மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அவாயி பயணக்கட்டுரை

ஆச்சாரி

Jan 11, 2014

பயணக்கட்டுரைகள் பலரால் எழுதப்பட்டுள்ளது, பயணக்கதை என்றும் சிலர் கூறுவார்கள். பெரியவர்கள் பலர் பயணக்கட்டுரைகள் எழுதியுள்ளதால் எவர் எழுதினாலும் அக்கட்டுரைகளை ஒப்பிடுவது தவிர்க்க முடியாது. இது எனது முதல் பயணக்கட்டுரை, எப்படி எழுதுவது என்பதும் எனக்குத் தெரியாது, எனக்கு நினைவிலிருப்பவைகளை வைத்து எழுதவுள்ளேன். இதை பயணக்குறிப்பு என்று கூறுவது தகும் என்று நம்புகிறேன். நீண்ட நாளாக ஒரு பயணக்கட்டுரை எழுத வேண்டுமென்பது விருப்பம், ஆனால் இம்முறை சிறகு ஆசிரியர்குழு எழுதிதான் ஆகவேண்டும் அன்பு கட்டளையிட்டதால் மறுப்பேதும் கூறமுடியாமல் எழுத முயற்சிக்கிறேன். இதிலுள்ள குறைகளுக்கு நானே பொறுப்பு.

மேலைநாடுகளில் சுற்றுலாப் பயணமென்பது தவிர்க்கமுடியாத செயலாக ஆகிவிட்டது. தற்போதைய இயந்திரவாழ்வின்  சலிப்பை சற்றே தணிக்க இப்பயணங்கள் உதவுகின்றன என்பதை கூறவேண்டியதில்லை. இந்த நல்லதொரு பழக்கம் தமிழகத்திலும் வளர்ந்துவருவது நிறைவைத் தருகிறது. அனைவருக்கும் ஓய்வு தேவை, அதுவும் இன்பச்சுற்றுலாவாகவிருந்தால் மனம் நிறைவு பெரும் என்பதில் ஆய்வாளர்களுக்குள் மாற்றுக் கருத்துகள் இல்லை. ஒவ்வொரு ஆண்டு இறுதியில் குடுப்பத்துடன் நீண்டதொரு பயணம் செல்வது அமெரிக்கவாழ்வில் வழக்கமாகிவிட்டது.

அமெரிக்காவின் மிகச்சிறந்த சுற்றுலாத்தளங்களில் ஒன்றான அவாயித் தீவுகளுக்கு (Hawaii Islands) செல்லவேண்டும் என்கிற நீண்டகாலக் கனவு இந்த குளிர்கால விடுமுறையில் சாத்தியமானது. அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களில் திசம்பர் இறுதியில் குளிர் அதிகமாகவே இருக்கும், நடுங்கும் குளிரிலிருந்து தப்புவதே ஒரு தனி இன்பம். அவாயித் தீவுகள் வெப்பமான தட்பவெப்ப நிலையைக் கொண்ட இடம். ஆனால் திசம்பர் திங்களில் அத்தீவுகளின் இதமான நிலை சுற்றுலாப் பயணிகளை அங்கு கட்டியிழுத்துச்செல்கிறது.

அவாயித்தீவுகளுக்குச் செல்வதென்றால் மனதில் ஒன்றை நிலைநிறுத்த வேண்டும், அது செலவு, கொஞ்ச நஞ்சமில்லை, பெருஞ்செலவு. அமெரிக்காவிலிந்து தமிழத்திற்குச் செல்வதைக் காட்டிலும் அதிக செலவு செய்யவேண்டியிருக்கும். ஆறு மாதங்களுக்கு முன்பே விமானம், தங்குமிடம், சுற்றிப்பார்க்க மகிழ்வுந்து பதிவுசெய்து என்று திசம்பர் 20 வரும் என்று காத்திருந்தோம். அந்த நாளும் வந்தது, குடும்பத்துடன் சான்பிரான்சிசுகோ வளைகுடாப் பகுதியிலுள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கின் தலைநகராகிய சான் ஓசே பறப்பகத்திலிருந்து அவாயித்திவு நோக்கி பயணமானோம்.

