மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அலைச்சறுக்கு விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் மீனவன்-மூர்த்தி.

ஆச்சாரி

Aug 15, 2013

அலைச்சறுக்கு (Surfing) என்பது அலைகளில் சறுக்கி விளையாடும் ஒரு வகையான விளையாட்டு. இந்த விளையாட்டைக் கடலில் மட்டுமே விளையாடுவர். கடலில் வேகக்காற்று அடித்து அலைகள் வேகமாக வரும் பொது, ஒரு ஆளுயரப் பலகையில் நின்றபடியும், சுழன்றும் அலை மீது சறுக்கியும் வருவதே அலைச்சறுக்கு (Surfing) எனப்படுகிறது. இந்த விளையாட்டு 1700- ஆம் ஆண்டுகளில் இருந்தே ஹவாய் தீவில் வசித்த பழங்குடி இனத்து மக்களிடையே இந்த அலைச்சறுக்குப் போட்டி நடந்துள்ளது. தங்கள் ஆதிக்கத்தையும், தங்களது இனத்தின் சிறப்பை உணர்த்தவும் , இங்கே வாழ்ந்த பழங்குடி தலைவர்களிடையே அலைச்சறுக்குப் போட்டிகள் நடந்துள்ளது. இந்தத் தலைவர்கள் அலைச் சறுக்கு செய்ய தங்களுக்கென தனி கடற்கரையும் மற்றவர்களுக்கு தனி இடம் ஒதுக்கியும் விளையாடி வந்தனர்.

இந்த விளையாட்டில் சாதாரண மக்கள் 3.6 மீட்டர் நீளமுள்ள சறுக்குப் பலகையையும், பழங்குடித் தலைவர்கள் 7.2 மீட்டர் நீளமுள்ள சறுக்குப் பலகையையும் பயன்படுத்தி அலைச்சறுக்கு விளையாடி உள்ளனர். இந்நிலையில் ஐரோப்பியர்கள், ஹவாய் தீவில் குடியேறிய பொது இந்த விளையாட்டு தனது முக்கியத்துவத்தை இழந்தது. இதன் பின் 1900-ம் ஆண்டுகளின் புத்துயிர் பெற்றதின் விளைவாக கடற்கரையை எல்லையாகக் கொண்ட எல்லா நாடுகளிலும் இந்த விளையாட்டு பிரபலமானது. இந்த விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு இன்று கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் கோவளம் என்ற கிராமத்தில் அலைச்சறுக்குப் பள்ளியை நிறுவி இருக்கும் மூர்த்தியைப் பற்றியும்,  இந்த விளையாட்டைக் கற்றுக் கொடுக்கும் விதம் பற்றியும் அவரே கூறிய தகவல்களை இனி நாம் காண்போம்.

மூர்த்தி – (மீனவர், அலைச்சறுக்குப் பயிற்சியாளர்)

எனது சொந்த ஊர், பூர்வீகம் எல்லாம் இந்தக் கோவளம் கிராமம் தான். சிறுவயதில் என் அப்பாவுக்கும் – அம்மாவிற்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் அப்பா, அம்மாவை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். நான் அப்போது எனது தாத்தா – பாட்டி வீட்டில் தான் வளர்ந்தேன். 6 வது வரை தாத்தா வீட்டிலிருந்தே  படித்தேன். அப்போது மீன் பிடிப்பதில் ஏற்பட்ட அதீத ஆர்வத்தால் அந்த வயதிலேயே கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றேன். எனது 32 வயது வரை இந்தப் பணியே செய்து வந்தேன். மீன் பிடிக்காத நேரத்தில் எல்லாம் கடலுக்குள் நீச்சல் அடிப்பதும், கடற்கரையில் விளையாடுவதும், நண்பர்களோடு அரட்டை அடிப்பதும் என எனது வாழ்வின் பெரும்பாலான நேரங்கள் எல்லாம் இந்தக் கடலுக்குள்ளும், கடற்கரையிலும் கழிந்தது.

அலைச்சறுக்கு ஆசை எப்படி வந்தது?

