மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அடுக்குமாடி குடியிருப்பும் , மாறி வரும் சூழலும்

ஆச்சாரி

May 17, 2014

நம்மை அண்ணாந்து பார்க்க வைக்கும் மிக உயரமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களைப் பார்க்கும் போது அழகாகத் தான் இருக்கின்றன. மிகவும் வியப்புடன் தான் அதனை ரசிக்கின்றோம். ஆனால்  அதில் வாழும் மனிதர்களின் மனங்கள் ஒன்றிணைந்திருக்கின்றனவா என்ற கேள்வி எழுமானால் , இல்லை என்பதே பதிலாக இருக்க முடியும்…! அவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்து சிரிக்கக் கூட மனமில்லாமல் தனித் தனியே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

முன்பெல்லாம் வீடுகள் தனித்தனியே இருக்கும் . மனித மனங்கள் இணைந்திருக்கும். அத்தை, மாமா, அக்கா , அண்ணா ,  அண்ணி என்று உறவு முறைகள் சொல்லி அழைப்போம்..!  ஆனால்  இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒரே கட்டிடத்தில் இருக்கின்றன. மனிதர்கள் தான் ஒருவருடன் ஒருவர் தொடர்பில்லாமல் இருக்கின்றனர்…!  அடுத்த வீட்டில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று கூடத்  தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை…!

“சமீபத்தில் ஒரு நாளிதழிலில் வந்த செய்தியை இங்கு பகிரலாமென தோன்றுகிறது. முகனூலில் இரு பெண்மணிகள் செய்தி அனுப்புதல் மூலம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  அப்போது அவர்கள் இருப்பிடத்தைப் பற்றி பேசும் போது , இருவரும் ஒரே பகுதியில் வசிப்பது தெரிய வந்தது… பிறகு எந்த தெரு என்று ஒருவர் கேட்டார். எதிர் முனையில் இருப்பவர் பதில் சொன்னதும் , ‘ஆஹா.. நானும் அந்த தெருவில் உள்ளேன். வீட்டின் எண் மற்றும் அடுக்கு மாடிகுடியிருப்பு என்றால் அதன் பெயர் என்ன’  என்று கேட்டார். அதற்கு அவர்  அடுக்கு மாடிகுடியிருப்பின் பெயரைச் சொன்னதும்  இவரால் நம்ப முடியவில்லை… ஏனென்றால் அதே  குடியிருப்பில் தான கேட்டவரும் வசிக்கிறார்….! என்ன ஒரு வித்தியாசமென்றால் கேட்டவர் இரண்டாவது மாடியிலும், சொன்னவர் மூன்றாவது மாடியிலும் இருப்பவர்கள்.”  எப்படி இருக்கிறது பாருங்கள்..! ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்துக் கொள்ளாமலே ஒரே கட்டிடத்தில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். ..! தற்போதைய அடுக்கு மாடி குடியிருப்பு வாழ்க்கை இப்படி தான் உள்ளது.

சுற்றுச் சுழல் பற்றி சொல்ல வேண்டுமென்றால் ,  அதற்கென்றே ஒரு தனித் தலைப்பில் எழுத வேண்டும். சுருக்கக்  கூறின்,

 ஒரு வீடு இருந்த இடத்தில் குறைந்தது பத்து அல்லது இருபது வீடுகள் என  கட்டப்படுகின்றன. அதற்கேற்றாற்போல் நிலத்தடி நீர் உறிஞ்சப் படுகிறது.  நிலத்தடி  நீர் மட்டம் குறைந்துக்  கொண்டே போகிறது.  இதனால் சென்னை மாநகரமே  கடல் மட்டத்திலிருந்து தாழ்ந்து,  நீரில் மூழ்கும் ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ..! அடுத்துப் பார்த்தோமானால்,  மரங்கள் மிக அதிகமாக வெட்டப் படுகின்றன. தனி வீட்டில் ஐந்து மரங்கள் இருக்கிறதென்றால் அது அடுக்கு மாடி குடியிருப்பாக மாறும் போது அனைத்து மரங்களும் வெட்டப் பட்டு மண் தரையே இல்லாத அளவிற்கு இடம் முழுவதும் ஆக்கிரமிக்கப் படுகிறது… இதனால் மழைப் பொழிவு குறைந்து வாழ்வாதாரமேப் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது…!

இவைகள் மட்டுமல்ல… மிகவும் அதிர்ச்சித் தரும் செய்தி  ஓன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் , ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் இணைந்து ஒரே அடுக்குமாடி கட்டிடங்களைக் கட்டிக் கொண்டு சேர்ந்து வாழும் முறையைக் கையளுகிறார்கள் என்பது தான் அது..!   இதை  ஒரே மதத்தை சேர்ந்தவர்களாகவும் ,  ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்களாகவும்  இணைந்து முடிவெடுகிறார்கள்….!  இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் மிகப் பெரிய ஆபத்தை அல்லவா உண்டாக்கி விடும்….!  சமத்துவமும், சகோதரத்துவமும் மறைந்து  நாம் எல்லோரும் பழைய நிலைக்குத் தள்ளப் பட்டு விடுவோம்…!

தற்போதைய காலக்கட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புமுறையைத்  தவிர்க்க முடியாதென்றாலும் , அதிலுள்ள தீமைகளை மட்டுமாவது களைய முற்படுவோம்.

சதா சர்வ நேரமும், இணையத்திலும், முகனூலிலும் செலவழிக்காமல், அக்கம் பக்கத்தினருடன் சிறிது நேரம் உரையாடலாம். சிறிய, சிறிய விழாக்களின் மூலம் ஓன்று சேர்ந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம். அருகாமையிலுள்ள பூங்காக்களில்  சிறிது நேரம் நடைப் பயிற்சி , உடற்பயிற்சி என் செல்லும் போது அங்குள்ளவர்களிடம் பேசி நட்பு வட்டத்தைப் பெருக்கிக் கொள்ள முயற்சி செய்யலாம்.

மேலும் சுற்றப்புற சூழ்நிலையில் சிறிது கவனம் செலுத்தி. அவரவர் வீட்டு பால்கனியிலோ , மொட்டை மாடியிலோ சிறிய அளவில் தோட்டம் அமைய முற்படலாம். குறைந்தது ஒவ்வொரு கட்டடத்தைச் சுற்றிலும் ஐந்திலிருந்து பத்து வரை மரங்கள் வளர்க்க வேண்டுமென்று உறுதிக் கொள்வோம்.  மழைநீரை சேமிக்க வேண்டிய விழிப்புணர்வை  ஏற்படுத்துவது இக்காலத்தின் கட்டயமாகிறது. மேலும் அருகிலுள்ள நீர்நிலைகளை, அது ஏரிகளாக இருந்தாலும் சரி.., குளங்களாக இருந்தாலும் சரி, அதை சீரமைத்து மழைநீரை சேமித்து வைக்கும் பழைய முறையை வலியுறுத்துவோம்.

இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் , பாரபட்சமின்றி ஒற்றுமையுடனும், நேசத்துடனும்   சேர்ந்து, ஒரு இனிமையான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் சமூகமாக  வாழ உறுதி எடுப்போம்..!


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அடுக்குமாடி குடியிருப்பும் , மாறி வரும் சூழலும்”

அதிகம் படித்தது