மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆவின் பால் விநியோகமும் மெல்ல நுழையும் வினையும்!

ஆச்சாரி

Aug 1, 2012

‘பால் நினைந்தூட்டும் தாய்போல’ என்று தாய் பாசத்தை பால் ஊட்டுவதின் மூலம் சொன்னார் வள்ளுவர். அவர் சொன்னது தாய்ப்பாலை என்றாலும் இப்போது எல்லோருக்கும் பால் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இந்தியாவில் அரிசி முதன்மை உணவு. அமெரிக்காவில் கோதுமை முக்கிய உணவு. ஆனால், உலகம் முழுமைக்குமான பொதுவான உணவு பால் மட்டுமே. பிறந்த குழந்தை முதல்  முதியவர் வரை எல்லோருக்குமான உணவு பால்!

தேநீர், குளம்பி, (coffee) தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்ற பல பொருட்களின் மூலமாக இருப்பது பால். சென்னை மாநகர வாசிகள் அதிகாலையில் எழுந்து சூடாக தேநீரோ, குளம்பியோ அருந்திகொண்டு தினசரிகளை படிப்பதில் ஒருவித சுகம் காண்பார்கள். பல பேருக்கு காலையில் தேநீரோ குளம்பியோ அருந்தினால்தான் அவர்கள் அடுத்த பணிகளுக்கு ஆயத்தமாவார்கள்.

ரத்தத்தை பாலாக மாற்றித் தரும் பசுக்களின் தீவனத்தில் போதிய சத்துக்கள் இருந்தால்தான் அவை தரும் பாலிலும் சரியான சத்துப் பொருட்கள் நிறைந்து காணப்படும். பாலில் இருக்கும் கொழுப்பின் அளவையும், இதர சத்தூட்டப்  பொருட்களின் அளவையும் வைத்துதான் அரசு, தனியார் பால் விற்பனை நிறுவனங்களுக்குப்  பணம் தருகின்றன. இந்நிலையில் தாய்ப்பால் கொடுக்கும் வழக்கம் குறைந்து பசும் பாலை குழந்தைகளுக்கு உறையில் அடைத்துவைத்து விற்கப்படுகிறது. இந்தக் காலத்தில் குழந்தைகளுக்கு பசும் பாலே ஆகாரம் ஆகிறது. தண்ணீருக்கு அடுத்து அதி முக்கியமானதாக திகழும் பால் விநியோகம், மக்களிடம் வந்து சேரும் வழிமுறைகள்,   இவற்றைப் பற்றி அறிய முற்பட்டோம். குறிப்பாக அரசின் அமைப்பான ஆவின் நிறுவனம் தரும் ஆவின் பால் விநியோகம் குறித்து அறியத் தொடங்கினோம்.

பால் என்றாலே மாதவரம்தான் நினைவுக்கு வரும். காரணம், மாதவரத்தில் தான் தமிழக அரசின் மிகப்பெரிய பால் பண்ணை உள்ளது. அங்கு சென்று அங்கு உள்ள ஒரு ஊழியரிடம் நம் ‘சிறகு’க்காக உரையாடி வந்தோம். சென்னை மாநகருக்கு தினமும் 10 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் ஆவின் பால்  விநியோகம் செய்யப்படுகிறது. இதில் அதிகப்படியான பால் மாதவரம் பண்ணையில் இருந்து விநியோகிக்கப்படுகிறது. பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் மாதவரம் பால் பண்ணை செய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பால் விநியோகம் செய்ய மாதவரம் பண்ணையில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் 100  லாரிகள் ஈடுபடுத்தப்படுகின்றன.

அதிகாலை 4 மணிக்கு பண்ணையில் இருந்து பால் விநியோகம் தொடங்குகிறது என்று இங்கிருப்போர் கூறுகின்றனர். வாகனங்களின் ஏற்றப்படும் பால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தம் உள்ள 800 இடங்களில் வினியோகம் செய்யப்படுகிறது.  ஆவின் நிறுவனம்- தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கூட்டுறவு அமைப்புகளிடமிருந்து 22 லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் பாலை கொள்முதல் செய்கிறது. இதில் சென்னை மாநகர், அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கு மட்டும் பத்து லட்சத்து ஐம்பதாயிரம் லிட்டர் விநியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில வேளையில் உபரியாகும் பால் மாதவரம் பால் பண்ணையில் -இதர பால் பொருட்கள் தயாரிக்க பால் பவுடராக மாற்றப்படுகிறது.