எனக்கு 12 வயது இருக்கும் போது என் வீட்டிலுள்ள பயன்படாத பழைய கதவுகள், ஜன்னல் பலகைகளைக் கொண்டு சீறிவரும் அலைமீது படுத்து மிதக்கத் தொடங்கினேன். எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அலைகளில் கதவு, ஜன்னல் பலகையோடு மிதந்து விளையாடுவதையே செய்து வந்தேன். இது சம்பந்தமான நிகழ்வுகள் தொலைக்காட்சிகளில் காணும் பொது இவர்களைப் போலே நாமும் செய்ய வேண்டும் என்ற அதீத ஆசை பிறக்கும். இது எனது அலைச்சறுக்கு ஆசைக்கு மேலும் உரம் சேர்த்தது. இவ்வாறு நான் இந்தப் பலகைகளில் விளையாடும் போது இவ்வூர் மக்கள் என்னை ஏளனம் பேசினர். அதை நான் ஒரு போதும் கண்டு கொண்டதே இல்லை. என் கவனம் இந்த விளையாட்டில் மட்டுமே இருக்கும்.

இவ்வாறு எனக்கு நானே எடுத்துக் கொண்ட சுய பயிற்சியில்  நன்கு தேர்ச்சி பெற்றேன். 2001-ல் ஜாக் என்ற அமெரிக்கர் எங்கள் பகுதிக்கு வந்து அலைச்சறுக்கு விளையாடினார். தவிர கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கடல் அலைகள் எப்படி இருக்கிறது என்று அறியவும், இந்தப் பகுதியில் ஆசிரமம் நிறுவுவதற்கும் இப்பகுதிக்கு வந்தார்.

இவர் விளையாடுவதை நான் உண்ணிப்பாகக் கவனிக்கத் தொடங்கினேன். பின்பு அவரிடம் பேசி நட்பானதின் விளைவாக அவரின் சொந்த அலைச்சறுக்குப் பலகையை இரவல் வாங்கி, அவர் முன்னே கடல் அலையில் சிறப்பாக நின்று அலைச்சறுக்கு செய்தேன். அவர் இதனைக் கண்டு வியந்து பாராட்டினார். தொழில் தெரிந்த ஒருவர் கத்துக்குட்டியான என்னைப் பாராட்டியது மேலும் என்னை ஊக்கப்படுத்தியது. இதன் விளைவாக 2002-ம் ஆண்டில் ரூ.1500/- முதலீட்டில் நானே சொந்தமாக ஒரு அலைச்சறுக்குப் பலகையை விலைக்கு வாங்கினேன். பின்பு இப்பலகையின் உதவியால் சிறப்பாகப் பயிற்சி செய்து நன்கு தேர்ந்தேன்.

2007-ல் தேபேஸ் என்ற ஜெர்மன் நாட்டு அலைச்சறுக்கு விளையாட்டு வீரர் இப்பகுதியில் வந்து விளையாடினார். அவரோடு நானும் இணைந்து சுமார் ஒரு வருடமாக இவரோடு விளையாடி அலைச்சறுக்கின் நுணுக்கங்களை இன்னும் தெளிவாகக் கற்றுக் கொண்டேன். பின்பு 2008-ல் ஆகத்து மாதம் யோத்தம் அகம் என்ற இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அலைச்சறுக்கு விளையாட்டு வீரரின் தொடர்பும் கிடைத்தது. இவரோடு இணைந்தும் பயிற்சி பெற்றேன். எனது அதீத விளையாட்டு ஆர்வத்தைக் கண்ட இவர் எனக்கு 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள அலைச்சறுக்குப் பலகையை இலவசமாக அளித்து மேலும் என்னை விளையாட ஊக்கப்படுத்தினார்.

இப்படியாக ஆறு மாத இடைவெளிக்குப் பின் 2009 ஏப்ரல் மாதம் அன்று யோத்தம் அகம் இக்கடற்கரைக்கு வரும் போது நான், 15 இளைஞர்களுக்கு அவர் அளித்த அலைச்சறுக்குப் பலகையைக் கொண்டு பயிற்சி அளித்ததைக் கண்ட இவர், என்னைப் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுத்தார். இப்படம் உலக அளவில் பல மனிதர்களுக்கு என்னை வெளிப்படுத்தியது.

2010,11-ல் சென்னையிலுள்ள மகாபலிபுரத்தில் ஆகத்து 15 ம் தேதி இந்திய அளவிலான அலைச்சறுக்குப் போட்டி நடந்தது. இதில் கலந்து கொள்ள பல நாடுகளில் இருந்து அலைச்சறுக்கு வீரர்கள் வந்தனர். நானும் கலந்துகொண்டேன். சுமார் 10 வருடம் கழித்து ஜாக் என்ற அமெரிக்க அலைச்சறுக்கு வீரரை இப்போட்டியில் சந்தித்தேன். இவரின் மாணவர்களும் போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்தனர்.

