மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அமெரிக்கத் தீர்மானமும் தமிழக அரசியலும்

ஆச்சாரி

Feb 8, 2014

*** தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், போர்க்குற்றத்திற்கு மட்டுமான புலனாய்வு நடந்தால் தமிழர்களுக்கு பலனில்லை, ஈழம் கனவாகவே போய்விடும் ***

இச்சொற்றொடர்தான் இன்று முகநூலில் நடக்கும் வாக்குவாதம். ‘அடைந்தால் தமிழீழம் அல்லது வீரமரணம்’ என்பது போல்தான் அந்த வாதங்கள் போய் கொண்டிருக்கிறது. அந்த உணர்வு நல்லதுதான், ஆனால் அதுவே மிகத்தீவிரமாகி, இந்த வாதத்திற்கு ஏற்றாற்போல் செயல்படாதவர்கள் அனைவரும் அறிவிலிகள் என்றோ துரோகிகள் என்றோ ஐய்யத்திற்குறியவர்கள் என்றோ சொல்கின்றப் போக்குதான் வருத்தத்தைத் தருகிறது. ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும், அதில் சிறுமுரண்பாடுகளும் இருக்கும் ஆனால் அதை மதிக்க வேண்டும். ஆங்கிலத்தில் சொல்வது போல் ‘I respectfully disagree with you’ என்று செயல்படுவதுதான் நாகரிகம். நம் இறுதி நோக்கம்தான் ஒன்றாக இருக்கவேண்டும். அதை அடையும் பாதையில்தான் வேறுபாடுகள் இருக்கலாம். இந்த வேறுபாடுகளை மதிக்கும் அதேவேளையில் தம்வழியில் உறுதியுடன் தொடர்ந்து நடப்பதுதான் அறிவார்ந்த செயல்.

ஒவ்வொரு இயக்கமும் தங்களது விருப்பப்படி போராடலாம், கோரிக்கைகளை வைக்கலாம் அது தவறில்லை. கடந்த ஈராண்டுகளாக எந்த நாடும் இலங்கைச் சிக்கலை ஐ.நா. மனித உரிமை அவையில் முன்வைக்காத நிலையில் அமெரிக்கா தொடர்ந்துத் தீர்மானங்களை முன்மொழிந்து வருகிறது. அத்தீர்மானங்களினால் நாம் ஈழத்தை அடையப்போவதில்லை. ஆனால் குறைந்தது அத்தீர்மானங்களினால்தான் இன்னமும் ஐ.நா. அவையில் இலங்கை கூனிக்குறுகி குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது. அமெரிக்கத் தீர்மானம் தோற்று, வேறுயாருமே இலங்கைச் சிக்கலை விவாதிக்கத் தீர்மானம் கொண்டுவராத நிலையில் என்ன செய்வது? சிந்திக்கவும். நான் அப்படியே அமெரிக்கத் தீர்மானத்தை ஏற்கச் சொல்லவில்லை. அதில் குறைகண்டால் அதை மட்டும் எதிர்க்க வேண்டும். ஆனால் அமெரிக்காவை முழுதும் எதிர்ப்பதாலும், அந்நாட்டுக் கொடியை எரிப்பதாலும் நமக்குப் பயனில்லை, இலங்கைக்குத்தான் பலனாக அமையும். அமெரிக்கத் தீர்மானத்திற்கு துணை நிற்பவர்களை துரோகி/அறிவில்லாதவர்கள் என்று கூறுவது அறிவார்ந்த செயலா? அமெரிக்கத் தீர்மானம் என்ன என்று தெரியாமலே ‘அயோக்கியத் தீர்மானம்’ என்று கூறுவது சரியா? அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆத்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்தந்த நாட்டரசுடன் இணைந்து எது சாத்தியமோ அதை செய்துவருகிறார்கள். அந்தந்த நாட்டின் வெளியுறவுத் துறையுடன் இணைந்து செயல்படும் போதும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் துணையை நாடும்போதும் மிகத்தீவிரமான கோரிக்கைகளை முன்வைக்க முடியாது.

