மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இசையும் பயிரியலும்

ஆச்சாரி

Sep 1, 2013

பறவைகளும், விலங்குகளும், மரம், செடி, கொடி என அனைத்து  உயிர்களும் மானிடனுக்கு முன்பே தோன்றியவை. எனவே அவற்றிற்குப் பின்பு தோன்றிய மானிடன் மரஞ்செடி கொடிகளின் மத்தியில் அவற்றைச் சார்ந்தே வாழும் நிலை இயல்பாகவே ஏற்பட்டது. இதுவே, தொல்மானிடர் இயற்கையோடு இயற்கையாக, வாழ்வு  வாழ்ந்த நிலை.

நாகரிகம் என்ற பெயரில் இந்த இயற்கை வாழ்விலிருந்து நாம் மிக மிக விலகிவிட்டோம். ஆனால், நம் உள்ளத்தின் அடியாழத்தில் அந்த இயற்கை வாழ்வுக்காக நாம் ஏங்குகிறோம். வீட்டைச் சுற்றித் தோட்டம் போட்டுக் கொள்கிறோம். பாத்திரத்தில் நீரை நிரப்பி அதில் மலர்களைப் பரப்பி நடுவீட்டில் வைத்துக் கொள்கிறோம். நம் நினைவு எச்சங்களுக்கு, இயற்கை வாழ்வின் ஏக்கத்திற்கும் இவையெல்லாம் வடிகால்கள்: மீட்டுருவாக்கங்கள்.

ஹோமோசேபியன் என்ற குரங்கிலிருந்து மானிடர் தோன்றியதாக மானிட இயல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவ்வாறு பரிணாமம் பெற்ற மானிட இனம் மரத்தில் ஏறி தமது பாதுகாப்பைத் தேடிக் கொண்டது. இந்த மரமேறும் பழக்கமே மானிடர் இப்பூவுலகில் நிலைபெற்று தொடர்ந்து வாழ உதவியுள்ளது. தொடக்க காலங்களில் விதை, கனி, காய், இலை, கிழங்கு இவையே மானிடர் உணவாகியுள்ளன. இதற்காகவும் மானிடர் இயற்கையைச் சார்ந்தே வாழ வேண்டியிருந்தது.

இவ்வாறாக உணவு, பாதுகாப்பு, சூழல் இம்மூன்றிலும் மானிடர் தாவரங்களோடு பின்னிப் பிணைந்து நிற்கின்றனர்.

சிந்திக்கத் தெரிந்தவுடன், மானிடன் இயற்கையை உற்று நோக்குகிறான். மரம், செடி, கொடி, புதர், காய், கனிகளுக்கு மூலமே மலர்களும், அவற்றின் நிறங்களும், நறுமணமும் அவற்றினிடையே நிகழும் மகரந்தச்சேர்க்கையுமே என்று அறிந்து கொள்கிறான். இயற்கையில் மலர்கள் வகிக்கும் முக்கியப் பாத்திரம் மனிதனுக்குத் தெரிய வருகிறது.

எனவே, தாம் வாழும் சூழலில் நிறைந்த பொருட்களுக்கு மலர்களின் பெயர்களையே மானிடன் முதன் முதலில் வைக்கப்பழகுகிறான். இதுவே மானிடரின் மலர்ப்பண்பாடு. குறிஞ்சிப்பாட்டு, முல்லைப்பாட்டு என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, மலர்களின் பெயரினாலான இரு இலக்கியங்கள் நம்மிடம் உண்டு. 99 மலர்களின் பெயர்களை அழகாக அடுக்கிக் கூறுகின்றார் குறிஞ்சிக் கபிலர். முல்லைப்பாட்டு என்ற சங்க இலக்கியத்தில் முல்லை மலரும் அதன் ஏனைய பொருண்மைகளும் அழகுணர்ச்சியுடன் பாடப்பட்டுள்ளன. பரிபாடல் என்ற சங்க இலக்கியத்திலும் பல்வேறு மலர்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆடவரும் பெண்டிரும், மலர்களைச் சூடிக்கொள்வதும், மாலைகளை அணிந்து கொள்வதும், மலர்ச்செண்டுகளை அதன்பின் அடையாளமாக வழங்குவதும் மலர்களின் மீது மக்களுக்கு உள்ள மயக்கத்தைக் காட்டுகிறது இது எந்நாட்டவர்க்கும் பொருந்துவதாகும். இயற்கை வாழ்வு வாழ்ந்த பழந்தமிழர்கள் நெஞ்சைப்பறிகொடுத்ததில் வியப்பில்லை.

