மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியத் தாய் மாற்றான் தாயாகித் தமிழ் தாயைப் படுத்தும் பாடு

ஆச்சாரி

Jan 18, 2014

அன்னை பூமி, தாய் நாடு, பாரதம், இந்தியா, குடியரசு நாடு, ஜனநாயக நாடு எனப் பல பெயரில் இந்திய நாட்டை அழைக்கிறோம். உலகில் நிலப்பரப்பளவில் ஏழாவது இடத்திலும் 17,517 கி.மீ நீளக்கடல் எல்லைகளைப் பெற்றும் விளங்குகிறது. மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கிறது. எல்லாப் பெருமையும் சரிதான் என்றாலும் இந்தியத் தாயின் செயல்பாடானது தமிழ்த்தாயை அதாவது தமிழ்நாட்டை எடுப்பார் கைப்பிள்ளையாகவே நினைத்து செயலாற்றி வருகிறது. இந்தியா எந்தெந்த விடயத்தில் தமிழ் நாட்டை புறக்கணித்தும், மதியாமலும், ஒதுக்கியும் வருகிறது என்பதை பின்வருவனவற்றில் காண்போம்.

தமிழகத்திற்கு மின்சாரம் தரமுடியாது:

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப்போனதால் தற்போது கடும் மின் பற்றாக்குறை நிலவுகிறது. தமிழக மக்கள் தினமும் 12 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டை எதிர்கொள்கின்றன. எனவே டில்லி மாநில அரசு திருப்பித்தரும் கூடுதல் மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்க நடுவண் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

இதற்கு தில்லி அரசு, திருப்பும் கூடுதல் மின்சாரத்தை, தமிழகத்திற்கு ஒதுக்க முடியாது என்றது. ஏனெனில் அசாம், உத்திரபிரதேசம், கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், தாத்ரா நாகர், ஹவேலி போன்ற மாநிலங்கள் மின்சாரத்தைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதால் தமிழகத்திற்கு போதிய மின்சாரத்தை வழங்க முடியாது என்றது மத்திய அரசு. ஆனால் நமது அண்டை நாடான பாகிசுதானுக்கு மட்டும் 1000 வோல்ட்ஸ் மின்சாரம் வழங்க முடிவு செய்துள்ளது மன்மோகன் சிங்(கள) அரசு.

தமிழர்களுக்கு வேலையின்மை:

தமிழகத்தில் பிற மாநிலத்தவர்களுக்கே மத்திய அரசு வேலை வாய்ப்பில் பல இடங்கள் வழங்கியுள்ளது. குறிப்பாக வடநாட்டைச் சேர்ந்த இந்திக்காரர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் போன்ற மற்ற அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்களே தமிழ்நாட்டில் செயல்படும் வருமான வரி அலுவலகங்கள், உற்பத்தி வரி அலுவலகங்கள், தொடர்வண்டித்துறை, பி.எச்.இ.எல் (BHEL) நிறுவனம், வனத்துறை, வங்கித்துறை(ஆர்.பி.ஐ) போன்று பல மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இயங்கி வரும் இந்த நிறுவனங்களில் தமிழர்களுக்கு போதிய வேலை வாய்ப்பின்மை கொள்கையை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது.

தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காத மத்திய அரசு:

தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியம், இலவச அரிசி மற்றும் மண்ணெண்ணெய் வழங்கல், கல்வி, சாலை வசதி, மின் பகிர்மானம், தொழில் முன்னேற்றம் போன்ற நிர்வாகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு மத்திய நிதி ஆணையம் துறையான போதிய நிதியை தமிழகத்திற்கு தரப்படுவதில்லை. தமிழக திட்டங்களின் உதவிக்காக மத்திய அமைச்சகங்களின் கருணைக்காக காத்திருக்கும் இடத்தில் தமிழ்நாடு அரசுத்துறை வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வளர்ச்சிக்கென்று உறுதியளிக்கப்பட்ட நிதியை மத்திய அரசு தருவதில்லை என்பது பல ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் நிகழ்வாகும். இதனால் தமிழக முன்னேற்றத்திற்கு போடப்படும் திட்டங்கள் சரியாக செயல்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

மின் உற்பத்தி குறைவு:

