அன்னிய நிறுவனங்களால் தரம் இழந்து வரும் தமிழக ஆறுகள்.
ஆச்சாரிJan 1, 2013
பவானி ஆற்றில் மேட்டுப்பாளையத்திற்கு மேலிருந்து காவேரியில், மேட்டூர் அணையிலிருந்து நொய்யல் ஆற்றில், பேரூருக்கு (கோவை) மேலிருந்து மற்றும் அமராவதி ஆற்றில் ,கரூருக்கு மேலிருந்து கொலை பாதகங்கள், “முன்னேற்றம்” என்ற பெயரில் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
இந்த அநியாயத்துக்கு பெரும் காரணம் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த தொழில் முனைவோரே.தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் – கம்யூனிஸ்ட் உட்பட, இவர்களுக்குக் கூட்டாளிகள்.
சாயப் பட்டறை, தோல் பதனிடும் ஆலைகள், சன்மார் கெம் பிளாஸ்ட், மால்கோ ஸ்டெரிலைட், மேட்டூர் அனல் மின் நிலையம் (TNEB), மேட்டூர் அணையை ஒட்டியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்க் கூடங்கள், புகளூர் காகிதத் தொழிற்ச்சாலை ,( EID Parry) செம்படாபாளையம், ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை, பள்ளிப்பாளையம் சேசசாயி காகித-சர்க்கரை ஆலைகள் என்ற பல நூறு ராட்சசர்கள் அல்லும் பகலும் இந்த ஆறுகளை பல கழிவுகளைக் கொட்டி,மாசற்ற ஆற்றுப் பெண்ணை, மானபங்கம் செய்கின்றனர்.
இந்த நாசத்தில் ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம், கோவை, கோபி, சத்தியமங்கலம், பவானி, ஈரோடு, திருப்பூர், கரூர் எனப் பல நகராட்சி, மாநகராட்சிகளின் பங்கும் குறைவல்ல.
பவானி ஆற்றைக் கெடுத்த சவுத் இந்தியா விஸ்கோஸ், யுனைடெட் பிலீசெர்ஸ், ஹிந்துஸ்தான் போட்டோ பில்ம் போன்றவை செத்த பிறகு ஆயிரக்கணக்கில் இன்று கொலையாளிகள் கிளம்பியுள்ளனர்; எல்லா ஆறுகளையும், நீர் நிலைகளையும் தீர்த்துக் கட்ட. . .
புற்றுநோய், மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறுகள், மலட்டுத்தன்மை, கால்நடைகள் சீரழிவு, விவசாய விளைச்சல் பாதிப்பு என்று மக்கள் சீரழிந்துகொண்டிருக்கின்றனர். பாம்பு, தவளை, எலி, மீன் போன்ற உயிரினங்கள் நொய்யல் ஆற்றில் காணாமல் போய்விட்டன.
காவேரி, பவானி, நொய்யல் ,அமராவதி ஆறுகளில் வரும் தண்ணீரை கால்நடைகள், நாய்கள்,கழுதைகள் குடிக்க மறுக்கின்றன. ஆனால் இப்பகுதியைச் சேர்ந்த பாவப்பட்ட மனிதர்கள் குடித்து மாய்கின்றனர்.
1980-1990 இன் மத்தியில், நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம் அணை சுமார் முப்பதாயிரம் ஏக்கர் நிலங்களின் விவசாயத்திற்காக கட்டப்பட்டது. ஆனால் இப்பகுதியில் இன்றுவரை ஒரு செண்டு நிலம் கூடப் பயனடையவில்லை. இந்த அணை திருப்பூர் சாயப்பட்டறைகளின் நச்சுக்கழிவைத் தேக்கும் மகா தேக்கத் தொட்டியாக மாறியுள்ளது. இது ஒரு கின்னஸ் சாதனை. இந்த அணைக்குள் யாரும் அவ்வளவு எளிதில் கால்வைக்க முடியாது.மீறித் தெரியாமல் காலை வைத்தால், கால் வெந்துவிடும். அவ்வளவு நஞ்சு.
எனது வேண்டுகோள்:
பிளாச்சிமடா (பாலக்காடு, கேரளா) கொக்கோ கோலா தொழிற்சாலையால் ஏற்பட்ட இயற்கை அழிவை எதிர்த்து சில அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர், மாணவர் சங்கங்கள் அந்தப் பானத்தை புறக்கணித்தார்கள் என்று கேள்விப்பட்டேன்.
இப்படி மக்களின் வாழ்வாதாரத்தை, சுற்றுச்சூழலை, நீர் ஆதாரங்களை அழித்து, குழந்தைத் தொழிலாளர்கள் முறையில், தொழிலாளர்களை, கல்யாணமாகாத பெண்களை ஏமாற்றிச் செய்யப்படும் தோல் பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன. இவற்றை வாங்கி பயன்படுத்தும் அமெரிக்க மக்கள் மத்தியில், இந்த செய்தியைக் கொண்டுபோக முடியுமா? அங்குள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அமைதிப் பசுமை ( Green Peace), பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் இந்த அநியாயங்களை அறியவேண்டாமா? இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றவும்,நோயற்ற சமுதாயத்தை உருவாக்கவும்,இப்பழிச் செயலுக்கு எதிராக குரல் கொடுத்து உதவ வேண்டாமா ?
மனித சமுதாயமே ! ! உங்களின் உரத்த குரலும், உதவியும் நசிந்து கொண்டிருக்கும் வாயுள்ள, வாயற்ற பல்லாயிரக்கணக்கான உயிரினங்களைக் காப்பாற்ற உதவும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
மோயாறு பவானியின் ஒரு உப நதி. இந்த ஆறு கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது.அது வரை மோயாறு ஒரு சுத்தமான நதி.
இந்தப் பகுதி வன விலங்குகளின் சரணாலயமும் கூட.
கர்நாடகா-த நா எல்லைப் பகுதியில் பகாசூர கோழிப் பண்ணைகள் உள்ளன. இவை கேரளாவுக்கு கறி மற்றும் முட்டை வழங்க ஏற்படுத்தப் பட்டவை. இந்த ராட்சச கோழிப் பண்ணைகளின் கழிவுகள் மோயாற்றில் கொட்டப் படுகின்றன. இதைக் குடித்து யானைகள் மாய்கின்றன. மலையாளிகள் புத்திசாலிகள் – தமிழர் இளிச்சவாயர்கள் என்பதற்கு மேலும் ஒரு சான்று.
இந்த மோயாறு பவானியில் கலந்து பின்னர் காவிரிக்கு வருகிறது. இந்த நீரைத் தான் வீராணம் வழியாக சென்னை மக்களும் குடிக்கின்றனர்.
அதே போல் காவேரி ஆறு மேட்டூர் அணை வரை சுத்தமான நதி. அங்கிருந்துதான் காவேரியின் மானபங்கம் ஆரம்பம்.
பக்கத்து மாநிலங்கள் தண்ணீர் தர மறுக்கின்றன என்று தினமும் தமிழ்நாட்டில் ஒப்பாரி. பாலாறு, மோயாறு, பவானி, நொய்யல், அமராவதி, காவேரி, கொள்ளிடம் ஆகியவற்றின் அவல நிலையைப் பார்த்தபின், அதிகத் தண்ணீர் பெற உண்மையிலேயே தகுதி உள்ளதா தமிழர்களுக்கு என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.