சிலப்பதிகாரப் புறஞ்சேரி இறுத்த காதையில் , “ உலகு புறந்தூட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப் புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி, வையை என்ற பொய்யாக்குலக்கொடி” வர்ணனையில் இளங்கோவடிகள் ஆற்றில் மிதந்தும் கரையில் தவழ்ந்தும் மரத்தில் படர்ந்தும் புலவரைக் கூடக் கவர்ந்து விடும் மலர்களின் பெருந்தொகையைக் குறிப்பிடுகிறார்.

“குரவமும், வகுளமும், கோங்கமும், வேங்கையும், மரவமும், நாகமும், திலகமும், மருதமும், சேடலும், செருந்தியும், செண்பக ஓங்கலும், பாடலம் தன்னோடு பன்மலர் விரிந்து குருகும் தளவமும், கொழுங்கொடி முசுண்டையும், விரிமலர் அதிரலும் , வெண்கூதாளமும், குடசமும், வெதிரமும், கொழுங்கொடிப்பகன்றையும், பிடவமும், மயிலையும்” எனப் பன்மலர் கூட்டத்தை அழகின் தோற்றத்தை இளங்கோவடிகள் அடுக்கிக் கூறுகிறார்.

இயற்கையோடு இயற்கையாக நாம் வாழ்ந்ததை நம் முன்னோர் திணை வாழ்க்கை என்று அழைத்துள்ளனர். நம் சூழலை முதற்பொருள், உரிப்பொருள், கருப்பொருள் என வகுத்தனர். கருவாக இருந்து ஒரு சூழலை உருவாக்கி ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்து தொடர்ந்த இயக்கத்தோடு இயங்கி வரும் பொருட்களை கருப்பொருள் என்று கூறுவார். நம் தொல்ஆசான். “தெய்வம் உணவே, மா, மரம், புள், பறை, செய்தி, யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கரு என மொழிப” எனத் தொல்காப்பியர் கருப்பொருள்கள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றார். புல், புதர், செடி, கொடி, மலர், காய், கனி ஆகிய அனைத்தையும் குறிக்கும் தொகுதிப் பெயராக “மரம்” என்ற கருப்பொருளைக் கூறியுள்ளார். அடுத்த நூற்பாவில், “என்நில மருங்கின் பூவும் புள்ளும்” என “பூ” நிலத்தின் கருப்பொருள் ஆவது பற்றியும் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். இவ்வாறாக, மலரின் பெயர், முதற்பொருளாக நிலத்திற்கும், உரிப்போருளாக அந்நில ஒழுக்கத்திற்கும், கருப்பொருளாக அந்நிலத்தின் உருவாக்கத்திற்கும் இன்றியமையாப் பங்களிப்பைத் தருகின்றது.

அதன் பின் ஐந்திணைகளும், முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்று மலர்களின் பெயர்களையே பெறுகின்றன.

முல்லை மலர்கள் நிறைந்த காடு முல்லை நிலமானது.  குறிஞ்சி மலர், கூட்டங்கூட்டமாகப் பூத்துக் குலுங்கும் மலை நிலம் குறிஞ்சியானது. ஆற்றங்கரை, குளக்கரைகளில் ஓங்கி உயர்ந்து மருத நில நீர்ச்செழிப்பின் அடையாளமாக விளங்குவது மருதமரம். பூத்த மருதமலர்களால் வயல் நிலம், மருத நிலம் எனப் பெயர் பெற்றது. கடல் நீல நிறம், கடல் மேல் கவிழும் வானம் நீல நிறம். நெய்தல் என்ற மலரும் நீல நிறம். அது பூத்துக் குலுங்கும் கடற்கரை நிலம் நெய்தல் நிலமானது. பாலை மரங்கள் பூத்து பாலை நிலத்தை அடையாளப்படுத்தும் பாலைப் பூவால் அந்நிலம் பாலை என்றழைக்கப்பட்டுள்ளது.

