ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியின் பின்னணி.
ஆச்சாரிDec 14, 2013
ஆம் ஆத்மி கட்சி தொடங்கி ஒரு வருடத்தில் மாபெரும் வெற்றி பெற்று ஒட்டு மொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வெற்றியானது மாறி வரும் இந்திய அரசியல் சூழல்களின் தொடக்கம் எனலாம்.
“ஊழல் ஒழிப்பு” என்ற ஒற்றைக் கோரிக்கையே அவர்களின் வெற்றிக்கு முதன்மை காரணம். ஊழல் மட்டுமே இந்தியாவின் முதன்மையான பிரச்சனையாகப் பார்க்கும் நடுத்தர, படித்த மக்கள் வாழும் டெல்லியில் இந்த வெற்றி சாத்தியமானதில் வியப்பு எதுவும் இல்லை. இந்த வெற்றி கிராமங்களிலும் வேற்று நகரங்களிலும் சாத்தியமா என்றால் நிச்சயம் கடினமே.
மேம்போக்கான அரசியல் அறிவு கொண்டவர்களுக்கு இந்த வெற்றியானது மகிழ்ச்சியையும், வல்லரசு கனவையும் கொண்டு வரும் என்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் இந்த வெற்றியின் வேறுபட்டகோணத்தைப் பார்க்கவேண்டிய தருணத்தில் உள்ளோம்.
அரசியல் (Politics) என்பதன் அர்த்தமே, கொள்கை (Policy). ஊழல் ஒழிப்பு என்பது என்றுமே கொள்கையாக இருக்க முடியாது. ஆம் ஆத்மி கட்சியின் கொள்கை என்ன? அவர்களின் பொருளாதாரக் கொள்கை என்ன? இட ஒதுக்கீட்டில், இயற்கை வளங்களைப் பேணிக் காப்பதில், அணு சக்தியில், நதிகள் தேசிய மயம் ஆவது, மொழிக் கொள்கை, மாநில உரிமை தன்னாட்சி என்பதில் இப்படிப் பல்வேறு துறைகளில் அவர்களின் கொள்கை என்ன? என்பதை அந்தக் கட்சி தெளிவுபடுத்தவேண்டும்.
இன்று மக்கள், ஊழல் மட்டுமே இந்தியாவின் பெரும் பிரச்சனையாகப் பார்க்கின்றனர். ஊழல் என்பது நம் சமூக மற்றும் அரசியல் அமைப்பின் விளைவு என்பதை உணர மறுக்கின்றனர். பல்வேறு மொழி, இனம், சமூகங்களைக் கொண்ட இந்தியா, ஒரே நடுவண் அரசை கொண்டு அளவுக்கு அதிகமான அதிகாரங்களுடன் இயங்குகிறது. இதுவே ஊழலின் முதன்மையான காரணம். விளைவுக்கான காரணங்களை (Symptoms) விட்டு விளைவைச் சரி செய்வது நோய்க்கான காரணங்களை (Cause of Symptoms) விட்டு அதன் விளைவாக வரும் வலிக்கு வலி நிவாரணி உண்பது போன்றதாகும். நீண்ட நாள் வலி நிவாரணி உண்டால் உடலுக்கு என்ன ஆகுமோ? அதுதான் நாட்டிற்கும் நிலைமை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதனால் கண்மூடித்தனமாக ஊழல் ஒழிப்பு என்ற கருத்தை மட்டும் வைத்து ஒரு கட்சியை ஆதரிப்பது நல்ல அரசியலாக அமையாது.
இந்த வெற்றியின் மூலம் படித்த நடுத்தர மக்கள் அதிகம் தேர்தலில் பங்கு பெறுகின்றனர் என்பது தெளிவாகிறது. இது நிச்சயம் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றமே. காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சி உருவானது இந்திய மக்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஆனால் ஆம் ஆத்மியின் பயணம் வெகுதொலைவு உள்ளது.
ஆம் ஆத்மியின் வெற்றி, தமிழ் தேசியத்தை நோக்கிப் பயணம் செய்யும் தமிழகத்திற்கு ஒரு நல்ல பாடம். மாறிவரும் சூழல்களைத் தமிழர் நலன் சார்ந்த கட்சிகள் உணரவேண்டும். ஆம் ஆத்மி கட்சியில் உள்ளவர்கள் ஒற்றுமையாகச் செயல்பட்டு வெற்றி பெற்றது போல் தமிழர் நலன் கட்சிகள் ஒன்று இணைந்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வேண்டும். வேற்றுமைகளை தாண்டி கூட்டணி அமைக்க கூட முடியவில்லை என்றால் வெற்றி என்பது தமிழ் தேசியத்துக்கு என்றுமே கிடையாது.
இந்த ஒற்றுமை நம்மிடம் இல்லையென்றால் மாற்றத்தை அதிகம் எதிர்பார்க்கும் நம் தமிழ் மக்களும் ஆம் ஆத்மி போன்ற தேசியக் கட்சியின் பக்கம் திரும்பிவிடக்கூடிய வாய்ப்பு உள்ளது. இன்றைய தேவை அரசியல் சாராத தமிழர் நல அமைப்புகள் மற்றும் தமிழர் நலன் விரும்பும் அனைத்துக் கட்சிகளையும் கூட்டித் தேர்தல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். இதில் சேராத அனைத்துக் கட்சிகளையும் புறக்கணித்துவிட்டு ஒருங்கிணையும் கட்சிகளுக்கு இடங்களைப் பங்கிட்டு தேர்தலில் நிற்கவேண்டும். இந்தக் கூட்டணியை தமிழ் தேசிய கூட்டணியாக அறிவிக்கவேண்டும். இதில் வெற்றி பெற்றாலும் வெற்றி பெறாவிட்டாலும் இம்முயற்சி தமிழ்தேசியத்தின் பலத்தைப் பரிசோதிக்க உதவும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
அருமையான பதிவு. மேலும் தொடர்ந்து எழுதுங்கள் எனக் கேட்டு நல்வாழ்த்து கூறுகிறேன்.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
12/25/2013