மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அணு உலை ஒளிர்ந்தால் மின்வெட்டு ஒழியுமா?

ஆச்சாரி

Feb 15, 2012

முன்னர் எல்லாம் என்றாவது அரிதாகத்தான் மின்வெட்டு ஏற்படும். மின் விளக்குகள் அணைந்து என்ன நடந்தது என்று உணர்வதற்குள் தெருவெங்கும் ஒரே நேரத்தில் ஓ  என்று சத்தம் கேட்கும். ஒருமுறை கடவுள் பெயர் உச்சரிப்பு, பத்தடி நடக்கிற சத்தம், இரண்டு பொருள்கள் கீழே விழுகின்ற சத்தம், நான்கு திட்டுகள், இவை அனைத்திற்கும் பின்னர்  மண்ணெண்ணெய் விளக்கிலிருந்து மெலிதாக ஒளிவரும். பெரிய மருந்துக் குடுவை விளக்கு வீட்டில் உயரமான இடத்தில் வைக்கப்படும். சிறிய மருந்துக் குடுவை விளக்கு அடுப்பு மேட்டில் வைக்கப்படும். தொடுகிற தூரத்தில் பக்கத்தில் விளக்கு வேண்டும் என்பதற்காகவே வேண்டும் என்றே மறந்து போன வீட்டுப்பாடத்தை எழுத வேண்டும் என்று போராடி (நாங்கள் அப்போதே அப்படித்தான்!) சிறிய மைக் குடுவை விளக்கை வாங்கி வைத்துக் கொண்டு உட்காரும் போது படிப்பு மேல நமக்கு இருக்கிற அக்கறையை வீடே வித்தியாசமாகப் பார்க்கும். தீ அணையாமல் விளக்குத் திரியத் தொட்டுப்பார்க்கின்ற விளையாட்டுடன் கணக்கு எழுதி, நோட்டு எல்லாம் மண்ணெண்ணெய் வாசமாக்கினால் தான் திருப்தி. மறுநாள் பள்ளியில் அந்த மண்ணெண்ணை வாசம் தான் வகுப்பறையின் கதாநாயகன். சில நாட்களில் எதற்கும் பயன்படாமல் வெட்டியாக பகலில் மின்வெட்டு வரும். காலம் போகப்போக நம்மோடு மின்வெட்டும் வளர்ந்துகொண்டே வந்தது தான் வியப்பு.

பின்னர் கல்லூரி நாட்களில் அடிக்கடி வரத் தொடங்கிய மின்வெட்டு, பணிக்கு செல்லத் தொடங்கிய நாட்களில் மின்வெட்டு வழக்கமான ஒன்றாகிப்போனது. இன்று மின்வெட்டோட நிலைமையை ….  நிறுத்துங்கள், நீங்கள் என்ன பெரிதாக சொல்லப் போகிறீர்கள்  நாங்கள் தான் தினம் பத்து மணி நேரம் அனுபவிக்கிறோமே என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

நீங்கள் நன்றாக கவனித்துப் பாருங்கள். எப்பவுமே இந்த மின்வெட்டு உங்களுக்கும், எனக்கும், இன்னும் நம்மைப் போன்ற சிலருக்கும் தான் தொல்லையாக இருக்கிறது. இன்று முதல் 8 மணி நேரம் மின் வெட்டு என்று கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்தி வெளியிடும் தினசரி நாளிதழ்கள் காலை தவறாமல் மலர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. மின் வெட்டால் சூரியன் சுற்றுவதே நின்றுவிட்டதைப் போன்று பெரிதுபடுத்திக் காட்டும் தொலைக்காட்சியும் சரி, மின்வெட்டை பூசி மெழுகும் தொலைக்காட்சியும் சரி 24 மணி நேரமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டுதான் இருக்கின்றன. சின்னத்திரைக்கும் பெரிய திரைக்கும் தேவையான படப்பிடிப்புகள் நடந்து நாடகங்களும் திரைப்படங்களும் தடங்கல் இல்லாமல் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. மளிகைக் கடை சென்று பார்த்தால் மின் வெட்டால் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது நாம் வாங்கும் குறைந்த விலை உள்ளூர் தயாரிப்பு மெழுகுவத்திக்கு  மட்டும் தான். பளபளப்பாக கண்கவரும் வண்ணங்களில் விற்கப்படும் பற்பசை, சோப்பு, இனிப்பு, உணவுப் பொருள்கள், பால் பொடிகள்,  குளிர்பானங்கள் எல்லாம் அடுக்கடுக்காய் நம்மைப் பார்த்து சிரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பெரிய கடைத்தெருவுக்கு போனால் நகைக்கடையும், துணிக்கடையும், நான்கு சக்கர வாகனக் கடையும் இந்த இருளில் வழக்கத்தை விட பளிச்சென ஒளிர்கின்றன. சரி விடுங்கள், மின்வெட்டால் போர்டு மகிழுந்து தொழிற்சாலையையா மூடப்போகிறார்கள்.