முல்லை மலர்:

முல்லை நிலத்திற்குப் பெரும் பொழுது கார் காலம். சிறு பொழுது மாலை. அந்த மாலையில் மலரும் பூ முல்லை. அது பூத்துக் குலுங்கும் நிலம் முல்லை நிலம். இருத்தல் என்ற ஒழுக்கமும் முல்லை என்றே அழைக்கப்பட்டுள்ளது. அந்நிலம் சான்ற மகளிர் தம் கற்பும் “ முல்லை சான்ற கற்பு” என்றே நம் முன்னோரால் குறிப்பிடப்படுகின்றது.

மலரின் பெயரான முல்லை என்பது அந்நிலப்பெரும்பண், அதாவது ஏழுசுரப் பண்ணான மேளகர்த்தாவையும் குறித்து வந்தது. இதை “யாழ்” என்ற பெயரால் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். தமிழரின் தனித்துவமான ஒப்பற்ற இலக்கணக் கருவியான “யாழ்” இங்கு ஏழு சுரப்பண்ணிற்கு ஆகு பெயராக வந்துள்ளது.  நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில், “முல்லை யாழ்” என்றே இப்பெரும்பண்ணைக்  குறிப்பிடுகின்றார். தமிழிசையின் தலைமைப் பாலையானது மலரின் பெயரால் “முல்லை” என்றே அழைக்கப்பட்டுள்ளது.

“முல்லை நல் யாழ்ப்பாண” என்றும், “பாணர் முல்லை பாட” என்று ஐங்குறு நூறும்,

“முல்லை நல் யாழ்” என்று புறநானூறும்,

“முல்லை எனும் பண்ணையும்” என்று தொல்காப்பிய எச்ச இயலில் நச்சரும்,

இப்பெரும்பண்ணை “முல்லை” என்றே மலரின் பெயரால் குறிப்பிடுகின்றனர்.

மலரின் பெயரால் முல்லை, முல்லையாழ் என்று, சான்றோர் இலக்கியங்களிலும் உரைகளிலும் பின்பு செம்பாலை எனப் பெயர் பெற்ற முல்லை நிலப் பெரும்பண் என்பது இன்றைய அறிகாம்போதியே என்பதை யாழ் நூல் விபுலானந்த அடிகளாரின் ஆராய்ச்சியால் நாம் அறிய வருகிறோம்.

முல்லைப்பாணி:

முல்லை நிலத்திற்கான சிறு பண்ணான முல்லைப் பாணியும் முல்லை என்ற பெயராலேயே அமைந்துள்ளது. அதற்கு முல்லை குழல் என்றோர் பெயரும் வழங்கியுள்ளது.

பாணி என்றும் குழல் என்றும் நம் முன்னோர் ஐந்துசுர திறப்பண்களை ஓளடவ இராகங்கள் அழைத்துள்ளனர். கருப்பொருள் தொகையில் தொல்காப்பியர் குறிப்பிடும் “யாழின் பகுதி” என்ற தொடருக்கு இளம்பூரணர் உரை கூறுகின்றார். “யாழின் பகுதி என்பது பண். அது சாதாரி என்கிறார். இதிலிருந்து முல்லை நிலச்சிறு பண்ணிற்கு சாதாரி என்றொரு பெயர் வழங்கியுள்ளதை நாம் அறிய வருகிறோம்.

“பாடுதும் முல்லைத்தீம்பாணி என்றாள்” என்றும், முல்லையந்தீங்குழல் கேளாமோ தோழி” என்றும் முல்லை நிலச்சிறுபண்ணை “முல்லைப்பாணி” என்றும் “முல்லைக் குழல்” என்றும் பதிவு செய்கிறார். இளங்கோ அடிகள். இவ்வாறு சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் குறிப்பிடப்படும் முல்லைப்பாணி என்பது இன்றைய மோகனம் என்பதாக முனைவர் எஸ். இராமனாதன் கண்டுரைத்துள்ளார்.

குறிஞ்சி மலர்:

மலையும் மலை சார்ந்த இடங்களை நம் முன்னோர் குறிஞ்சி என்று வழங்கியுள்ளனர். பூத்துக் குலுங்கும் போது குறிஞ்சி மலர்ப் போர்வையால் மலையெல்லாம் மூடியது போலிருக்கும். பன்னிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி சிறப்பு வாய்ந்தது. தேனில் சிறந்தது மலைத்தேன்- குறிஞ்சித்தேன். குறிஞ்சி மலரால், நிலமும், மலை ஒழுக்கமான “சந்தித்தல்” என்ற புணர்ச்சியும் குறிப்பிடப்படுகின்றன. மானிடன் தோன்றிய முதல் இடம் மலை நிலமான குறிஞ்சியில்தான் என மானிடவியல் ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர்.

