மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அழியாக் கலையின் அழகிய சாட்சிகள்!

ஆச்சாரி

Apr 1, 2012

கலைகளில் உன்னதக் கலை, உயிர்க் கலை, உள்ளம் கவரும் கலை….இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் ஓவியக் கலை பற்றி. வண்ணங்களின் கூட்டு மட்டும் அல்ல ஓவியம். மனித எண்ணங்களின் பிம்பம். உணர்வுகளின் வெளிப்பாடு. ஓவியம் உலக மொழி. ஆயிரம் ஏடுகள் சொல்லும் கருத்தை ஒற்றை ஓவியம் உணர்த்திவிடும். அந்த வல்லமை ஓவியக் கலைக்கு மட்டுமே உரித்தானது.  இயற்கையே மாபெரும் ஓவியம்தான். இயற்கையை ரசிக்காததும் ஓவியத்தை ரசிக்காததும் ஒன்றுதான். நுண்மையான உறுப்புக்களையும்,  நுண்ணிய திறன்களையும்  நுண்ணிய உணர்வுகளையும் கொண்டது  ஓவியம்.

சங்க காலப் புலவர்கள்,  அழகாகப் புனைந்து செய்யப் பட்டுள்ள பொருட்களை – அவை வீடு அல்லது  ஊராயினும் – ஓவியமாகக் கண்டனர் என்பதை,

ஓவத்தன்ன இடனுடை வரைப்பில் (புறம் – 251)

ஓவத்தன்ன உருகெழு நெடுநகர் (பதிற்றுப்பத்து – 88)

.இந்த சங்கப் பாடல் வரிகள் நமக்குக் காட்டுகின்றன.

மணிமேகலையும் அழகிய பூங்கா ஒன்றை ஓவியமாகக் (சித்திரமாக) காணுகிறது.

வித்தகரியற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுபோல்
ஒப்பத் தோன்றிய உவவனம்.

இப்படி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஓவியக் கலை வாழ்ந்து வளர்ந்து வந்தாலும் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. ஓவியக் கலை குழந்தைகளின் நினைவாற்றலைப் பெருக்கும். மற்ற கலைகளைப் பயிலும்போது சப்தம் குறுக்கிடும். ஓவியம் அமைதியே உருவான கலை. அதனால் இக்கலையைப் பயிலும்போது மனம் ஒரே நிலையில் இருக்கும். பள்ளிக்கூட வகுப்பறைகளில் ஓவிய வகுப்பு நடைபெறும்போது அமைதி இருந்ததை நாம் அறிந்திருக்கிறோம்.

இத்துணை சிறப்புகள் கொண்ட ஓவியக் கலை பற்றி அறிந்துகொள்ள பல்லவா ஓவியர்கள் கிராமம் பற்றிக் கேள்வியுற்று அங்கு பயணமானோம்.

ஓவியக் கலை வளர்ச்சியில் பல்லவர்  காலத்துக்குச் சிறப்பான இடம் உண்டு. ஓவியத்தில் ஆர்வம் கொண்டிருந்தது மட்டுமன்றிப் பல்லவ மன்னர்கள் சிலர் சிறந்த ஓவியர்களாக இருந்துள்ளதாகவும் தெரிகிறது. மாமண்டூர், காஞ்சிபுரம் கைலாசநாதர்   கோயில்,  பனைமலை,  ஆர்மாமலை ஆகிய இடங்களில் பல்லவர் காலத்து ஓவியங்கள் உள்ளன. பல்லவர் கால ஓவியர்களின் சந்ததிகள் பல்லவா ஓவியர்கள் கிராமத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அங்கு செல்ல பயணமானோம். சென்னை தாம்பரத்தில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள படப்பை என்ற இடத்துக்குச் சென்றோம். அங்கு பல்லவா ஓவியர் கிராமம் பற்றி விசாரித்த போது ஒரு கி.மீ. தூரத்தில் சிறுமாத்தூர் என்று ஒரு இடம் இருக்கிறது. அங்கு இருப்பதாக தெரிந்து கொண்டு நடந்தோம். ஒருபுறம் கட்டிடங்கள் மறுபுறம் மரங்கள் செடிகள் அடர்ந்துள்ளது. நடுவே செல்லும் பாதை நம்மை அழைத்துச் செல்கிறது. இருபது நிமிட நடை பயணத்திற்குப் பிறகு ஒரு இரும்புக் கதவில் ‘பல்லவா ஓவியர்கள்’ என்று பொறிக்கப்பட்டிருக்கும் வாயில் வரவேற்கிறது.

