அரசின் பரிசீலனைக்கு சில தொழில்கள்
ஆச்சாரிFeb 1, 2014
மலிவு விலை காய்கறி கடை, அம்மா உணவகம், தண்ணீர் வியாபாரம் என்று தமிழக அரசு மாதாமாதம் புதிய தொழில்களைத் தொடங்கி வருகின்றது. வாக்குகளை கவருவது என்ற ஒற்றை நோக்கத்துடன் துவங்கப்படும் தொழில் திட்டங்கள் என்றாலும் சிறிய அளவிலான மக்கள் இத்திட்டங்களால் பயன்பெறத் தான் செய்கின்றனர்.
பெரும்பாலான இது போன்ற அரசு தொழில் திட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவதில்லை. பெயரளவிற்கு சில இடங்களில் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. அதுவும் சில மாதங்களுக்கோ ஒன்றிண்டு ஆண்டுகளுக்கோ தான் நடத்தப்படுகின்றன. அதன் பின்னர் அடுத்த தேர்தலை எதிர்நோக்கி மற்ற தொழில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அதிசயமாக ஏதேனும் ஒன்றிண்டு திட்டங்கள் தொடர்ந்தாலும், ஆட்சி மாறினால் முந்தைய அரசின் நலத் திட்டங்களை மூடுவதைத் தான் முதலில் செய்கிறார்கள்.
இது போன்ற அரசின் தொழில் திட்டங்களால் பெரும் அளவிலான மக்கள் பயன் அடையாததால், திட்டங்கள் மூடப்படும் பொழுது மக்களும் எதிர்வினை ஆற்றுவதில்லை.
உண்மையில் சிறந்த அரசு என்றால் எந்த ஒரு தொழிலிலும் ஈடுபடக்கூடாது. இருந்தும் இல்லாதிருப்பதைப் போன்ற மெல்லிய அரசாக இருப்பது தான் அரசிற்கு அழகு.
பொருள்களின் விலை ஏறுகின்றது என்றால் அதற்கான காரணத்தை கண்டறிந்து சரி செய்வது, அத்தொழிலை ஒழுங்குபடுத்துவது போன்ற செயல்களைத் தான் அரசு செய்ய வேண்டும். அது கடினமான செயலாக இருப்பதால் நமது அரசுகள் அப்பொருளை மலிவு விலையில் (சற்று குறைந்த தரத்தில்) நேரடியாக விற்கத் தொடங்குகின்றன.
என்ன தான் அரசு தொழில்களை அதிகாரிகள் நடத்தினாலும், உண்மையான அதிகாரத்தை கொண்டிருப்பவர்கள் அரசியல்வாதிகளே. தேர்தலுக்கு தேர்தல் முடிவெடுக்கும் அரசியல்வாதிகளால் எந்த அரசு தொழிலையும் திறமையாக தொடர்ந்து நடத்த இயலாது. அவர்களது சொந்த பணத்தை கொண்டு செய்வதில்லை என்பதால், தொழில் சிறந்தாலும், இறந்தாலும் அவர்களுக்கு வித்தியாசமில்லை.
சிறந்த அரசு தொழிலில் ஈடுபடக் கூடாது என்றாலும், நமது நடைமுறை அரசுகளைப் பற்றி தான் நாம் கவலைகொள்ள வேண்டியிருக்கின்றது. தற்போதைய சூழலில் தேர்தல் அரசியலில் வெற்றிபெற தொழில் திட்டங்கள் அவசியப்படுகின்றது என்றால், பெருவாரியான மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு பயன்படும் திட்டங்களையாவது செயல்படுத்தலாமே. அது போன்ற திட்டங்களை கண்டறிவதற்கு சிரமமாக இருக்கின்றது என்றால் கீழே கொடுத்திருக்கும் சில மாதிரி திட்டங்களை பரிசீலனை செய்யுங்கள்.
அரசு அடகு கடைகள் (Micro finance institutions):
ஏழை மக்கள் கால் வைக்கும் ஒரே நிதி நிறுவனம் அடகுகடைகள் தான். சில நூறு ரூபாய்கள் முதல் பல ஆயிரங்கள் ரூபாய் வரை மக்களின் தேவைகளுக்கு அடகு பொருள்களைப் பெற்றுக்கொண்டு உடனடியாக பணம் கொடுப்பவர்கள் அடகு கடை நடத்துபவர்களே. அடகு வைக்கும் பொருள் கூட இல்லாதவர்கள் கந்து வட்டிக்காரர்களின் கையில் சிக்கி சீரழிக்கப்படுகின்றனர்.
அடகு கடையில் கிடைக்கும் வட்டியை விட மிக குறைந்த வட்டியில் வங்கியில் கடன்கள் கொடுக்கபடுகின்றது என்றாலும், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை வட்டத்திற்குள் வங்கிகள் இன்னும் நுழையவில்லை . வங்கிகளின் கடுமையான விதிமுறைகள், மெத்தன போக்குகள், மக்களின் அறியாமைகள் போன்ற பல காரணங்களால் அடகு கடைகள் வாழ்ந்து கொண்டும் மக்கள் தேய்ந்து கொண்டும் வருகின்றனர்.