கோரிக்கை இன்னமும் வெளிநாடுகளில் ஏற்றுக்கொள்ளாத நிலையில்தான் வாழ்கிறோம். அதனால் நாம் நமது அடிப்படைக் கொள்கைகளையோ நோக்கத்தையோ மாற்றிக்கொள்ளவில்லை. அமெரிக்கத் தமிழ் அமைப்புகளின் இறுதி நோக்கம் தனி ஈழநாடே. அதை எப்படி அடைவது என்பதில் வேறுபாடுகள் இருக்கலாம்? ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும் என்பது புலம்பெயர்ந்த அமைப்புகள் எடுத்த முடிவு. எனவேதான் தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வு (Independent International Investigation) தேவை என்று முடிவெடுத்து அதை இக்கூட்டத்தில் கொண்டுவர முயன்று வருகிறார்கள். அந்த ஆய்வில் போர்க்குற்றத்துடன், இனவழிப்பு புலனாய்வும் இடம்பெறவேண்டும் என்றுதான் உழைத்து வருகிறார்கள். ஆனால் அமெரிக்க அரசு போர்க்குற்றத்தை மட்டும் அத்தீர்மானத்தில் கொண்டுவந்தால் அதை ஏற்றுக்கொண்டு, அதன் மூலம் தமிழினத்திற்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதையும் உணர்ந்துள்ளார்கள் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்கள்.

தீர்மானத்தில் தமிழினவழிப்பிற்கு எதிரான புலனாய்வு தேவை என்கிற போராட்டங்கள் தேவைதான், நமக்கு சார்பான தீர்மானம் அவையில் வருவதில் நமக்கு மகிழ்ச்சிதான். அமெரிக்கத் தீர்மானத்தில் அதை இடம்பெற போராடுவது எனக்கு உடன்பாடே. அதற்காகத்தான் உழைத்து வருகிறோம், ஆனால் அச்சொற்றொடர்கள் இல்லாவிட்டால் அத்தீர்மானத்தையே எதிர்ப்பதும், எரிப்பதும் நமக்கு பலனைத்தருமா என்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஈழமண் சிங்கள மண்ணாகி வருகிறது. ஈழத்தமிழ் மக்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை காத்து ஈழமண்ணைக் காப்பது நம் கடமையல்லவா?

கடந்த இருமுறையும் அமெரிக்கா கொண்டுவந்தத் தீர்மானங்களை நீர்க்கச்செய்து நமக்கு பயன்படாததாக மாற்றியது இந்திய அரசு. இந்த முறை இந்திய அரசை தமிழக மக்களின் எழுச்சியினால் கடும் நெருக்கடி கொடுத்து இந்திய நாட்டரசே வலுவானதொரு தீர்மானத்தைக் கொண்டுவர வைக்க முயற்சி செய்ய வேண்டும். அமெரிக்காவின் மீது தேவையில்லாமல் சினம் கொள்வதால் இக்காலக்கட்டத்தில் எவ்விதப் பயனும் நமக்கு விளையாது. 2009 ஆம் ஆண்டு இனவழிப்புப் போரில் அனைத்து உலக நாடுகளும் தமிழர்களுக்கு எதிராக இருந்து கொலைகார இலங்கைக்கு துணைநின்றது உண்மைதான். இந்தியப்படை ஈழ மண்ணில் கொலைகார இலங்கைப் படைக்குத் துணைநின்று, போரையும் முன்னின்று நடத்தியது நாமறிந்ததே. விடுதலைப் புலிகள் நீர்மூலமாக்கப் படவேண்டும் என்பதுதான் இந்தியாவின் அவா என்பதும் நமக்குத் தெரிந்ததே. தமிழர்களின் எதிரியான பேராயக் (காங்கிரசு) கட்சியின் தலைமையிலான இந்திய அரசும், அவர்களை வழிநடத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளும் தமிழ் மக்களுக்கும், இந்தியாவின் பாதுகாப்பிற்கும் செய்த கேடுகளை வெளிப்படுத்தி, அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து அவர்கள் முன்பு செய்த பிழையை இம்முறையும் செய்யாமல் தடுப்பது நம் கடமை. கடந்த 3 தீர்மானங்களை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்ட கியூபா, உருசிய, சீனா, வெனிசுவேலா போன்ற இடதுசாரி நாடுகளையும் நம் பக்கம் நாம் கொண்டுவர வேண்டும். இடது சாரி அமைப்புகள் மூலம் அந்நாடுகளுக்கும் நெருக்கடி கொடுத்து தமிழர்களுக்கு சார்பான நிலையை எடுக்க வைக்க முயல வேண்டும்.