பெருத்த வாகனங்களின் இரைச்சல் இல்லாத- பறவைகளின் ஒலி மட்டுமே கேட்கும் அழகிய சூழல். சுற்றிலும் மரங்கள், புல்வெளிகள், வயல்கள் கொண்ட அந்த ஓவியர்கள் கிராமம் அமைதியின் தொட்டிலில் அழகாய் அமைந்துள்ளது. அங்கு நுழைந்ததும் ஓர் ஆனந்தம் ஓடிவந்து மனதில் ஒட்டிக் கொண்டது. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லை. ஆங்காங்கே வீடுகள் இடைவெளி அதிகம் விட்டு இருந்தன. உள்ளே சென்றதும் முதன் முதலில் ஒரு வீட்டில் மூன்று நான்கு பேர் அளவளாவிக் கொண்டிருந்தனர். ஒருவர் ஓவியம் தீட்டிக்கொண்டிருந்தார். ‘சிறகு’ இணைய ஊடகத்தில் இருந்து வருகிறோம்’ என்றதும் ஒரு ஓவியர் நம்மை அன்புடன் வரவேற்றார். அவர் தம்மை என் பெயர் சாம் வில்லியம் அடைக்கலசாமி என்றும் தாம் இந்த ஓவியர் கிராமத்தின் செயலாளர் என்றும் தெரிவித்தார்.

தகவல்களுக்கு சரியானவர் கிடைத்துவிட்டார் என்று எண்ணியபடி பேசத் துவங்கும்போது, ஓவியர் அடைக்கலசாமி அவர்கள் ‘சற்று இருங்கள் நாய்களுக்கு சாப்பாடு வைத்து விட்டு வருகிறேன்’ என்று கூறிச் சென்றார். உயிர் ஓவியங்களை படைப்பவர்களுக்கு பிற உயிர்களிடம் அன்பு செலுத்துவது இயற்கை என்று நினைத்தபடி, அந்தக் கிராமத்தை பார்வையிட்டோம். சற்று நேரம் கழித்து ஓவியர் வந்தார். அவருடன் உரையாடியதிலிருந்து:-

“இந்த ஓவியர் கிராமத்தில் பதினெட்டு வீடுகள் உள்ளன. 2000 ஆம் ஆண்டு இந்த இடத்தை ஓவியர் வீர சந்தானம் வாங்கினார். அவர்தான் இந்த ஓவியர் கிராமத்தின் தலைவர். பின்னர் இங்கு ஓவியர்களுக்கான வீடுகளைக் கட்டினோம். இந்த இடம் காஞ்சிபுரம் மாவட்டம். காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர்கள் நினைவாக ‘பல்லவா ஓவியர்கள் கிராமம்’ என்று பெயர் வைத்தோம். உலக அளவில் புகழ் வாய்ந்த ஓவியர்கள் இங்கு உள்ளனர். ஓவியத்தை விரும்பும் பெரும் தொழில் அதிபர்கள் இந்த வீடுகளைக் கட்டித் தந்தார்கள். இங்குள்ள ஓவியக் கூடத்தை (art gallery) குமரன் சில்க்ஸ் நிறுவனத்தார் கட்டித் தந்தார்கள்.

சென்னையிலும் கும்பகோணத்திலும் உள்ள ஓவியக் கல்லூரிகளில் படித்த ஓவியர்கள் இங்கு உள்ளனர். நான் குடந்தை ஓவியக் கல்லூரியில் படித்தேன்.  ஓவிய ஆசிரியர்கள் தனபால், எல்.முனுசாமி, அல்போன்சா அருள்தாஸ் ஆகியோரிடம் பயின்றோம்.  நாங்கள் வியாபார நோக்கத்தோடு ஓவியங்களை வரைவதில்லை. எங்களுக்கு ஓவியம்தான் உலகம். இங்கு நாங்கள் அமைதியாக வாழ்கிறோம். பறவைகள், மாடுகள், நாய்கள் இவற்றோடு நாங்கள் வாழ்கிறோம். இங்கு உள்ள ஓவியக் கூடத்தில் ஆண்டுக்கு ஒரு முறை ஓவியக் கண்காட்சி நடத்துவோம். அதில் இங்குள்ள ஓவியர்கள் வரைந்த ஓவியங்கள் இடம்பெறும். இந்த ஓவியர்கள் கிராமத்தை, வெளிநாடுகளைச் சேர்ந்த ஓவியர்களும், ஆராய்ச்சியாளர்களும் பார்த்து, இங்குள்ள படைப்புகளை தங்களுடைய ஆராய்ச்சிக்கு பயன்படுத்துகின்றனர். ஓவியம் மட்டுமின்றி, இக்கிராமத்தில் உலக புகழ்பெற்ற கட்டடக் கலை நிபுணர் லாரி பெக்கரின் மாதிரியில்  ஒரு வீடும் கட்டப்பட்டுள்ளது.

