிரதமர் மட்டுமே. நம் நாட்டின் தேர்தல் சட்டங்களின் படி, பிரதமர் வேட்பாளர் என்று கூட குறிப்பிட முடியாது. தேர்தலுக்கு பின், மக்களவை உறுப்பினர்களால் தான் பிரதமரை தேர்ந்தெடுக்க முடியும்.

இரண்டாவது “ராஜீவ் காந்தியை கொன்றவர்கள்” என்பதும் சரியான கருத்தல்ல. திரு.ராஜீவ் காந்தி அவர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாக கருதப்படும் குற்றவாளிகள் தாணு, சுபா, சிவராசன் ஆகியோர் தமிழகத்தில் தங்கியிருந்த நாட்களில் தொடர்பு கொண்டவர்கள் அனைவரையும் கண்டறிந்து 129 பேரை குற்றப்பத்திரிக்கையில் பட்டியல் இட்டு இருக்கின்றனர். இதில் ஒவ்வொருவரின் செயல்களின் தாக்கத்திற்கேற்ப முதல் குற்றவாளி, இரண்டாம் குற்றவாளி, மூன்றாம் குற்றவாளிகள் என்று படி நிலையில் பிரித்திருக்கின்றனர். தற்போது தூக்கு தண்டனையில் இருந்து கருணை காட்டப்பட்டிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் 18 மற்றும் 19 ஆவது நிலை குற்றவாளிகள். இவர்களை “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள்” என்று அழைப்பது தான்  நியாயமானது.

தற்போது தங்களுடைய கேள்விக்கான பதிலுக்கு வருகிறேன். திரு.ராஜீவ் காந்தி அவர்களை படுகொலை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பது தான் எங்களின் வாதமும். நேரடியாக குற்றத்தில் ஈடுபட்டவர்கள் எவரையும் உயிருடன் பிடிக்காமல் விட்டுவிட்டு, அவர்கள் வந்து போன இடங்களில் தொடர்புடையவர்கள் என்று பெரிய பட்டியலிட்டு தண்டிப்பது தான் கவலையளிக்கின்றது. அதனால் தான் இம்மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என்று கேட்கிறோம்.

கேள்வி : உங்களுடைய கருத்து நீதிமன்றத்தை அவமதிப்பது போன்றல்லவா இருக்கின்றது. நீதி மன்றத்தில் ஒன்றுக்கு இருமுறை விசாரிக்கப்பட்டு இவர்கள் தண்டிக்கப்பட்டு இருக்கின்றனர். இவ்வழக்கிற்கு தொடர்பில்லாத உங்களையோ, என்னையா பிடித்து தண்டிக்கவில்லை. குற்றத்தில் ஈடுப்பட்டவர்கள் என்று நன்றாக உறுதி செய்யப்பட்டுத்தான் தண்டிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் தவறாக தண்டிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது விதண்டாவாதம் இல்லையா?.

பதில்: ஒரு நீதிமன்றத்தில் கொடுக்கப்படும் தீர்ப்பில் திருப்தி இல்லையெனில், பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த நிலை நீதிமன்றத்தில்  வழக்கு தொடரலாம் என்பது அரசியல் சட்டப்படி உரிமை. இதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது. எந்த நிலையிலும் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக செயல்படுவது மட்டுமே நீதிமன்ற அவமதிப்பு, தீர்ப்பின் மீது அதிருப்தி கொள்வதை நீதிமன்ற அவமதிப்பாக கொள்ளமுடியாது. மேலும் நீதிமன்ற அவமதிப்பு என்பது அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர்  குற்றம் சொல்லப் பயன்படுத்தப்படும் சொல் ஒன்றே தவிர, பொதுமக்கள் யாரும் அதைப் பற்றி கருத்தில் கொள்வதில்லை.

நமது நாட்டின் நீதிமன்றத்தின் மீது நீங்கள் மிக உயர்ந்த  நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்று தெரிகின்றது. இவ்வழக்கை முதலில் மூடிய கதவிற்குள் விசாரித்த தடா நீதிமன்றம் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்குமே தூக்குதண்டனை விதித்தது. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த பொழுது நான்கு பேருக்கு மட்டுமே தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. தடா நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றி 26 பேரையும் தூக்கிலிட்டிருந்தால் என்ன ஆகி இருக்கும்? குற்றவாளிகள் குண்டு வெடித்து பதினாறு பேரை கொன்றார்கள், பதிலுக்கு  நம் நீதிமன்றம் தீர்ப்பெழுதி 26 பேரைக் கொன்றது என்றாகி இருக்காதா? நம் நாட்டின் நீதி அமைப்பின் பெரும் பிழை இல்லையா இது? இது போன்ற மற்றொரு பிழை நேரக் கூடாது என்பதாலே நிரபராதிகளாக இருக்ககூடியவர்களை தூக்கிலிடாதீர்கள் என்கிறோம்.