இந்த மின்வெட்டுக்கெல்லாம் ஒரே தீர்வு கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறப்பது தான் என்று பலர் பேசிவருகின்றனர்.  அது சரிதானா என்றறிய சிறிய தேடலில் இறங்கினோம். கீழ்கண்ட அட்டவணையில் இந்த 2012 ஆம் ஆண்டு தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கும் மின் உற்பத்தி நிலையங்களின் விவரங்களை பாருங்கள்.

 

எண்

திட்டம்

மின் உற்பத்தி அளவு

தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம்

பொருள் செலவு

(ரூபாய்)

மின் உற்பத்தி தொடக்க காலம்

1 வட சென்னை படி – 2 2 * 600 = 1200 MW 1200 MW 4650 கோடிகள் முதலாவது சனவரி 2012
இரண்டாவது பிப்ரவரி 2012
2 மேட்டூர் படி – 3 600 MW 600 MW 3106 கோடிகள் மார்ச் 2012
3 த.நா.மி.வா. – NTPC – வல்லூர் 3 * 500 = 1500 MW 1041 MW 8444 கோடிகள் முதலாவது டிசம்பர் 2011
இரண்டாவது மார்ச் 2012
மூன்றாவது அக்டோபர் 2012
4 த.நா.மி.வா. – NLC – தூத்துக்குடி 2 * 500 = 1000 MW 387 MW 4910 கோடிகள் நவம்பர் 2012
5 ஏழு சிறு நீர்மின் திட்டங்கள் 90 MW 90 MW 1556 கோடிகள் டிசம்பர் 2011 -
மார்ச் 2012
6 கூடங்குளம் அணுமின் நிலையம் 2 * 1000 = 2000 MW 925 MW நடுவண் அரசு மார்ச் 2012
7 கல்பாக்கம் விரிவாக்கம் 2 *250 = 500 MW 167 MW நடுவண் அரசு மார்ச் 2012
8 நெய்வேலி இரண்டாம் படி விரிவாக்கம் 2 *250 = 500 MW 230 MW நடுவண் அரசு முதலாவது ஆகஸ்டு 2011
இரண்டாவது சனவரி 2012
மொத்தம் 7390 MW 4640 MW

 

இந்த அட்டவணையின் படி 2012 ஆம் ஆண்டு முடிவிற்குள் தமிழகத்திற்கு 4640 மெகாவாட் மின்சாரம் புதிதாக கிடைக்கத் தொடங்கிவிடும். இதற்கும் மேலாக இந்த 2012 ஆம் ஆண்டு கீழ்கண்ட திட்டங்களைத் தொடங்க அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

 

எண்

திட்டம்

தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம்

பொருள் செலவு

திட்டப் பணி தொடக்க காலம்

மின் உற்பத்தி தொடக்க காலம்

1 வட சென்னை படி – 2 800 MW 4800 கோடிகள் 2012 2015
2 வட சென்னை படி – 4 1600 MW 9600 கோடிகள் 2012 2016
3 உடன்குடி 1600 MW 9600 கோடிகள் 2012 2016
4 எண்ணூர் விரிவாக்கம் 600 MW 3600 கோடிகள் 2012 2015
5 குண்டா (Kundah Pumped Storage) 500 MW 1200 கோடிகள் 2012 2016
மொத்தம் 5100 MW 28800 கோடிகள்

