மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் தமிழ் விழா 2015 – தமிழால் இணைவோம், அறிவால் உயர்வோம்!

க.தில்லைக்குமரன்

Jul 11, 2015

fetna2வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை என்பது, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு. [FeTNA - Federation of Tamil Sangams of North America] இந்தப் பேரவையின் ஏற்பாட்டில், ஒவ்வோரு ஆண்டும் சூலை மாதத்தில் முதல்வாரம், அமெரிக்காவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் உள்ள நகரத்தில் இரண்டு நாட்கள் விழாவாகக் கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு கலிபோரினியா மாநிலத்தில் சான் ஓசே [San Jose] நகரில் சீரும் சிறப்புமாக நடந்துள்ளது. இந்த தமிழர் மாநாட்டில் கிட்டத்தட்ட 2000 முதல் 2500 தமிழர்கள் கலந்து கொண்டார்கள். தமிழ்ச் சங்கப்பேரவை என்பது “அமெரிக்கவாழ் தமிழர்களின் முகவரி” எனலாம். இந்தப் பேரவை விழாவில் தமிழ் நாட்டில் இருந்து தமிழ் அறிஞர்கள், திரைத்துறை கலைஞர்கள், தமிழ் சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்களும் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
தமிழ்ச்சங்கப் பேரவையின் தலையாய நோக்கம், அமெரிக்கவாழ் தமிழர்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் நம் தாய்மொழி தமிழின் சிறப்பை, தமிழர்களின் கலையை, பண்பாட்டை எளியமுறையில் இயல், இசை, நாடகம் மூலம் பரப்புவது.

fetna8இரண்டு நாள் முழு நிகழ்வில் ஏராளமான தமிழர் சார்ந்த நிகழ்ச்சிகள் அரங்கு ஏறியது. முதல் நாள் தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்பு பாடலோடு, திருக்குறள் மறை ஓதியும், பாரதியார் மற்றும் சங்கஇலக்கியப் பாடல்கள், பாரதிதாசனின் தமிழ்ப் பாடல்களும் வளைகுடா தமிழ் மன்றத்தின் குழந்தைகள் மிக அருமையாக அழகு தமிழில் பாடி ஆடினார்கள். இந்த முதல் நிகழ்ச்சிகளே பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

இந்த விழாவில் நிறைய சிறப்பு அம்சம் இருந்தாலும், குறிப்பாக குழந்தைகள் கலந்து கொண்ட “திருக்குறள் தமிழ்த்தேனீ” நிகழ்ச்சி மிக சிறப்பாக நடந்தேறியது. அமெரிக்க பல மாநில தமிழ்ச் சங்கங்களில் முதல் நிலை போட்டியில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டி பேரவை மேடையில், குறளின் பொருளை சொல்ல, குழந்தைகள் குறளையும், அதன் அதிகாரத்தையும் பதில் சொல்லும் பொழுது, பார்வையாளர்கள் அரங்கு நிறைந்த கரவொலியோடு எண்ணற்ற மகிழ்ச்சியும் அடைந்தார்கள். இந்த போட்டியில் பங்குப் பெற்ற ஐந்து குழந்தைகளும் பரிசுகளைப் பெற்றார்கள், முதல் பரிசு பெற்ற பெண் குழந்தை ஈழத்தைச் சார்ந்த பெண். இந்த குழந்தைக்கு ஐபேட் பரிசாகப் பெற்றார்.
இந்த ஆண்டு பேரவை விழாவின் மிக முக்கிய அம்சம் – அரசியல் சிறப்பு பேச்சாளர், பேரவையில் தமிழகத்து சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் கலந்து பலர் உரையாற்றி இருக்கிறார்கள். ஆனால் இந்தவருடம் சிறப்பு விருந்தினராக “தமிழீழத்தின் வடக்கு மாகாண முதல்வர், மாண்புமிகு நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்” கலந்துகொண்டு விழாவில் மிக அருமையான உரையை நிகழ்த்தினார்.

