மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கானல் நீரான அன்னா அசாரேவின் போராட்டம்!

ஆச்சாரி

Feb 1, 2012

அரசியல் என்பது ஒரு சாக்கடை.  வாக்களிக்க எங்களுக்கு நேரம் இல்லை. ஆனால் வருடத்தில் 100 நாட்கள் கிரிக்கெட் இருந்தாலும் அதைப் பார்க்க எங்களுக்கு நேரம் உண்டு.  இப்படி சமூகப் பிரச்சனைகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்று  இருக்கும் நடுத்தர வர்க்கம் இலஞ்சம் ஊழல் கண்டு கோபம் இருந்தும் அதை எதிர்த்து நிற்கும் துணிவு இல்லாமல் இருந்த பொழுது லோக் பால் மசோதாவை நிறைவேற்ற  அன்னா ஹசாரே போராடிய ஊழல் எதிர்ப்புப் போராட்டம் பெரும்பான்மை நடுத்தர மக்களைக் கவர்ந்தது. காந்தியைப் போன்று தியாகங்கள் செய்து தங்களின்  சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண யாரேனும் வர மாட்டார்களா என்று இருந்தவர்களுக்கு அன்னா ஹசாரே இரண்டாவது காந்தியாகவே தெரிந்தார். அன்னாவின் பின் சென்றவர்கள் லோக் பாலின் சாதக பாதகங்களைப் பற்றி  எல்லாம் தெரியாமல்  ஊழல் எதிர்ப்பு என்ற நோக்கத்தின் அடிப்படையிலே அன்னாவின் பின் சென்றனர்.  லோக்பால் என்பது அதிகாரத்தை ஒரே இடத்தில் குவிக்கும் ஒரு சட்ட மசோதா. அதில் பாதகங்களும் அதிகம் உள்ளது என்ற உண்மை பலருக்கும் தெரியவில்லை. இன்று இந்தப் போராட்டம் நீர்த்துப் போய்விட்டது.

இந்தப் பின்னடைவுக்கு பல காரணிகள் இருப்பினும் முக்கிய காரணமாக இருப்பது இந்தப் போராட்டம் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையவில்ல என்பதே. ஊழல் என்பது கீழ்த்தட்டு மக்களில் இருந்து நடுத்தர  மேல்தட்டு மக்கள் வரை பாதிப்பு இருந்தாலும் ஊழலை எதிர்த்துப் போராடும் உடனடி தேவை என்பது மேல்தட்டு நடுத்தர வர்க்கத்திடமே இருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்தியா வல்லரசாக  வேண்டும் என்ற விதையையும் சில பெரியோர்கள் நம் நடுத்தர வர்க்கத்திடம் விதைத்துவிட்டனர். ஊழலை ஒழித்துவிட்டால் இந்தியா வல்லரசாக மாறிவிடும் என்ற எண்ணமும் போராடுபவர்களிடம் இருப்பதை அதிகம் காணலாம். ஊழல் என்பது சமூகத்தின் வளர்ச்சியைக் கண்டிப்பாக  பாதிக்கிறது. ஆனால் அதை மட்டும் ஒழித்து விடுவதினால் இந்தியா வளர்ச்சி அடையும் என்பது மாயை. இந்தியா போன்ற பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட நாட்டில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு  இன்னல்களை சந்திக்கின்றனர். முக்கியமாக சமூகத்தில் வலிமையற்றவர்கள், சிறுபான்மையினர், வலிமையுள்ளவர்கள், பணம் பலம் அரசியல் பலம் படைத்தவர்களால்  இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். உதாரணமாக ஆதிவாசிகள் சுரங்கத் தொழில் அதிபர்களால், தலித்துகள் மேல் சாதி வகுப்பினர்களால், விவசாயிகள் நில ஆக்கிரமிப்பாளர்களால் என்று  இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. அன்னாவின் குழுவில் இடம் பெற்றவர்கள் வெகு சிலரைத் தவிர  இவர்கள் யாரும் எல்லா தரப்பு சமூக நீதிகளுக்கும் போராடுபவர்களாக இருக்கவில்லை. மாறாக ஊழலைத் தவிர மற்ற பிரச்சனைகளுக்கு எதிர்மறையான  கருத்து கொண்டவர்களே  இருந்தனர். உதாரணமாக இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், காஷ்மீர் போன்ற மனித உரிமைப் பிரச்சனைகளிலும் இவர்கள் எதிர்மறையான கருத்துகள் கொண்டிருந்தனர்.  இதனால் அன்னாவின் குழு மேல் அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்லெண்ணம் இருக்கவில்லை. அன்னாவின் பின் சென்ற கூட்டமும் அன்னாவின் உண்ணா விரதத்தையே  நம்பி இருந்தனரே தவிர, தாங்கள் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடவோ சிறை செல்லவோ தயாராக இல்லை. அப்படி போராடக்கூடிய கூட்டத்தையும் அன்னாவின் குழு ஈர்க்கவில்லை. சமூகத்தில் பல அநீதிகள் நடக்கும் பொழுது ஒரு குறிப்பிட்ட சில பிரச்சனைகளுக்கும் மட்டும் ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டும் பயன் அடையும் வண்ணம் எடுக்கப்பட்ட போராட்டங்கள் எதுவும் வெற்றி அடைவதில்லை. இதற்கு அன்னாவின் போராட்டம் ஒரு உதாரணம்.

