அமெரிக்கத் தீர்மானம் வெற்றி: தமிழர் முயற்சி தொடரட்டும்
ஆச்சாரிApr 1, 2012
சென்ற வாரம் (மார்ச் 22) ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை மன்றத்தில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்து வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டது. இதில் வியப்பான செய்தி இந்தியாவும் இந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது தான் உலகத் தமிழர்களின் மத்தியில் இந்த தீர்மானம் பரவலாக நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசு, அமெரிக்கத் தமிழ் அரசியற் செயலவை, உலகத் தமிழர் பேரவை, கனடிய தமிழ்ப் பேரவை உட்பட பல தமிழ் அமைப்புகளும் இந்தத் தீர்மானத்தை வரவேற்றிருக்கின்றன. அதே நேரம் இந்த தீர்மானத்திற்கு எதிராக சில தமிழ்க் குரல்களும் ஒலிக்காமல் இல்லை.
இலங்கை அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க பன்னாட்டுக் குழு அமைக்கவேண்டும் என்று தமிழர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அரசே விசாரித்து உருவாக்கிய படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் (Lessons Learned and Reconciliation Commission – LLRC) யில் குறிப்பிட்டிருக்கும் நடவடிக்கைகளை வலியுறுத்தும் தீர்மானமாக இந்த ஜெனிவா தீர்மானம் அமைந்ததே எதிர்ப்பாளர்களின் குற்றச்சாட்டு.
இலங்கை அரசு சென்ற ஆண்டு (2011) நவம்பரில் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க குழுவின் ( LLRC) அறிக்கையை வெளியிட்டபொழுது ஒட்டுமொத்த தமிழர்களும் அதைக் கடுமையாக எதிர்த்து நிராகரித்தனர். தமிழர்கள் மட்டுமல்ல சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International) உட்பட பல மனித உரிமை அமைப்புகளும் இந்த அறிக்கையை (LLRC) ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கை அரசின் போர்க்குற்றங்களை மூடி மறைத்து மேம்போக்காக சில பரிந்துரைகளைத் தான் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் ( LLRC) அறிக்கை கொண்டிருக்கிறது. பொதுமக்களுக்கு எந்த தீங்கும் நேராமல் காப்பாற்றுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு இராணுவ நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டிருந்ததை அறிந்ததில் குழு, முழு திருப்தியடைகிறது போன்ற வாசகங்கள் அடங்கியிருக்கும் அறிக்கையை சான்னல் நான்கின் (Channel 4) நிகழ்படங்களைப் பார்த்த பின் யார்தான் ஏற்றுக் கொள்வார்கள்?
இந்நிலையில் இந்த அறிக்கையை (LLRC) நடை முறைப்படுத்த வலியுறுத்தும் தீர்மானம், தமிழர்களின் கோரிக்கையான பன்னாட்டு விசாரணையை மறைமுகமாக நிரகாரித்து விட்டது என்று தமிழகத்தில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் இந்த தீர்மானமே இலங்கை, அமெரிக்கா, இந்தியாவின் தமிழர்களுக்கு எதிரான கூட்டு சதி என்றே பேசிவருகின்றனர்.
மேலோட்டமாக பார்க்கையில் இத்தீர்மானம் தமிழர்களுக்கு எதிரானது போன்ற தோற்றத்தைத்தான் தருகிறது. ஆனால் சிறிது ஆராய்ந்து பார்த்தார்களேயானால் இத்தீர்மானம் தமிழர்களுக்கு எதிரானதல்ல என்பதை புரிந்து கொள்ள இயலும்.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் சூழ்நிலைகளை கவனத்தில் கொள்ளவேண்டும். 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து முடிந்த சில நாட்களிலேயே (மே 27, 2009) இலங்கை தனக்கு ஆதரவான ஒரு தீர்மானத்தை இதே ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை மன்றத்தில் 29 நாடுகள் ஆதரவுடன் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தில் இலங்கை என்ன கூறி இருக்கும் என்பதை தமிழ் பேசும் குழந்தைகள் கூட யூகிக்க முடியும்.
2009 இலங்கையின் தீர்மானம்
இன்று அமெரிக்க தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த பல நாடுகளும் அன்று இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். இதில் வியப்பு என்ன என்றால் அமெரிக்காவும் (இந்தியாவும்தான்) அன்று இலங்கைக்கு ஆதரவாகத் தான் வாக்களித்திருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த செப்டம்பர் 2011 இல் இதே ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை மன்றத்தில் கனடா இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை விவாதிக்க வேண்டும் என்று முன்மொழிந்ததை இலங்கை முளையிலேயே கிள்ளி எறிந்து, சர்வதேச அரங்கில் தனது செல்வாக்கை காட்டியது. இது நடந்த ஆறு மாதங்களுக்கு உள்ளாகவே தற்போது அமெரிக்கா இந்த தீர்மானத்தை இலங்கையின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றி இருக்கிறது. அமெரிக்கா கொண்டு வந்ததாலே இந்த தீர்மானம் எளிதாக வெற்றியடைந்து விட்டதாக கருத முடியாது. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகள் கூட இந்த தீர்மானத்தில் இலங்கையை ஆதரித்திருக்கின்றன. அதே நாளில் அமெரிக்கா கடுமையாக எதிர்த்த ஒரு தீர்மானத்தை கியூபா எளிதாக வெற்றியடைய வைத்தது. இவற்றைப் பார்க்கும் பொழுது அமெரிக்கா சிரமப்பட்டே இந்த தீர்மானத்தை வெற்றியடைய வைத்திருக்கிறது.