வட அமெரிக்கத் தமிழர்கள் முயலும் இந்த வழி மட்டுமே ஈழத்திற்கான வழியல்ல. இதனால்மட்டும் ஈழம் கிடைத்துவிடவும் போவதில்லை. இது புலம் பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினர் செல்லும் வழி. அதே போன்று நாம் அனைவரும் ஈழம் கிடைக்க எது சரியான வழி என்று நினைக்கின்றோமோ அதில் செயல்படுவது இன்றியமையாதது. இதில் எவ்வழி சிறந்தது என்று நமக்குள் வாதம் செய்து கொண்டு ஒருவருக்கொருவர் எதிர்வினையாற்றிக்கொண்டிருப்பது நம் மக்களுக்கு செய்யும் துரோகமாக அமைந்துவிடும்.

விடுதலைப் புலிகளும் மனிதர்கள்தான், தவறுகள் தவிர்க்க முடியாதது. புலிகளும் பல தவறுகளை இழைத்திருக்கலாம். ஆனால் அதைப் பயன்படுத்தி இராசபக்சே அரசு உலக நாடுகளை ஏமாற்றி புலிகளின் வளர்ச்சி உலக அமைதிக்குக் கேடு விளைவிக்கும் என்று நம்பவைத்து படை உதவிகளைப் பெற்றது. உலகமே இணைந்து புலிகள் இயக்கத்தை அழித்தது. அதில் அமெரிக்காவும், சீனாவும், இந்தியாவும் செய்தது தமிழினத்திற்கு எதிரான செயல்தான். ஆனால் இன்று இலங்கைக்கு இந்தியாவும், சீனாவும் முழுமையாக ஆதரவு அளித்து வருகின்றன. நமக்கு சார்பாக எவர் முன்வந்தாலும், அவற்றால் சிறு பலனை நாம் அடைந்தாலும், அச்செயலின் பின்னால் அந்நாடுகளுக்கு எவ்வித தன்னல எண்ணமிருந்தாலும், அவர்களைப் புறக்கணிக்காமல் அச்செயலினால் தமிழர்க்கு என்ன பலன் என்று சிந்தித்து அதனை அரவணைப்பதுதான் அறிவார்ந்த செயலாக வட அமெரிக்க அமைப்புகள் கருதுகின்றன.

போர்க்குற்ற புலனாய்வால் இலங்கை செய்த மனிதகுலத்திற்கு எதிரான செயல்கள் வெளிவந்துதான் ஆகவேண்டும். ஐ.நா. அவையின் மேற்பார்வையில் நடைபெறும் புலனாய்வின் மீது நம்பிக்கைவைப்பதில் ஒன்றும் தவறில்லை. அந்த புலனாய்வின் முடிவினால் நாம் உறுதியாகப் பலமடைவோம். அதன் பின் பொதுவாக்கெடுப்பு வேண்டும் என்று போராடினால் உலக நாடுகள் நம் கோரிக்கையை ஏற்க வாய்ப்புள்ளது. வட அமெரிக்கத் தமிழர்கள் எடுக்கும் இந்த முன்னெடுப்பை உலகத் தமிழர்கள் அனைவரும் ஏற்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பல நாடுகளில் உள்ள பல அமைப்புகள் அவரவர் விருப்பப்படி போராடத்தான் வேண்டும்.