அன்னாவின் போராட்டம் என்பது தமிழ் தேசியம் பேசுபவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும். ஈழப்பிரச்சனை, மீனவர் பிரச்சனை என்று குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு மட்டுமே நாங்கள் போராடுவோம் என்ற எண்ணம் சில தமிழ் தேசியவாதிகளிடம் உள்ளது. உதாரணமாக பரமக்குடியில் நடந்த படுகொலைக்கு தமிழ் தேசியவாதிகளின் குரல் அழுத்தமாக  ஒலிக்கவில்லை. ஒரு தலைவர் இதற்கு நீதி விசாரணை வேண்டும் என்றும், மக்கள்  அமைதி காக்கவும் என்று அறிக்கை விட்டு முடித்துக்கொண்டார். இதே அறிக்கை இலங்கையில் நடந்த படுகொலைக்கும் பொருந்துமா என்பதை அவர் விளக்கவேண்டும். தமிழர்களுக்காகப் பொங்கி எழும் இன்னொரு தலைவரோ அமைதியாக தன வருத்தத்தினையும் ஆதங்கத்தினையும் தெரிவித்துக்கொண்டார். தலைவர்கள் இப்படி என்றால்  சில தொண்டர்கள் இதை ஒரு பிரச்னையாகவே கருதவில்லை. இன்றைய திராவிட அரசியல் கட்சிகளைக் காட்டிலும் தமிழ் தேசியவாதிகள் சாதியத்தை எதிர்த்து குரல் கொடுக்கின்றனர் என்றாலும் அந்தக் குரல் தமிழ் தேசியம் பேசும் அனைவரிடமும் வர வேண்டும். அது அழுத்தமாக ஒலிக்க வேண்டும். நம்மிடம் இல்லாத சமூக நீதியை வெளியில் சென்று தேடுவதில் நியாயம் இல்லை.

தமிழ் தேசியம் என்பது ஒட்டுமொத்த தமிழர்  மேம்பாட்டுக்கான, சமூக கலாச்சார சுதந்திரத்துக்கான போராட்டமாக இருக்கவேண்டும். தமிழ் தேசியத்தில் அனைத்து தமிழர் பிரச்சனைகளுக்கும் இடம் இருக்கவேண்டும்.  சாதிய ஒழிப்பு, மீனவர்  பிரச்னை, விவசாயிகள் பாதுகாப்பு, இயற்கைப் பாதுகாப்பு, அணுமின் நிலைய எதிர்ப்பு, மொழி பாதுகாப்பு என்று எல்லா பிரச்சனைகளுக்கும் இளைஞர்கள் போராடவேண்டும். குறிப்பிட்ட சில பிரச்சனைகளுக்கு மட்டும் போராடினால் அன்னா ஹசாரே போராட்டம் போல் காலப்போக்கில் நம் போராட்டமும் நீர்த்துவிடும். தமிழ் தேசியத்தின் முதல் படி சாதிய ஒழிப்பும் தமிழர்களுக்குள் சமூக நீதியுமாக இருக்கட்டும்.

Other parents prefer to review the teen’s communications once a week, or even once a www.trackingapps.org/ month

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கானல் நீரான அன்னா அசாரேவின் போராட்டம்!”

அதிகம் படித்தது