மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இதனால் அறியப்படுவது யாதெனின்…

ஆச்சாரி

Mar 1, 2013

அந்த புகைப்படத்தைப் பார்ப்பது அவ்வளவு கடினமாக இருக்கிறது. ஒரு கணத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. விடுதலைப் புலிகளின் உரிமைப்போர் ஒரு  பயங்கரவாதமே என்று வாதாடும் அறிவு ஜீவிகள் இந்தச் சின்னஞ்சிறு சிறுவன் மிக அருகில் இருந்து சுடப்பட்டு இறந்து கிடப்பதைப் பார்த்து என்ன சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை. இலங்கை ராணுவத்தின் இந்தச் செயல் எந்த பயங்கரவாதத்தைச் சார்ந்தது? அரசு பயங்கரவாதமா? இல்லை அரசு பேரினவாதமா? மனுநீதியில் பிரபலமான ஒரு சொற்றொடர் நமக்கு பரிச்சயமானது, “கடன், தீ மற்றும் பகை இந்த மூன்றையும் முற்றிலுமாக அழிக்க வேண்டும். இல்லாவிடின் மீண்டும் அவை வளர்ந்து உலை வைக்கும்”. அதன்படியே, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சிறு பிள்ளையைக் கூட விட்டுவைத்தால் பின்பு அவர்களுக்கு சிக்கலாகிவிடும் என்பதால் கேவலமான கோழைகளைப் போல அச்சிறுவனையும் கொன்று போட்டிருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகள் பொது மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் தாக்குதல் நடத்துவார்கள், போர் வீரர்கள் அல்லாத எத்தனையோ சிங்களவர்கள் புலிகளால் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்ற வாதம் கடந்த இருபது ஆண்டுகளாக ஒலிக்கிறது. ஆனால், இப்போது சிங்கள ராணுவம் செய்து இருப்பது என்ன? முதியோர்களையும், சிறுவர்களையும், பெண்டிர்களையும் கூட்டம் கூட்டமாக கொத்து கொத்தாக கொன்று போட்டு இருக்கிறார்கள். இவை அனைத்திற்கும் ஆதாரங்கள் இப்போது மடை கடந்த வெள்ளமாய் வந்து கொண்டே இருக்கின்றன.

இந்திய ரேடார்கள் மற்றும் சீன ஆளில்லா வேவு விமானத்தில் உளவு பார்த்து, முள்ளி வாய்க்கால் பகுதியில் குவிந்து இருப்பது சாமான்யத் தமிழ் மக்கள் என்பதை ஆணித்தரமாக உறுதி செய்த பிறகு, கொத்துக் குண்டுகளை வீசி ஒரு இன நாசத்தை இலங்கை ராணுவம் செய்து இருக்கிறது. “நோ பயர் சோன்” எனப்படும் போர்த் தடைப் பகுதிகளில் புகுந்து மனித வேட்டையாடி இருக்கும் சிங்கள பயங்கரவாதிகளின் படை, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற்று விட்டதாம். சொல்லிக் கொள்கிறார்கள்.

ஒரு போர் என்பது உண்மையான யதார்த்ததிற்க்கும் நம்பிக்கைக்கும் இடையே நடக்கும் ஒரு கோர நிகழ்வு என்று கூறலாம். அப்படிப்பட்ட ஒரு கொடும் போரின்போது பல விசயங்கள் மறைக்கப்படுகின்றன. ஜோடிக்கப்படுகின்றன. அறுபதுகளில் நடந்த இந்தியச் சீன போரின்போது, இந்தியா அடி மேல் அடி வாங்கும்போது, சீன ராணுவம் இந்திய தாக்குதல்களால் திண்டாடிக்கொண்டு இருக்கிறது என்று தூர்தர்சனில் செய்தி வாசித்துக் கொண்டு இருந்தார்கள். இப்படியாக, பொய்களை நிரப்பி கூறப்பட்ட செய்திகளை கொண்டு,  இரு தரப்பும் போரின் போது தமது மக்களை கிளர்ந்து எழச் செய்து கொண்டுதான் இருந்தார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரின் போது அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப் பட்டார்கள் என்று நடுநிலையாளர்கள் அனைவரும் சொல்லிக் கொண்டிருக்க, இலங்கை அரசு மட்டும் அதைக் கட்டுக் கதை, இட்டுக் கட்டிய கதை என்று விதவிதமாகச் சொல்லிக் கொண்டு இருந்தது. இதில் எது உண்மை என்பதில் மேற்கத்திய நாடுகளுக்கு குழப்பங்கள் இருந்தன. தற்போது, புலித் தலைவர் பிரபாகரனின் மகன் படுகொலை செய்யப்பட்டு கிடக்கும் காட்சி, இங்கிலாந்துத்  தொலைக்காட்சியில் வெளியான பிறகு, மேற்கத்திய நாடுகளின் கண்ணோட்டம் மாறி இருக்கிறது. இது தமிழர்களாகிய நமக்கு சாதகமான காலம். இந்த சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஆனால், இந்தப் படுபாதகக் கொலைக் காட்சிக்குப் பிறகும் கூட, நமது மத்திய அரசும், தமிழக அரசும் தமிழகக் கட்சிகளும் வெறுமனே தொலைக்காட்சி செய்திகளை பார்த்து ‘உச்’ கொட்டுவது வெறுப்பைத் தருகிறது. நமது தமிழ் நேசக் கட்சிகளை எடுத்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் ஒரு அறிக்கை. மத்திய அரசைக் கண்டித்து ஒன்று. மாநில அரசைக் கண்டித்து ஒன்று. கொடுங்கோலன் ராசபக்சே ஒழிக! ! என்று இலங்கைத் தூதரகம் முன்பு காலை பத்து மணியில் இருந்து அரை மணி நேரம் ஆக்ரோசம் கலந்த கோசங்கள். அவ்வளவு தான். இந்தக் கொடூரமான கொலைக்கு நமது எதிர்ப்பைப் பதிவு செய்தாகி விட்டது. இனி வேறுவேலை இருந்தால் பார்க்க வேண்டியதுதான். என்ன ஒரு பிழைப்பு?