fetna18தமிழ்மொழியின் முக்கியத்துவம், அதன் நிலையாமையை தக்கவைத்துக் கொள்ளுதல், அதன் தொடர்ச்சியாக தமிழர்களின் எதிர்காலநலன் எவ்வளவு முக்கியம் மற்றும் காலத்தின் கட்டாயம் என்பதனை இரத்தினச் சுருக்கமாக பகிர்ந்து கொண்டார். நீதியரசர், முதல்அமைச்சர் – ஈழத்தில் நடந்தது “ஒரு இனப்படுகொலையே” என்பதை அவரது சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி இருப்பதை – அமெரிக்கவாழ் தமிழர்கள் ஏகோபித்த மனதோடு பாராட்டினார்கள். ஒரு முதல்அமைச்சர் அதிகாரத்தில் அவரால் தமிழர்களுக்கு என்ன செய்யமுடியுமோ அதனை நிச்சயம் செய்வேன் என்று நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்ச் சங்கப்பேரவை விழாவில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் முன்பு பேசிய பொழுது, ஊடகங்களில் அவரது பேச்சு பரவலாகக் கவனிக்கப்படுகிறது. இவருடைய முதல்வர் பதவியால் நிச்சயம் ஈழமக்களுக்கு ஒருநம்பிக்கை ஏற்படவாய்ப்பு உண்டு. முதல்வர் விக்னேஸ்வரனும் பேரவையின் தமிழ் ஆர்வம், தமிழ் மக்களின் மீது உள்ள அளவற்ற பற்றை நேரில் கண்டு தெரிந்துகொண்டார். அதன் மகிழ்ச்சியை தனது பேச்சில் தெரிவிக்கவும் செய்தார்.

பேரவையின் முக்கியமான நேரம் – தமிழ் வரலாறு மற்றும் பண்பாடு – சிறந்த அறிஞர்களை சிறப்பித்தல்
இந்த வருடம் முதன் முறையாக விரிகுடாப்பகுதியில் [சான்ஓசே - கலிபோர்னியாவில்] இந்தத் தமிழர் விழா சீரும் சிறப்புமாக நடந்து முடிந்து இருக்கிறது. தமிழ்ச் சங்கப்பேரவை என்பது வெறும் விழாவில் கூடி கலையும் கூட்டம் அல்ல என்பதும், தமிழ் உலகிற்கு தமிழ்மக்களுக்குத் தொடர்ந்து நல்லது செய்துவரும் ஒருஉன்னதமான அமைப்பு தமிழ்ச் சங்கப்பேரவை என்பதும், அதன் விழாக்களில் சிலநிகழ்ச்சிகளை மிகக் கவனமாக உற்று நோக்கினால் அதன் முக்கியத்துவத்தை நன்கு உணரமுடியும்.

fetna9சிறந்த கல்வி ஆளுமைகளை, பெரும் புரவலர்களை வரவழைத்து அவர்களின் தமிழ்ப்பணி, தமிழ்க்கொடையை – அமெரிக்க தமிழர்களுக்கு அடையாளப்படுத்தி அவர்களை மரியாதை செய்யும் பணியை தொடர்ந்து செய்வது தமிழ்ச் சங்கப்பேரவை. இந்த ஆண்டு, முனைவர் ராஜம் அவர்களை வரவழைத்து மரியாதை செய்தது பேரவை. முனைவர் ராஜம் அவர்களின் உரை பரவலாக கவனிக்கப்பட்டது. தன்னுடைய பேச்சின் பொழுது, தாய்மொழி எவ்வளவு முக்கியம் என்பதும், நமது வீட்டில் வளரும் குழந்தைகள் மருத்துவராக, பொறியாளராக அல்லது எந்தத்துறை எடுத்தாலும், இல்லத்தில், நமது உறவினர்களோடு தமிழில் உரையாடுவது மிகமிக முக்கியம் என்றார் – இது மொழிவளர்ச்சிக்கு முக்கியபாதை என்றார். அதைவிட முனைவர் ராஜம் சொன்னதில் எல்லோர் மனதிலும் மிகமிக பாதிக்கப்பட்டது என்னவென்றால் – “எனக்கு இங்கு கொடுக்கப்பட்டு இருக்கும் பொன்னாடை, பட்டயம், மாலைகள் இவைஎல்லாம் என்னோடு இறுதிவரை வராது – என் எழுத்துகளே கடைசிவரை  நிற்கும் என்றும்! நமக்குப் பிறகு நமது பணியே பேசப்பட வேண்டும்” என்று சொன்னார்.

மேலும் அவர் ”ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் வர இருக்கும் தமிழ் இருக்கைக்கு“ தன்னிடம் உள்ள நிதியை பேரவை ஒருங்கிணைப்பாளர் தில்லைகுமரனிடம் கொடுத்து உதவினார். தமிழ்நாட்டில் இருந்து நல்ல மொழிஆளுமை உள்ள, முனைவர் பட்டம் பெற்ற தமிழ் ஆசிரியரை – அந்த பதவிக்கு வரவழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பேரவையின் அடுத்த மிக முக்கியமான நிகழ்வு

