மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அதிகாரமற்ற பதவி என்பது அரசியல் சூழ்ச்சி

ஆச்சாரி

Apr 15, 2012

ஒரு பெரிய மனிதரைப் பற்றிய சில சிறிய செய்திகளை பார்க்கலாம். பின்வரும் ஒரு சில பத்திகள் வாசிப்பதற்குள் பெரும்பாலான ‘சிறகு’ வாசகர்கள் அவரைக் கண்டறிந்து விடுவர்.

சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்னால் 1973 ஆம் ஆண்டு ஒரு சிறிய நகரத்தில் இந்த பெரிய மனிதர் ஒரு கூட்டுறவு வங்கியைத் தொடங்குகிறார். தானே அதற்கு தலைவராக பொறுப்பேற்றுக்கொள்கிறார். தனது குடும்ப உறுப்பினர்களை இயக்குனர்களாக நியமித்துக் கொள்கிறார். ஒவ்வொரு முறை  இயக்குனர்களின் பதவிக் காலம் முடியும் தருவாயில் பதவிகளை மாற்றி மாற்றி  தன் குடும்பத்தினரையே வங்கியின் அனைத்து தலைமைப் பொறுப்புகளிலும் இருக்கும்படி கவனமாக பார்த்துக்கொள்கிறார்.

கூட்டுறவு வங்கி நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளரத் தொடங்குகிறது. உள்ளூர் மக்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள் என்று பலரும் வங்கியில் தங்களது வாழ்நாள் சேமிப்புகளை  நம்பிக்கையுடன்  இவ்வங்கியில் சேமித்து வந்தனர். எதிர்பார்த்தது போன்று பணம் சேரத் தொடங்கியவுடன் நம் பெரிய மனிதர் இந்த கூட்டுறவு வங்கியில் இருந்து கடன்களை கொடுக்கத் தொடங்குகிறார். பணம் சேர்ப்பதும் கடன் கொடுப்பதும் தானே வங்கியின் செயல்பாடுகள், இதிலென்ன சிறப்பு என்கிறீர்களா?

நம் பெரிய மனிதர் வங்கியில் பணம் கட்டி வரும் சாதாரண மக்களுக்கு சிறிய சிறிய தொகைகளை கடன்களாக வழங்கி வந்திருந்தால்  நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்க வேண்டிய சூழ்நிலை வந்திருக்காது. நம் பெரிய மனிதர் கடன் கொடுத்த சில சிறிய விவரங்களைப் பார்ப்போம்.

தனது மருமகனுக்கு 51 லட்ச ரூபாயை (ரூ.51,02,183) கடனாக வழங்குகிறார். தனது சகோதரரின்  மருமகளுக்கு 45 லட்ச ரூபாயை (ரூ.45,82, 670) கடனாக வழங்குகிறார். பின்னர் மேலும் பல குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 43 லட்சம், 42 லட்சம், 21 லட்சம், 10 லட்சம், 5 லட்சம், 3 லட்சம் என்று பெருந்தன்மையாக வாரி வழங்குகிறார். இந்த கடன்கள் யாவும் திரும்ப செலுத்தப்படவில்லை என்பதை ‘சிறகு’ வாசகர்களுக்கு நாம் சொல்லவேண்டியதில்லை.

இது மட்டுமல்லாமல் தான் தொடங்கி நடத்தி வரும் ஒரு சர்க்கரை ஆலைக்கும் கணக்கு வழக்கில்லாமல் கூட்டுறவு வங்கிப் பணத்தை அள்ளிக் கொடுத்து வந்தார். பின்னர் இந்த சர்க்கரை ஆலை பல கோடி இழப்புகளுடன் மூடப்பட்டுவிட்டது. இவ்வாறு நம் பெரிய மனிதர் கடுமையான உழைப்புடன் வங்கியை திறம்பட நடத்திவந்தார்.

1994 மார்ச் மாதம் நடந்த ஆய்வின் படி வங்கியின் சொத்துக்கள் கரைந்து வருவதாக கூறி இந்திய ரிசர்வ் வங்கி நம் பெரிய மனிதரின் கூட்டுறவு வங்கியை மிகவும் பலவீனமான வங்கி என்று 1995 இல் அறிவித்தது. ஆயினும் நம் பெரிய மனிதர் வங்கியை தொடர்ந்து வழக்கம் போன்றே நடத்திவந்தார். ரிசர்வ் வங்கி 2002 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு விரிவான ஆய்வை நடத்தி பல முறைகேடுகளை கண்டறிந்தது. பின்னர் அடுத்த ஆண்டு 2003 பிப்ரவரி மாதத்தில் ரிசர்வ் வங்கி நம் பெரிய மனிதரின் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்து கூட்டுறவு வங்கியை முடிவிற்கு கொண்டுவந்தது.

