மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அதிர வைக்கும் விபத்துகள்

ஆச்சாரி

Oct 1, 2011


அண்மையில் வெள்ளூரில் நடந்த பேருந்து விபத்தில் 22 உயிர்கள் எரிந்து எலும்புக்கூடுகளாய் மாறிப்போன சம்பவம் நம் நெஞ்சையே உலுக்கியது. பள்ளத்தில் விழுந்தவுடன் பேருந்தில் இருந்து டீஸல் கசிந்து தீ பற்றி இந்த கோர விபத்து நடந்துள்ளது. குளிர்சாதன வசதி படைத்த பேருந்து என்பதால் அவசர கால வெளியேற்றம் இல்லை, அதனால் பயணிகள் வெளியேற முடியாமல் நெருப்பில் கருகி உயிர் இழந்துள்ளனர். அவசர கால கதவுகளைத் திறக்க வேண்டிய பொறுப்பில் இருந்த டிரைவர் அதை தவற விட்டுள்ளார். வழக்கம் போல் விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50,000 என அரசு அறிவித்துள்ளது. இப்படி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 1 லட்சம் அல்லது 2 லட்சம் கொடுத்து இறந்தவர் வீட்டில் அரசாங்கம் தவறாமல் தன் பங்கிற்கு ஈமச் சடங்கினை செய்துவிடுகிறது.

இந்த சாலை விபத்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன. முக்கியமாக பேருந்து வடிமைக்கப்பட்ட விதம், அதன் பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய சந்தேகம் அதிகம் உள்ளது. அவசர கால கதவுகள் ஏன் பயணிகள் கட்டுப்பாட்டில் இல்லை? பொதுவாக எல்லா  விபத்துகளும் 2 முதல் 3 வினாடிக்குள் நடந்து விடுகிறது. இதில் ஓட்டுனர் விபத்து நடக்கும் முன் நிமிடம் வரை விபத்து நடக்காமல் இருபதற்காக தான் போராடுவார். இந்த இடைப்பட்ட நேரத்தில் அவர் அவசர கால கதுவுகளை திறக்க முடியுமா என்பது ஒரு கேள்வி, இது ப்ற்றி தனியார் பேருந்து சங்கத்தின் செயலாளர் கூறும் போது கண்ணாடியை உடைத்து வெளியேறுவதற்கு சுத்தி    வைக்கப்பட்டுள்ளது என்றார். இது பற்றி தமிழக காவல்துறை தலைமையில் ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிறது என்பது ஒரு நல்ல செய்தி. இதுபோன்ற ஸ்லீப்பர் கோச் பஸ்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக ஆய்வுக்குட்படுத்தப்படும் என்று மண்டல ஐஜி சைலேந்திர பாபு  கூறியுள்ளார். இந்த ஆய்வறிக்கையை தமிழக காவல்துறை விரைவில் சமர்பிக்கும் பட்சத்தில் தமிழக அரசு அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புவோம்.

இந்த சம்பவத்தின் உண்மை காரணம் மக்களுக்கு நன்றாக தெரிந்தும் கூட அரசு எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை. இன்றைய தனியாரால் நடத்தப்படும் சொகுசு பேருந்துகள் சாலைகளில் எவ்வளவு வேகமாக செல்கிறது அதனால் மக்கள் அதிகம் விபத்துகளை சந்திக்கின்றனர் என்பது தெரிந்த உண்மையே. ஆனால் இதை அரசு குறிப்பிட கூட விரும்பவில்லை. இப்படி தனியார் நிறுவன உரிமையாளர்கள் அரசியல் செல்வாக்கு உள்ளதால் மக்களின் உயிரை பற்றி கவலை இல்லாமல் இயங்குகின்றனர்.
இந்த விபத்தை வெறும் சாலை விபத்து என்று பார்க்காமல் பொதுவான தீ விபத்துகள் என்ற அடிப்படையில் விசாலமாக பார்க்கவேண்டியுள்ளது. உதாரணமாக கும்பகோணத்தில் ஓர் பள்ளியில் நடந்த தீ விபத்து 94 குழந்தைகள் உயிரை காவு கொண்டது, சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த தீ விபத்து, ஏர்வாடியில் மனநலன் குன்றியோர் காப்பிடத்தில்  மற்றும் தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தீ விபத்து என சொல்லிக்கொண்டே போகலாம்.