இதையும் போராடி பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்து அரசை நெருக்கடிக்குள்ளாகி கேட்கவில்லையே. முறையாக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இதற்கு முன்னர் பல வழக்குகளில் எவ்வாறு மரண தண்டனை குறைக்கப்பட்டு இருக்கின்றதோ அதே போன்ற தீர்ப்பைத் தானே கேட்டு பெற்றிருக்கின்றோம். இதில் எங்கு நீதிமன்றத்தை நாங்கள் மதிப்பதில்லை என்று காட்டுகின்றது.

உதாரணத்திற்கு பேரறிவாளன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றத்தைப் பாருங்கள்.

(VII) (a) Arivu (A-18) visited Jaffna and other places in Sri Lanka along with Irumborai (A-19) clandestinely in June 1990, purchased a Kawasaki Motor cycle on 4.5.1991 at Madras to facilitate quick movement of himself and one or the other of the co-conspirators,

(a-1) arranged payment for printing the compilation described as “The Satanic Force” and sent one copy of the same to Prabhakaran (absconding) through Sivarasan (DA) and another set through Murugan (A-3),

(b) purchased and provided a battery for operating the wireless apparatus and other two battery cells, which were used as detonator in the belt bomb used by Dhanu (DA) for the murder of Rajiv Gandhi and 15 others;

இதில் இலங்கைக்குச் சென்றது தூக்குதண்டனைக்குரிய குற்றமா?

கவாசாகி இருசக்கர மோட்டார் வாகனம் வாங்கியது தூக்கு தண்டனைக்குரிய குற்றமா?

இலங்கையில் இந்திய அமைதிப்படையினால் பாதிக்கப்பட்ட மக்களைப்பற்றிய புத்தகம் (http://ebook.yarl.com/) அச்சிட பணம் கொடுக்கச் சென்றது தூக்கு தண்டனைக்குரிய குற்றமா?

இல்லை 9V பேட்டரி (மின்கலம்) வாங்கி கொடுத்தது தூக்கு தண்டனைக்குரிய குற்றமா?

இவைகள் யாவும் சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டவைகள். இன்று பேரறிவாளனின் வாக்கு மூலத்தை பதிவு செய்த காவல் துறை அதிகாரியே அன்று பேரறிவாளனின் வாக்கு மூலத்தை திருத்தினோம் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.
திருத்திய வாக்குமூலத்திலேயே இவ்வளவு தான் அதிகபட்ச குற்றங்கள் என்றால் திருத்தாத உண்மையான வாக்குமூலத்தில் பேரறிவாளன் குற்றமற்றவராக இருக்கலாம் இல்லையா?
இந்நிலையில் பேரறிவாளனை தூக்கிலிடுவது எப்படி நீதியாகும்?.

கேள்வி: நீங்கள் ஆயிரம் கூறினாலும் அவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் இல்லையா?

பதில்: அந்த காலகட்டத்தில் தமிழ் நாட்டில் பெரும்பாலானோர் வெளிப்படையாக விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் தானே? விடுதலைப் புலிகளுக்கு தமிழ் நாட்டில் பயிற்சி அளிப்பதற்கு ஏற்பாடு செய்ததே நமது முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி தானே. அன்றைய தமிழ் நாட்டின் முதலமைச்சர் திரு.எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகளுக்கு வெளிப்படையாக நிதி உதவி செய்தவர் தானே. தமிழ்நாட்டில் இருந்து எத்தனையோ பிரபலங்கள் ஈழத்திற்கு சென்று விடுதலைபுலி அமைப்பினரை சந்தித்து வரவில்லையா? அவர்கள் யாவருக்கும் இல்லாத தொடர்பா பேரறிவாளனுக்கு இருந்தது?.

கேள்வி: இந்தியாவும் தமிழ்நாடும் உதவி செய்தது எல்லாம் ராஜீவ் காந்தியின் கொலைக்கு முன்னால் நடந்தது. அவற்றை நீங்கள் எப்படி ஒப்பிட முடியும்?

பதில்: பேரறிவாளன் பேட்டரி வாங்கி கொடுத்தது, அச்சகத்திற்கு பணம் கொடுப்பதில் ஈடுபட்டது போன்று குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் செயல்களும் திரு.ராஜிவ் காந்தியின் படுகொலை துயரச் சம்பவத்திற்கு முன்னர் நடந்தவைகள் தானே?

கேள்வி: நீங்கள் மீண்டும் மீண்டும் பேரறிவாளன் பற்றியே குறிப்பிடுகிறீர்கள், அவரை விட்டு விடுங்கள், மற்றவர்களைப் பற்றி பேசமாட்டீர்களா?.

பதில்: நாங்கள் கேட்பதும் அதே தான். நீங்களும் அரசாங்கமும் பேரறிவாளனை விட்டுவிடுங்கள். நாங்கள் மற்றவர்களைப் பற்றி பேசத் தொடங்குகின்றோம். சங்கிலியை உடைக்க முற்படும் பொழுது பலவீனமான இணைப்பை உடைப்பது தானே பேரறிவு?.

 கேள்வியும் பதில்களும் தொடரும் ….

Schools and classrooms must be https://eduessayhelper.org learner centered

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிப்பது சரியா?”

அதிகம் படித்தது