அமெரிக்கா – ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை
!!!!வைதேகி ஹெபர்ட்..ஹாவாய்தீவை சேர்ந்தவர்… சங்க இலக்கியங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்…. ஒரு பல்கலைக்கழகம் செய்யும் பணியை தனி ஒரு ஆளாக அனைத்து சங்கஇலக்கியத்தையும் ஆங்கிலத்தில் / எளிமையான தமிழில்மொழி பெயர்த்துள்ளார் வைதேகி. வைதேகி மற்றும் சில கல்வியாளர்கள் உள்ளிட்ட ஒரு குழு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முன் அனுமதி பெற்று, தமிழ் பயிற்றுவிக்க ஒரு தமிழ்ப் பேராசிரியர் வேண்டும் என்று வைத்த கோரிக்கைக்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்கிய மகிழ்ச்சியான செய்தியை பேரவை மேடையில் அறிவித்தார்.

fetna14இந்த சீரிய தமிழ் இருக்கைக்கு பல்கலைக்கழகத்திற்கு ஆறுமில்லியன் டாலர்கள் முன்பணமாகக் கட்டவேண்டும். இரண்டு தனிநபர்கள் இணைந்து ஒரு மில்லியன் கொடுக்க விருப்பம் தெரிவித்ததை மேடையில் அறிவித்தார், பலத்த கரவொலி. மீதி ஐந்து மில்லியன் பணத்தை நாம் எல்லோரும் சேர்ந்து பல்கலைக்கழகத்திற்கு செலுத்த வேண்டியது நமது கடமை. நம்பிள்ளைகள் அமெரிக்காவில் இருந்தாலும், நமது தாய்மொழி தமிழைப் படிக்க நாம் செய்யும் பெரும்முயற்சி இது என்றார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் மீதம் 4 மில்லியன் டாலர்கள் சேர்க்க வேண்டும்.

பேரவை விழாவில் கலை சார்ந்த எண்ணற்ற நபர்கள் வந்தாலும், ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட கலைஞர்களை அழைத்து விழாவில் அவரது கலைகளை கேட்டு ரசித்து, அவர்களை மரியாதையும் செய்யும் பழக்கம் பேரவைக்கு உண்டு. இது பேரவைக்கு பெருமையும்கூட. தமிழ்நாட்டில் தமிழ் இசையில் மிகப்பெரும் பாடகர்களை வரவழைத்தும், பேரவை மரியாதை செய்து இருக்கிறது. நித்ய ஸ்ரீமகாதேவன், சுதாரகுநாதன், இந்த ஆண்டு முனைவர் செளம்யா இப்படி பலரை….

ஆனால் இந்த ஆண்டும் வழக்கம் போலவே ஒரே ஒரு பாடலில் உச்சம் தொட்ட “மகிழினி மணிமாறனை” வரவழைத்து மரியாதை செய்து இருக்கிறது பேரவை. தமிழ்நாட்டில் எங்கோ ஒருமூலையில் பிறந்த பெண் பாடகரை – அமெரிக்க மேடைகளில் இன்று!!!!
fetna7மகிழினி தனது எளிமையான கிராமத்து குரலில், எங்கோ பிறந்த என்னை, இப்படி மாபெரும் மேடைகளில் மரியாதை செய்ததை நான் என்றென்றும் மறவேன் என்றும், இந்த இத்தனை புகழுக்கும் காரணமான எனது இசைஅமைப்பாளர் “டிஇமானுக்கு” நன்றியும் மறக்காமல் கூறினார் !!!இசைநிகழ்ச்சியில் – ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கு இணங்க தொடர்ந்து அதேபாடலை இரண்டுமுறை பாடினார் மகிழினி – இது பேரவைக்கு புதுஅனுபவம்!!!

கவி மாமணி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற கவியரங்கம் பலரின் கவனத்தை ஈர்த்தது. அழகிய செந்தமிழில் அற்புதமான முறையில் கவயரங்கத்தை நடத்தி கரகோசங்களை அள்ளினார். கவியரங்கத்தில் பங்கு பற்றியோர் மிகவும் அழகாக தமது கவிதைகளை வடித்தார்கள். அதற்கு மிகவும் செழிப்பாக விளக்கம் வழங்கினார் கவிமாமணி அப்துல்காதர் அவர்கள்.

