மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இகழ்தல் வேண்டாம் — குழந்தைகள்

ஆச்சாரி

Aug 1, 2011

குமார் அவர்களின் வீடு முற்றத்தில் மரம் ஒன்று இருந்தது, அந்த மரம் நாள்தோறும் இலைகளை உதிர்த்து கொண்டு இருந்தது. தினம் தினம் அந்த குப்பைகளை கூட்டி அள்ளுவது குமாருக்கு பெரும் தொல்லையாக இருந்தது.

ஒரு நாள் காலை அதனை பார்த்த குமார் கோபம் கொண்டார். “ஏ மரமே தினம் ஏன் இலைகளை உதிர்க்கிறாய்” என்று திட்டினார்.

“உன்னை ஒரு நாள் வெட்டி எறியவேண்டும்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்.

திடீரென ஒரு நாள் பெரும் காற்றுடன் மழை பெய்தது. அதனால் நிறைய இலைகள் கொட்டி பெரும் குப்பை சேர்ந்துவிட்டது.

அடுத்த நாள் காலை குப்பை மலையை பார்த்த குமார் பெரும் கோபம் கொண்டு அதனை வெட்ட ஆட்களை அழைத்தார்.

அவர்களோ மரத்தை வெட்ட நிறைய கூலி கேட்டனர், நொந்து போன குமார் மரத்தை பார்த்து “உன்னால் எவ்வளவு தொல்லை” என்று திட்டி மரத்தை கரித்து கொட்டினார்.

சில காலம் கழித்து, குமாரின் நண்பர் ஒருவர் வந்தார். அவர் ஒரு மூலிகை மருத்துவர், அந்த மரத்தை பார்த்து “குமார்.. என்ன அதிசயம்.. இந்த மரம் உன் வீட்டில் இருப்பது? இதை தான் தேடி கொண்டு இருந்தேன் என்று கூறினார்?

குமார் “எதற்கு தேடுகிறாய், குப்பை கொட்டும் இந்த மரத்தை வெட்ட போகிறேன்” என்றார்.

உடனே நண்பர் “அப்படி எல்லாம் செய்து விடாதே, இந்த மரத்தின் இலைகள் மருத்துவ குணம் உள்ளவை. இவற்றை வாரா வாரம் நானே வாங்கிக் கொள்கிறேன்” என்று பணத்தை கொடுத்தார்.

குமார் மகிழ்ச்சி அடைந்தாலும் வெட்கமாக போய்விட்டது. தன்னை அலட்சியமாக நினைத்து எப்பொழுதும் திட்டிக்கொண்டே இருந்த குமாருக்கு இன்று அம்மரம் எவ்வளவு பெரிய பரிசு தந்துள்ளது பார்த்தீர்களா குட்டிகளா? எனவே எப்பொருளையும் அலட்சியமாக கருதி இகழாதீர்கள்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இகழ்தல் வேண்டாம் — குழந்தைகள்”

அதிகம் படித்தது