இப்போது தமிழ் மக்களாகிய நாம் மிகவும் வலுவிழந்த நிலையில் உள்ளோம். ஆனால் அமெரிக்க நாட்டின் தேவைகளுக்கு இப்போழுது தமிழீழச்சிக்கல் தேவை என நான் நம்புகிறேன். அதனால் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இனப்படுகொலை, பன்னாட்டுப் புலனாய்வு போன்ற சொற்களைக் கொண்டு வர நாம் பாடுபட வேண்டும். மாறாக வெறும் நல்லிணக்கம் போன்ற தற்போதைய சொற்றொடர்களை அமெரிக்கா இந்தத் தீர்மானத்தில் கொண்டு வந்தால் நாம் அதை உறுதியாக எதிர்க்க வேண்டும். இங்குள்ள தமிழ் அமைப்புகள் நல்லிணக்க முயற்சியை ஏற்கனவே எதிர்த்து அறிக்கைகள் விட்டுள்ளன, தாயகத்தில் வாழும் மக்களும் அதை ஏற்க மறுத்துள்ளனர்.

வட மாகாண அவை அண்மையில் தற்சார்புள்ள பன்னாட்டுப் புலனாய்வுத் தேவை என்றும், மனிதகுலத்திற்கு எதிரான இலங்கைப் படையின் செயல்களை அக்குழு ஆராய வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றியிருப்பது நமக்குச் சார்பாகவுள்ளது. அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் கொண்டுவந்ததும், வருவதும் என்னவோ நல்லெண்ணத்தினால் மட்டுமல்ல. அமெரிக்கத் தமிழர்களின் கடின உழைப்பால் அது சாத்தியமானது. இங்குள்ள அமைப்புகள் அமெரிக்க வெளியுறவுத் துறையுடன் தொடர்ந்து தொடர்பிலுள்ளனர், அவர்களது விடா முயற்சியினால் இந்த நிலையை நாம் அடைந்திருக்கிறோம். ஆகவே இதை அமெரிக்கத் தீர்மானம் என்று மட்டும் பார்க்காமல் அமெரிக்கத் தமிழர்களின் உழைப்பின் பலனாக வரும் தீர்மானம் என்ற முறையில் நாம் இதை அணுக வேண்டும்.

ஏதிலிகளாக அயல் நாட்டிற்கு வந்த நூறாயிரத்திற்கும் குறைவான தமிழர்களாக இருந்தாலும், அமெரிக்க அரசை வலியுறுத்தி பல நெருக்கடிகளுக்கிடையே அமெரிக்கத் தமிழர்களால் கொண்டு வரப்படும் தீர்மானம் இது. ஆகவே அமெரிக்க அதிகாரிகளால் பல இடங்களில் திருத்தப்பட்டு தான் வருகின்றது. இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான தமிழர்கள் அமெரிக்கத் தமிழர்களின் உழைப்பால் வரும் தீர்மானத்தை எதிர்ப்பதில் நேரத்தை வீணடிக்காமல், இந்தியாவை வலியுறுத்தி பொது வாக்கெடுப்பிற்கான தீர்மானத்தை கொண்டு வருவதில் நேரத்தை செலவிடுவது பயன் தரக்கூடியது.

புலம் பெயர்ந்த தமிழர்களின் முயற்சியினால் கொண்டு வரப்படும் இத்தீர்மானத்தை இலங்கை அரசு கடுமையாக எதிர்க்கிறது. அவர்களின் பணம் தமிழகத்திலும் விளையாடுகிறது என்பது நாம் அறிந்த உண்மை. தமிழர்களின் உள்போராட்டத்தை அவர்கள் தமக்கு வசதியாகப் பயன்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புள்ளது. எனவே நான் முன்னரே குறிப்பிட்டபடி, தீர்மானம் எப்படி இருக்க வேண்டும் என்று போராடுங்கள்.

