வாழைக்காய் தோலில் சமையல்
ஆச்சாரிMar 29, 2014
நாம் பொதுவாக வாழைக்காயை சமைக்கும் போது அதன் தோலை நீக்கிவிட்டு சமைப்போம். அந்தத் தோலை குப்பையில் அல்லது கால்நடைகளுக்கு போட்டுவிடுவோம். அதை சாப்பிடக்கூடிய கால்நடைகள் நன்றாக உழைக்கின்றன. ஆனால் நாம் சாப்பிடக்கூடிய வாழைக்காயால் நமக்கு மிஞ்சுவது முட்டிவலியும், வாய்வு என்கிற நோயும்தான். இதை தவிர்த்து மேல் தோலை பொரியல் அல்லது துவையல் செய்து சாப்பிடலாம். இதன் துவர்ப்புத் தன்மை நமக்கு நன்மையையே அளிக்கும். அதை எப்படி சமைப்பது?
இதில் முதலாவதாக வாழைக்காய் தோலை பயன்படுத்தி பொரியல் எவ்வாறு செய்வது என்பதைப் பார்ப்போம்.
வாழைக்காய் தோல் பொரியல்
தேவையான பொருட்கள்:
நடுத்தரமான வாழைக்காய் -2 அல்லது 3
(முற்றலும் இல்லாமல் மிகவும் பிஞ்சும் இல்லாமல்)
கடலைப்பருப்பு – 25 கிராம்
சோம்பு – சிறிதளவு
மல்லி – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 2
பூண்டு – 3
மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப
கடுகு – சிறிதளவு
உளுந்தம்பருப்பு – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
- சோம்பு, மல்லி, 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு இம்மூன்றையும் எண்ணெய் விடாமல் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். சூடு தணிந்த பின் அவற்றை பொடி செய்து கொள்ளவும்.
- வாழைக்காயின் தோலை பீன்ஸ் நறுக்குவது போல் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- நறுக்கிய வாழைக்காயுடன் 25 கிராம் கடலைப்பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் உளுந்தம்பருப்பு இட்டு தாளிக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், பூண்டையும்(நசுக்கியது) சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கிய பின் வேகவைத்த தோலை நீர் இல்லாமல் வடிகட்டி வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக 10 நிமிடங்கள் வரை சிறு அனலில் வதக்கவும். பின் தேவையான அளவு மிளகாய்தூள் சேர்த்து வதங்கிய பின் பொடி செய்து வைத்துள்ள தூளை அதில் சேர்த்து கிளறி இறக்கிவிடவும். நல்ல வாசனையும் சுவையுடனும் கூடிய வாழைக்காய் தோல் பொரியல் தயாராகிவிட்டது.
வாழைக்காய் தோல் துவையல்
தேவையான பொருட்கள்:
நடுத்தரமான வாழைக்காய் -2 அல்லது 3
(முற்றலும் இல்லாமல் மிகவும் பிஞ்சும் இல்லாமல்)
காய்ந்த மிளகாய் – தேவையான அளவு
புளி – தேவையான அளவு
கடுகு – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
பொடியாக நறுக்கிய வாழைக்காய் தோல் மற்றும் காய்ந்த மிளகாயை எண்ணெய் சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாக வதக்கவும் (தோல் சுருங்கும் வரை). சூடு தணிந்த பின் அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் புளி சேர்த்து நீர் விட்டு நன்றாக அரைக்கவும். பின் வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளித்து அதில் அரைத்த விழுதை சேர்த்து 30 நிமிடங்கள் வரை நன்றாக (சிறு அனலில்) வதக்கி இறக்கி விடவும். இறக்கியபின் சிறிதளவு பெருங்காயத்தூளை சேர்க்கவும். சுவையான துவையல் தயார்.
இந்தத் துவையல் 3 அல்லது 4 நாட்கள் வரையிலும் கெடாமல் இருக்கும்.
குறிப்பு: செய்து பார்த்து சாப்பிட்டுவிட்டு கருத்துக்களைக் கூறவும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “வாழைக்காய் தோலில் சமையல்”