பொதுவாக பாதுகாப்பு ஒழுங்குமுறையில்(system) இரண்டு வகையான அம்சங்கள் கடைபிடிக்கப்படுகின்றன
1. விபத்து நடக்காமல் தடுக்கும் அல்லது நடந்தால் சேதங்கள் குறைவாக இருக்கக்கூடிய தற்காப்பு அம்சங்கள்
2. விபத்து நடந்தவுடன் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் அல்லது
பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக வெளியேறக்கூடிய அம்சங்கள்

இந்த இரண்டு அம்சங்களும் தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு முன் அளிக்கப்படும் சான்றிதல்களின் பொழுது ஆராயப்படுகின்றன. ஆனால் சரியாக ஆராயப்படுகிறதா என்பது தான் கேள்வி? அதையும் தாண்டி தொழிற்சாலை அல்லாது பள்ளிகள் மற்றும் பேருந்துகளுக்கு அதை எந்த அளவு இந்த பாதுகாப்பு அம்சங்கள் அமல்படுத்தப்படுகின்றன என்பது மற்றொரு முக்கியமான கேள்வி. ஒரு கல்வி நிறுவனம்  தொடங்கும் முன் கட்டட சான்றிதழ், தீயணைப்பு சான்றிதழ், சுகாதார சான்றிதழ் என எல்லா சான்றிதழ்களும் பெற வேண்டியுள்ளது. சான்றிதழ்கள் பெற்றவுடன் இதை அரசு அதிகாரிகள் முறையாக கண்காணிக்காமல் விட்டுவிடுகிறார்கள். கும்பகோணத்தில் நடந்த தீ விபத்துக்கு ஒரு மண்டல கல்வி அதிகாரியை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்தது அரசு. பள்ளியின் பாதுகாப்பு அம்சத்தை கண்காணிப்பது கல்வி அதிகாரிகளின் பணிகளில் ஒன்றாக இருப்பினும் அதுவே அவரின் முதல் கடமையாக கருதிவிட முடியாது.
ஒரு கல்வி அதிகாரி கல்வியின் தரம், கல்விக்கூடத்தின் தரம் கவனிப்பதுதான் அவருடைய முக்கியமான பணி. அவருக்கு பாதுகாப்பு அம்சத்தை பற்றிய அறிவு மற்றும் அனுபவம் இருக்கவேண்டும் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும். இந்த கைது அரசு தன்மீது பழிவராமல் பொது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்க்காகவே அன்றி வேறொரு நோக்கத்தை இதில் பார்க்க முடியவில்லை.
இந்த விபத்திற்கு பின்னர் அரசு எல்லா பள்ளிகளிலும் ஓலையால் மேயப்பட்ட கூரைகள் அமைக்கப்படக்  கூடாது என்ற விதியை கொண்டுவந்தது. இது போன்ற பாதுகாப்பு அம்சங்களை முதலிலே அரசு செயல் படுத்தாதது ஏன்? இப்படி ஒவ்வொரு விபத்துக்கும் சில உயிர்களை பலியிட்டுதான் இதை செய்ய வேண்டுமா?