இறுதியாக ஒன்று கூற விரும்புகிறேன், ஒருவேளை அமெரிக்கா தனது தீர்மானத்திற்கு 25 நாடுகளின் (ஐ.நா. மனித உரிமை அவையில் 48 நாடுகள் உறுப்பினர்களாகவுள்ளனர்) ஆதரவு இல்லை என்று நினைத்து தீர்மானத்தையே கொண்டுவராவிட்டால் நமக்கு என்ன பயன் என்று சிந்திக்க வேண்டும். அதனால் இலங்கை விவாதப்பட்டியலிருந்து நீக்கப்பட்டுவிடும். பின்பு நாம் வெளியில்மட்டும் கூட்டம் போட்டு பேசிக்கொண்டிருக்க வேண்டும். ஐ.நா. அவை இலங்கைச் சிக்கலை முழுதும் விட்டுவிடும். மேலும், அமெரிக்கத் தீர்மானத்தில் பொதுவாக்கெடுப்பு வேண்டாம், இனவழிப்பிற்கான புலனாய்வு தேவையில்லை என்றோ கூறப்படவில்லையே! அடுத்த கூட்டத்தில் அதை கொண்டுவர முயற்சிக்கலாமே! இப்பொழுது போர்க்குற்றத்திற்கான புலனாய்வை ஆதரிக்கலாமே! எனவே தீர்மானத்தை முற்றிலும் எதிர்க்கவோ, எரிக்கவோ வேண்டாம் என்று அமெரிக்கத் தமிழர்கள் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

“ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு” என்பது மேடைப்பேச்சாக மட்டும் இருந்துவிடக்கூடாது. எல்லாவற்றையும் இழந்த ஈழத் தமிழர்களுக்காகவாவது ஒன்றுபடவேண்டும். தமிழகம் ஒன்றுபட்டு எழுச்சியடைந்தால் அமெரிக்காவும், இந்தியாவும் நம் கோரிக்கைகளைப் புறக்கணிக்க முடியாது. காலம் கணிந்துவருகிறது, ஒற்றுமையுடன் செயற்படுவோம்.

********
அமெரிக்காவின் நான்கு முதன்மை தமிழ் அமைப்புகள் (வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை – www.fetna.org, இலங்கை தமிழ்ச் சங்கம் – www.sangam.org, உலகத் தமிழ் அமைப்பு – www.worldthamil.org, அமெரிக்கத் தமிழர் அரசியல் செயலவை – www.ustpac.org) இணைந்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும் எழுதிய கடிதத்தின் முதன்மைக் கோரிக்கைகள் கீழே உள்ளன.

********

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழர் போராட்ட இயக்கங்களுக்கு:

பொருள்: ஐ.நா. அவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் தொடர்பான இந்திய அரசின் உடனடி நடவடிக்கை வேண்டி

தாங்கள் ஏற்கனவே அறிந்தபடி, வரும் 2014 மார்ச்சுத் திங்களில் செனீவா மாநகரில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பொறுப்பு கூறவும் அரசியல் தீர்வை முன்வைக்கவும், இலங்கை அரசிற்கு எதிராக அமெரிக்க அரசு ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரவுள்ளது. இந்திய அரசு துணை (ஆதரவு) நிற்கும் என்றால், “தற்சார்புடைய பன்னாட்டுப் புலனாய்வு” ஒன்றினை ஏற்படுத்த வலியுறுத்தும் ஒரு வலிமையான தீர்மானத்தை அமெரிக்க அரசு கொண்டுவரும் என்று நம்புகின்றோம். இலங்கைக்கு எதிரான தீர்மானம் வரைவு நிலையில் இருக்கும் இச்சூழலில், இந்திய அரசு “தற்சார்புடைய பன்னாட்டுப் புலனாய்வு” வேண்டுமென வெளிப்படையாக அறிவிக்கக் கோரி, தாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்திய அரசு ஒரு தெளிவான முடிவை விரைவில் அறிவிப்பது என்பது, மற்ற ஆசிய நாடுகளையும், ஆப்பிரிக்க நாடுகளையும், உலக நாடுகளையும் வலியுறுத்தி இத்தீர்மானத்தை ஏற்க வைப்பது மிகவும் எளிதானதாகும்.