தமிழக அரசுக்குச் சொந்தமான 12 அனல் மின் நிலையங்களும் அவற்றின் முழுக்கொள்ளளவிற்கு உற்பத்தி செய்து வரும் நிலையில், மத்திய அரசுக்கு மற்றும் கூட்டுத் துறையில் உள்ள அனல் மின் நிலையங்களில் உற்பத்தி ஒரே நேரத்தில் குறைந்திருப்பது கவலையான விடயமாகும். இந்த மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து மோசமாக செயல்படுவதால் கடும் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசுக்குச் சொந்தமான இத்தகைய நிறுவனங்கள் ஒரே நேரத்தில் குறைந்த அளவில் மின் உற்பத்தி செய்வதை தமிழக மக்களால் நம்பமுடியவில்லை. மத்திய அரசிற்குச் சொந்தமான பொது நிறுவனங்களில் தொடர்ந்து மின் உற்பத்தியைக் குறைத்திருப்பது தமிழகத்தை இருளில் மூழ்கடிக்க மத்திய அரசின் திட்டமிட்ட சதியோ எனச் சந்தேகம் கொள்ள வைக்கிறது.

இந்தியா, காசுமீர் மாநிலத்திற்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டவிதி 370- இன் மூலம் சில சிறப்பு தகுதிகளை வழங்கியுள்ளது. காசுமீரில் பிற மாநிலத்தவர் (தேசிய இனத்தவர்) சொத்து வாங்கத் தடை விதிப்பது, 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் கூட காசுமீரி அல்லாத பிறருக்கு வாக்குரிமை மறுப்பது, காசுமீரி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பிற மாநிலத்தவர் கல்வி கற்கத் தடை விதிப்பது உள்ளிட்ட சில பலன்களை இச்சட்டத்தின் மூலம் காசுமீர் மாநிலத்திற்கு அளித்துள்ளது. இந்திய அரசு, இச்சட்டத்தின்படி, காசுமீர் பெண் ஒருவர் பிற மாநிலவத்தவரை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்ணால் கூட காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது.

இதே நிலையில் அருணாசல பிரதேசம், இமாசலப் பிரதேசம், அந்தமான்-நிக்கோபார் தீவுகள், நாகலாந்து போன்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன. ஆனால் இந்தத் தகுதிகளைத் தமிழகம் பெறவில்லை. அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கூட மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது.

ஈழப்போரில் இந்தியாவின் நிலை:

தமிழகத்தின் தொப்புள்கொடி உறவுகளைக் கொன்றொழிக்க இலங்கை எடுத்த முயற்சியை விட இந்தியாவின் முயற்சியே மிக அபரிமிதமானது என்பது உலகறிந்த விடயம். இந்தியாவின் கொடூர முகத்தினை முதன் முதலில் தனது உயிராயுதம் கொண்டு கிழித்துப் போட்டவர் வீரத்தமிழன் திலீபன் அவர்கள்.

இந்தியாவை உறவாக, உயிராக, தங்களின் துணையாக எண்ணிய ஈழத்தமிழர்கள் மீது இந்தியா ஏற்படுத்திய தாக்கம் கொடூரமானது. அத்தனை வலிகளையும் தாண்டி இன்றுவரை இந்தியாவை வெறுத்து ஒதுக்க வேண்டிய சங்கடமான நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டு விட்டனர். எனவே, ஈழத் தமிழர்களுக்கான நீதி கோரல்களுக்கு இந்தியா எல்லா அவைகளிலும் தனது கறுப்பு முகத்தைத் தொடர்ந்து காட்டி வருவது. ஒட்டு மொத்தத் தமிழினத்தையும், இந்தியாவிற்கு எதிராகப் பொங்கி எழ வைக்கும். இந்த எதிர்ப்பானது பிற்காலத்தில் தமிழக அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

கூடங்குளத்தில் தமிழர்களுக்கு எதிரான நிலை:

வெறும் 450 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் கல்பாக்கம் அணு உலையைச் சுற்றியுள்ள பகுதியிலேயே புற்றுநோய் உள்ளிட்ட பல பாதிப்புகள் உள்ளன. அப்படி என்றால் 2000 மெகாவாட் உற்பத்தி செய்யும் கூடங்குள அணுஉலை இயக்கப்பட்டால் அதிக கதிர்வீச்சுக்கு கூடங்குள மக்கள் மட்டுமின்றி இப்பகுதியில் வாழும் பிற ஊர் மக்களும் பாதிக்கப்படுவார்கள். இந்த உண்மையை நன்கு அறிந்தும் இந்திய அரசு மக்களின் நலத்தை கருத்தில் கொள்ளாமல், கூடங்குளம் அணு உலை விடயத்தில் தமிழர் போராட்டத்தை கொஞ்சமும் நினையாமல் உலை திறப்பதிலேயே குறியாகச் செயல்பட்டு வருகிறது.

