மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அரசினர் தோட்டம், ஆளுங் கட்சி ஆட்டம்- சட்டமன்ற உறுப்பினர் விடுதி

ஆச்சாரி

Jun 15, 2012

நமது ‘சிறகு’ ஏற்கனவே, கட்சியைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் அரசியல் கட்சிகள் ஆட்சியில் அத்தகைய அக்கறை செலுத்துவதில்லை என்பது குறித்து எழுதி இருந்தது. அதன் தொடர்ச்சியாகவும் இக்கட்டுரையைக் காணலாம். ஆம் ஆட்சிக்கு வரும் கட்சி, ஆட்சியின் மூலம் தம் கட்சியினருக்கு எவ்வகை வழியிலெல்லாம் பணம் சேர்க்க வழிதிறந்து விடுகிறது என்பதைப் பற்றியும் நம் முந்தைய கட்டுரையில் சுட்டிக் காட்டியிருந்தோம். அவ்வழிகளில் ஒன்று அரசினர் தோட்டம் எனப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி அமைந்துள்ள பகுதி. இந்தப் பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான ஆளுங்கட்சியினர் கரைவேட்டி தரைபுரள வலம் வருவார்கள்.

சிபாரிசுகளுக்காக தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரை சந்திக்க வெளியூரில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான கட்சிக்காரர்கள் வந்து குவிவதால் எப்போதும் அந்த வளாகம் களைகட்டி இருக்கும். சட்டமன்ற உறுப்பினர்களின் தங்கும் விடுதி, காவல் துறை சார்ந்த அலுவலகங்கள், என்று அதிகார வர்க்கத்தின் அத்தனை அடிப்படை இலக்கணத்தோடு காட்சி தரும் ஓமந்தூரார்  தோட்டம்.  இங்கு வருவோரின்  எண்ணிக்கை சட்டமன்றம் நடைபெறும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும். ஒரு ஆளுங்கட்சி நிர்வாகி தன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரை சந்திக்க சென்னை வருகிறார் என்றால் அவருடன் ஐந்து பத்து நபர்களை அழைத்து வருவார். அவர்கள் சென்னையில் தங்கி இருக்கும் நாள் வரை இந்த வளாகத்தில் உள்ள உணவகங்களில்தான் உணவருந்துவார்கள்.

இப்படி ஆயிரக்கணக்கான நபர்கள் இந்த உணவகங்களில் வகைவகையான உணவுகளை உண்டுவிட்டு உணவுக்கான கட்டணத்தை அள்ளித் தந்து விட்டு செல்வதால் இந்த வளாகத்தில் உணவகங்களை நடத்துவோருக்கு கொழுத்த லாபம் கிடைக்கிறது. இதனால் அரசினர் தோட்ட வளாகத்தில் உணவகம் தொடங்க எல்லோரும் ஆசைப்படுவார்கள். சரி இங்கு உணவகமோ அல்லது மற்ற கடைகளை தொடங்கவோ யார், எப்படி அனுமதி தரவேண்டும் என்று பார்க்கலாம்.

சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி உள்ள இந்த வளாகம் முழுக்க முழுக்க சட்டப்பேரவைத் தலைவரின் உரிமைக்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு வணிக ரீதியான தொழில்கள் நடத்த- தொடங்க சட்டப் பேரவைத் தலைவரின் அனுமதி வேண்டும். இதற்கு முன்தொகை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் சட்டப் பேரவைத் தலைவர் எந்த நபருக்கு அனுமதி தருகிறாரோ அவர் உணவகம் தொடங்கலாம். பெரும்பாலும் ஆளுங்கட்சியினருக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டும். எந்தக் கட்சி ஆண்டாளும் இந்நிலைதான்.