அவாயி மாநிலத்தில் (http://en.wikipedia.org/wiki/Hawaii) நான்கு பெரிய தீவுகளுள்ளன. பல சிறிய தீவுகளும் உள்ளன. அவாயித் தீவு (இதை பெரிய தீவு – Big Island என்றும் கூறுவர்), மாவி, ஒவாகு மற்றும் குவாயித் தீவுகள் முதன்மையானவை. அவாயித் தீவுகள் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து சுமார் 2300 மைல் (3800 கிலோமீட்டர்) தொலைவிலுள்ளது. பசிபிக் பெருங்கடலின் நடுவில் இத்தீவுகள் எரிமலை வெடிப்பினால் உருவாகின. குவாயித் தீவு சுமார் 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று கூறுகிறார்கள்.

அவாயித் தீவு (Big Island) 300,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி இன்றும் வளர்ந்து வருகிறது. இத்தீவினில்தான் இன்றும் எரிமலை (Volcano) பிழம்புகள் (lava) வெளிவந்துகொண்டிருக்கின்றன. மற்றத் தீவுகளில் அவை செயலிழந்துவிட்டன.

அவாயித்தீவில்தான் நாங்கள் தங்கியிருந்தோம். பெரும்பாலான தங்குமிடங்கள் (Resorts) கடற்கரையிலுள்ளதால் எந்நேரமும் கடலின் கண்கொள்ளாக் காட்சி மனதில் என்றும் நிறைந்திருக்கும். முதல்நாள் தீவின் வடமுனையிலுள்ள கடற்கரைக்குச் சென்றோம். சுமார் 45 நிமிடங்கள் நடந்து மலையின் கீழ் உள்ள இந்த கடற்கரையை அடைந்தோம்.

கருப்பு கடற்கரை (Black beach) என்று கூறுகிறார்கள். அவாயித் தீவுகளின் சிறப்பு அதன் இயற்கை கட்சிகள். மலை, பள்ளத்தாக்கு, அடர்ந்த காடுகள் அதன் கீழே அழகிய கடற்கரை, விடைபெற மனமில்லாமல் அங்கிருந்து புறப்பட்டோம். வழியில் பல அழகிய இடங்கள், கடல்வாழ் விலங்கினங்களை பாதுகாக்கும் ஆய்வுக்கூடங்கள், அழகிய சிறிய கிராமங்கள், எழுத வார்த்தைகளில்லை. இங்கு நான் எடுத்த நிழற்படங்களே சாட்சி.

அடுத்த நாள் நாங்கள் தங்கியிருந்த கோனா (Kona) பகுதியிலிருந்து ஈலோ (Hilo) என்கிற நகருக்கு சென்றோம். அவாயித்தீவுகளின் மற்றொரு சிறப்பு, தட்பவெப்ப நிலைகள் பகுதிக்கு பகுதி வேறுபடும். கோனா ஒரு வரண்ட பகுதி, மழை அதிகமில்லாப்பகுதி. ஆனால் ஈலோ வளமான பகுதி, காடுகள் நிறைந்த இடம், மழை தினமும் பொழியும் பகுதி, அதனால்தான் பெரிய சுற்றுலாத் தங்குமிடங்கள் கோனா பகுதியிலுள்ளன. ஒரு மணிநேர பயணத்திற்கு பின்பு அவாயித் தீவின் இயற்கை வேறுபாடுகள் தெரியத் துவங்கின. வரட்சி காணாமல் போய் பசுமை எங்கு நிறையத்துவங்கின. போகும் வழியில் பல அழகிய கடற்கரைகள், நீர்வீழ்ச்சிகள்.