மக்கள் நலத்திற்குத்தான் அரசே தவிர, அரசுக்காக மக்கள் இல்லை. இது தெரிந்தும் நம் மக்களை வஞ்சிக்கும் செயல்பாடுகளிலேயே இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. வேண்டாம் என்று எதிர்த்த நம் தமிழ்களை ராணுவத்தை ஏவி விட்டு என்னபாடு படுத்தியது என்பது ஊர் அறிந்த விடயம். தமிழனை அடித்தால் கேட்பவர் யாருமில்லை என்ற மன நோக்கிலேயே இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்தக் கொடுமைகளை எல்லாம் மத்திய அரசின் அமைச்சர் பதவி வகிக்கும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் எதையும் கண்டுகொள்ளாமல் ஏதோ பிற நாட்டில் இச்சம்பவம் நடப்பது போன்று நினைத்துக் கொண்டு கண்டும் காணாமலும் இருப்பது தமிழனுக்கு எதிரி தமிழனே என்ற உணர்வை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

புகுசிமா அணு உலை விபத்து ஏற்பட்ட பின் ஜப்பான் அரசு வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் அனைத்து மின் உற்பத்தியையும் நிறுத்துவது என்றும், 2040-ஆம் ஆண்டிற்குள் அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடுவது என்றும் தீர்மானித்துள்ளது. இந்தியா இந்நாட்டைப் பார்த்து எப்பொழுதுதான்  பாடம் கற்றுக்கொள்ளப் போகிறதோ தெரியவில்லை.

மெட்ராசு கஃபேயும் கிரிக்கெட்டும்:

இலங்கையின் இனவெறி பிடித்த இலங்கை அரசின் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சென்னையில் 20-20 ஐ.பி.எல் விளையாட தமிழக அரசால் தடைவிதிக்கப்பட்டவுடன் வட இந்திய அமைச்சர்களும், ஊடகங்களும் தமிழகத்தையும், முதல்வரையும் கடும் விமர்சனம் செய்தன. நியாயமாகப் பார்த்தால் இந்தியா, இலங்கை விளையாட்டு வீரர்களை இந்திய மண்ணில் விளையாடவே அனுமதித்திருக்க கூடாது. மாறாக அவர்கள் விளையாடுவதற்கும் அனுமதித்தும், அவர்கள் அணியை தத்தெடுத்து வளர்த்து வரும் தமிழினத் துரோகிகளும் சேர்ந்து ஆடிய ஆட்டமே ஐ.பி.எல் திருவிழா.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல மெட்ராசு கஃபே என்ற வடஇந்திய திரைப்படத்தில் தமிழீழத் தலைவர் பிரபாகரனையும், தமிழர்களையும் இழிவுபடுத்தி வந்த இப்படத்தை இந்திய அரசு வணக்கம் போட்டு வரவேற்ற செயலானது மேலும் தமிழர்களை அவமானப்படுத்துவது ஆகும்.

நதிநீர் பங்கீடு:

ஒரு குடும்பத்தில் பலர் இருந்தாலும் அனைவருக்குள்ளும் ஒரு ஒற்றுமை உணர்வையும், இணக்கமான சூழலையும் ஏற்படுத்துவதே குடும்பத் தலைவர், தலைவியின் பொறுப்பு. குடும்பத் தலைவி, தலைவர் போல் இயங்கும் மத்திய அரசு ஒரு குழந்தையின் (மாநிலத்திற்கு) கண்ணில் வெண்ணையும், ஒரு குழந்தையின் கண்ணில் சுண்ணாம்பையும் தடவும் சூசகமான வேலையையே செய்து வருகிறது.

கர்நாடகாக்காரன் காவிரி நீர் தர மறுக்கிறான், ஆந்திராக்காரன் கிருட்ணா நீர் தர மறுக்கிறான், கேரளக்காரன் பெரியார் அணை எமக்குத்தான் சொந்தம், உங்களுக்கு அதிலிருந்து நீர் வழங்க முடியாது என அறிக்கை விட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறான். இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் செயலையே மத்திய அரசு செய்து வருகிறது. நாட்டு மக்களுக்குள் ஓர் இணக்கமான சூழலை ஏற்படுத்தவும், தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய நீரை நியாயமான முறையில் பெற்றுத்தரும் எந்தவிதச் செயல்களிலும் ஈடுபடாத இந்திய அரசு என்னதான் செய்து வருகிறது என்பது மத்தியில் இருப்பவர்களுக்கே வெளிச்சம்.