இவையும் தவிர்த்து கீழ்கண்ட புதிய மின் உற்பத்தி திட்டப்பணிகளுக்கு அரசு அதிகாரிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

 

எண்

திட்டம்

தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சாரம்

பொருள் செலவு

திட்டப் பணி தொடக்க காலம்

மின் உற்பத்தி தொடக்க காலம்

1 உடன்குடி – விரிவாக்கம் 800 MW 4800 கோடிகள் 2013 2016
2 உப்பூர் அனல் மின் நிலையம் 1600 MW 9600 கோடிகள் 2013 2016
3 எண்ணூர் – மாற்று திட்டம் 600 MW 3600 கோடிகள் 2012 2016
4 தூத்துக்குடி – படி 4 800 MW 4800 கோடிகள் 2012 2016
மொத்தம் 3800 MW 22800 கோடிகள்

இதுவும் போதாது என்று காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 4000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை 18000 கோடி ரூபாய் செலவில் அமைத்திட தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சிறப்பு அமைப்பு ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்கள் (M/s. Coastal Tamil Nadu Power Limited). இத்திட்டத்திற்கான இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் கருத்துக்கேட்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

காற்றாலை மின் உற்பத்தியிலும் தனியார் உதவியுடன் காற்றாலை மின்சாரத்தை மேலும் 10000  மெகாவாட் அதிகப்படுத்த  வாய்ப்பிருப்பதாக மின்சாரவாரிய அறிக்கை தெரிவிக்கிறது.

மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் திட்டங்களினால் வரும் சில ஆண்டுகளில் தமிழகத்திற்குக் கிடைக்க இருக்கின்ற மின்சாரம் 27540 மெகாவாட்.  இதில் கூடங்குளத்தில் இருந்து கிடைக்க இருப்பதென்னவோ 925 மெகாவாட் மட்டுமே (மூன்று விழுக்காடு மட்டுமே). தமிழத்தில் வழக்கமாக மின் விநியோகத்தில் ஏற்படும் இழப்பு மட்டுமே 18.5 விழுக்காடு. உதாரணத்திற்கு சென்ற ஆண்டு மின் இழப்பு மட்டும் 13873 மெகா யூனிட்கள். இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும் தமிழக மின் திட்டங்களில் கூடங்குளம் அணு மின் நிலையம் என்பது எவ்வளவு சிறிய திட்டம் என்று. தமிழகத்தின் மின் தேவைகளுடன் ஒப்பிடும் போது கூடங்குளம் அணு மின் நிலையம் யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது தான். இதை எல்லாம் தெளிவாக அறிந்ததால் தான் தமிழக அரசு கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்வதில்லை போன்று. ஒரு சில பத்திரிக்கைகள் தான் மக்களை குழப்பும் வண்ணம் கூடங்குளத்தையும் மின்வெட்டையும் தொடர்புப் படுத்தி தவறாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு அதில் என்ன லாபமோ யாருக்குத் தெரியும்?

