மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வரலாற்றுப்பார்வையில் உப்பு

ஆச்சாரி

Jun 28, 2014

uppu9மனித நாகரீகத்தின் முதல் அடியே ருசியில்தான் துவங்குகிறது. ருசிக்கு மனிதன் அடிமையாகி போனதன் விளைவே அது. உப்பு சப்பில்லாத விஷயங்களையெல்லாம் பேசி பேசி தீர்த்திருக்கிறோம். ஆனால் உப்பைப்பற்றி எப்போதாவது பேசியிருக்கிறோமா?. மனிதனுக்கு உப்பு என்ற ஒன்றை தெரிந்திருக்காவிட்டால் அவன் நாடோடி வாழ்க்கையை அவ்வளவு சுலபமாக விட்டிருக்கமாட்டான் என்கிறார்கள் பரிணாம ஆய்வாளர்கள். அதாவது மனிதன் சாப்பிட கிடைத்த தானியங்களுடன் சேர்த்துக்கொள்ள தேவையான உப்பு எங்கெல்லாம் கிடைத்ததோ அங்கெல்லாம் புதிய மனித குழுக்கள் தங்கி மனித குடியேற்றங்கள் உருவாகியிருக்கின்றன.

கடற்கரை பகுதியில் தோன்றிய மனித நாகரீகங்கள் எல்லாம் பெரும்பாலும் உப்பை அடிப்படையாகக் கொண்டவை என்கிறார்கள். அவ்வளவு ஏன் உயிர்கள் முதலில் தோன்றியதே உப்பு நீரில் இருந்துதான் என்று அறிவியல் அடித்துச் சொல்கிறது. இப்படி உப்புக்கு பெரிய வரலாறே இருக்கிறது.

uppu7தமிழகத்தில் பண்டையக்காலத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகைகளாக நிலங்களை பிரித்து இருந்தனர். மலையும் மலை சார்ந்த பகுதி குறிஞ்சி எனவும், காடும் காடு சார்ந்த இடம் முல்லை எனவும், வயலும் வயல் சார்ந்த பகுதி மருதம் எனவும், கடலும் கடல் சார்ந்த பகுதி நெய்தல் எனவும், மணலும் மணல் சார்ந்த பகுதி பாலை எனவும் அழைக்கப்பட்டது. இந்நிலப் பாகுபாடு குறித்துத் தொல்காப்பியம் கூறுவது காண்க

மாயோன் மேயக் காடுறை உலகமும்

சேருயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேயப் பெருமணல் உலகமும்,

முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலெனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே

(தொல்பொருள் அகத்-5)

தொல்காப்பியத்தில் ஒவ்வொரு நிலத்திலும் செய்கின்ற தொழிலுக்கு ஏற்ப சாதிகள் உருவாக்கப்பட்டது.

நெய்தல் நிலத்தில் மட்டுமே உற்பத்தியாகும் உப்பினை ஏனைய நிலப்பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பணியினை உமணர் என்போர் மேற்கொண்டிருந்ததை சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன. மருத நிலத்தைச்சேர்ந்த உமணர்கள் கழுதைகள், மாட்டுவண்டிகளின் வாயிலாக உப்பைக் கொண்டு வந்து அவற்றை நெல்லுக்கு பண்டமாற்று செய்தனர். இப்பண்ட மாற்று முறையில் நெல்லின் மதிப்பும் உப்பின் மதிப்பும் சமஅளவில் இருந்துள்ளது.

உலகத்திலேயே முதன் முதலில் எகிப்தியர்கள் தான் கடல்நீரில் இருந்து சோடியம் உப்பை பிரித்தெடுத்தார்கள். எகிப்திய நாடு ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகளிலேயே மிகவும் செல்வாக்கு பெற்ற நாடாக விளங்க காரணம் எகிப்தியர்கள் சுற்றியுள்ள நாடுகளுக்கு எல்லாம் உப்பை விற்று செல்வத்தை ஈட்டியிருக்கிறார்கள்.

போர்க்களத்தில் வீரர்கள் உடல் சோர்ந்து விழுந்துவிடும் பொழுதெல்லாம் அவர்கள் கையில் உப்புக் கட்டிகள்தான் கொடுக்கப்பட்டன. உப்பை நாக்கில் வைத்த உடன் அவர்கள் பழையபடி உற்சாகம் பெற்று விடுவார்கள். இதனால் அந்தக்காலத்தில் உப்பு தங்கத்தை விட உயர்ந்ததாக கருதப்பட்டது.

uppu5பண்டைய காலத்தில் உப்பெடுக்கும் உப்பளங்கள் நிறைந்த ஒஸ்டியாவிலிருந்து ரோமுக்கு உப்பு கொண்டுவர ஒரு பெரிய சாலையையே அமைத்துள்ளார்கள். அப்படி அமைந்த சாலைக்கு வயசாலரியா என்று பெயர். அந்த வயசாலரியாவில் இருந்து தனது படை வீரர்களுக்கு ஊதியமாக உப்போ அல்லது அதனை வாங்கத் தகுந்த அளவு பணமோதான் கொடுத்தனராம்.