இப்போட்டி விதிமுறைகளாவான:

  1. அலைச்சறுக்கு செய்பவர்கள் தாங்கள் காலுடன் சறுக்குப் பலகையை இணைத்துக் கட்டி இருக்க வேண்டும். (இதனால் ஒருவர் தவறி தண்ணீரில் விழுந்தாலும் அவரது கட்டுப்பாட்டில் இருந்து சறுக்குப் பலகை விலகிச் செல்லாது)
  2. பொங்கி வரும் அலையின் விளைவுப் பகுதியை ஒட்டியே சறுக்க வேண்டும்.
  3. சக வீரருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கடல் அலையை மறித்துக்கொண்டு நிற்பதும், பாம்பு போல் வளைந்து நெளிந்து சென்று சக வீரருக்கு இடைஞ்சல்  செய்வதும் கூடாது. இதை “ஸ்னேக்கிங்” என்று அழைப்பார்கள்.
  4. போட்டியின்பொது தனது கட்டுபாட்டில் இருந்து சறுக்குப் பலகையைக் கழற்றி விடக்கூடாது. இதனால் கட்டுப்பாடு இல்லாமல் செல்லும் சறுக்குப் பலகையானது பிற வீரர்களை மோதி பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இவ்வாறு செய்வது தடுக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளைப் பின்பற்றி நான் விளையாடியதன் விளைவாக பிரபல அலைச்சறுக்கு வீரரான ஜாக் என்ற அமெரிக்கர் கற்றுக்கொடுத்த மாணவர்களையே தோற்கடித்து இப்போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றேன். இப்போட்டியில் முதல் பரிசை பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் தட்டிச் சென்றார்.

எனது அலைச்சறுக்கு பற்றிய ஆவணப்படத்தை, டி.டி.கே நிறுவனரான  கிருஷ்ணமாச்சார்யா அவர்களின் பேரனான அருண்வாசு என்பவர், கண்டு வியந்து இந்த அலைச்சறுக்கிற்கு  (Sponsor) முதலீட்டாளராக இருக்க முன் வந்தார். இவர் செய்த இந்த உதவியால் (Covelong Point Surf School) “கோவ்லான் பாயின்ட்” என்ற பெயரில்  அலைச்சறுக்குப் பள்ளியை என்னைப் பயிற்சியாளராகக் கொண்டு கோவளத்தில் தொடங்கினார். 2012- நவம்பர் 14 அன்று இப்பள்ளியைத் தொடங்க இங்கிலாந்து நாட்டுத் தூதரும், ஆஸ்திரேலிய நாட்டுத் தூதரும் சிறப்பு விருந்தினராக வந்திருந்தனர்.

இதுவரை எத்தனை நபர்களுக்கு அலைச்சறுக்கைக் கற்றுக் கொடுத்துள்ளீர்கள்?

 

பள்ளி தொடங்கி இன்று வரை சுமார் 180 பேருக்கு அலைச்சறுக்கு விளையாட்டைக் கற்றுக் கொடுத்திருக்கிறேன். இதில் இந்தியா, பிரான்சு, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாட்டைச் சேர்ந்தவர்களும் என்னிடம் பயிற்சி பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.

உங்கள் பள்ளியின் பணிகள் என்ன?

  • அலைச்சறுக்கு விளையாட்டைப் பற்றி இங்கே உள்ள கிராம மக்களுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுத்திருக்கிறேன்.
  • இலவசமாகக் கற்றுக்கொடுக்கும் போது அலைச்சறுக்குப் பலகை, அலைச்சறுக்கு பற்றிய பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படும்.
  • இதைக் கற்றுக் கொள்ள வருபவர்கள் 3 விதிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

1. மது அருந்தக் கூடாது.

2. புகைப்பிடிக்கக் கூடாது.

3. தவறாமல் பயிற்சிக்கு வர வேண்டும்.