மத்திய அரசின் மொழித் தீண்டாமை கொள்கை:

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் சார்பின் 4 நீர்நிலை பல்கலைக்கழகங்களும் 45 வேளாண்மை சார்ந்த கல்வி நிறுவனங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் சேருவதற்காக அனைத்திந்திய நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள்களை தமிழில் தயாரித்து வழங்கும் திட்டம் இல்லை என்று இந்நிறுவனம் பதிலளித்துள்ளது.

மற்ற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளிலும் இந்தி மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இந்தி, தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகள் மட்டுமே பயிற்று மொழிகளாக உள்ளன. அவ்வாறு இருக்கும் போது அனைத்திந்திய அளவில் நடைபெறும் பொதுநுழைவுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்களை இந்த 9 மொழிகளிலும் தேவைக்கேற்ப தயாரிக்காமல் இந்தியில் மட்டும் தயாரிப்பது மற்றமொழி பேசும் மாணவர்களுக்கு குறிப்பாகத் தமிழ்மொழி பேசும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும்.

இதன் மூலம் இந்தி படிக்காத மாணவாகளை இரண்டாம் தர மாணவர்களாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சம் பேர் எழுதுகின்றனர். இவர்களில் 75 விழுக்காட்டினர் அதாவது 6 லட்சம் பேர் தமிழ் வழியில் படித்தவர்கள் ஆவர். பொது நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழில் தயாரிக்கப்படாததால் நம் தமிழ் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு மத்திய அரசால் தொடர்ந்து மறுக்கப்பட்டே வருகிறது. இந்த தகாத மொழிக்கொள்கையை மத்திய அரசு கைவிட்டால் நம் தமிழ் மாணவர்கள் உயர்ந்த இடத்தையும், இலக்கையும் அடைய அது வழிவகுக்கும்.

இந்தியாவின் இரட்டை நிலை:

கேரளாவில் ஒரு மீனவனை அயல்நாட்டு அதிகாரிகள் சுட்டுவிட்டனர் என்றதும் இந்தியா கொந்தளித்து அந்த அதிகாரிக்குத் தண்டனை வழங்கியது. ஆனால் தினந்தோறும் சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சுடப்பட்டு இறந்து வரும் இந்த அவலச் செயலுக்கு ஒரு முடிவும் எடுத்தது இல்லை.

தற்போது இந்தியாவைச் சேர்ந்த தூதரக அதிகாரி தேவயானி அவர்கள், அமெரிக்க காவல் துறையால் கைது செய்யப்பட்டார் உடனே இந்திய அரசு இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பை விலக்கி உள்ளது. இதன் மூலம் அமெரிக்க அரசுக்கு தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது இந்திய அரசு. ஆனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் இருக்கும் போது உடனே தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்த உத்தரவிடுகிறது.

தமிழர்கள் இந்தியர்களே அல்ல என்பதை இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது. பிறகு ஏன் தமிழர்கள் இந்திய அரசுக்கு வரி செலுத்த வேண்டும்?

காவிரிப் பிரச்சனையில் கன்னடத்துக்காரன் பக்கம் நின்று தமிழினத்தை வஞ்சிப்பது. முல்லைப்பெரியாறு, பாலாறு சிக்கலில் தமிழனத்திற்கு எதிராக நிற்பது, கச்சத்தீவை சிங்களவனுக்குத் தாரை வார்ப்பது, தமிழக மீனவர்கள் சிங்களவனால் சுட்டுக்கொல்ல துணை நிற்பது, தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நிதியையும், உணவுப் பொருட்களையும் தராமல் வஞ்சிப்பது எனத் தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இந்திய அரசானது, தமிழ்நாட்டுத் தமிழன் நெஞ்சிலும், தமிழச்சி நெஞ்சிலும் இந்தியாவிலிருந்து பிரிந்தால் தான் நமக்கு வாழ்வு உண்டு என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது.

ஒவ்வொரு தமிழனும் இந்திய அரசின் இந்த வஞ்சிக்கும் கொள்கையை உணர்ந்து செயல்பட்டால் உண்டு வாழ்வு இல்லையே நமக்குத்தான் தாழ்வு.

Instead, try and find a natural way to introduce the topic in conversation http://www.besttrackingapps.com

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “இந்தியத் தாய் மாற்றான் தாயாகித் தமிழ் தாயைப் படுத்தும் பாடு”
  1. kasi visvanathan says:

    நடுவண அரசில் வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு இல்லை என்பதற்கு முன், தமிழ் நாட்டிலேயே தமிழ் நாடு மா நில அரசுப்பதவிகளில் 80 விழுக்காடு வேறு மா நிலத்தவர் என்ற உண்மையினையும் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

அதிகம் படித்தது