நம் தமிழ்த் தொல்குடிச்சடங்குப்பாடல்களும், குறி சொல்லும் பாடல்களும் மலர்ந்தது குறிஞ்சிப்பண்ணில்தான்.

“கொடிச்சி பெருவரை மருங்கில் குறிஞ்சி பாட” என்று சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூறு குறிப்பிடுகின்றது.

“கொடிச்சி எடுத்த இன்குறிஞ்சி” என்று கம்பர் பதிவு செய்கின்றார்.

“நறும்புகை எடுத்து குறிஞ்சி பாடி” என்று திருமுருகாற்றுப்படையானது சடங்குப்பாடல் குறிஞ்சிப்பண்ணில் பாடப்பட்ட வரலாற்றைக் குறிப்பிடுகின்றது.

இப்பண்ணை “குறிஞ்சி” என்று இளம்பூரணரும் “குறிஞ்சி யாழ்” என்று நச்சினார்க்கினியரும் குறிப்பிடுகின்றனர். முல்லை என்ற அறிகாம்போதியில் வந்துத்தம் (சதுசுருதி ரிஷபம்) கொண்டு பண்பெயர்ப்பு (கிரக பேதம்) செய்யும் போது கிடைக்கும் பண் “குறிஞ்சி”. இதை, “குரல் குரலாக வரு முறைப்பாலையில் துத்தம் குரலாகத் தொன்முறை இயற்கையின் அம் தீம் குறிஞ்சி அகவன் மகளிர்” என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பதிவு செய்திருக்கிறார். இதிலிருந்து குறிஞ்சி மலரின் பெயரால் குறிப்பிடப்படும் “குறிஞ்சி” என்ற மலை நிலப்பண் இன்றைய நடபயிரவியே என்பது உறுதியாகிறது.

குறிஞ்சிப்பாணி:

மலை நிலத்துச்சிறுபண் – ஐந்து சுரப்பண்- மலை நிலத்து மலரான குறிஞ்சியின் பெயரால் “ குறிஞ்சிப்பாணி” என்று பெயர் பெறுகின்றது. மிகப்பழமையான இப்பண்ணில் நம் பழங்குடி சடங்குப்பாட்டை மலை நிலக் குறத்தியர் பாடியுள்ளனர். “குறத்தியர் பாடிய குறிஞ்சிப்பாணி” என இளங்கோவடிகள் பதிவு செய்துள்ளார். இப்பண்ணிற்கு மாதவி மலர்ப்பெயரால், மாதவி, மதுமாதவி என்ற பெயர்களும் உண்டு. அந்த மது மாதவி இன்று மத்யமாவதி என்று திரிந்து வழங்குவதாக விபுலானந்த அடிகளார் கூறுகின்றார். ஆயினும் நாரதரின் “ சங்கீத மகரந்தம்” என்ற நூல் மதுமாதவி என்றே குறிப்பிடுகின்றது.

இந்த மாதவி என்ற கொடித்தாவரம் குருகு என்றும் குருக்கத்தி என்றும் மருத்துவப் பெயர் பெறுகின்றது. “அதிகம், முத்தகம், மாதவி, குருகு, வாஸந்தி, நாகரி இவை குருக்கத்தியாகும்” என பிங்கல நிகண்டு கூறுகின்றது. “மது மாதவிக்குச்சங்கீரண காங்கூலக்கை” என்று மகாபாரத சூடாமணி பதிவு செய்கின்றது. இந்த மதுமாதவி என்ற பண் பெயரில் புரந்தரதாஸர் பாடல் இயற்றியுள்ளார். இவ்வாறெல்லாம் குறிஞ்சி என்ற மலர்ப்பெயரால் அழைக்கப்படும் குறிஞ்சிப்பாணி, மாதவி, மதுமாதவி, குருகு, குருக்கத்தி என்ற பண் இன்றைய மத்யமாவதி என்று அறியப்பட்டுள்ளது.