மேலும் தாங்கள் ஏற்கனவே அறிந்தபடி, அமெரிக்க அரசு இதற்கு முன்பு 2012, 2013 ஆம் ஆண்டுகளில் கொண்டுவந்த தீர்மானங்களை வலிமையற்றதாக நீர்க்கச் செய்ததில் இந்திய அரசின் பங்கிருப்பதாகப் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன. அப்படிப்பட்ட சூழல் மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என்கிற அச்சத்தினாலும், அப்படி நடக்காமல் தடுத்து நிறுத்தி, கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தை மேலும் வலுப்படுத்துமாறு வேண்டுகின்றோம்.

எங்களின் பணிவான வேண்டுகோள்களாவன:

1.“தற்சார்புடைய பன்னாட்டுப் புலனாய்வு” ஒன்று இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும், அப்படிப்படத் தீர்மானத்திற்கு துணை நிற்போமெனவும் இந்திய அரசு வெளிப்படையாக, பொதுமக்களுக்கு அறிவிக்க கோரி தொடர்ந்து வலியுறுத்துவது

2.போர்க் குற்றங்களுக்கும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கும் மட்டுமல்லாது இனப்படுகொலைக்கு எதிரான புலனாய்வையும் மேற்கொள்ள இத்தீர்மானத்தில் தேவைப்படும் மாற்றங்களைக் கொண்டுவர இந்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவது

3.தமிழர் நலனும், இந்திய அரசின் நலனும் ஒன்றொடொன்று இயைந்தவையே. மேலும் இந்திய அரசோ அதன் அதிகாரிகளோ, அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, எச்சூழலிலும் வலிமையற்றதாகவோ நீர்க்கவோச் செய்யாது என்பதை உறுதிப்படுத்துவது.

மிக்க நன்றி !

தங்கள் உண்மையுள்ள,

முனைவர். தண்டபானி குப்புசாமி, தலைவர், வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை

மருத்துவர். இராசாராமன் கந்தசாமி, தலைவர், இலங்கை தமிழ்ச் சங்கம்

மருத்துவர். காருண்யன் அருளானந்தன், தலைவர், அமெரிக்கத் தமிழர் அரசியற் செயலவை

திரு. க. தில்லைக்குமரன், தலைவர், உலகத் தமிழ் அமைப்பு

********

A study https://pro-academic-writers.com/ evaluating outcomes of supported employment programs within one regional centers service area

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “அமெரிக்கத் தீர்மானமும் தமிழக அரசியலும்”
  1. Karthik says:

    ​போர்குற்றம் : சண்டைல சட்டை கழிந்துவிட்டது.
    இனப்படுகொலை : மக்களை, குழந்தைகளை திட்டமிட்டே கொலை செய்து ​
    ​விட்டார்கள்.

    தீர்வு போல் ஒன்றைத் தந்து, தமிழர்களை ஏமாற்ற சர்வதேச நாடுகள் நினைகின்றன.

    ​இந்த நெடிய விடுதலைப் போராட்டம் தமிழ் ஈழ விடுதலையைத் தான் அடையவேண்டுமே ஒழிய.,

    சில புலிகளும், சில சிங்கள அதிகாரிகளும் சிறை தண்டனை பெறுவதுடன் முடித்துகொள்ளலாம் என சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரல் உள்ளது.