அதனால் அந்தப் பணத்துக்கு சாலரியம் அர்ஜெண்டம் என்று பெயர். அதுதான் காலப்போக்கில் மருவி சாலரி(ளயடயசல)ஆனதாம். நம்நாட்டில் செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும்(சம்பா) உப்பும் (அளம்) கொடுத்த வழக்கத்தால் தான் சம்பளம் என்ற சொல்லே பிறந்தது.

uppu8தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சிக்காலத்தில் “வெட்டி” என்ற பெயரில் நிலவிய ஊதியமில்லா கட்டாய வேலை முறை “ஊழியம்” என்ற பெயரில் தென் திருவிதாங்கூர் மன்னர்(தற்போதைய கேரளமாநிலம்) ஆட்சிப்பகுதியில் நிலவியது. பல்வேறு வகையான ஊழியங்கள் மக்கள் மீது சுமத்தப்பட்டன. இவற்றுள் ஒன்று “உப்பு ஊழியம்” ஆகும். கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைப்பகுதியில் எடுக்கப்படும் உப்பில் ஒரு பகுதியை திருவட்டாறு, நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் உள்ள கோயில் மடப்பள்ளிகளுக்கு சுமந்து சென்று வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கும் உப்புக்கு விலை கிடையாது. சுமை கூலியும் கிடையாது. அதே வேளையில் இப்பணியைச் செய்யாவிட்டால் தண்டனை உண்டு.

வேதங்களில் உப்பு

பைபிளில் 30க்கும் மேற்பட்ட இடத்தில் உப்பை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. உப்பை நேர்மைக்கும் நீதிக்கும் அடையாள சின்னமாக இதில் குறிக்கப்படுகிறது. இந்துக்களில் கூட சத்தியத்தை உறுதி செய்ய உப்பின் மேல் சத்தியம் பெறும் வழக்கம் இன்றுவரை நீடிக்கிறது. பல மங்கல நிகழ்வுகளில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது உப்பே ஆகும். இன்றும் பலரிடத்தில் புது மணமகள் கணவன் வீட்டிற்குள் நுழையும் போது ஒரு சிறு ஒலைக்கூடையில் உப்பை எடுத்துக் கொண்டே நுழையும் வழக்கமிருக்கிறது. முஸ்லிம் பெண்கள் திருமணம் முடித்தவுடன் மணமகன் வீட்டிற்கு செல்லும்போது மணமகன் வீட்டில் பாய் விரித்து அதில் உப்பை கொட்டியிருப்பார்கள். அதன் பின்னர் உப்பை படியில் எடுத்து மற்றொரு பாத்திரத்தில் இடவேண்டும் என்ற சடங்கு இன்றளவும் உள்ளது.

திருமணச் சடங்கு முதற்கொண்டு இறுதிச் சடங்கு வரையில் இன்றியமையதாக பொருளாக உப்புதான் திகழ்கிறது.

பழமொழிகள்

உப்பை மையப்படுத்தி பல சொலவடைகளும், பழமொழிகளும் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பேசப்படுகிறது. அப்பழமொழிகள் பின்வருமாறு உப்பில்லா பண்டம் குப்பையிலே, உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான், உப்புப்போட்டுதான் சாப்பிடுகிறாயா?, உப்பிட்டவரை உள்ளவும் நினை, தின்ற உப்புக்கு துரோகம் செய்யலாமா? என பல பழமொழிகள் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உப்பைப்பற்றி வான்புகழ் வள்ளுவர் கூட

உப்பு அமைந்தற்றால் புலவி அதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்

என கூறியுள்ளார்.

ஆங்கில ஆட்சியில் உப்புத்தொழில்

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வலுவாக நிலைபெற்றுவிட்டது. இதன் பின்னர் 1802 ஆம் ஆண்டில் உப்பு உற்பத்தியிலும் விற்பனையிலும் தன் ஏகபோக உரிமையையும் அறிவித்தது. அதன் பின்னர் 1805 ஆம் ஆண்டு வாக்கில் தாம் உற்பத்தி செய்த உப்பை கிழக்கிந்திய கம்பெனிக்கு மட்டுமே உப்பு உற்பத்தியாளர்கள் விற்றாகவேண்டும் என்ற நிலை உருவானது. அதற்கான விலையையும் கம்பெனியே நிர்ணயித்தது. அரசைத்தவிர வேறு யாரிடமும் உப்பை விற்பது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டது.

கல்வெட்டுப்பார்வையில் உப்பு

கி.பி.12 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று “உப்புக்காசு” என்ற பெயரிலான வரியை குறிப்பிடுகிறது. மேலும் கி.பி.14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரான்மலைச் சொக்கநாதர் கோயில் கல்வெட்டொன்று

உப்பு பொதி ஒன்றுக்கு காசு ஒன்று

உப்பு பாக்கத்துக்கு காசு அரையும்

உப்பு தலைச்சுமை ஒன்றுக்கு காசு அரையும்

உப்பு வண்டி ஒன்றுக்கு காசு பத்தும்

என்று குறிப்பிடுகிறது. இதே கல்வெட்டு

               நெற்பொதி ஒன்றுக்கு காசு ஒன்றும்

               நெற்பாக்கம் ஒன்றுக்கு காசு அரையும்

நெல் வண்டி ஒன்றுக்கு காசு பத்தும் என்று குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு மூலம் உப்புக்கு இணையான வரியே நெல்லுக்கும் வாங்கப்பட்டுள்ளது.