மாதவரம் உள்ளிட்ட சென்னையில் உள்ள பால் பண்ணைகளுக்கு வரும்  பால், பதப்படுத்தப்பட்டு கொழுப்புச் சத்து மற்றும் இதர சத்துக்களின் அடிப்படையில் மூன்று வகைகளாகப்  பிரித்து உறைகளில் அடைத்து ஆவின் நிறுவனம் விற்பனை செய்கிறது.

சமன்படுத்திய பால், நிலைப்படுத்திய பால்,  நிறை கொழுப்பு பால், இருமுறை சமன்படுத்திய பால், 3 சதவீதம் கொழுப்பு சத்து நிறைந்த சமன்படுத்திய பால் (நீல நிறம்) நிலைப்படுத்திய (பச்சை நிறம்) 4.5 சதவீத கொழுப்பு சத்து நிறைந்தது.  நிறைய கொழுப்பு உள்ள பால் (ஆரஞ்சு நிறம்) 6 சதவீத கொழுப்பு சத்து நிறைந்தது. இருமுறை சமன்படுத்திய பால் (மெஜந்தா நிறம்) 1.5 சதவீத கொழுப்பு சத்து நிறைந்தது. இந்த சதவிகித முறையில்தான் பால் உறைகள் மக்களுக்கு வழங்கப்படுகிறது என்று ஆவின் கூறுகிறது. நம்பலாம். வேறு வழி?

சென்னையில் 40  மொத்த விற்பனையாளர்களை நியமித்து அவர்களுக்கு பால் விநியோகம் செய்கிறது ஆவின் நிர்வாகம். இந்த மொத்த விற்பனை யாளர்களிடம் இருந்து 600 முகவர்கள் பாலைப் பெற்று அவர்கள் கடைகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு விநியோகம் செய்கின்றனர். இப்படித்தான் சென்னை மாநகர மக்களுக்கு பால் உறைகள் சென்று சேருகின்றன.

மொத்த விற்பனையாளர்கள் ஆவின் பால் பாக்கெட்டுகளை அதில் அச்சிடப்பட்டுள்ள விலையைவிட ஒரு லிட்டருக்கு 50 காசு குறைவாகக் கொடுக்கின்றனர். அவர்களிடம் பால் வாங்கும் முகவர்கள் ஒரு லிட்டருக்கு 1 ரூபாய் வரை லாபம் வைத்து விற்பனை செய்கின்றனர். அப்போது பால் விலை அச்சிடப்பட்ட விலையை விட 50 காசு கூடுதலாகிறது.

முகவர்களிடம் இருந்து வாங்கும் கடைக்காரர்கள், சிறு வியாபாரிகள் 1 ரூபாய் லாபம் வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால், ரூ.1.50 வரை கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்கப்படுகிறது. ஆவின் நிர்வாகத்தினர் சதவீத அடிப்படையில் லாபத்தைக் கணக்கிட்டு அதில் மொத்த விற்பனை யாளர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம், முகவர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் என அவர்களே நிர்ணயம் செய்தால் கூடுதல் விலை விற்கப்படுவது தவிர்க்கப்படும் என்பதை ஆவின் நிர்வாகம் முடிவு செய்து அமல்படுத்த வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.

ஆவின் பாலை மாதந்திர அட்டை மூலம் பெற்று மாத அடிப்படையில் பணம் செலுத்த- அந்தந்த வட்டார அலுவலகங்கள் அல்லது பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களில் ஆவின் பால் பெறுவதற்கான அட்டைகளை அதற்குரிய தொகையை செலுத்திப் பெறலாம். தினமும் பாலை ஆவின் அங்காடி (Booth) சென்று நாமே வாங்கிக் கொண்டு செல்லலாம். அல்லது வீட்டுக்கே கொண்டுவந்து கொடுக்கச் சொல்லலாம். வீட்டிற்கு வந்து கொடுப்பதற்காக மாதம் 25 ரூபாய் கூடுதலாக கொடுக்க வேண்டும்.  மாதாந்திர பால் அட்டைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தினமும் 7 லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகிக்கப்படுகிறது.

மத்திய சென்னைக்கு அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து 3.45 லட்சம் லிட்டர், தென் சென்னைக்கு சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்து 3.85 லட்சம் லிட்டர், வட சென்னைக்கு மாதவரம் பால் பண்ணையில் இருந்து 3.30 லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்படுகிறது.