இவ்வளவு திட்டங்கள் இருக்கின்றதே, இவை எல்லாம் செயல்படத் தொடங்கினால் நமது மின்வெட்டு சிக்கல் விரைவில் முற்றிலுமாக தீர்ந்துவிடும் என்று முடிவு செய்துவிடாதீர்கள். இந்த மின்சாரம் யாவும் உங்களுக்கும் எனக்கும் அல்ல. இதில் பெரும்பாலான மின்சாரம் வணிகப் பயன்பாட்டிற்கும் பெரும் தொழிற்சாலைகளுக்கும் தான் செல்லும். பொது மக்கள் பயன்படுத்தும் மின்சார அளவு மொத்த மின்சாரத்தில் வெறும் 27 விழுக்காடு மட்டுமே. முதலில் இந்த புதிய மின் உற்பத்தி திட்டங்கள் வரும். பின்னர் கருவாட்டு சட்டியை சுற்றி வரும் பூனையைப் போன்று அந்த மின் உற்பத்தியை அபகரிக்க பல திசைகளில் இருந்தும் தமிழகத்திற்கு பல திட்டங்கள் வரும். அதில் ஒன்று தான் தேனியில் வர திட்டமிடப்படும் நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடம். அரசு திட்டங்கள் மட்டுமல்ல அம்பானி, டாடா, பிர்லா என்று  அனைத்து தொழிலதிபர்களும் வரிசையாக செங்கற்களையும் இயந்திரங்களையும்  தூக்கிக்கொண்டு வந்து தொழிற்சாலைகளை கட்டாமல் விடமாட்டார்கள். பின் மீண்டும் நாம் பழைய குருடி  கதவைத் திறடி (இந்த பழமொழி எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பாருங்கள்) என்று இருட்டுக்குள் துழாவிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

இருக்கும் மின்சாரத்தை நியாயமாக பொது மக்களுக்கு விநியோகித்தாலே பெரும்பாலானோருக்கு மின் தடை இல்லாமல் மின்சாரம் வழங்கலாம். ஆனால் நமது அரசியல்வாதிகளோ சென்னையில் வாழும் ஐம்பது இலட்சம் மக்களுக்கு மின்சாரம் கொடுக்க ஆறரைக் கோடி மக்களுக்கு மின் வெட்டு செய்யும் அதிசய முடிவெடுக்கிறார்கள். அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்கள் சென்னையில் மட்டும் போட்டியிடப்போகிறார்களோ என்னவோ. ஊழல் அரசியல்வாதிகளும் உண்மைகளைத் திரித்து மக்களை திசை திருப்பும் ஊடகங்களும் இருக்கும் வரை நமக்கு மின்வெட்டு இருந்து கொண்டே தான் இருக்கப் போகிறது.

The last thing your readers read is http://collegewritingservice.org what theyll probably remember best

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

16 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “அணு உலை ஒளிர்ந்தால் மின்வெட்டு ஒழியுமா?”
  1. கி.பிரபா says:

    அணு உலை ஒளிர்ந்தால் மின் வெட்டு நீங்குமா? கேலிக் கூத்தாக உள்ளது கேட்பதற்கே! அணு உலை ஒழிந்தாலே அன்றாட மக்களின் வாழ்வு ஒளிரும் என்பது தான் உண்மை.அயல்நாட்டிற்குக் கைக் கூலியாக இருந்தாலும் இருப்பேன். உண்மைகளை அறிந்தும் செவிசாய்க்க மாட்டேன் என்பது பிடிவாதமே!

  2. erasivagnana pandian says:

    very good.

  3. erasivagnana pandian says:

    Your article contains full facts about power production details and power-hungry politicians. Congrats.

  4. dr vellaisamy says:

    we r need current.so we need kudankulam. otherwise we go back for 20 yrs

  5. priya says:

    அருமையான விளக்கம் . தொடர்ந்து எழுத பணீக்கின்றோம்

  6. lali says:

    All your information/writings are really very brilliant. Thank you for letting us know your knowledge.
    Long Live(Sahul Hameed)

  7. Blogger says:

    நான் சொல்லிய கருத்தை முக்கால் பாகம் புரிந்துகொண்டதற்கு நன்றி. உங்களைப்போலவே எனக்கும் அந்த கேள்வி உண்டு. இதனை நாட்கள் உதயகுமார் எங்கு சென்றார் ? ஏன் போராடவில்லை ? என்ற கேள்வி உண்டு. ஆனால், நடந்தது என்ன வென்றால்….1988 ஆம் ஆண்டு அணு உலை ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டபொழுது எண்ணற்ற அணு எதிர்ப்பாளர்கள் (ஞானி, உதயகுமார் மற்றும் இந்தியா முழுவதும் இருந்த அணு உலை எதிர்ப்பாளர்கள்) கூடங்குளம், இடிந்தகரை, நாகர்கோவில் போன்ற போகுதிகளில் போராடினார்கள். மக்களும் அவர்களுடன் சேர்ந்து போராடினார்கள். நாகர்கோவிலில் துப்பாக்கி சூடு கூட நடந்தது. அதன்பின் ரஷ்யா (சோவியத் யூனியன் ) உடைந்தது. ராஜீவ் கொல்லப்பட்டார். அணு உலை ஆரம்பிக்க தாமதம் ஆனது.