வங்கி மூடப்பட்டதும் கொதித்தெழுந்த வங்கி ஊழியர்கள் சங்கம் நம் பெரிய மனிதரும் அவரது குடும்பத்தினரும் எவ்வாறெல்லாம் வங்கிப் பணத்தை தொடர்ந்து கொள்ளையடித்து வந்திருக்கின்றனர் என்று ஆதாரங்களுடன் மாவட்ட அதிகாரிகள் முதல் பிரதமர் வரை,  மேலும் நாட்டின்  மிக உயர்ந்த பதவி வகிக்கும் குடியரசுத்தலைவருக்கும் கூட மனுக்களை கொடுத்தனர். மத்திய புலானாய்வுத்துறை இவ்வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர்.

மறுபுறம் வங்கியில் பணம் சேமித்திருந்த பொதுமக்களோ கண்ணீருடன் தங்களது பணத்தை திருப்பிக் கொடுத்துவிடும்படி கைகூப்பி வேண்டினர். எனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக நான் சேர்த்து வைத்திருந்த பணம் திரும்ப கிடைக்க வேண்டும் என்கிறார் ஒரு காய்கறி வியாபாரி. எனது இரு மகள்களின் திருமண செலவிற்கு சேர்த்து வைத்திருந்த 63,000 ரூபாய் பத்திரமாக  திரும்ப கிடைக்கவேண்டும் என்று புலம்புகிறார் ஒரு கடை ஊழியர். ஒரு விதவைப் பெண்மணியோ  என் உறவினர்களுக்கு என்னால் என்ன பதில் சொல்ல முடியும் என்று புலம்புகிறார். இது போன்ற குரல்கள் ஊர் முழுவதும் ஒலிக்க நம் பெரிய மனிதர்  ஊடக வெளிச்சத்திற்கு வருகிறார்.

ஊடக வெளிச்சத்திற்கு வருகிறார் என்றதும் ஏதாவது ஒரு செய்தித்தாளின் எட்டாவது பக்கத்தின் ஒரு கட்ட  ஊழல் செய்தி என்று நினைத்துவிட வேண்டாம். தலைப்புச் செய்தியாக வருகிறார். அதுவும் நாட்டின் அனைத்து  ஊடங்களிலும் ஒரே நாளில் தலைப்புச் செய்தியாக வருகிறார்,  இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் வேட்பாளாராக. வேட்பாளாரான நம் பெரிய மனிதர் உலகின் மிகப் பெரிய ஜனநாயாக  நாடான இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆம் நண்பர்களே நமது குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் அவர்களைப் பற்றிய கட்டுரை தான் இது. மேலே பூடகமாக குறிப்பிடப்பட்ட தகவல்கள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

 

பெரிய மனிதரின் பெயர் பிரதீபா பாட்டில்
கூட்டுறவு வங்கி பிரதீபா மகிளா சககாரி வங்கி
சர்க்கரை ஆலை சந்த் முக்தாபாய் கூட்டுறவு சர்க்கரை ஆலை

 

திரும்ப வராத சில கடன்களின் விவரங்கள்

கடன் பெற்ற உறவினர் பெயர் திரும்ப செலுத்தபடாத தொகை
ராஜேஸ்வரி கிஷோரிசிங் பாட்டில் ரூ.45, 82, 670
கிஷோர் திலிப்சிங் பாட்டில் ரூ.51, 02, 183
கிஷோர் திலிப்சிங் பாட்டில் & 

உத்தவ்சிங் தக்து ராஜ்புட்

ரூ.43, 87, 680
உத்தவ்சிங் தக்து ராஜ்புட் & 

ஜெயஸ்ரீ உத்தவ்சிங் ராஜ்புட்

ரூ.42, 89, 602
உத்தவ்சிங் தக்து ராஜ்புட் & 

ரன்திர்சிங் திலிப்சிங் ராஜ்புட்

ரூ.21, 44, 800
கிஷோர் திலிப்சிங் பாட்டில் & 

ஜோதி விஜய்சிங் பாட்டில்

ரூ.10, 69, 893
திலிப்சிங் பாட்டில் ரூ.3, 09, 562
திலிப்சிங் பாட்டில் ரூ.5, 62, 840