இதேபோல தலைமைச் செயலகம் இயங்கும் கோட்டை வளாகத்தில் உணவகமோ சிறிய பெட்டிக்கடையோ தொடங்கவும் இந்த முறைதான் கையாளப்படுகிறது. இதுபோன்ற பண வரவு விவகாரங்களில் மட்டும் எதிர்க் கட்சியினருக்கும் ஆளுங்கட்சியினருக்கும் மறைமுக உடன்பாடு இருக்கும். அதன்மூலம் எதிர்க் கட்சியினரும் தங்களது பினாமி பெயர்களில் உணவக உரிமம் வாங்கி நடத்துவார்கள். ஐந்து ஆண்டுகளில் பெருத்த வருமானம் கிடைத்துவிடும். இந்த உணவு விடுதிகள் இரவு நேரங்களில் மதுக் கூடங்களாகவும் செயல்படும். எல்லாம் ஆளுங்கட்சியினரின் ஆதரவுடன்தான்.

இவர்களுடன் சாலையோரங்களில் சிறிய உணவகங்களை நடத்துவோரின் நிலையை ஒப்பீடு செய்து பாருங்கள். அவர்கள் எத்தனை கெடுபிடிகளை சந்திக்கிறார்கள் என்று. மாநகராட்சியின் அனுமதி வாங்க பலமுறை நடந்து – கவனிக்க வேண்டியவர்களை கவனித்து அனுமதி பெறுவதற்குள் பெரும் பாடுபடுவார்கள். அனுமதி வாங்கி சிற்றுண்டி கடை நடத்தினாலும் காவல்துறையினர் அடிக்கடி வந்து – அனுமதி வாங்கிவிட்டாயா – இரவு பத்து மணிக்கு மேல் ஏன் கடை வைத்திருக்கிறாய் என்று மிரட்டல் தொனியில் பல கேள்விகளைக் கேட்டு -எதிர்பார்த்தது கிடைத்தவுடன் சென்றுவிடுவார்கள். இந்த மிரட்டல் வசூல் எல்லாம் அரசினர் தோட்டத்தில் உள்ள உணவகங்களில் செல்லுபடியாகாது. அங்குதான் அதிகாரம் மையம் கொண்டுள்ளதே.

ஓமந்தூரார் தோட்டத்தில் மிக முக்கிய பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி. சென்னையில் சட்டமன்ற உறுப்பினர் பெயரில் சொந்தமாக குடியிருப்பு இல்லாதவர்களுக்கு இந்த விடுதியில் வீடு ஒதுக்கப்படும். எல்லாக் கட்சிகளிலும் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு மூன்று முறையாவது உறுப்பினராக இருப்பார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர், சென்னையில் அவரது உறவினர்கள் பெயரில் சிறிய வீடு வாங்கி வைத்திருப்பார். அவர்கூட விடுதியில் அறை ஒதுக்க விண்ணப்பம் கொடுத்து அறை பெற்றுவிடுவார். அமைச்சர்களுக்கு தனியே ஆடம்பர பங்களாக்கள் உள்ளன. விடுதியில் இப்படி இடம் பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த அறையை, அவர்கள்தான் பயன்படுத்துகிறார்களா என்றால் அதுதான் இல்லை. (ஒருசில சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர)

பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் இருக்கும் நாட்களில் தாங்கள் பினாமி பெயரில் வாங்கி வைத்திருக்கும் வீடுகளிலேயோ அல்லது நட்சத்திர ஓட்டல்களிலேயோதான் தங்குகிறார்கள். வெளியூர் சட்டமன்ற உறுப்பினர்கள் -சட்டமன்றம் நடைபெறும் நாட்கள் தவிர மற்ற நாட்களில் அவரது சொந்த ஊரில் இருப்பார்கள். புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட நட்சத்திர ஓட்டல்களில்தான் தங்குகிறார்கள். அப்படியானால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளை யார் பயன்படுத்துவார்கள்? வேறு யார் எல்லாம் சட்டமன்ற உறுப்பினரின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் ஆகியோர்தான்.