இந்த மாதிரியான ஒரு ஈனத்தனமான படுகொலையை இஸ்ரேலியரிடம் நடத்திப் பாருங்களேன். அமெரிக்கர்களிடம் நடத்திப் பாருங்களேன். ஒன்றுக்கு பத்து, ஒன்றுக்கு நூறு என்று அவரவர் வசதிக்கு ஏற்ப பதிலடி கொடுப்பார்கள். நாமோ இந்தியாவின் தெற்கு மூலையில் கிடக்கும் ஒரு சிறிய தீவுக்கு அஞ்சி நடுங்குகிறோம். புத்த மதத்தைச் சேர்ந்த, இலங்கையில் நூற்றுக்கணக்கான இந்துக் கோயில்களை அழித்தொழித்த ராசபக்சேவை திருப்பதியில் வரவேற்று உபசரிக்கிறோம். மத்திய அரசாங்கத்தில் பங்கு பெற்றிருந்தும், தனக்கான ‘பங்கு’ வந்தால் போதும் என்று நினைக்கும் ஒரு கட்சி, உக்கிரமாக போர் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு நிலை – ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் ஒரு நிலை என்று திரிசங்கு சொர்க்கமாய் நிற்கும் மற்றொரு கட்சி என இரண்டு முக்கிய கட்சிகள் தமிழ்நாட்டில். இப்படி இருந்தால் பின் எப்படி ஈழ நாடு? விடுதலை? உரிமைப் போர் எல்லாம்?

இலங்கை ஈழப் பிரச்சனையில் மத்திய அரசு என்ன தான் செய்து கொண்டு இருக்கிறது? தேசியம், நாட்டின் இறையாண்மை, அண்டை நாடுகளுடனான உறவு என்று கூறி எப்படியெல்லாம் இந்தப் பிரச்சனையில் தமிழக மக்களை வஞ்சித்துக் கொண்டு இருக்கிறது? இலங்கை அரசை கண்டித்தால், காஷ்மீர் விசயம் பற்றி பாகிஸ்தான் குரல் கொடுப்பது உயர்ந்து விடுமோ என்ற பயம். அதனால் வாய் பொத்தி மௌனமாய் மத்திய அரசு இருக்கிறது. தமிழ் நாட்டிலும் பெருமையாகப் பலர் தேசியம் பேசிக்கொண்டுத் திரிகிறார்கள். இனமே அழிந்த பிறகு என்ன தேசியம் வேண்டிக் கிடக்கிறது? இந்த விசயத்தில் தமிழ்நாட்டின் நிலை தான் என்ன? அரசாங்க ஆட்கள் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். தெளிவான பதிலே வராது.

இந்த படுபாதகக் கொலைகளை உலக அளவில் முன்னிறுத்தி, அனைத்து நாடுகளின் ஆதரவைக் கோரிப் பெற்று, இலங்கைக்கு எதிராக அணி திரள வைக்கவேண்டியது நமது கடமை இல்லையா? இந்த ராஜதந்திரம் கூட நம்மால் செய்ய முடியாது என்றால் நாம் எத்தகைய திறனுள்ள மாநிலம்? அண்டை நாட்டில் ஒரு இன ஒழிப்பு கொஞ்சம் கொஞ்சமாக நடந்து இப்போது முழு மூச்சாய் நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க இங்கே யாருக்கும் திறனில்லை. துணிவில்லை.