நெய்தல் மலர்:

கடற்கரை நிலம் நெய்தல் நிலம். இந்நிலம் நெய்தல் மலரால் பெயர் பெறுகின்றது. அந்நில ஒழுக்கமான “இரங்கல்” நெய்தல் என்றே குறிப்பிடப்படுகின்றது. “ நெய்தல் சான்ற வளம் பல பயின்று” என மதுரைக்காஞ்சி இச்செய்தியைப் பதிவு செய்கின்றது. நெய்தல் நிலச் சாப்பறையும் நெய்தல் என்றே மலர்ப்பெயர் பெற்றுள்ளது. நெய்தல் நிலப்பெரும்பண் “நெய்தல் யாழ்” என்பார் நச்சினார்க்கினியர். பெரும்பண், நிலத்தின் மலரால் பெயர் பெற்றது. இதுவே செவ்வழி என்பார் இளம்பூரணர். இரண்டு உழையும் அதாவது சுத்த மற்றும் பிரதிமத்தியமும் கொண்டு இளி என்ற பஞ்சமம் இல்லாது வரும் ஒரே தென்னகப்பெரும்பண்,இதுவே.

நெய்தல் பாணி:

நெய்தல் மலரின் பெயரால் நெய்தல் நிலச்சிறுபண் பெற்ற பெயர் நெய்தல் பாணி. இது நெய்தல் குழல் எனவும் பெயர் பெரும். தடவு என்ற தடா மரத்தின் பெயரையும், மருள் என்ற கற்றாழையின் பெயரையும் நெய்தல் பாணி பெற்றிருக்கின்றது.  இத்தளக்கட்டை என்ற மரப்பெயரால் பண் இந்தளமாகவும், இக்காலம் இந்தோளம் எனவும் நெய்தல் பாணி அழைக்கப்பட்டு வருகின்றது.

“இந்தளம் மருள் இந்தளமே ஆகும்” என திவாகர நிகண்டு கூறுகின்றது. “கலிமயில் அகவும் வயிர் மருள் இன்னிசை” என இப்பண்ணை நெடுநல்வாடை என்ற சங்க இலக்கியம் பதிவு செய்கின்றது.

பாலைப்பூ:

தில்லை, பாலை கல் இவர் முல்லை” என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப்பாட்டு பாடிய கபிலர் 99 மலர்களில் ஒன்றாக பாலைப்பூவைக் குறிப்பிடுகின்றார். கோடையில் வாடாது மழையற்ற  காலத்திலும் உயிர்வாழும் பால் நிறைந்த மரம் பாலை. “ பாலை நின்ற பாலை நெடுவழி” என்று சிறுபாணாற்றுப்படை இம்மரம் பற்றிக் குறிப்பிடுகின்றது. “வேனிற்காலம்- தளிரும் சினையும் வாடுதலின்றி நிற்பது பாலை” என்று உரையாசிரியர் இளம்பூரணர் கூறுவார்.

“நிரை ஏழ் அடுக்கிய நீள் இலைப்பாலை” என்று பரிபாடல் இம்மரத்தின் வடிவம் கூறும். இதன் இலைகள் நீண்டிருப்பதையும் ஏழு பிரிவுகள் கொண்டிருப்பதையும் பரிபாடல் படக்காட்சி போல் கூறுகின்றது. ஏழு பிரிவுகளையுடைய இலை ஆதலால் ஏழு சுரப்பெரும்பண்களுக்கு நம் முன்னோர் பாலை மரத்தின் சிறப்பால் பாலை என்று பெயரிட்டனர். இன்று அதை தாய்ப்பண், மேளகர்த்தா என்று அழைக்கிறோம்.

இந்த பாலைப்பூவால் நிலம் பாலை நிலம் என்று பெயர் பெறுகின்றது. பாலை நில ஒழுக்கம் “பிரிவு” அது தலைவன் தலைவியைப் பிரிந்த தனிப்போக்காகவும் தாய்தந்தை, உற்றார், ஊராரைப்பிரிந்த தலைவியின் உடன் போக்காகவும் நிகழும் எல்லாவற்றிலும் பிரிவுப் போக்கு பொதுவானது.