அமெரிக்காவிற்கு இதில் என்ன அக்கறை? அதில்தான் சந்தேகமே இருக்கிறது என்றும் சிலர் கருதுகின்றனர். அமெரிக்கா தானாக வலிய முன்வந்து இந்த தீர்மானத்தை முன்மொழிந்திடவில்லை. நம் தமிழர்கள் தொடர்ந்து அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை வற்புறுத்தி தான் இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றனர். இந்த தீர்மானம் வெற்றி அடைய வேண்டும் என்று உலகின் பல பகுதிகளில் இருந்தும் தமிழர்கள் ஜெனிவாவில் முகாமிட்டு வேலை செய்தனர். தமிழர்களின் கடுமையான உழைப்பிற்கு பின்னரே இத்தீர்மானம் வெற்றியடைய வைக்கப்பட்டிருக்கிறது.
இத்தீர்மானத்தின் முதல் வடிவம் தமிழர்களுக்கு ஆதரவான மேலும் பல அம்சங்களை க் கொண்டிருந்தது. இந்தியா, தான் ஆதரவளிக்க வேண்டும் என்றால் பல மாற்றங்களை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானத்தை இயன்றவரை வலுவிழக்கச் செய்துவிட்டே ஆதரவளித்தது. பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபருக்கு எழுதிய இதை கீழ்க்கண்டவாறு கூறி இருக்கிறார் “our Excellency would be aware that we spared no effort and were successful in introducing an element of balance in the language of the resolution.”
2012 தீர்மானத்தில் செய்யப்பட மாற்றங்கள்
இதை இந்தியா ஈழத் தமிழர்களுக்கு இழைத்த அநீதியாக பலர் பார்க்கின்றனர். இதில் வியப்பு ஒன்றும் இல்லை. இந்தியா என்றுமே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு நிலை எடுத்ததில்லை. நட்பு நாடு என்ற கண்ணோட்டத்தில் இந்தியா எப்பொழுதுமே இலங்கை அரசிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்திருக்கின்றது. ஆகையால் இதில் வியப்படைவதற்கோ, ஏமாற்றமடைவதற்கோ ஒன்றுமில்லை. ஒட்டுமொத்த தமிழக அரசியல்வாதிகளின் அழுத்தத்தால் முதல் முறையாக இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்திருக்கிறது. இந்த தீர்மானத்தை பொருத்தவரை வாக்கியங்கள் மிக முக்கியமல்ல. இது ஒரு அடையாள தீர்மானம் மட்டுமே. தீர்மானத்தில் எந்த வகையான வாக்கியங்கள் இருந்த பொழுதிலும் இலங்கை இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதை உலகத் தமிழர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதேபோன்று இலங்கையும் வெளிப்படையாகவே இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று . இலங்கை அரசை பணிய வைப்பதற்கான முதல் படியே இந்த அடையாள தீர்மானம். ஆகவே இந்தியாவின் வார்த்தை விளையாட்டுக்களால் பெரிதும் பாதிப்புகள் இருக்கப் போவதில்லை.
இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது என்பது மட்டுமே இங்கு முக்கியமானது. இந்தியா எதைச் செய்தாலும் சரியாகத்தான் செய்யும் என்று திடமாக நம்பும் பெரும்பாலான இந்தியத் தமிழர்கள் இந்த தீர்மானத்தின் விவரங்களை படித்தறியப் போவதில்லை. அவர்களைப் பொருத்தவரை தலைப்பு செய்திகளின் படி இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்திருக்கிறது என்பது மட்டுமே நிகழ்வு. இது அவர்களின் மனதில் இலங்கை தவறு செய்திருக்கிறது என்பதை உணரவைத்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலோனோர் வாசிக்கும் தினமலர் பத்திரிக்கையின் இத்தீர்மானத்தைப் பற்றிய செய்தியின் பின்னூட்டங்கள் இதற்கு ஒரு உதாரணம். நூற்றுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்களில் தோராயமாக எண்பது விழுக்காடு பின்னூட்டங்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எழுதப்பட்டிருக்கின்றன. அந்த ஆதரவான பின்னூட்டங்களில் அதிக அளவில் மக்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். ஈழத் தமிழர்களுக்கு இவ்வளவு ஆதரவு தமிழகத்தில் இருந்திருந்தால் இலங்கைப் படுகொலைகளை என்றோ தடுத்திருக்கலாம். இதுபோன்ற ஆதரவு இன்றைய ஈழத்தமிழர்களின் முன்னேற்றத்திற்கு பெரும் தேவையாக இருக்கிறது.