    நமக்கு என்ன தேவை என்பதை சமரசமில்லாமல் கேட்ட துணிவுடன் சர்வதேசத்துடன் போராடுவோம். ​

  2. சொக்கலிங்கம் கருப்பையா says:

    அருமையான கட்டுரை. எனக்கு மிகவும் வேண்டிய அமெரிக்க அறிவுரையாளர் ஒரு முறை கூறியது நினைவிற்கு வருகிறது. “என்னால் முடிந்தவரை ஒரு வினையைச் செய்வேன்” என்பதற்கும் ,”ஒரு வினை வெற்றி பெறச் செய்வேன்” என்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. காலமெல்லாம் போராடினாலும் காரியம் கைகூடாமல் போய்விடாமல் எந்த வழியில் எப்படி நகர்ந்தால் வெல்ல முடியும் என்று எண்ணி செயல்படவேண்டும்.

    நமக்குள்ளே வீண் சண்டைகள் வேண்டாம். இலக்கை அடைவதற்கு நமக்கு உகந்த வழியில் செயலாற்றுவோம்.

  3. வெற்றிவேந்தன் says:

    கருத்தாழமிக்க தில்லைக்குமரன் பதிவு பொதிந்த சிறகுக்கு நன்றி. மாறுபட்ட சூழ்நிலையில், இராணுவ பலம் எதுவுமற்ற ஓர் இனம் விடுதலை பெறுவதென்பது படிப்படியாக, கட்டம்கட்டமாக முன்னெடுக்கப்படுவது முன்னுள்ள ஒரேவழி. இதற்காக, “தற்திறனுள்ள பன்னாட்டு விசாரணை” ஒன்றையோ, அதற்கான பொறிமுறையையோ உருவாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட உலகத்தமிழர்கள் உறுதியுடன் உழைக்கவேண்டும்.

    கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கனதி குறைந்ததென்று நாம் குமைந்தாலும், அதன்வழி ஏற்பட்ட நெருக்குதல் அல்லவா வடமாகாண சபைத் தேர்தலை நடாத்த வைத்தது? உருவான மாகாண சபை கனதி குறைந்தது என்று நாம் பொருமினாலும், அதனாலல்லவா ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையே என்றும், பன்னாட்டு விசாரணை கோரியும் ஒடுக்கப்படும் மக்களின் குரல் ஓங்கி ஒலித்தது. இதோ அத் தீர்மானத்தின் இணைப்பு.

    1. தமிழ்த் தேசத்தின்மீது நடாத்தப்பட்டதும், நடந்து கொண்டு இருப்பதும் இலங்கை அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பு, ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை ஆகியவற்றை சுட்டிக் காட்டுவதோடு, திட்டமிட்ட இன அழிப்புக்கு (Genocide) ஒப்பானது என்று சொல்லப்படும் மனிதப் படுகொலைகளை சர்வதேச விசாரணைகள் மூலம் அனைத்துலக சமூகம் வெளிப்படுத்த முன்வர வேண்டுமென இச் சபை கோருகின்றது.

    2. நடைபெற்று முடிந்த தமிழ் மக்களின் படுகொலைகளை விசாரிப்பதற்கு இலங்கை அரசின் உள்நாட்டுப் பொறிமுறைகளை நாம் அடியோடு ஆணித்தரமாக நிராகரிக்கின்ற அதேவேளை, சர்வதேச சமூகத்தின் பங்களிப்பின்றி எமக்கு நீதியோ அல்லது அரசியல் தீர்வோ கிட்டும் என்பதில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையில்லை என இச் சபை வெளிப்படுத்தித் தீர்மானிக்கின்றது.

    3. தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றங்கள், இனச் சுத்திகரிப்பு, இனப் படுகொலைகளுக்கு (Genocide) ஒப்பானது என்று சொல்லப்படும் மனிதப் படுகொலைகளை விசாரணை செய்வதற்காக, பக்கசார்பற்ற பன்னாட்டு விசாரணையை ஐக்கிய நாடுகள் சபையின் துணையுடன் உருவாக்குவதற்கு முன்வர வேண்டுமென அனைத்துலகச் சமூகத்தினை இச் சபை வேண்டுகின்றது.

அதிகம் படித்தது