    இந்த காலங்களில் உதயகுமார் பிழைப்பிற்காக வெளிநாடு சென்று விட்டார்.
    அதன்பின் 2000 இல் அணு உலை கட்ட ஆரம்பித்தார்கள்.
    அதன்பின் உதயகுமார் போன்றவர்கள் திரும்பி வந்து போராடியபொழுது மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போதெல்லாம் கூடங்குளம் பகுதிக்கு இவர்கள் சென்றால் மக்கள் அடித்து விரட்டுவார்கள். மக்கள், தங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வருவதை இந்த உதயகுமார் கும்பல் தடுப்பதாக எண்ணினார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வரும், அதானால் நிலம் வளம் பெரும் என்றெல்லாம் மக்கள் நம்பினார்கள். ஆனால், அது போல் எதுவும் நடக்கவே இல்லை. ஒரு தரமான பள்ளியோ, கல்லூரியோ, மருத்துவமனையோ அங்கு இல்லை.

    அதன்பின், ஜப்பானில் புகுஷிமா விபத்து நடந்தபின், ஜப்பானே அழிந்து விட்டது என்ற நிலையில் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. அதன்பின் எழுந்த கூடங்குளம், இடிந்தகரை மக்கள் எங்கப்பா அந்த உதயகுமார்… அப்ப அவன் சொல்லும் பொழுது நாம் கேட்க வில்லையே என்று இம்மக்கள் தான் உதயகுமாரை அழைத்து வந்து போராடுகிறார்கள்.

  8. Blogger says:

    அணு உலைக்கு எதிராக தொன்னூறுகளில் விவரம் தெரிந்த மக்கள் போராடும் பொழுது கூடங்குளம் பகுதி மக்கள் அதனை ஏற்கவில்லை. தங்களுக்கு வரும் வேலைவாய்ப்பு மற்றும் வசதிகளை இந்த எதிர்ப்பாளர்கள் தடுக்கிறார்கள் என்றே அப்பகுதி மக்கள் எண்ணினார்கள். ஜப்பானில், புகுஷிமாவில் விபத்து ஏற்பட்ட பின்னரே, அந்த விபத்தினை தொலைகாட்சி மற்றும் பேப்பர் ஊடகங்கள் வெளிப்படுத்திய பின்னரே (இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நமக்கு இப்படியான ஊடகங்கள் கிடையாது, அப்பொழுது விபத்தும் நடக்கவில்லை), அப்பகுதி மக்கள் உதயகுமாரையும், ஏனைய எதிர்ப்பாளர்களையும் அழைத்து வந்து போராடுகிறார்கள். ஆண்கள் மீன் பிடிக்கிறார்கள், பெண்கள் போராடுகிறார்கள்.

    அப்படியே அந்த மக்கள் ஏற்றுக் கொண்டு அணு மின் நிலையம் செயல் படத் துவங்கினாலும், அம்மக்களுக்கு ஒரு வேலை வாய்ப்பும் வரப் போவதில்லை. மருத்துவ, சுகாதார வசதிகள் கிடைக்கப் போவதில்லை. கல்பாக்கத்தில் பெரிய மாற்றம் ஒன்றும் இல்லை. (சென்னையில் இருக்கும் எனது வீட்டிற்கு மட்டும் 24 மணி நேரமும் மின்சாரம் உள்ளது)

    சில ஆண்டுகளுக்கு முன், கருணாநிதி ஆட்சியில் இருக்கும் பொழுது ஒரு அணுமின் கப்பல் சென்னை துறைமுகத்தில் ஒரு வாரம் நின்றது. அப்பொழுது ஜெயலலிதா அதை கடுமையாக எதிர்த்தார். சென்னை மக்களுக்கு அணுக்கதிர் ஆபத்து ஏற்படுமாம். அப்ப எல்லாம் ஒரு பயலும் ஜெயாவை எதிர்க்க வில்லை.