“போக்கெல்லாம் பாலை” என்பது பழம்பாடல். பாலைப்பூவின் பெயரால் பாலை நில பெரும்பண் “பாலை” என்றும் “பாலை யாழ்” என்றும் பெயர் பெற்றுள்ளது. இப்பெண்ணே இன்றைய சங்கராபரணம்.

பாலைப்பாணி:

பாலை நிலச்சிறுபண், பாலை நிலப் பூவின் பெயரால் பாலைப்பாணி ஆகியுள்ளது. தென்னாடுடைய சிவன் முழு முதற்கடவுள், மலைமகள் கரம் பிடித்த சங்கரனுக்கு உகந்த பண் சங்கராபரணம், சங்கராபரணத்தில் பிறந்தது பாலைப்பாணி. எனவே சங்கரனுக்கு உரிய மலரான கொன்றையின் பெயரால் பாலைப்பாணிக்கும், “கொன்றை” என்றும் “கொன்றைக்குழல்” என்றும் பதிலிப்பெயர்களால் இப்பண் பெயரிடப்படுகின்றது.

“கொன்றையந்தீங்குழல் கேளாமோ தோழீ” என்று இளங்கோவடிகள் இப்பண்ணைப் பதிவு செய்திருக்கின்றார். “தோகை மாமலர் கொன்றை பாடி” என்று திருவாசகத் திருப்பொற்சுண்ணத்தில் அருள் மணிவாசகர் பதிவு செய்கின்றார். பாலை நிலச்சிறு பண், பாலைப் பெரும்பண்ணான சங்கராபரணத்தில் பிறந்த “சுத்த சாவேரி” என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மருதப்பூ:

வயலும், வயல் சார்ந்த நிலமும் மருதம். ஆற்றங்கரை, கால்வாய்க்கரை, குளக்கரை என மருத நிலம், மருத மரங்களால் சூழ்ந்தது. மருத மரத்தின் பூவால் அது மருத நிலம். திணை மருதம் என்ற ஊடல். பெரும் பண் மருதம். மருத யாழ். “மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்” என்பது மலைபடுகடாம் மருதம், மருத யாழ் என்பது இன்றைய “கரகரப்பிரியா” என்று கண்டறியப்பட்டுள்ளது..

மருதப்பாணி:

மருத நிலச்சிறுபண் மருத மலரால் “மருதப்பாணி” என்று பெயர் பெறுகின்றது. அல்லி, குமுதம் என்றெல்லாம் அழைக்கப்படும் மருத நிலத்து மற்றோர் மலரான “ஆம்பல்” மலரின் பெயரால் “ஆம்பல்” என்றும் “ஆம்பல்குழல்” என்றும் மருத நிலச்சிறு பண் அழைக்கப்படலாயிற்று.

“ஐயவி சிறரி ஆம்பல் ஊதி” என்று புறப்பாடலும், “வண்டு ஆம்பல் ஊதும்” என்று சிலம்பும், மருத நிலச்சிறு பண்ணை “ஆம்பல்” என்றே கூறுகின்றன. “ஆம்பலந்தீங்குழல் கேளாமோ தோழீ” என்று இளங்கோவடிகள் இப்பண்ணை “ஆம்பல் குழல்” என்றே பதிவு செய்துள்ளார். இது இன்றைய நாளில் சுத்த தன்யாசி என்று புதிய பெயர் பெற்றுள்ளது. கரகரப்ப்ரியா என்ற மருதப்பெரும்பண்ணில் பிறந்ததே மருத நிலச்சிறு பண்ணான சுத்த தன்யாசி.

தமிழிசையின் தொன்மையான ஏழ்பெரும்பாலைகள் பின்னாளில் வேறுவேறு பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளன. முல்லை, முல்லை யாழ், என்ற முல்லை நிலப்பெரும்பண் “செம்பாலை” என்ற புதிய பெயர் பெறத்தொடங்கியது. இது போல் ஏழ் பெரும் பாலைகளும் செம்பாலை, படுமலைபாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை என புதிய பெயர்களால் அழைக்கப்படலாயின. இப்பெயர்கள் யாவும் இடுகுரிப்பெயர்கள் அல்ல. அவை பால் நிறைந்த பாலை மரங்களின் பெயர்களே. இதை டி.வி. சதாசிவம் பிள்ளை அகராதி விளக்கமாகக் கூறுகின்றது.