ஐந்து வருடமும் இவர்கள் கையில்தான் சட்டமன்ற உறுப்பினருக்கு தரப்பட்ட அறையின் சாவி இருக்கும். இவர்களின் எண்ணம் போல அந்த அறையை அவர்கள் உபயோகித்துக் கொள்வார்கள். கேட்பார் யாரும் இல்லாததால் பலவித கேளிக்கைகளுக்கு இங்கு பஞ்சமே இல்லை. இரவு முழுதும் உற்சாக பானம் அருந்தி விட்டு வகை வகையான உணவுகளை உண்டுகொண்டு இருப்பார்கள். பகல் நேரங்களில் கட்டப் பஞ்சாயத்து நடத்துவது, அரசுப் பணிகளில் டெண்டர் குறித்து பேரம் பேசுவது போன்ற காரியங்களை செய்வார்கள். பொதுமக்கள் இல்லாத பகுதி என்பதால் சட்டம் ஒழுங்கு எல்லாம் சீராக இருக்கும் என்று இரவு நேரங்களில் இந்தப் பகுதிக்குள் காவல் துறையினர் அதிகம் வலம் வருவது கிடையாது. அப்படியே வந்தாலும் பொதுமக்கள் குடியிருப்புகளில் காட்டும் கெடுபிடிகளைப் போல இங்கு காட்டமாட்டார்கள்.

இதனால் சட்டமன்ற உறுப்பினர்களின் சொந்தங்கள் இங்கு நடத்தும் சட்டத்துக்கு புறம்பான செயல்கள் நிறையவே. உதாரணமாக கடந்த ஆண்டு இறுதியில்  ஒட்டன்சத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி,  உடற்பயிற்சி செய்துவிட்டு, தான் தங்கி இருந்த விடுதி அறையில்  வைத்திருந்த பெட்டி, மற்றும் கைபேசி போன்றவை  களவு  போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தமது பெட்டியில்  ரூ.75 ஆயிரம் பணம், பல முக்கிய ஆவணங்கள் இருந்ததாக  அவர் அப்போது கூறினார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் அறையிலேயே இப்படி களவு போவது எப்படி சாத்தியம்? சாதாரண பொதுமக்கள் அவ்வளவு எளிதாக சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிக்குள் செல்ல முடியாது. அப்படி என்றால் இதற்கு யார் காரணம்?

சட்டமன்ற உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட அறையை அவரே பயன்படுத்தாமல் உறவினர்களும் நண்பர்களும் புழங்கக் கொடுப்பதால் இப்படிப்பட்ட செயல்கள் அங்கே இன்றும் நடந்துவருகிறது. வெளியில் வராத இன்னும் பல இழிதகை காரியங்கள் அந்த வளாகத்தில் நடக்கிறது.

மக்களின் மீது கண்டபடி வரியை சுமத்தும் அரசுகள் இப்படி ஓட்டைப்பானையில் தண்ணீர் ஊற்றியது போல் வீணாகும் பணத்தை கண்டு கொள்வது இல்லை.

நமது மக்களின் சுரணையைச் சொல்ல நாளெல்லாம் அரற்றினாலும் போதாது. தாம் வேறு அரசாங்கம் வேறு என்று எண்ணும் இவர்கள் இப்படி விரயமாகும் தங்கள் பணத்தைப் பற்றித் துளி கூட கவலை கொள்வது இல்லை. மக்கள் கட்டும் வரி தவிர அரசுக்கு எந்த வருமானமும் இல்லை என்று ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் சொல்லப்படுகிறது. இருந்தும் மக்களுக்கு தெளிவில்லை. அரசின் பணம் தங்கள் பணம், அது வீணாவது தமக்கு கேடு என்று மக்கள் உணரவேண்டும்.

The next sentence refers to governments of donor countries and http://domyhomework.guru/ international financial institutions, but we must ask in particular which governments and which financial institutions are the important ones for the sake of the argument

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அரசினர் தோட்டம், ஆளுங் கட்சி ஆட்டம்- சட்டமன்ற உறுப்பினர் விடுதி”

அதிகம் படித்தது