இந்த வங்கி ஊழல் குற்றச்சாட்டு மட்டுமல்ல மேலும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. இவரது சகோதரர் மீதான கொலை குற்றச்சாட்டு உட்பட இவரது குடும்பத்தினர் மீதும் பல குற்றச்சாட்டுகள் வழக்குகளாக இருந்தன.  இருப்பினும் ஜனநாயக முறைப்படி இத்தகைய சிறப்பு வாய்ந்த குடியரசுத் தலைவரை  நாம் தேர்ந்தெடுத்திருக்கின்றோம்.
தற்போது நம் பெரிய மனிதர், சிறப்பு வாய்ந்த குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் ஒரு வழியாக முடிவிற்கு வருகிறது. நமது அரசியல்வாதிகள் அடுத்த பெரிய மனிதரைத் தேடத் தொடங்கியிருக்கின்றனர். நம் அரசியல்வாதிகள் எதிர்பார்க்கும் அத்தனை சிறப்பு தகுதிகளும் பொருந்திய ஒருவரை விரைவில் நாம் அறிய வருவோம்.
குடியரசுத் தலைவர் பதவி வெறும் கையொப்பமிடும் அதிகாரமற்ற அலங்கார பதவி அல்ல. குடியரசுத் தலைவர் பதவியின் முக்கியத்துவத்தையும் அதிகாரத்தையும் அரசியல் கட்சியினர் நன்கு அறிந்திருக்கின்றனர். அதனால் தான் குடியரசுத் தலைவர் பதவியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கின்றனர். இந்த குதிரை பேர தேர்தலில் மக்கள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதாலே குடியரசுத் தலைவர் பதவி  அதிகாரமற்ற பதவி என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கின்றனர். அரசியல் கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்படும் அடிமை  குடியரசுத் தலைவர்களும் அவ்வாறே அதிகாரமற்ற வகையில் நாட்டில் நடக்கும் அநீதிகள் எதையும் கண்டுகொள்ளாமல் தங்களை தேர்ந்தெடுத்தவர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்கின்றனர்.

இம்முறை கட்சிகள் தங்களது குடியரசுத் தலைவர் வேட்பாளர்களை அறிவித்த உடன் அடுத்த குடியரசுத் தலைவராக வர இருப்பவரைப் பற்றி நல்லது கெட்டதுகளை தெரிந்து கொள்ளுங்கள். ஊழல் அல்லது குற்றப் பின்னணி உள்ள நபர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டால் உங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்துங்கள். நாம் நேரடியாக தேர்ந்தெடுக்க முடியாத தேர்தல் என்றோ நமது குரல் என்ன சாதித்து விடப்போகின்றது என்றோ மௌனம் காக்க வேண்டாம். தங்களால் இயன்ற பரப்புரையை இணையத்திலாவது செய்யுங்கள். தகுதியில்லாத குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு எதிராக ஒரு இணைய கோரிக்கையில் சில லட்சம் கையொப்பங்கள் சேர்த்தாலே போதும். பின்னர் ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும், மாணவர்களும், அரசியல் கட்சிகளும் அந்த கோரிக்கையை வலுப்படுத்த வந்துவிடுவர். மக்கள் ஆற்றலை மக்களவை அலட்சியம் செய்ய இயலாது.

No one wants to think this can happen to their own child, but that’s exactly what happened to three young teens his response is here who used a popular app meant for flirting and dating

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “அதிகாரமற்ற பதவி என்பது அரசியல் சூழ்ச்சி”
  1. Vibarajan v says:

    Awesome article! Thank you for doing this!

  2. kasivisvanathan says:

    Oh..!!! What a great profile she has ? I wish she should continue in her office. And it will happen. Because she is the right person to reject all mercy petitions plead by Tamils. And TN political bull shits will be the first to uplift her. Vande Matharam.. sorry, Bande Matharam…!!!!!

  3. Ram says:

    மிக அருமையான கட்டுரை, இதில் கேட்கபடுவது யாதெனில்- நாம் இனி என்ன செய்ய போகிரொம்?

அதிகம் படித்தது