“பயிரவி” என்ற பண்ணைக் குறிக்கும் உழிஞை, தோடியைக் குறிக்கும் காஞ்சி, சிவரஞ்சனியைக் குறிக்கும் வளர முல்லை ஆகியனவும் தாவரப் பெயர்களே.

யாழ்:

யாழ் கருவியானது சிறப்பாக பலாமரத்திலும், கருங்காலி மரத்திலும் செய்யப்பட்டுள்ளது. பழமையான சங்க இலக்கியங்களில் கருங்காலி மரத்தால் செய்யப்பட கரிய நிறமுடைய கருங்கொட்டுச்சீறியாழ்களே பதிவு பெற்றுள்ளன. சிலப்பதிகார காலத்தில் பலாமரத்தில் செய்யப்பட சிவந்த நிறமுடைய செங்கோட்டு யாழ் நடைமுறையில் வந்ததை அரிய முடிகின்றது. “கருங்கோட்டுச்சீறியாழ் பண்ணு முறை நிரப்ப” என்ற நெடுநல்வாடை என்ற சங்க இலக்கிய அடிகளாலும் “செந்திறம் புரிந்த செங்கோட்டு யாழின்” என்ற சிலப்பதிகார அடிகளாலும் இந்த உண்மைகளை நாம் அறிய முடிகின்றது.

பலா மரத்தில் செய்யப்படுவதால் சிவந்த நிறத்தைப் பெறுகின்றது இன்றைய வீணையுங்கூட. எனவே செங்கோட்டு யாழ் என்பதே பிற்காலத்தில் வீணை என்ற பெயரைப் பெற்றுள்ளது. இத்தகைய ஆய்வு உண்மைகளை தஞ்சை ஆபிரஹாம் பண்டிதரும் அவர்தம் மைந்தர் வரகுண பாண்டியனாரும், “ கருணாமிர்த சாகரம்” என்ற நூலிலும் “பாணர் கை வழி” என்ற நூலிலும் முறையே கூறியுள்ளனர்.

நாகசுரம்:

வலிமை நிறைந்த மராமரம் என்ற ஆச்சா மரம் {Ebony} நாகசுரம் செய்யப்பயன்படுகின்றது. வாலி வதைக்கு முன்பு இராமனின் வில்லாற்றளைச் சோதிக்க சுக்ரீவன் விடுத்த வேண்டுகோள் இராமாயணத்தில் காட்டப்பட்டுள்ளது. இராமபாணம் ஏழு மராமரத்தைத் துளைத்துச் செல்கிறது. இதிலிருந்து, இராமபிரானின் வில்லாற்றல் மட்டுமின்றி, மராமரம் கெட்டித்தன்மையுடன், வலிமை வாய்ந்தது என்றும் வயிரம் பாய்ந்தது என்றும் காட்டவே இக்காட்சி இராமாயணத்தில் இடம் பிடித்துள்ளது எனக் கருதலாம். இவ்வளவு வலிமை பொருந்திய மரத்தையே நாகசுரம் செய்ய நம் முன்னோர் தேர்வு செய்துள்ளனர் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

பறை:

பறை என்ற கஞ்சிரா, மத்தளம் என்ற மிருதங்கம் மற்றும் தவில், உடுக்கை முதலிய தோற்கருவிகளுக்கும், பறை தொல்காப்பியத்தில் பதிவு பெற்றுள்ளது. மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தெய்வமான , முருகனைத் தொழுது ஆடிப்பாட நம் முன்னோர் தொண்டகம், சிறுபறை, அரிப்பறை, துடிப்பறை முதலியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். பொதுவாக தொல் தமிழ்த் தெய்வம் முருகனைப் பாடப் பயன்படுத்தியதால் “முருகியம்” என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளன என்று தமிழிசைக் கலைக் களஞ்சிய ஆசிரியர் வீ. பா.க. சுந்தரம் குறிப்பிடுகின்றார். குறிஞ்சி நில மக்களே தொல் மாந்தர்கள். அவர்களின் தொன்மைத்தெய்வம் முருகன். அவனைப்பாடும் முருகியம். இவற்றால் இக்கருவிகள் எவ்வளவு பழமையானவை என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆதிமானிடன் வேட்டையாடிய விலங்குகளின் தோலும், அவனைச்சூழ்ந்து நின்ற மரங்களும் இக்கருவிகளின் படைப்பில் முக்கியப்பங்காற்றியுள்ளன.