    இந்திரா உயிருடன் இருக்கும் பொழுது அணு நீர்மூழ்கி கப்பலை கட்டமைக்க அணு விஞ்சானிகளைப் பணித்தார். ஐந்து வருடம் அரசுப் பணத்தை செலவழித்தும் (தின்றும்) ஒன்றும் நடக்க வில்லை. அதன்பின் இந்திரா, ரஷ்யாவிடம் அணு நீர்மூழ்கி கப்பலை விலைக்கு கேட்டார். ரஷ்சியா அணு நீர்மூழ்கி கப்பல் வேண்டும் என்றால், அணு உலைகளையும் வாங்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது. இந்திரா மறைந்தார். ராஜீவ் ரஷ்யாவிடம் கைஎழுத்து இட்டார். மராட்டா , கேராளாவில் துரத்தப்பட்டு, கூடங்குளம் ரெடி.

    இன்றும் பல ஆயிரம் கோடி வாடகைப் பணம் ரஷ்யாவிடம் கொடுத்து அணு நீர் மூழ்கி கப்பல் இந்தியா ஓட்டுகிறது. இதை எல்லாம் பிரசாந்த் பூசான் அவர்களும் எதிர்க்கிறார்கள்.

    அணு மின்சாரம் கேட்கும் நாம், அதே தென் மாவட்டங்களில் தொழில் சாலைகள் கேட்கிறோமா ?? நீர் ஆதாரங்களைப் பெருக்க அரசை கேட்டுப் போராடுகிறோமா ? தமிழகத்தில் தொடர்வண்டித் திட்டங்கள் கேட்டுப் போராடுகிறோமா ?

    அமெரிக்காவில் நூறு அணு உலைகள் உள்ளன. அமெரிக்க அரசு அம்மக்களுக்கான பாதுகாப்பை, வாழ்வாதாரத்தை உறுதி செய்கிறது. நம் அரசு ? மக்கள் போராட ஆரம்பித்த பின்னர் அப்துல் கலாம் சொல்கிறார் சுமார் இருநூறு கோடி ரூபாயில் பத்து அம்ச திட்டம் வேண்டும் என்கிறார். இதை எல்லாம் முன்னரே செய்து இருந்தால் பாராட்டலாம். அமெரிக்காவில் கடந்த முப்பது ஆண்டுகளாக ஒரு அணு உலை கூட ஆரம்பிக்கவில்லை. அமெரிக்காவில் இருபது விழுக்காடு அணு மின்சாரம், எண்பது விழுக்காடு மாற்று வழி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

    இந்தியாவில் நாற்பது விழுக்காடு குழந்தைகளுக்கு ஊட்ட சத்து இல்லாமல் சாகின்றன. ரேசன் உணவுப் பொருட்களைப் பாதுகாக்க அரசு கிட்டங்கிகளை கட்டவில்லை. ஆனால், பல லட்சம் கோடி செலவில் அணு உலை கட்டுகிறது. வருடத்திற்கு பல லட்சம் கோடிகளை இந்திய ராணுவத்திற்கு நமது அரசு செலவிடுகிறது – இது ஏன் என்று ஒரு மாணவி அப்துல் கலாம் அய்யாவிடம் கேட்டால் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. உங்களால பதில் சொல்ல முடியுமா ?

    அமெரிக்காவில் மின் கடத்தல் இழப்பு எழு விழுக்காடு மட்டுமே. ஆனால் இந்தியாவில் மின் கடத்தல் இழப்பு இருபத்தைந்து விழுக்காடு. எந்த விஞ்சானிகள் இதைத் தடுக்க ஆய்வு செய்கிறார்கள் ? உங்களால பதில் சொல்ல முடியுமா ?