அகாகா நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம் ஒரு அருமையான காட்டுப்பகுதி. அங்கிருந்து புறப்பட்டு ஈலோ நகருக்கு வந்தடைந்தோம். ஈலோ பறப்பகத்திலிருந்து உலங்கூர்தி (Helicoptor) மூலம் சில எரிமலைப் பகுதியை பார்க்கச் சென்றோம். பாதுகாப்பு விவரம் குறித்த காணொளிக்குப் பின்பு 5 இருக்கைகள் மட்டும் இருந்த சிறிய உலங்கூர்தியில் பயணமானோம். நாங்கள் அவாயித் தீவிலிருந்த அதே நேரத்தில் அமெரிக்க குடியரசுத் தலைவர் திரு பராக் ஒபாமா அவர்கள் மாநிலத் தலைநகரான ஓனலூலு (Honalulu) பகுதியில் விடுமுறைக்கு வந்திருந்தார். குடியரசுத் தலைவரின் மற்றொரு வானூர்தியான வான்படை-2 (Air Force 2) ஈலோ பறப்பகத்தில் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டோம். அவரது முதன்மை வானூர்தி ஓனலூலு நகரில் இருக்க AF2 அருகிலுள்ள நகரில் இருப்பது வழக்கம். எங்கள் உலங்கூர்தி ஈலோ புறநகர்ப்பகுதியைக் கடந்து எரிமலை புகைமண்டலத்தை நோக்கி விரைந்தது.

போகும் வழியில் ஈலோவின் பசுமையான விவசாய நிலங்களையும் தாண்டி இரு எரிமலைகளைக் காண முடிந்தது. இவையிரண்டிலிருந்தும் வெண்புகை வருவது கண்டோம். இதுவரை எரியும் எரிமலையைக் கண்டிராத எங்கள் அனைவருக்கும் இது ஒரு அச்சம் கலந்த ஆவலைத் தூண்டியது. போகும் வழியில் எரிமலையினால் அழிந்த சில பகுதிகளை வானூர்தி ஓட்டி காட்டினார். எரிமலைக் குழம்பினால் பாதிப்பு எப்படியிருக்கும் என்பதை கண்ணால் கண்ட போது அச்சம் ஏற்படாமல் இருக்க முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலைப் பிழம்பு இந்த அழிவை உண்டாக்கியுள்ளது. அதன் பின்பு முதல் எரியும் மலையான பூஉ ஓவோ (Pu’u’O’o)-வைக்காண முடிந்தது. நெருப்புப் பிழம்பின் அழிவை கண்ணால் காணும் போது இயற்கையின் முன் மனிதன் ஒரு சிறு எறும்பு என்பது தெளிவானது. மற்றொரு எரிமலையான கிலுவுவே (Kilauea) அதிக புகை வெளிவந்ததால் குழம்பின் மேல் செல்ல முடியாத நிலை சிறிது ஏமாற்றத்தைத் தந்தாலும் ஓரளவிற்கு அருகில் செல்ல முடிந்தது, வழியில் சில நீர்வீழ்ச்சிகளைக் காட்டியபின் பறப்பகம் வந்து சேர்ந்தோம். கிலுவுவே எரிமலைப் பகுதிக்கு இன்னும் இரு நாட்களில் சாலை மூலம் செல்லவிருந்ததால் பெரிய ஏமாற்றத்தை தரவில்லை. இந்த அனுபவம் விவரிக்க முடியாததொரு இன்ப அனுபவம். கிலுவுவே எரிமலைப் பகுதிக்கு இன்னும் இரு நாட்களில் சாலை மூலம் செல்லவிருந்ததால் பெரிய ஏமாற்றத்தை தரவில்லை. ஈலோவில் இரவு உணவு உட்கொண்டபின் கோனோ நோக்கி பயணமானோம். அவாயியில் திடீரென்று பெருமழை வரும் என்று கேட்டிருக்கிறேன், அதை நிருபிக்கவோ என்னவோ, புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் நான் என் வாழ்நாளில் காணாத பெருமழை கொட்டியது. சாலை நன்றாக இருந்தாலும், மையிருட்டும், காற்றும், 10 அடி சாலையைக் காண முடியாத மழையும் எங்களை அச்சத்தில் ஆழ்த்தியது என்பது மிகையல்ல. கிட்டத்தட்ட 45 நிமிட திகிலுக்குப் பின்பு மழையின் கோரம் நின்றது.