அரசு அமைப்புகள் என்றாலே தவறுகள் நடைபெறுவது சாதாரணம். ஆவின் அமைப்பு லட்சக்கணக்கான மக்களுக்கு பால் சேவை செய்யும் பெரிய அமைப்பு. இதில் தவறுகள் நடைபெறாதா? இதுபற்றி நாம் விசாரித்ததில், “ஆவின் மொத்த விற்பனையாளர்கள், தனியார் பால் நிறுவனங்கள் தருகிற கமிஷனையும் பெற்றுக்கொண்டு ஆவின் பாலினை இரவு 11 மணி முதல் 1 மணிக்குள் பால் முகவர்களாகிய எங்களிடம் தந்து விடுகின்றனர். இதனால் சரியாக குளிர்விக்கப்பாடாமல் காலை ஏழு மணிக்குள் பால் கெட்டு விடுகிறது. இதனால் மக்கள் பாலை திருப்பித் தந்து விடுவார்கள். எங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது ஆவின் பால் முகவர்களின் வேதனையை வெளிப்படுத்துகிறார்” ஒரு ஆவின் பால் விநியோக முகவர்.

அவர் சொல்வது சரிதான். கெட்டுப்போன ஆவின் பாலை திருப்பிக் கொடுத்து விட்டு அருகில் உள்ள கடைக்குச் சென்று தனியார் பாலை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். போட்டி போட்டுக் கொண்டு இப்போது தனியார் பால் நிறுவனங்கள் முளைக்கின்றன. ஒரு தனியார் பால் நிறுவனம், எங்கள் பால் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காவிட்டாலும் கேட்டுப் போகாது என்கிறது. எந்த அடைப்படையில் இதனை மக்கள் நம்புவது?

இப்போது தமிழகத்தில் ஆரோக்கியா, திருமலா, ஜெசி, டோட்லா, ஹெரிட்டேஜ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 12 லட்சம் லிட்டர் தனியார் பால் தினமும் விற்பனை செய்யப்படுகிறது. 6000 முகவர்கள் தனியாரிடம் இருந்து பாலை வாங்கி பொதுமக்களுக்கு வினியோகம் செய்கிறார்கள். தனியார் பால் பெரும்பாலும் உணவகங்கள், தேநீர் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. இங்கே குறிப்பிட வேண்டியது, தனியார் பால் நிறுவனங்களுக்கு முகவர்கள் அதிகம் உள்ளனர். ஆவின் நிறுவனத்துக்கு மிகக் குறைவு.

ஆவின் பாலை வாங்குவதையே மக்கள் விரும்புகிறார்கள். விலை குறைவு, தரமும் நன்றாக உள்ளதால் மக்கள் அதனை விரும்புகிறார்கள். ஆனால் தனியார் பால் விற்பனையை அதிகரிக்க தனியார்களிடம் பணம் பெற்றுக் கொண்டு மொத்த விற்பனையாளர்கள் சிலர் ஆவின் பால் விநியோகத்தில் நடத்தும் தவறுகளை கண்டுகொள்ளாமல், ஏனோதானோ என்று ஆவின் நிர்வாகம் இருந்தால் தனியார்கள் கை ஓங்கிவிடாதா? அதனால் மக்களின் பால் பயன்பாட்டில் சுகாதாரக் கேடுகள் விளையாதா? வீடுகளுக்கு விநியோகம் செய்யும் முகவர்களுக்கு இழப்பு ஏற்பட்டு அவர்கள் ஆவின் பால் வாங்கி விநியோகிப்பதை நிறுத்தினால் ஆவின் நிறுவனத்துக்குத்தானே இழப்பு. இதை எல்லாம் கருத்தில் கொண்டு செயல்படவேண்டும் அரசின் ஆவின். பால் என்பது வெறும் திரவம் அல்ல. குழந்தைகளின் உயிர். லட்சக்கணக்கானவர்களுக்கு அதிகாலை ஆக்ஜிசன்.

Zudem knnen sie jederzeit in den http://best-ghostwriter.com erstellungsprozess eingreifen, wenn ihnen neue ideen kommen oder sie andere wissenschaftliche erkenntnisse entwickeln

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆவின் பால் விநியோகமும் மெல்ல நுழையும் வினையும்!”

அதிகம் படித்தது