இதே போல சடையவர்மன் நான்காம் சுந்தரபாண்டியனின் ஆறாம் ஆட்சியாண்டுக் (1324-24) கல்வெட்டு ஒன்று காரைக்கால் அருகாமையில் உள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலின் ராஜமண்டபத்தில் காணப்படுகிறது. அக்கோயிலின் தானத்தார்க்கு அவன் விடுத்த கட்டளையொன்று அதில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது

               இன்னாயனார் திருநாமத்துக் காணியி(n)ல

தரிசு கிடந்த நிலத்தில் ஒரு கண்டமும்

ஒரு கெணியும்

தருசு திருத்தி, உப்பு படுத்து

முதலான உப்பு புறநாட்டிலெ விற்று இம்முதல்

கொண்டு திருமார்கழித் திருவாதிரை திருநாள்த்

தாழ்வுபடாமல் எழுந்தருளப் பண்ணவும்

மார்கழித் திருவாதிரைத் திருநாள் நடத்தும் செலவுக்காகப் புதிதாக உப்பளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.

இதே போல இராமநாதபுரம் துர்க்கை அம்மனுக்கு அல்லிகுளம் என்ற கிராமத்தை ரகுநாத திருமலை சேதுபதி (1647-1672) என்பவர் 10.10.1659ல் கொடையாக வழங்கி உள்ளார். அங்குள்ள உப்பளத்தில் குடி ஒன்றுக்கு இரண்டு பணம் வழங்க வேண்டும் என்று அக்கொடையைக் குறிக்கும் செப்பேட்டில் கட்டளையிடப்பட்டுள்ளது.

uppu3

இதே போல திருமலைநாயக்கர் காலத்தில் உள்ள செப்பேடு ஒன்றில்

யாதம்மொரு வந்தபேருக்கு உப்பு

ஊருகாய் நீராகாரம்

வழங்குவதைக் குறிப்பிடுகிறது.

சுதந்திரப்போராட்டத்தில் உப்பின் பங்கு

இந்தியா விடுதலை பெறவேண்டும் என்பதற்காக இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டங்களில் முக்கியமானது உப்பு சத்தியாகிரக போராட்டம் ஆகும். 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.ராஜகோபாலச்சாரி தலைமையில் தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்த வேதாரண்யத்தில் நடைபெற்ற போராட்டம் திருச்சியில் 12.4.1930 ஆம் ஆண்டு துவங்கி 30.4.1930 அன்று உப்புச்சட்டம் வேதாரண்யத்தில் மீறப்பட்டது. இப்போராட்டத்தின் விளைவாக அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போதைய நிலை

நாட்டின் மொத்த உப்பு உற்பத்தியில் 90.3 சதவீதம் தனியார் துறைகளும், 1.5 பொதுத்துறையும்

8.2 சதவீதம் கூட்டுறவுத்துறைகளும் பங்கு வகிக்கின்றன. இதில் 95 சதவீதம் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படும். மீதமுள்ள 5 சதவீதத்தைத்தான் அரசு வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்கிறது.

உப்பு தொழிலாளர்களின் நிலை

1937 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வு மேம்பாடு அடைய கந்தாடு கிராமத்தில் 190.97 ஏக்கர் பரப்பளவை ஒதுக்கியது. நாளுக்கு நாள் ஏற்பட்ட மாற்றத்தால் இறால் பண்ணைகள், கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பினால் தற்பொழுது 105 ஏக்கர் பரப்பளவாக சுருங்கிவிட்டது.

337 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்த இடத்தில் தற்பொழுது 100 தொழிலாளர்கள் கூட வேலை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் உப்புகளை பாக்கெட்போட்டு விற்பனைக்கு அனுப்புகின்றனர். அவ்வாறு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமும்,ஓய்வு நேரத்தில் தங்குவதற்கு இடவசதி, சுகாதாரமற்ற கழிப்பிட வசதி, குடிநீர், கண்கள் பூத்துப்போகாமல் இருக்க கருப்புக்கண்ணாடி, கையுறை போன்ற உபகரணங்கள் வழங்கப்படாததால் பலரின் கண்களில் பூ விழுந்து பார்வை மங்கியுள்ளது என்பது உண்மை. இம்மற்றவர்களின் நாவை சுவை பட வைத்த தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கை சுவையில்லாமல் வேதனைப்படுவது ஆச்சரியமான ஒன்றுதான்.

Researchers need all forms of investigation, need to respect them equally, and need to attempt to link each problem to the research approach that has the best likelihood of helping to apply human thought to solve help writing an essay it

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வரலாற்றுப்பார்வையில் உப்பு”

அதிகம் படித்தது