அரசு பாதுகாப்பு அம்சம் குறித்து அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அடிப்படையில் பாதுகாப்பு ஒழுங்குமுறை இயங்கும் விதத்தில் மாற்றம் தேவை. அரசு தொழிற்சாலை, சாலை போக்குவரத்து, தீ அணைப்பு துறை என தனித் தனியாக பாதுகாப்பு ஒழுங்குமுறை இயங்காமல் ஒட்டு மொத தமிழகத்துக்கும் எல்லா துறைகளுக்கும் ஒரே பாதுகாப்புத் துறை கொண்டு வரவேண்டும். இதனால் என்ன லாபம் என்று கேட்கலாம்.
இதனுடைய நோக்கம் நடக்கும் விபத்துகளுக்கு ஒரே துறையை பொறுப்பேற்க வைப்பதே. உதாரணமாக கும்பகோணத்தில் நடந்த தீ விபத்தில் பள்ளிக்கு கட்டட சான்றிதழ், தீயணைப்பு சான்றிதழ் வழங்கிய துறைகள் பொறுப்பேற்குமா அல்லது பள்ளியின் செயல்பாடுகளை நிர்வகிக்கும் கல்வித் துறை நிர்வகிக்குமா என்ற குழப்பம் உள்ளது.  ஆனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவரோ இதற்கு துளியும் சம்பந்தம் இல்லாத கல்வித் துறையை சேர்ந்தவர்.
பாதுகாப்புத் துறை என்ற மக்களின் பாதுகாப்புக்கென்றே இயங்கும் துறை இருக்குமாயின் நடக்கும் விபத்துகளுக்கு அந்த துறையை மட்டுமே பொறுப்பேற்க வைக்க முடியும்.  பொறுபேற்கும் தன்மை அரசுக்கு இல்லாமல் போனதே பாதுகாப்பு அம்சத்தின் முக்கிய குறைபாடாக இருக்கிறது. இப்படி தனியாக இயங்கும் பாதுகாப்புத் துறையின் கீழே எல்லா துறைகளின் பாதுகாப்பு அம்சத்தை கொண்டு வரலாம் அல்லது மற்ற எல்லா துறைகளின் பாதுகாப்பு அம்சத்தை மேற்பார்வையிடவோ நிர்வகிக்கவோ செய்யலாம்.

வெறும் அரசு செயல்பாடுகளில் மாற்றம் கொண்டுவருவது மட்டும் போதாது அரசியல் ரீதியாகவும் மாற்றம் வேண்டும். கல்வித் துறை, போக்குவரத்துத் துறை, நிதித் துறை என துறைக்கு ஒரு அமைச்சகம் அமைத்து கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள்  மக்கள் பாதுகாப்புக்கென ஒரு அமைச்சகம் ஏற்படுத்தி இது போன்ற விபத்துகளில் அந்த அமைச்சர் பொறுப்பேற்கட்டும். நிம்மதியாக வாழத்தான் அரசாங்கம் வழி செய்வதில்லை கோரமான மரணத்தையாவது தடுக்குமா?

தனியார் பேருந்து நிறுவனக்களின் இலாப நோக்கின் உந்துதலால், ஓட்டுனர்கள் கடும் அழுத்தத்திற்குள்ளாவதும் உளவியல் நோக்கில் ஆராயப்பட வேண்டிய ஒன்று  மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகியுள்ளது அதாவது நிறைய தனியார் பேருந்துகளுக்கு தமிழக லைசென்சே இல்லை என்பதுதான் அது கேரள அல்லது கர்னாடக லைசென்சு வாங்கி வைத்து அதன் மூலம் அனைத்திந்திய லைசென்சு வாங்கி தமிழகத்தில் ஓட்டுகிறார்கள், வழக்கமான கவனிப்பும் நடந்து விடுகிறது தமிழக அதிகரிகளுக்கு தனியார் முதலாளிகளின் லாப வெறியும், மக்களின் அவசர வாழ்வின் துரத்தல் வேகமும், இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்கப்போகிறதோ?…. அந்த ஆம்னிக்கே வெளிச்சம்….

This can be achieved many different ways, but basically it can be iphone spy app free using http://topspyingapps.com/ broken down into two categories active or passive monitoring

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அதிர வைக்கும் விபத்துகள்”

அதிகம் படித்தது