இங்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்து ஓவியப் போட்டி நடத்தி அவர்களுக்கு பணப் பரிசுகள் அளிப்போம். கல்லூரி மாணவர்கள் இங்கு வந்து எங்களுடன் தங்குவார்கள். எங்களுடன் ஓவியம் வரைந்து பயிற்சி பெறுவார்கள். உலகில் எங்கு மனித உரிமை மீறல் நடந்தாலும் முதல் குரல் எங்கள் ஓவிய கிராமத்தில் இருந்து ஒலிக்கும். தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஆனந்த விகடன் நடத்திய ஓவியக் கண்காட்சியில் எங்கள் ஓவியங்கள் பெரும் தொகைக்கு விற்பனை ஆயின. அந்தத் தொகையை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்தோம்.

இந்திய, தமிழ்க் கலாச்சாரத்தை மனதில் வைத்து வரைவது ஒரு வகை ஓவியம். Abstract paint  என்பது இயற்கையை மனதில் வைத்து அதை மறைத்து வரைவது ஆகும். கற்பனை ஓவியங்கள் ஒருவகை. இதை surreal paint  என்று சொல்வார்கள். Pop art  என்பது கணினி துணைக் கொண்டு வரையப்படும் ஓவியம். Consumer art  என்பது ஒரு வகை. அதாவது பற்பசை, குளியல் பொருட்கள் போன்ற பொருட்களைத் தயாரிக்கும் வியாபார நிறுவனங்களுக்காக வரைந்து கொடுப்பது. நான் இயற்கையை அதிகம் நேசிப்பவன். அதனால் இயற்கை ஓவியங்களை வரைகிறேன். நாற்பது ஆண்டுகளாக இயற்கை ஓவியங்கள் வரைவதால் இப்போது எனக்கு அந்த இயற்கை தங்கமாகத் தெரிகிறது. அதனால் தங்க நிறத்தில் இயற்கை ஓவியங்களை வரைகிறேன். ஆதி மனிதன் மாறிவிட்டான். ஆனால் இயற்கை அப்போதும் இப்போதும் மாறவில்லை. இதனை மையமாகக் கொண்டு ஓவியங்களை வரைகிறேன். அதுதான் இந்த ஓவியங்கள். (பொன் போன்று மின்னும் தான் வரைந்த ஓவியங்களைக் காண்பிக்கிறார். இந்த ஓவியங்களை பாத அணிகளின் அடிப் பாகத்தைக் கொண்டு வரைந்ததாக அவர் சொல்லும்போது வியப்பாக இருந்தது.) இப்போது நான் இயற்கையாகவே மாறிவிட்டேன்.

இங்கு ஓவிய ஆசிரியர் ஜி.ராமன், ராஜசிகாமணி, ஜெய்கனி, பாலசுப்பிரமணியம், பிரேம்குமார், நெல்சன் கென்னடி, கார்த்திக் உள்ளிட்ட ஓவியர்கள் உள்ளனர். இங்குள்ள ஓவியர்கள் உலகம் முழுதும் சென்று பல ஓவியக் கண்காட்சிகளைப் பார்த்து வந்துள்ளனர். எங்கள் ஓவியங்கள் இந்தியாவில் நடைபெறும் முக்கியக் கண்காட்சிகள் மற்றும் லண்டன், பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் ஓவியக் கண்காட்சியில் இடம் பெறும். எங்களுக்கு பார்வதி ஓவிய உலகம், ஆர்ட் பிரமோட்டர்ஸ் ஆகிய அமைப்புகள் உதவி செய்கிறது. இந்த அமைப்புகள் எங்கள் ஓவியங்களை உலக அளவில் கொண்டு செல்கின்றன.” இவ்வாறு ஓவியர் அடைக்கலசாமி தெரிவித்தார்.

இவ்வளவு சிறப்பும் புகழும் கொண்ட இந்த ஓவியர்கள் கிராமத்துக்கு அரசு உதவி செய்து மேம்படுத்தினால் உலகப் பார்வை இந்த இடத்தின் மீது விழுமே என்ற ஆவல் ஓவியர் உரையாடலில் தொனித்ததை அறிந்தோம். அந்த கிராமத்தைப் பார்த்து விட்டு திரும்பும்போது அந்த எண்ணமே தோன்றிக்கொண்டே இருந்தது. அழகியலின் உச்சம் ஓவியம். அந்தக் கலை காலங்கள் கடந்து வாழும் என்பதற்கு பல்லவா ஓவியர்கள் கிராமம் சாட்சியாமாகத் திகழ்கிறது.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இன்னொரு ஓவிய கிராமமான சோழமண்டலம் ஓவியர்கள் கிராமத்திற்குச் சென்றோம். கடற்கரை காற்றின் மெல்லிய வருடலில் ரம்மியமாய் அமைந்துள்ளது அக்கிராமம். இந்த ஓவியர்கள் கிராமம் பற்றி இங்கிருக்கும் ஓவியர் பி.ஓ. சைலேஷ் கூறியது:-

