மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அமுதத் தமிழ் இருக்க அந்நிய மொழி பெயர்கள் வேண்டாம்!

ஆச்சாரி

Jun 30, 2012

பெயர்கள் சாதாரணமானவை அல்ல. வாழ்வின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்தப் பெயரை கேள்விப்படும்போதோ அல்லது அந்தப் பெயரை எவராவது உச்சரிக்கும்போதோ பழைய ஞாபகங்கள்  நம்மை சூழும். பெயர் என்பது நம்  ஆதி முதல் அந்தம் வரை பலராலும் உச்சரிக்கப்படுவது. எனவே பெயர் என்பது எழுத்து வடிவம், உச்சரிக்க மட்டுமல்ல உடலுக்குள் உயிர் போல நம் வாழ்வோடு இணைந்திருப்பதுமாகும்.

அந்தப் பெயரை குழந்தைகளுக்கு நம் தாய் மொழி தமிழிலேயே சூட்டாமல் வடமொழி மோகத்தால் ரமேஷ், ஜெகன், ஜானகி, புஷ்பா என்றெல்லாம் வைத்து மகிழ்கிறார்கள் நம் தமிழர்கள். இப்படி பெயர்கள் சூட்ட இன்னொரு காரணமும் இருக்கிறது. குழந்தையின் பிறந்த நேரப்படி கணிப்பன் சொல்லும் முதல் எழுத்தில் பெயர் வைப்பதுதான். சோதிடனும் தன் பங்குக்கு ஜா, ர, தி, என்று தமிழ், வடமொழிகளின் முதல் எழுத்தைச் சொல்லி பெயர் வைக்கச் சொல்கிறார். அல்லது எண் கணிப்பு முறையில் வைக்கச் சொல்கிறார்கள். நம் மக்களும் தி என்றால் தினேஷ் என்றும் ர என்றால் ரமேஷ், ஜா என்றால் ஜானகி என்றும் பெயர் வைத்துவிடுகிறார்கள். இந்தப் பெயர்களுக்கான அர்த்தம் என்ன என்று கேட்டால் சொல்கிறார்கள். காரணம் கேட்டால் தெரியாது என்பார்கள்.

நூறாண்டுகளுக்கு முந்தைய தமிழ் வேறு.  ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய தமிழ் வேறு. இன்றுள்ள தமிழ் வேறு. இருபதாம் நூற்றாண்டின் முதல்பாதி வரை தமிழும் சமஸ்கிருதமும் கலந்த மணிப்பிரவாளத் தமிழே பேச்சு வழக்காகவும், இலக்கிய வழக்காகவும் இருந்தது. அந்தக் காலக் கட்டடத்தில்தான் வடமொழி கலந்த பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டும் வழக்கம் தமிழ்ச் சமூகத்தில் வலுவாக நிகழ்ந்தது. அதே காலகட்டத்தில்தான் தமிழ் மொழியைக் காக்கவும் பல இயக்கங்கள் தோன்றின. எனினும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டு வரை வடமொழி கலந்த பெயர் சூட்டும் வழக்கம் முற்றிலும் மறையவில்லை.

மொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம், அதுபோல பெயர் என்பதும் ஒரு வம்சத்தின், ஒரு குலத்தின், ஒரு இனத்தின்,  அடையாளமாக கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட இனத்தின் அடையாளத்தை அந்தப் பெயரை வைத்தே கண்டுபிடிக்கலாம். ஆனால் சிலருக்கு தங்கள் அடையாளத்தை மறக்க வேண்டியிருந்தது, மறைக்க வேண்டியிருந்தது. காரணம் சமூகத்தில் அவர்களுக்கிருந்த அவல நிலை. இதன் காரணமாக குப்புசாமி, ராமசாமி எல்லாம் ரமேஷ், சுரேஷ் ஆகிப் போனார்கள். மொழியையே மறந்து ஆங்கிலப் பெயர்களை வைப்பவர்களும் உள்ளனர்.

ஒருவரை நேரில் பார்த்தவுடன் இவர் தமிழர் என்று தெரிந்தும் பெயரைக் கேட்டால் பிற மொழி இனத்தவர் பெயரை தாங்கி இருப்பார். இந்தக் குறைபாடு பிறமொழி  இனத்தவரிடமில்லை. தன்னை மறந்தும் தமிழ் பெயர்களை பிற மொழியினர் தங்களுக்குள் சூட்டிக் கொள்வதில்லை. ஒவ்வொரு மொழிக் குடும்பத்தினரும் தம்மொழி உணர்வுடன் தம் நிலைப்பாட்டில் பிடிப்புடன் இருக்கும்போது தமிழர்கள் மட்டும் தமிழ் மொழி இனவுணர்வற்ற நிலையில் இன்றும் உள்ளனர்.