அடுத்த நாள் கடல்வாழ் உயிரினங்களை காணும் வாய்ப்பு. நீரில் மிதந்து கீழே வாழும் கடல் உயிரினங்களைப் பார்க்கும் செயலுக்கு Snorkeling என்று கூறுகிறார்கள். என்போன்ற நீச்சல் தெரியாதவர்களுக்கு இது சாகசச்செயல். போகும்வழியில் காப்பித் தோட்டங்களை கண்டோம். கோனா காபி உலகத்தரமானது என்று கூறுகிறார்கள். எரிமலை குழம்பினாலும், தகுந்த வெப்பநிலையினாலும் காபி வெகுவளவில் விளைகிறது இங்கு. பின்பு ஒரு சிறிய படகு மூலம் கடல்வாழ் உயிரினங்கள் வாழும் பகுதிக்குச் சென்றோம். அந்த கடற்கரையின் ஆழம் குறைவு எனவே கடலில் மிதந்துக் கொண்டு கண்ணாடிமூலம் பார்த்தால் தெளிவாகத் தெரியும். மூச்சிழுக்க ஒரு சிறு குழாய் அதை வாயில் கடித்துக் கொண்டு வாயில் மூச்சிழுக்க வேண்டும். சிறு போராட்டத்திற்கு பின்பு ஓரளவிற்கு எளிதாகியது. ஆனால் அந்த அனுபவம் மறக்க முடியாதது, வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

பல நிறங்களிலான மீன் வகைகள், நட்சத்திர மீன்கள், பவளப்பாறைகள் மேலும் பல உயிரினங்கள் ஓரிரு அடிக்கு கீழ் நீந்துவது ஒரு கண்கொள்ளாக் காட்சி. இந்த இடத்தில் கேப்டன் சேம்சு குக் (Captain James Cook) என்பவரின் சமாதியுள்ளது. குக் 1779-ம் ஆண்டில் அவாயி வீரர்களுடன் போரிட்டு உயிரிழந்தார். இவர் பிரித்தானிய கடற்படையைச் சேர்ந்தவர். இவரைக் குறித்த விவரங்கள் http://en.wikipedia.org/wiki/James_Cook உள்ளது.

அடுத்த நாள் மற்றொரு மறக்கமுடியாத அனுபவம். வண்டியிலும் நடந்தும் அவாயி எரிமலை தேசியப் பூங்காவைக் காணும் பயணம். உலங்கூர்தி மூலம் பார்த்த சிலவற்றை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு. இதைக் காண சுற்றுலா பயண நிறுவனத்தின் மூலம் 15 நபர் உட்காரும் வண்டியில் பயணமானோம். எங்களுடன் மேலும் 3 குடும்பங்கள் வந்தனர். ஓட்டுநர் செல்லும் வழியெல்லாம் நன்கு விவரித்து வந்தது வரலாற்றுப் பாடம் எடுத்தது போலிருந்தது. வழிகாட்டி/ஓட்டுநர் ஒரு சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர். எனக்கும் சுற்றுப்புறத்தின் மீது சற்று ஆர்வல் இருந்ததால் அந்நாள் மிக மகிழ்வான நாளாக இருந்தது. தேசியப் பூங்காவிற்கு செல்லுவதால் அந்த சுற்றுலா நிறுவனமே மதிய உணவு மற்றும் இரவு உணவு பரிமாறியது. எரிமலையின் வகைகள் அவாயி எப்படி தோன்றியது, அவாயியின் மொழி, மக்கள் குறித்த உண்மைகள் என்று அவர் கூறிக்கொண்டே வந்தது அனைவருக்கும் பிடித்திருந்தது. எரிமலையில் பலவகைகள். மலையின் உச்சியிலிருந்து பிழம்புகள் (Cone) வருவது. மற்றொன்று பிழம்பினால் மட்டும் ஆனது (Shield). அவாயி எரிமலைகள் இரண்டாம் வகையைச் சார்ந்தது. தொலைவிலிருந்து பார்த்தால் இந்த எரிமலைகள் தெரியாது, வெறும் புகை மண்டலத்தை மட்டும் காண முடியும். இவ்வகையான எரிமலைகளைக் காண அருகில்தான் செல்ல வேண்டும்.

ஓட்டுநர் அவாயித் தீவின் வரலாற்றையும் விவரித்து வந்தார். அவாயி மொழி பாலினேசியன் மொழிகளினால் உருவானதாகக் கருதப்படுகிறது. அவாயி மக்களைக் காணும் போதும் அவர்கள் பாலினேசியன் தீவு மக்களைப் போல் இருக்கிறார்கள். அவாயி மொழி போன்று கீழ்த்திசை ஆசிய நாடுகளில் பேசப்படுகிறது என்கிற செய்தியும் கூறினார். ஆனால் வியப்பான ஒன்று, எப்படி அவர்கள் பல்லாயிர மைல்கள் கடலிலி பயணித்து அவாயிக்கு வந்திருப்பார்கள் என்பதுதான். ஒருவருரிடமும் இதற்கு விடையில்லை. நம் முன்னோர்களின் இந்த பயண ஆர்வம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அவாயி மக்கள் பல நம்பிக்கைகளுடன் வாழ்ந்திருப்பது தெரியவருகிறது.