இவை மட்டுமல்லாது, வேறும் பல நிகழ்ச்சிகள் மக்கள் கவனத்தை ஈர்த்தது – இலக்கிய வினாடி வினா, கருத்துக்களம், பேச்சரங்கம்- போன்றவை.

fetna19இந்த விழாவின் மற்றொரு சிறப்பு நிகழ்ச்சியாக இசைப்பேரறிஞர் பாபநாசம் சிவன் அவர்களுக்கு ஒரு நினைவு அஞ்சலி பாமாலையாக வழங்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வாய்பாட்டு, வாத்தியம் (வயலின், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், கஞ்சிரா) மூலம் ஒரு அற்புதமான இசை நிகழ்ச்சியை வழங்கினார்கள். இந்த இசைநிகழ்ச்சியை சுகிஷிவா, வித்துவான் முல்லைவாசல் சந்திர மௌலி தயாரித்து வழங்கினார்கள்.

தமிழ்ச் சங்கப்பேரவை விழாவில் கணீரென்று குரலில் தமிழிசைப்பாடல்களை முனைவர் செளம்யா பொறுமையாக கதைகளை விளக்கி, பாபநாசம் சிவன்பாடல்கள், மற்றும் நந்தனார் சரித்திரப் பாடல்களைப் பாடினார். இவரது பாடல்களுக்கு, வித்துவான் முல்லைவாசல் சந்திரமௌலி வயலின் வாசித்தும், வித்துவான் வினோத் சீதாராம் மிருதங்கம் வாசித்தும் இசைநிகழ்ச்சியை மேம்படுத்தினார்கள். பார்வையாளர்கள் மிக மிக ரசித்து கேட்டார்கள்.

அமரர் கல்கியின் காவியங்களில் ஒன்றான சிவகாமியின் சபதம், நாடக வடிவில் சிறப்பாக அரங்கேறியது. பாகிரதி சேஷப்பன் எழுத்து வடிவத்தில் ஸ்ரீதர் மைனர் இசை அமைப்பில் இடம்பெற்று பலரின் கரகோசங்களை அள்ளியது. இதில் பல வளைகுடாப்பகுதி கலைஞர்கள் பங்குபற்றினார்கள்.

பேரவை விழாவில் மற்றோரு சிறப்புப் பேச்சாளர் இளைஞர், சமூக ஆர்வலர் பொறியாளர் பூவுலகின் சுந்தரராஜன். இவர் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாய இயக்கத்தின் பெயர் “பூ உலகின் நண்பர்கள்” – இந்த அமைப்பில் ஏராளமான இளைஞர்கள் உண்மையான சமுதாய மறுமலர்ச்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தத் தொடர்ந்து தன்னலம் பாராமல் உழைத்து வருகிறார்கள். இயற்கையோடு தமிழன் எப்படி சேர்ந்து வாழ்ந்தான் எனவும், இயற்கையை எப்படி நாம் பாழ்படுத்திவிட்டோம் எனவும், இயற்கையின் அரிய படைப்பான ஏரி, குளம், நீர் ஊற்று, நீர் வீழ்ச்சி எவ்வாறு மனித வாழ்க்கைக்கு அவசியம் எனவும், ஒரு மனிதன் தன் குடும்பத்தோடு வாழ்வதற்கு போதுமான இடத்தை விட்டுவிட்டு, நிறைய இயற்கைக்கு சொந்தமான இடத்தை அழித்து, தன் சொந்த வாழ்வை முன்னிலைப்படுத்தி, இயற்கையை பாழ்படுத்துவது சமுதாயத்திற்கு முரணான செயல் என்றும், கூடன் குளம் அணு உலையால் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு பாதிப்பு என்றும் தன்னுடைய சிற்றுரையில் பகிர்ந்து கொண்டார். இவரது பேச்சு பார்வையாளர்களை மிகவும் சிந்திக்க வைத்தது.

விழாவின் மற்றோரு முக்கிய அம்சம் –“சங்கங்களின் சங்கமம்” – அணிவகுப்பு. அமெரிக்காவின் பல மாநிலங்கள் வாசிங்டன் வடக்கு, மற்றும் தெற்கு, டல்லஸ், கரலினா, பென்சில்வேனியா, நியூயார்க், நியூசெர்சி, கனெடிக்டெட், சிகாகோ, செயிண்ட் லூயிஸ், அட்லாண்டா, மினசோட்டா, சாக்ரமேண்டோ, கனடா மற்றும் வளைகுடா தமிழ் மன்றத்தின் அணி வகுப்பு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இப்படி பரவலான தமிழ்ச் சங்கங்கள் – பேரவையின் ஒரு குடையின் கீழ் ஒன்றாக சேர்வது அனைவருக்கும் மிக மன மகிழ்ச்சியைக் கொடுத்தது.

fetna4சங்கங்களின் சங்கமம் நேரத்தில் நடைபெற்ற திருக்குறள் சார்ந்த நடனம், மரபுக்கலைகள் – கோலாட்டம், காவடியாட்டம், சிலம்பம் அனைத்தும் மிக துல்லியமாக நடைபெற்று மக்கள் மனதைக் கவர்ந்தன. இந்த நாட்டில் பிறந்த நம் வீட்டு குழந்தைகள் இப்படிப்பட்ட மரபுக் கலைகளை முன் எடுத்து ஆடுவது என்பது மிக போற்றுதலுக்கு உரிய விடயம்.