‘1960இல் மறைந்த கே.சி.எஸ். பணிக்கர், அவர்கள்,  40 பேர் கொண்ட குழுவுடன் இணைந்து தோற்றுவித்தது தான் இந்த சோழமண்டலம்’. ஓவியர்களுக்கு முழு கற்பனை சுதந்திரம் மற்றும் வாழ்வாதாரம் வேண்டும் என்ற நோக்கோடு இயற்கை எழில் கொஞ்சம் சுற்றுச் சுழலுடன் இந்தக் கலைக் கிராமத்தை உருவாக்கினார்கள். அப்பொழுது இந்தக் கிராமத்தில் உள்ள ‘கலைக்கூடம்’, ஒரு குடிசையினுள் இயங்கி வந்தது. இப்போது நவீனமாகவும் அழகாகவும் உருப்பெற்றுள்ளது. இங்கு உருவாகும் படைப்புகளின் விற்பனையில் இருபது சதவிகிதம் சோழமண்டலம் ஓவியர் கைவினைப் பொருள் கூட்டமைப்பினை’ச் சேரும். அதைக் கொண்டு கலைக் கிராமத்தை மேம்படுத்தி வருகின்றனர். அமைதியான சூழலில் நீங்கள் ஓவியம் அல்லது சிற்பம் வடிக்க 2 ‘கலைவினை வீடுகள்’ (studio appartments) சகல வசதிகளுடன் மாத வாடகைக்கு உள்ளது.

வளர்ந்து வரும் ஓவியர்களை ஊக்குவிக்க , மூன்றாம் தலைமுறை ஓவியர்கள் சேர்ந்து ‘பிராக்ரசிவ் பெயிண்டர்ஸ் அசோசியேஷன்’ (PPA) என்ற அமைப்பை  நடத்தி வருகிறார்கள். வருட சந்தா ரூ.50, ஆயுள் சந்தா ரூ.500. எல்லாமே ஓவியர்களுக்கு மட்டுமோ என்று நீங்கள் நினைக்கக் கூடும். அல்ல.. வாரக் கடைசி நாட்களில் ஓவிய ஆர்வலர்களுக்கு, குழந்தைகளுக்கு என்று சில பாடங்களையும் நடத்துகிறார்கள். ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ‘முக ஓவியம்’ (portrait study) மற்றும் ‘லைஃப் ஸ்டடி’ அமர்வு நேரம் (sessions) காலை தொடங்கி, மதியம் வரை  நடைபெறும். இப்பயிற்சிகள் ஜூன் மாதம் முதல் தொடங்கும் இதற்குக் கட்டணம் ரூ.50/- பொருட்கள் மற்றும் தேநீருடன். இக்கட்டணம் பங்கேற்பாளர்களிடம் உள்ள ஆர்வத்தை உறுதிப்படுத்தவே தவிர வணிக நோக்குக்காக அல்ல.” இவ்வாறு ஓவியர் கூறினார்.

ஓவியம், மிகப் பழங்காலத்திலேயே தோன்றிய கலை.  ஒன்றினைப் போல் இன்னொன்று – அதாவது  ஒவ்வுதல் எனும் பொருளையுடையது ஓவியம். உவமம் என்ற சொல்லும் அதனோடு உறவுடையது. ஒவ்வுதல் – ஓவம் – ஓவியம். காட்சியளவில் பார்த்தற்குரிய இந்த நுண்கலை, புனைந்து செய்யப்படுவது.  புனையா ஓவியம் என்று சங்கப் பாடல் கூறுகிறது. ‘ஓவியத்தை, பேசாத கவிதை (Silent Poetry) என்பார்கள்.

இத்தகைய சிறப்பு பெற்ற ஓவியக் கலையின் உன்னதங்களாகத் இந்த இரண்டு ஓவிய கிராமங்களும் திகழ்கின்றன.

Now that the student knows the topic he wants to write about, official web site he will again brainstorm by freewriting, this time on the parking problem only

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “அழியாக் கலையின் அழகிய சாட்சிகள்!”
  1. Ramesh s says:

    i want interst in the drawing,painting,and i am more interest in sculpures but how will do it .just i want your help and your tips …

  2. Ramesh s says:

    i want interst in the drawing,painting,and i am more interest in sculpures bet how will do it .just i want your help and your tips …

அதிகம் படித்தது