மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆண்டுதோறும் அறிவுத் திருவிழா

ஆச்சாரி

Feb 1, 2012

‘பொழுது போக்காகப் போய் வரலாம் வா’, என்றழைத்தேன் நண்பரை. ‘எங்கு’ எனக் கேட்டார் நண்பர். ‘புத்தகக் காட்சிக்கு’ என்றேன். சற்றுத் தயங்கியபடியே ‘சரி வா போகலாம்’ என்று புறப்பட்டார். சென்னைப் புத்தகக் காட்சி என்றால் எழுத்தாளர்களுக்கும் புத்தகங்களை வெளியிடுவோர்க்கும் ஒரு பேராவல் பிறக்கும். தமிழகமெங்கும் ஆங்காங்கே மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சி தொடந்து நடைபெற்றாலும், சென்னையில் நடைபெறும்போது ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. காரணம் சென்னை வேகமாக முன்னேறிய முன்னேறி வரும் பெரு நகரம், இங்கே புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறதா பெருகி வருகிறதா என்பது ஓரளவு இந்தப் புத்தகக் கண்காட்சி வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.

புத்தகக் காட்சி அரங்கின் வாயிலில் நுழையும்போதே ஒரு மேதைமைத் தனம் வந்துவிட்டதுபோல பேதைமை நினைவு வந்தது எனக்கு. நண்பருக்கும் அப்படித்தான் தோன்றியிருக்குமோ என்னவோ, அவர் முகத்தில் கம்பீரம் வந்து படர்ந்ததைப் பார்த்தேன். நுழைவுக் கட்டணமாக ஐந்து ரூபாய் கொடுத்து (குறைவான கட்டணம் என்றாலும் இலவசமாக ஆக்கினால் இன்னும் பயனுள்ளதாய் இருக்கும்) நுழைவு சீட்டைப் பெற்றுச் சென்றோம். கூட்டம் அதிகமாகவே இருந்தது. நண்பரும் அதைப் பார்த்து ‘பரவாயில்லை’ என்றார்.

நட்சத்திர எழுத்தாளர்கள், கவிஞர்களின் படைப்புகள் அவர்களின் புகைப்படங்களோடு பெரிய பெரிய பதாகைகளில் காணப்பட்டன. அதைப் பார்த்தவுடன், அதிகமாக வாசிக்கும் வாசகரைக் கண்டறிந்து ‘நட்சத்திர வாசகர்’ என்று அடையாளப்படுத்தி அங்கீகரித்தால்  இன்னும் வாசிக்கும் பழக்கம் பெருகும் என்ற எண்ணத்தோடு ஒவ்வொரு அரங்காக புத்தகங்களைப் பார்த்தபடி இருந்தோம் நானும் நண்பரும். நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் விலைகளும், நிறையப் பணம் கொடுத்து அதிகப் புத்தகங்கள் வாங்கிச் சென்றால் வீட்டில் ஏற்படும் நிலையும் தயக்கம் கொள்ளச் செய்தன.

எட்டயபுரத்து அரசர் ஒருமுறை, பாரதியை சென்னைப் பட்டணத்திற்கு அழைத்துச் சென்றாராம். ஊருக்குத் திரும்பிய பாரதியின் வீட்டுக்குள் மூட்டை மூட்டையாக பொருட்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டதைக் கண்டு பாரதியின் மனைவி செல்லம்மா, மிகவும் ஆர்வமுடன் ஒவ்வொரு மூட்டையாகப் பிரித்துப் பார்த்தாராம். அத்தனை மூட்டைகளிலும் புத்தகங்களே இருந்தனவாம். செல்லம்மா பொறுமையுடன் சற்று கோபத்துடன் பார்க்க, பாரதியோ அவர் வாங்கிக்கொண்டு வந்த புத்தகங்களிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துப் பெருமிதத்துடன்  படித்துக்கொண்டிருந்தாராம்.

நானும் நண்பரும், பாரதி போல வாங்கத்தான் ஆர்வப்பட்டோம். வீட்டில் பொறுமையான ‘செல்லம்மாக்கள்’ இல்லையே என்ற ஏக்கத்துடன் சில புத்தகங்களை மட்டும் வாங்கியபடி இருந்தோம். ஆனாலும் பல லட்சம் புத்தகங்கள் சூழ்ந்திருக்கும் அரங்கில் இருக்கும் இவ்வேளை, வாழும்போதே கிடைத்த சொர்க்கம் என்று மனதில் ஓர் உணர்ச்சி பிறந்து சில்லிப்பூட்டியது.  பல அறிஞர்களையும் மேதைகளையும் உருவாக்கிய – உருவாக்கப்போகிறோம் என்ற சிறு கர்வமும் இல்லாமல் புத்தகங்கள் மவுனமாக குவிந்து கிடந்தன. நண்பர் சொன்னார், “இந்தப் புத்தகங்கள் எல்லாம் அறிவுலகத்தின் சாவிகள். நாம்தான் பயன்படுத்துவதில்லை.” என்று.