அனைத்து அடகு கடைகளையும் அரசே கையிலெடுத்து நடத்தலாம். மக்களுடன் எளிமையாக பழகும் ஊழியர்களுடன் வங்கிகள் கொடுக்கும் அதே குறைந்த வட்டியுடன் மக்களுக்கு உடனடியாக பணம் கிடைக்கும் வகையில் அரசே அடகு கடைகளை நடத்த முடியும். சில ஆயிரம் மக்களுக்கு ஒரு அடகு கடை வீதம் சிறு சிறு கடைகளாக ஊரெங்கும் திறந்து மக்களுக்கு பெரும் சேவை வழங்க முடியும். இத்தொழில் அரசிற்கு வருமானமும் தேடித்தரும்.
சிறு மருத்துவமனைகள்:
அரசு மருத்துவமனைகள் உயிர்காக்கும் சேவையை இலட்சக்கணக்கான மக்களுக்கு அளித்து வந்தாலும் பெரும்பாலும் சேவையின் தரம் மிக குறைவாகவே இருக்கின்றது. அரசு மருத்துவமனைகள் பெரிய அளவில் சிறு எண்ணிக்கையில் தூர தூரமாக அமைந்திருப்பதாலும் பெரும்பாலான நேரங்களில் மக்களால் அவசரத்திற்கு செல்லமுடிவதில்லை. இந்த குறைகளை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் கொழித்து வருகின்றன. தெருக்கு தெரு அமைந்திருக்கும் ஒரு அறை மருத்துவமனைகள் முதல் வானளாவிய கட்டடங்களையுடைய பெரு மருத்துவமனைகள் வரை அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் மக்கள் காத்துக்கிடப்பதை காணமுடிகின்றது. தனியார் மருத்துவமனையின் கட்டணங்கள் எட்டாக் கனியாக இருந்தாலும், நகைகளை விற்றும் கடன்களை பெற்றும் மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எளிதாக அவசரத்திற்கு பயன்படுத்தும் வகையில் அரசு சிறு மருத்துவமனைகள் ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்திலும் அமைக்கலாம். இருபத்தி நான்கு மணி நேரமும் மருத்துவர்களை பணிக்கமர்த்தி தனியார் மருத்துவமனைகளின் தரத்திற்கு குறையாமல் சேவை வழங்க வேண்டும். அரசு பொது மருத்துவமனைகள் போன்று இச்சிறு மருத்துவமனைகள் இலவச சேவை வழங்க வேண்டியதில்லை. தனியார் மருத்துவமனைகளை விட குறைந்த கட்டணம் வாங்கிகொண்டு சேவையளிக்கலாம். வறிய மக்களுக்கு நூறு ரூபாய் கட்டணம் குறைவு என்றாலும் பெரிய காரியமே.
குறைந்த கட்டண வழக்கறிஞர்கள்:
இன்று சிறைகளில் உள்ள கைதிகளின் குடும்ப பொருளாதார பின்னணியை ஆராய்ந்து பாருங்கள். 95 விழுக்காட்டிற்கும் அதிகமாக ஏழை குடும்பத்தினரே இருப்பர். வசதியானவர்கள் யாரும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதே இல்லையா? பொருளாதார அடிப்படையில் அனைத்து இடங்களும் சிறையில் இல்லாதவர்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா? குற்றம் ஏதும் நிரூபிக்கப்படாமலேயே எத்தனை ஆயிரம் ஏழை கைதிகள் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றனர்?
தங்கள் மீது திணிக்கப்படும் அநீதிகளிலிருந்து தங்களை காத்துக்கொள்ள கூட இயலாத அடிமட்ட சூழ்நிலையிலே தான் பெரும் அளவிலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வசதியானவர்களுக்கு கிடைக்கும் திறமையான வழக்கறிஞர்கள் ஏழை மக்களுக்கும் கிடைத்தால் இன்று சிறைக்கூடங்கள் காலியாகத்தான் கிடக்கும்.
வறியவர்களுக்கும் திறமையான வழக்கறிஞர்கள் குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் வசதியை அரசு ஏற்படுத்தினால் அவர்களுக்கு பெரும் வரமாக அமையும்.
இவற்றைப் போன்று இன்னும் எத்தனயோ திட்டங்களை பட்டியலிடுவது எளிது. மக்களுக்கு அவசியமான திட்டங்களை கண்டறிய குழு வைத்து ஆராய வேண்டியதில்லை. தலைமை செயலகத்தில் இருந்து கால்நடையாக ஒரு மணி நேரம் சாலையில் நடந்தாலே மக்களுக்கு என்ன தேவை என்பதை தெளிவாக காணமுடியும். நடப்பார்களா அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்?
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “அரசின் பரிசீலனைக்கு சில தொழில்கள்”