எல்லா நிகழ்வுகளும் காரணங்களுடன் தான் நடைபெறுகிறது. எல்லா பொருட்களும் காரணங்களுடன்தான் படைக்கப்பட்டிருக்கிறது, இது ஆத்திகர்கள் அடிக்கடி சொல்லும் ஒரு தத்துவம். சரி பெயர்களில் கூட காரணம் இருக்க வேண்டுமா?  இருக்க வேண்டும் என்று நம் ஆதித் தமிழ் மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு காரணத்தோடுதான் பெயர்கள் சூட்டினார்கள். அதுவும் அழகிய தமிழில். மருத நிலத்தில் பிறந்தவன் மருதன் என்றும்  யாழைப்போல இனியவள் என்பதை யாழினி என்றும் ‘திண்ணன்’  என்றால் திடமானவன் எனவும் காரணப் பெயர்களை சூட்டினார்கள். இளந்திரையன் , கரிகாலன், செங்குட்டுவன் என்ற பெயர்கள்  மரியாதைக்குரியதாகவும் இருந்தது.

புகழ், கயல், இனியா, ஓவியா, இலக்கியா, இப்படி எத்தனை தூய தமிழ்ப் பெயர்கள் இருக்கின்றன? இவற்றை ஏன் தமிழர்கள் தவிர்க்கிறார்கள்?

சீனிவாசனை- திருவாணன் என்றும்

கனகராஜை- பொன்னரசன் என்றும்

காமராஜை- அழகரசன் என்றும்

கிருஷ்ணனை- கறுப்பன் என்றும்

ஜெயந்தியை- வென்றி எனவும்

ஹேமாவை- பொன்னி எனவும்

தீபாவை- சுடரொளி எனவும்

ரமாவை- எழிலி எனவும் தமிழிலேயே பெயர் வைப்பதைத் தவிர்த்துவிட்டு ஏன் வடமொழி கலந்த பெயர்களை சூட்டுகிறார்கள். அந்தப் பெயர்களின் பொருள் தெரியாமல் நவீனமாக இருக்கிறது என்பதால் ஏற்படும் விளைவு இது .

அபர்ணா என்று பெயர் வைக்கிறார்கள். பர்ணம் என்பது இலை தழைகளால் ஆன ஆடை. (முனிவர்கள் குடியிருக்கும் இடமாகச் சொல்லப்படும் பர்ணசாலைகள்கூட  கொடி, தழைகளால் வேயப்பட்டிருக்கும்) அ பர்ணா  ஆடை அற்றவள் என்று பொருள் படுகிறது. இப்படி பல சமஸ்கிருதம் கலந்த பெயர்களுக்கு தூய தமிழ்ப் பொருள் ஆபாசமாகவும் நாகரிகமின்றியும் உள்ளன.  ஆதலால் அவ்வழக்கத்தைக் கைவிட்டு -வடமொழிப் பெயர்களை அதன் பொருள் புரியாமல் ஓசை நயத்துக்காக வைப்பதைத் தவிர்த்து அழகிய தமிழ்ப் பெயர்களை நம் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்ந்து அதன் வழியே தமிழைப் பேணிக் காக்கலாம்.

Arabic numerals ,,,, and so on number www.essaydragon.com the subpoints in each paragraph

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “அமுதத் தமிழ் இருக்க அந்நிய மொழி பெயர்கள் வேண்டாம்!”
  1. k.v.prabakaran says:

    என் பெயர் அர்த்தம் மட்ரும் விலக்கம் என்ன சரர்

  2. elanchezhian says:

    எனது பெயருக்கு அர்த்தம் என்ன என்பதை கன்டுபிடித்து தெரிவிக்கவும்

  3. வன்பாக்கம் விஜயராகவன் says:

    பெயரில்லாத “சிறகு சிறப்பு நிருபர்” ’அமுதம்’ சமஸ்கிருத மூலம் என அறியவில்லை. மொழிப் பெயர் என இருக்க வேண்டாமா ?

    விஜயராகவன்

  4. வன்பாக்கம் விஜயராகவன் says:

    அபர்ணா என்பது பார்வதியின் பெயர். அழகான பெயர். இந்த கட்டுரை ஒரு கண்மூடித்தனமான மொழிவெறியினால் எழுதப்பட்டுள்லது. அப்புரம் மைக்கேல், ஜார்கஜ், ஹனீஃபா, முஹம்மத், அப்துல் இவற்றையும் மாற்ற வேன்டாமா?

    ‘சிறகு’ மொழி, இன வெறியில் ஒரு இடம் தேடப்பார்க்கிரது

    வன்பாக்கம் விஜயராகவன்

அதிகம் படித்தது