இருமணிநேர பயணத்திற்கு பின்பு அவாயி தேசிய எரிமலைப் பூங்காவை அடைந்தோம். சிறிது நேர சாலைப் பயணத்திற்கு பின்பு கிலுவுவே எரிமலையைக் காண நடக்கத் துவங்கினோம். சிறிது நேரத்திலேயே வட்டவடிவிலான பள்ளத்திலிருந்து புகைவருவது தெரிந்தது. எரிமலை நெருப்பை கக்கிக் கொண்டிருப்பதால் 100 மீட்டருக்கு மேல் செல்ல தடை விதிக்கப் பட்டிருந்தது.

சில நிழற்படங்கள் எடுத்துக்கொண்ட பின்பு சாக்கர் கண்காட்சியகத்திற்குச் (Jagger Musium) சென்றடைந்தோம். அங்கிருந்தும் சில படங்களை எடுத்துக் கொண்டு கிளம்பினோம். வழியில் பல இடங்களில் நிறுத்தி நிலத்தில் எரிமலைகளினால் பெரும் விரிசல் ஏற்பட்டிருப்பதைப் பார்த்து வந்தோம். இவைகளை Devil’s Crack என்று கூறுகின்றனர்.

அந்தி சாயும் நேரத்தில் இரவு உணவு பரிமாறப்பட்டது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால் சாலை துண்டிக்கப்பட்டுவிட்டது. ஞாயிறு வானில் மறையும் காட்சியைக் கண்டபின் மீண்டும் பயணத்தைத் துவங்கினோம்.

வழியில் பிழம்பினால் ஆன பெரும் குழாயைக் (lava tubes) கண்டோம். பிழம்பு பெருக்கெடுத்து ஓடும்போது வெளிப்பகுதி (surface) விரைவில் குளிர்ந்து வெளிப்பகுதி குழாய் போன்று கெட்டியாகிறது. உள்பகுதியில் பிழம்பு ஓடிக்கொண்டிருக்கும். பிழம்பு அனைத்தும் வடிந்த பின்பு இந்த பிழம்பு குழாய்கள் இறுகி விடுகின்றன. அவாயி மக்கள் அங்கு புகலிடம் புகுந்து வாழ்ந்திருக்கின்ற சான்றுகள் இன்றும் இக்குழாய்களுக்குள் இருக்கின்றன.

அதன் பின்பு இரவில் கிலுவுவே நெருப்புப் பிழம்பைக் காண சாக்கர் கண்காட்சியகத்திற்கு மீண்டும் சென்றோம். இரவில் பிழம்பினால் வெளிவரும் ஒளியை நன்கு காண முடிந்தது. பகலில் வெறும் புகையாகத் தெரிந்தது இரவில் எரிமலையாகத் தெரிந்தததைக் கண்டது மறக்க முடியாத காட்சி. நாள் முழுதையும் எரிமலைப் பூங்காவில் செலவிட்டு கோனா நோக்கிப் பயணித்தோம்.

அவாயி விடுமுறை கண்சிமிட்டு திறப்பதற்குள் முடிந்து விட்டது. அடுத்த நாள் கோனாவிலிருந்து சான் ஓசேவிற்கு கனத்த நெஞ்சுடன் பயணித்தோம். அடுத்த முறை வேறெதாவது தீவிற்கு செல்லலாம், ஆனால் எப்பொழுது என்பது தெரியாமல் புறப்பட்டோம். அவாயித் தீவுகளுக்கு அடுத்த பயணத்தை எதிர்நோக்கியுள்ளோம்.

Two history http://college-homework-help.org/ experts and a group of future teachers were asked to read and interpret a set of documents about abraham lincoln and his view of slavery

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அவாயி பயணக்கட்டுரை”

அதிகம் படித்தது