இந்த தீர்மானம் கொடுத்த அதிர்ச்சியில் இலங்கை நிதானமிழந்து பல தவறுகளை செய்வதற்கும் வாய்ப்பிருக்கிறது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாள் கொழும்பு நகரில் அமெரிக்கப் பொருள்களை புறக்கணியுங்கள் என்ற துண்டறிக்கைகள் வினியோகிக்கப்பட்டன. இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் இலக்குமணன் யாப்பா அபெவர்தேனா இத்தீர்மானத்தைப் போன்று காஷ்மீர் பிரச்சினையும் ஐ.நா. சபை மனித உரிமை மன்றத்தில் கொண்டுவரப்படலாம் என்று வகையில் அறிவித்திருக்கிறார். இலங்கையின் இதுபோன்ற செயல்கள் அவர்களை சர்வதேச அளவில் பலவீனமடையச் செய்யும்.
இத்தீர்மானத்தை முதல் படியாகக் கொண்டு இனி எடுக்கும் நடவடிக்கைகளில் தான் தமிழர்களின் வெற்றி அடங்கி இருக்கிறது. இத்தீர்மானம் பலவீனமான அட்டை கத்திதான் என்றாலும், சர்வதேச நாடுகள் நினைத்தால் இதை வைத்தும் இலங்கையை வழிக்கு கொண்டுவர இயலும். உதாரணத்திற்கு இந்த தீர்மானம் வலியுறுத்தும் இலங்கையின் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க குழுவின் ( LLRC) யின் 341 ஆம் பக்கத்தில் கீழ்கண்ட பரிந்துரை கொடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமை விதிகளையும் இலங்கையின் சட்டங்களையும் கருத்தில் கொண்டு கீழ்கண்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படவேண்டும். (அ). கைது செய்யபடுபவர்கள் சட்டப்படி நடவடிக்கைகளுக்காக உடனடியாக நீதிபதி முன் நிறுத்தப்பட வேண்டும்.
(ஆ). கைதிகளை இடமாற்றம் செய்யும்பொழுது உடனடியாக அவர்களின் குடும்பத்தினருக்கும் இலங்கை மனித உரிமை ஆணையத்திற்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
(இ). நீதிபதிகள் கைதிகளை மாதம் ஒருமுறை சென்று சந்திக்க வேண்டும்.
(ஈ). கைதிகளை விடுவிப்பதை முறைப்படி நீதிமன்றத்தின் வாயிலாக செய்யவேண்டும்.
தினம் தமிழர்கள் காணாமல் போகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கு தீர்வாக மேலே குறிப்பிட்டுள்ள நடவடிக்கைகளை அந்த அறிக்கை பரிந்துரை செய்திருக்கிறது. இலங்கை இது போன்ற சட்டப்படியான நடவடிக்கைகளை பின்பற்றுவதில்லை என்பதை நாம் நன்கறிவோம். மேலும் இன்றும் தமிழர்கள் தொடர்ச்சியாக காணாமல் போய்க்கொண்டுத் தான் இருக்கிறார்கள். இது போன்ற காணாமல் போகும் நிகழ்வுகளை தமிழர்கள் ஆவணப்படுத்த வேண்டும். இது மட்டுமல்லாமல் அனைத்து மனித உரிமை மீறல்களையும் தவறாமல் ஆவணப்படுத்த வேண்டும்.
இந்த ஆவணங்களை வைத்து தான் இலங்கை எந்த முன்னேற்ற நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதை சர்வதேச சமூகத்திற்கு உணர்த்த முடியும். இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் மனித உரிமை மீறல்கள் தொடர்வதை ஆவணங்கள் மூலம் நிரூபித்து இலங்கைக்கு மேலும் சர்வதேச நெருக்கடியை உருவாக்குவதே தமிழர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளாக இருப்பது அவசியம்.
சர்வதேச நெருக்கடிகளை இலங்கை தொடர்ந்து அலட்சியப்படுத்தினால், இலங்கை மீது பொருளாதாரத் தடை கொண்டுவருவதற்கான சூழ்நிலைகள் உருவாகலாம். படிப்படியாக இலங்கையை சர்வதேச அளவில் நெருக்கி தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு வரை கொண்டு செல்ல வேண்டும். இதில் வெற்றியடைவது தமிழர்களின் தொடர்ந்த உழைப்பில் தான் இருக்கிறது. முள்ளிவாய்க்காலுடன் முடிந்து விட்டது என்று நினைக்காமல் தொடர்ந்து உழைத்ததன் பலனே இன்றைய தீர்மானம். இந்த உழைப்பும் வெற்றியும் தொடர வேண்டும்.
Even though the app is celltrackingapps.com/ initially free, there are built in app purchases for many of these features
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
I’ve been absent for some time, but now I remember why I used to love this web site. Thank you, I will try and check back more frequently. How frequently you update your site?