  9. Vaaimai says:

    அணு மின் நிலையம் தவிர அனைத்து நிலையங்களும் 100 சதவீத உற்பத்தி திறனை கொண்டுள்ளது போல் எழுதியுள்ளீர்களே. இது எப்படி சாத்தியம். விளக்கவும்.

    • சாகுல் அமீது says:

      மின் உற்பத்தியில் நடுவண் அரசிற்கும், மாநில அரசிற்கும் அதிகாரம் உண்டு.

      ஒரு மாநில அரசு தனது பொருள் செலவில் மின் உற்பத்தி செய்து, தனது மாநிலத்தில் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
      நடுவண் அரசும் மாநில அரசும் பொருள் செலவில் பங்கிட்டு, மின் உற்பத்தியையும் பங்கிட்டு கொள்ளலாம்.
      சில மின் திட்டங்கள் முழுக்க மத்திய அரசு பொருள் செலவிலே அமைக்கப்பட்டு, மத்திய அரசே அதன் மின் விநியோகத்தை கட்டுபடுத்திக் கொள்ளும்.

      இதன் அடிப்படையில் தான் உற்பத்தி செய்யப்பட மின்சாரம் பகிர்ந்துகொள்ளப்படுகிறது. கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களில் மாநில அரசு திட்டங்கள் அனைத்திலும் மின்சாரம் முழுக்க தமிழகத்திற்கு கிடைக்கும். அணு மின் நிலையங்கள் நடுவண் அரசால் அமைக்கப்பட்டவை. ஆகையால் அதன் ஒரு பகுதி மின்சாரம் மட்டுமே நடுவண் அரசு தமிழகத்திற்கு கொடுக்கிறது. அதில் ஒன்றும் தவறில்லை.

      • Vaaimai says:

        Thank you. What will be the power output from Koodankulam power station as well as any of the thermal power station( I am talking about efficiency of power plant)?

        • Morthekai says:

          Mr. Sunder Raj (Poovulagin Nanbargal) said in one meeting and TV program that, normally efficiency is 40% but may be due to new technology KNPP can have 70% (highest value).

        • சாகுல் அமீது says:

          வணக்கம்,

          உற்பத்தி திறன் (efficiency) தகல்வகளை அரசு வெளியிடுவதில்லை. ஆகவே உறுதி செய்யப்பட உற்பத்தி திறன் தகவல்கள் என்னிடம் இல்லை. இந்த கட்டுரையில் உற்பத்தி திறன்களை ஒப்பிடவில்லை. வேறுபட்ட மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தி அளவுகளை தான் ஒப்பிட்டிருக்கிறேன். கட்டுரையின் ஏதேனும் வரிகளில் உற்பத்தி திறன் குறிக்கும் வண்ணம் இருக்குமாயின் தெரிவியுங்கள், சரிபார்த்து மாற்றிக்கொள்கிறேன். தங்களின் கவனத்திற்கு நன்றி.

  10. Karthik says:

    தகவலுக்கு மிக்க நன்றி நெல்லை குமரன்

  11. kondrai vendhan says:

    அணு உலைகள் ஒளிர்ந்தால் சுடலையில் தான் குளிர்காய வேண்டும்.

  12. நெல்லைக் குமரன் says:

    தேனீ மாவட்டத்தில் நியூட்ரினோ ஆராய்ச்சி வரும்பொழுது தான் மதுரை – போடி தொடர்வண்டி பாதையை அகலப் பாதையாக மாற்றுகிறார்கள். நன்றாக கவனியுங்கள். மக்களுக்காக மாற்றவில்லை, நியூட்ரினோ ஆராய்ச்சி திட்டத்திற்கு பெரும் பொருட்கள் (இரும்பு, கல், மணல்), தளவாடங்கள் கொண்டு செல்ல அகலப்பாதை அமைக்கிறார்கள்.

அதிகம் படித்தது