தவில்:

நாகசுரத்திற்கென்றே உடன்பிறந்த தாள இசைக்கருவியானது தவில். இதன் கூடு பலா மரத்தில்தான் செய்யப்படுகின்றது. சந்தனம், வேம்பு, செம்மரம், செங்கருங்காலி, நுணா, மாமரம் ஆகிய மரங்களிலும் தவில் செய்யப்படுகின்றது. தோல் என்ற நம் பழமையான இசைக்கருவியின் பெயரே இன்று தவில் ஆகியுள்ளது. இப்பழமையான கருவி இன்று கிளாரினெட், சாக்ஸஃபோன், வயலின் போன்ற மேனாட்டு இசைக்கருவிகளுக்கும் துணைக்கருவியாகியுள்ள பெருமை படைத்தது. இதற்கு முக்கிய காரணங்களாக, தவில் கருவியின் இனிய நாதம், கம்பீரம், உயர் ஓசை தவிர அதைச் செய்யப்பயன்படும் சிறப்புக்குரிய மரங்களையும் சொல்லலாம்.

குழல்:

குழல் என்று பெயர் பெற்ற ஒப்பற்ற ஆதி இசைக்கருவி நம் புல்லாங்குழல். ஆதிகாலம் முதலே மானிடரோடு ஒன்றிய எளிய இசைக்கருவி புல்லாங்குழலே. நம் இலக்கியங்கள், இலக்கியக்கருவியான புல்லாங்குழளுக்கு முக்கிய இடம் தருகின்றன.

“குழல் அகவ, யாழ் முரல” என்பது பட்டினப்பாலை.

“குழல் இனிது யாழ் இனிது” என்பார் வள்ளுவர்.

“குழல் வழி நின்றது யாழே” இது சிலப்பதிகாரம் தரும் காட்சி.

“குழல் வழி யாழ்” என்பார் சிந்தாமணியார்.

“குழல் எழீஇ, யாழ் எழீஇ” என்பார் இறையானார் தம் களவியலில்.

இவ்வாறு சான்றோர் இலக்கியங்களிலும், புலவர் தம் பொய்யா நாவிலும் கல்லாப்பாணர் தம் கவினுறு கைகளிலும் தவழ்ந்த குழலானது சந்தனம், கருங்காலி, செங்கருங்காலி, ஆச்சா, கதிர மரம், ஆகிய மரங்களில் செய்யப்பட்டாலும், புல் இனத்தைச் சேர்ந்த மூங்கிலில் செய்யப்படும் சூழலே ஒப்பற்ற இனிமையைத் தரவல்லது. புல் என்ற மூங்கில் மரத்தால் செய்யபடுவதால் இது புல்லாங்குழல்.

பிறந்த கால முதல் இன்று வரை பிறந்த மேனியுடன் எந்த மாற்றத்திற்கும் ஆளாகாத இசைக்கருவி புல்லாங்குழலே. இதற்கு முக்கிய காரணம் குழல் செய்ய நாம் பெரும்பாலும் மூங்கிலை மட்டுமே பயன்படுத்துவதே.

அகத்திணை ஏழின் புறத்திணையாக நம் முன்னோர் வகுத்துக் கொண்டது ஏழ்புறத்திணைகள். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்ற ஏழுபுறத்திணைகளும் மலர்களின் பெயர் பெற்றுள்ளன.

வாடாவள்ளி வயவர் ஏத்தும்” என்று தொல்காப்பியர் கூறும் “வள்ளி”,
வள்ளிக்கூத்து”, வள்ளி என்ற கொடியால் ஏற்பட்ட பெயர். நல இசையால் தாவரங்கள் மகிழ்ச்சியான உணர்வுகளை வெளியிடுவதாகவும், தாவரங்கள் வளர்ச்சி பெறுவதாகவும் இன்றைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறாக தாவரவியல் இசைக்குப் பெரும்பங்கு அளிப்பதை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. தாவரமும் இசையும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்து உறவு கொள்வதைத் திணை இயலாகவே நம் இலக்கிய நெடும்பரப்பில் காண முடிகின்றது.

Zudem werden sie ber alle Beratung schritte informiert, so dass der erstellungsprozess transparent fr sie abluft

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இசையும் பயிரியலும்”

அதிகம் படித்தது