தமிழ்நாட்டில் வந்து இருந்த மற்றொரு பேச்சாளர் சுமதிஸ்ரீ. இவரது தலைமையில் ”மொழியா, கலையா” என்ற தலைப்பில் சிறப்பான கருத்தரங்கம் இருந்தது. இரண்டு அணியில் உள்ளவர்களும் மொழியைப் பற்றியும், கலையைப் பற்றியும் மிக நுண்ணிய கருத்துகளை எடுத்துரைத்தனர். நடுவர் சுமதிஸ்ரீ கலையை விட மொழி உணர்வு முக்கியம் என்பதை சில எடுத்துகாட்டுகளோடு பதில் அளித்து முடிவுரை வழங்கினார். அவரோடு தியாகராசர் கல்லூரி தமிழ் ஆசிரியர் முனைவர் பேச்சுமுத்தும் தமிழனின் மொழி உணர்வு மற்றும் கலை உணர்வைப் பற்றி ரத்தினச் சுருக்கமாக எடுத்துரைத்தார்.

பேரவையில் சிறந்த குறும்படம், திரைப்படம் மற்றும் புகைப்பட விருதுகள் வழங்கப்பட்டது.
பேரவை இறுதிநாளில் ஹரிசரண் மற்றும் பூஜா, ரோஹிணி, ஆலாப் ராஜ் திரைஇசைப் பாடல்கள் கச்சேரி அருமையாக இருந்தது. அதிலும் குறிப்பாக இளையராசா பாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருந்தது. அறிவிப்பாளர் B.H.அப்துல் ஹமீது அவர்களின் கம்பீர தொனியும் அரங்கத்தை அதிரவைத்தது.

தமிழ்ச் சங்கப்பேரவை மாநாட்டின் முதன் முறையாக கிட்டதட்ட 600க்கும் மேற்பட்டோர், தமிழ் தொழில் முனைவர் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து, படித்து, வேலை பார்த்து விட்டு, தொழில் தொடங்கி – பல வெற்றிகளைக் குவித்த இளைஞர்கள் பலர் கலந்து கொண்டார்கள். தமிழகத்தில் இருந்து கரு. முத்து கண்ணன் – தியாகராசர் பொறியியல் கல்லூரி தாளாளர் மற்றும் பெரும் தொழில் அதிபர் கலந்து கொண்டு, தொழில் முனைவோர் கூட்டத்தை சிறப்பித்தார்.

fetna15புதிய தொழில் தொடங்கி பல கோடிகள் சம்பாதிக்க வேண்டும் என்பது உங்கள் இலக்காக இருக்கக் கூடாது, பலருக்கும் உதவ வேண்டும் என்பது உங்களது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்றார்.

அடுத்தஆண்டு தமிழ்ச் சங்கப்பேரவை விழா நியூ செர்சி மாநிலத்தில் நடைபெறவுள்ளது. அமெரிக்கவாழ் தமிழர்கள் ஒருமுறை பேரவை விழாவில் கலந்து கொண்டால் – பேரவையின் சீரிய தமிழ் சமுதாய பணி தெரியவரும். தமிழ்ச் சங்கப்பேரவை -அடுத்த தலைமுறைக்கு கொஞ்சம் கொஞ்மாக தாய் மொழி தமிழை கடத்துகிறது. இது பேரவைக்கும், அடுத்த தலைமுறைக்கும் பெருமை.

வருடா வருடம் தமிழ்ச் சங்கப் பேரவை நிகழ்வை – உலக நாடுகளில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழுகிறார்களோ அவர்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள், அதிலும் குறிப்பாக நம் தமிழ் நாட்டு தமிழர்கள் கவனித்தும், பாராட்டியும் வருகிறார்கள்.

தமிழ்ச் சங்கப்பேரவை விழா முதன் முறையாக விரிகுடாப் பகுதியில் நடைபெற்று மிகப் பெரும் வெற்றியடைந்தது என்றால் அது மிகையல்ல.

தமிழால் இணைவோம்…அறிவால் உயர்வோம்….
வாழ்க தமிழ்…வெல்க தமிழர்….


க.தில்லைக்குமரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் தமிழ் விழா 2015 – தமிழால் இணைவோம், அறிவால் உயர்வோம்!”

அதிகம் படித்தது