இப்படிச் சொல்லிவிட்டு இன்னொரு தகவலையும் சொன்னார் நண்பர். “ஒவ்வொருவரும் ஓராண்டில் சராசரியாக 2 ஆயிரம் பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஆனால் நம் நாட்டில் ஆண்டொன்றுக்கு 32 பக்கங்கள் மட்டுமே படிக்கிறார்கள்  என்று யுனெஸ்கோ புள்ளிவிவரம் கூறுகிறது.” என்பதே அந்தத் தகவல். இது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொருந்தும் என்றும் சொன்னார். ‘நல்ல புத்தகம் நல்ல நண்பனைப் போன்றது என்பார்கள். ஒரு நல்ல நண்பனும் ஒரு நல்ல புத்தகத்தைப் போன்றவன்தான். என்றேன் நான். அதற்கு நண்பர் எப்படி? என்றார். ‘இந்தப் புள்ளிவிவரத்தைச் சொன்ன நீங்கள் நல்ல புத்தகம் தானே?’ என்றேன். நண்பரும் சிரித்தபடி ஆமோதித்தார்.

பெண்களும் பள்ளிச் சிறுவர்களும் தங்கள் தங்களுக்குத் தேவையான புத்தகத்தைத் தேடியபடி இருந்தனர். ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக நின்று நண்பர்கள் அளவளாவிக் கொண்டிருந்தனர். மின்விளக்குகளின் ஒளியைவிட  புத்தகக் காட்சி அரங்கில் குவிந்தோரின் முகங்களில் பெருமித ஒளி படர்ந்து பிரகாசித்தது. நிச்சயம் அது புத்தகங்களைக் கண்ட- வாங்கிய காரணத்தால்தான் இருக்கும். கொள்வார் குவிந்ததால் விற்பார் முகங்களிலும் அதே ஆனந்த ஒளிவீசியது. இளங்குளிர் காற்று கவரி வீசியபடி இருந்தது.

‘ஒரு மனிதன் எத்தனை புத்தகங்களைப் படித்தான் என்பதை வைத்துத்தான் அவன் வாழ்ந்த நாட்கள் கணக்கிடப்படும்’ என்று அயல் நாட்டு அறிஞர்  ஹென்ரி டேவிட் தாரோ என்பார் சொன்னதாக நண்பர் எனக்குச் சொன்னார். அங்கு நிரம்பியிருந்த புத்தகங்களைப் பார்த்தபோது என் வாழ்நாள் கணக்கை பெருக்கிக்கொள்ள ஆர்வம் பிறந்தது. ‘எழுதுகோல் தெய்வம், இந்த எழுத்தும் தெய்வம்’ என்றான் பாரதி. அந்த எழுத்துக்களை தாங்கிக் கொட்டிக் கிடக்கும் புத்தகங்கள் இருக்கும் அந்தக் காட்சித் திடல் என் கண்களுக்கு அறிவுப் பேராலயமாகத் தெரிந்தது.

அனைத்து புத்தக அரங்குகளையும் பார்த்த மனநிறைவு இருந்தாலும் புத்தகங்கள் நிறைய வாங்க முடியவில்லையே எனும் ஏக்கத்தை மனதில் இருத்தியவாறு நானும் நண்பரும் வெளியே வந்தோம். அரங்கின் வெளியே ஒரு எழுத்தாளர், புத்தகங்களின் தேவைகளையும் அதன் பயன்களையும் பற்றி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். இந்தப் புத்தகக் காட்சியை- தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் –ஆண்டுதோறும் உலக புத்தக தினமான ஏப்ரல் திங்கள் 13 அன்று  வருவதையொட்டி நடத்தலாமே என்ற சிந்தனையுடன் நானும் நண்பரும் அளவளாவினோம்.

நண்பரைக் கேட்டேன், ‘இவ்வளவு புத்தகப் பிரியரான நீங்கள் ஏன் இங்கு வருவதற்கு முதலில் தயங்கினீர்கள்?’என்று. அவர், “புத்தகக் கண்காட்சிக்கு வருவது பயனுள்ள பொழுதுபோக்குத்தான். பெண்களுக்கு நகை மீது இருக்கும் ஆசையைப் போல எனக்குப் புத்தகங்கள் வாங்க ஆசை. இங்கு வந்தால் நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும், இல்லை என்றால் நான் வருவதில்லை, அதனால்தான்.”என்றார். அவரின் ஆவலை மகிழ்வுடன் வரவேற்று அங்கிருந்து புறப்பட்டோம். வானத்தை அளந்து பார்த்த சிறகாய் களிப்புடன் துடித்துப் பறந்தது மனது.


To come back to our starting point teaching homework-writer.com matters

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “ஆண்டுதோறும் அறிவுத் திருவிழா”
  1. kasi visvanathan says:

    ‘நல்ல புத்தகம் நல்ல நண்பனைப் போன்றது என்பார்கள். ஒரு நல்ல நண்பனும் ஒரு நல்ல புத்தகத்தைப் போன்றவந்தான். அருமையான உவமை.
    நூல் நிலையம் இல்லாத இல்லம் பாழ் என்றுதான் சொல்ல வேண்டும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அறம் நூலேர் தொகுத்தவற்றிலும், படித்தவற்றிலும் தலை. படிக்கும் விருப்பம் அனைவருக்கும் வரவேண்டும். நல்ல கட்டுரை. நன்றி.

அதிகம் படித்தது