  • தவிர மாதத்திற்கு ஒரு முறை இந்த கோவளம் கடற்கரையை எங்கள் பள்ளியின் மூலம் சுத்தம் செய்கிறோம்.
  • சாலையில் மனநோயாளிகளைக் கண்டால் அவர்களின் முடிகளைத் திருத்தி, புத்தாடை அணிவித்து உரிய மருத்துவமனைகளில் சேர்க்கிறோம்.
  • ஆதரவற்ற முதியோர்களை எங்காவது கண்டால் அவர்களை முதியோர், இல்லத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறோம்.
  • வழி தவறி வரும் சிறார்களை குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கிறோம்.
  • கோவளம் கடலில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளும், பிற மக்களும்  பேரலைகளில் சிக்கிக் கொண்டால் “லைப் கார்டு சர்வீஸ்” என்ற அமைப்பு மூலம் அவர்களை மீட்டெடுக்க உதவி செய்கிறோம்.
  • எங்கள் பள்ளியில் கற்க வரும் மாணவர்கள் கொடுக்கும் தொகையினில் ஒரு பகுதியை எடுத்து, என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களை வெளிமாநிலத்தில் நடக்கும் அலைச்சறுக்குப் போட்டிக்கு அழைத்துச் செல்கிறேன். அவ்வாறு ஒரிசா, கேரளா, பெங்களுரு போன்ற மாநிலங்களுக்குச் சென்று முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசும் பெற்று வந்திருக்கிறோம். இதில் கேரளாவில் நடந்த போட்டியில் 13 பரிசை பெற்று முதலிடம் வகித்தோம்.
  • தவிர பள்ளியில் இருக்கும் இருப்புத் தொகையின் ஒரு பகுதியை எடுத்து இக்கிராமத்தில் படிக்கும் ஏழை எளிய குழந்தைகளின் பள்ளிச் செலவிற்காக இதுவரை 65  ஆயிரம் ரூபாய் வழங்கி உதவியுள்ளோம்.

பயிற்சியும், பயிற்சிக் கட்டணம் பற்றி:

  • இந்தியாவிலேயே மிகக் குறைந்த செலவில் அலைச்சறுக்கு விளையாட்டை நாங்கள் மட்டுமே கற்றுக் கொடுக்கிறோம். 1 மணி நேரம் பயிற்சி பெற ரூ.500 ஆகும். சிலர் 2 மணி நேரம் பயிற்சி எடுத்து விட்டு 500 ரூபாய் கொடுத்துப் போகிறவர்களும் உண்டு.
  • அடிப்படை பயிற்சி கற்றுக்கொள்ள வருபவர்களுக்கு 10 நாள் போதும். இந்த 10 நாட்களுக்கு 13 ஆயிரம் ரூபாய் கட்டணம் வழங்க வேண்டும்.
  • இந்தப் பயிற்சி பெற அடிப்படைத் தகுதி நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்.
  • தற்போது 30 பேர் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
  • பயிற்சி நேரம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை. இந்த நேரத்திற்குள் பயிற்சி பெறுபவர்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

கடலில் பயிற்சி எடுக்கும் போது உள்ள பிரச்சனைகள் என்ன?

  • எல்லா விளையாட்டுகளிலும் உள்ள சிக்கல்கள், சிரமங்கள், ஆபத்துகள் இதிலும் உண்டு.
  • அலைச்சறுக்குப் பலகையில் இருந்து தவறி நீரில் விழும்போது உப்பு நீரை குடிக்க வேண்டி இருக்கும்.
  • அலையில் தவறிவிழும் போது பலகை மேலே அடித்து காயம் ஏற்படும்.
  • பெரும் அலையினால் அலைச்சறுக்குப் பலகை உடைய வாய்ப்பு உண்டு.
  • நீச்சலும், மூச்சுப் பயிற்சி தெரிந்தால் சுலபமாக இதைக் கையாளலாம்.

உங்களின் எதிர்காலத் திட்டம்?

  • இந்தியாவிற்காக உலக அளவில் நடக்கும் அலைச்சறுக்குப் போட்டியில்  விளையாடி முதல் பரிசு வெல்ல வேண்டும்.
  • இந்தியாவிலேயே அலைச்சறுக்கு கற்றுக்கொள்ள சிறந்த பள்ளியாக இந்தப் பள்ளியை மாற்ற வேண்டும்.
  • இந்தப் பள்ளி மூலம் வரும் தொகையைக் கொண்டு இன்னும் பலருக்குத் தொண்டு செய்ய வேண்டும்.

இவ்வாறு மீனவ சமுதாயத்தில் பிறந்து, அலைச்சறுக்குப் பள்ளியின் பயிற்சியாளராகவும், சிறந்த சமூகத் தொண்டும்  செய்து வரும் மூர்த்தி போன்ற இளைஞர்கள் இருக்கும் வரை தமிழனின் புகழ் தரணியெங்கும் பேசும்.

மேலும் மூர்த்தியிடம் பயிற்சி பெற விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய அலைபேசி எண் : 9840 97 5916.

The numbers behind hinge digital dating has come http://trackingapps.org/ a long way in the last 10 years

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “அலைச்சறுக்கு விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் மீனவன்-மூர்த்தி.”
  1. Karthik says:

    Nalla pathivu. Valarga Siragu.

  2. Vel says:

    நல்ல பதிவு .

அதிகம் படித்தது