விடுதலைப் புலிகள் இருந்தவரை இலங்கை பற்றி தமிழகத்தை ஆளும் அதிமுக கட்சி வேறு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. அதைப்பற்றி இப்போது பேச வேண்டிய சூழ்நிலை இல்லை. இப்போது, புலிகளும் இல்லை. போரும் இல்லை. புணரமைப்புப் பணி நடக்கிறதாம். இலங்கை அரசு சொல்கிறது. புணரமைப்பு என்ற பெயரில் என்ன மாய்மாலம் செய்கிறார்கள் என்று பார்க்கச் சொல்லி டெல்லி சென்று உட்காரவேண்டாமா? அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்த்து அரசியல் செய்து, மத்தியில் பங்கு கொண்டு பல் இளித்துக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தைத் தனிமைபடுத்தி அவர்களை பயமுறுத்தி, இலங்கைக்கு எதிராக அணி திரளச் செய்திருக்க வேண்டாமா?

டெல்லியில் நடந்த இளம்பெண் கற்பழிப்பு விவகாரத்தில் ஊடகங்கள் எப்படி நடந்து கொண்டன? இதனால் நாடெங்கும் எப்படிப்பட்ட விழிப்புணர்ச்சி ஏற்பட்டது? அதுபோன்று ஊடகங்களை ஒன்று திரட்டிக் களத்தில் இறக்கிவிட்டு இருக்க வேண்டாமா? விதவிதமான ஊழல் செய்வதிலும், அவற்றிலிருந்து தப்பிப்பதிலும் இருக்கும் அசாத்தியமான அறிவை இந்த இலங்கைப் பிரச்னையை ஆதியோடு அந்தமாக தீர்க்க உபயோகித்து தொலைத்தால்தான் என்ன?

ஒரு விசயத்தை தமிழர்களாகிய நாம் புரிந்து கொள்ளவேண்டும். இது நமக்கு சாதகமான சூழல். இலங்கை ராணுவத்தின் போர்க் குற்றங்கள் நாஜிக்களுக்கு இணையானவை. இதை மேற்கத்திய நாடுகளுக்கு உணர்த்த வேண்டியது நமது கடமை. இந்திய அரசு மற்றும் தமிழக அரசு முனைந்து முயற்சிகள் மேற்கொண்டால் இப்போதுள்ள சூழலில், இலங்கையில் நடக்கும் பேரினவாத அக்கிரமங்களைத் தடுத்து நிறுத்த முடியும். அதற்கு தமிழகத்தின் ஒட்டு மொத்தக் கட்சிகளின் தூண்டுதல் தேவை. இப்போது இலங்கையில் ஆயுதம் ஏந்தவும் யாரும் இல்லை. அகிம்சை வழியில் போராடவும் வழி இல்லை. இலங்கையின் போர்க் குற்றங்களை சர்வதேச அளவில் கொண்டு சென்று கடும் நெருக்கடியை ராசபக்சேவுக்கு ஏற்படுத்த நம்மால் முடியும். நாம் அதற்கு புத்திசாலித்தனமான சில காய் நகர்த்தல்களைச் செய்யவேண்டும். வெளிநாட்டுத் தமிழ் அமைப்புகளை ஒன்று திரட்டி, அறிவை ஆயுதமாகக் கொண்டு, அமெரிக்கா முதற்கொண்டு ஐரோப்பா முழுக்க உலக நாடுகளின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தால், நிச்சயமாக ராசபக்சேவை உலக நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முடியும். அதற்கான முயற்சி துரிதமாகவும், தொடர்ந்தும் எடுக்கப்பட வேண்டும்.

போர் முடிந்த பிறகும், தனது சொந்த நாட்டிலேயே அகதிகளாய் வாழும் இலங்கைத் தமிழர்களை நாம் கை விட்டால் இனி எப்போதும் அவர்களால் கரை ஏறமுடியாது. ஈழம் என்ற தேசம் வெறும் கனவாகிப் போகும். கல்லறையில் ஒரு காலை ஏற்கனவே அவர்கள் வைத்தாகிவிட்டது. நம் கதி நற்கதியாக அவர்களை மீட்டெடுப்போம்.

Monitoring can be www.celltrackingapps.com/ a useful parenting tool when we encounter covert teenage antics, but we need to remember that our children still need some level of privacy

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

2 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “இதனால் அறியப்படுவது யாதெனின்…”
  1. மாதவன் இளங்கோ says:

    //அந்த புகைப்படத்தைப் பார்ப்பது அவ்வளவு கடினமாக இருக்கிறது. ஒரு கணத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை.//

    உண்மை! உண்மை! உண்மை! பார்க்கும்போதெல்லாம் மூச்சு முட்டுகிறது. என்ன மாதிரியான ஒரு உலகத்தில் நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்???

  2. Tamilan says:

    Speechless brother!!

அதிகம் படித்தது