மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியப் பொருளாதாரம் ஏற்றமா? இறக்கமா? (கட்டுரை)

ஆச்சாரி

Aug 1, 2013

இந்தியப்பொருளாதாரம் கடந்த 65 ஆண்டுகளில் பல்வேறு பரிமாணங்களை ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படை அமைப்பு முறைகளில் மாற்றங்களைக் கண்டுள்ளது. வேளாண்மை, தொழில் துறை, சேவைத்துறை என்ற பாகுபாட்டின் அடிப்படையில் இந்தியப் பொருளாதார நிலையைப்பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வேளாண்மை மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாக அமைந்துள்ளது. உலகில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்தியாவில் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். அதிக அளவு வேலைவாய்ப்பைத் தருவதிலும், உணவு உற்பத்தி அளிப்பதிலும் தொடர்ந்து முன்னிலை வகித்தாலும், இது மொத்தப் பொருளாதார உற்பத்திக்கு (Gross Domestic Product) அதன் பங்களிப்பு 1950-51ஆம் ஆண்டில் 55.1 விழுக்காடாக இருந்தது 2012-13ஆம் ஆண்டுகளில் அது 13.68 விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள்ளது. 1950-51ஆம் ஆண்டில் உணவு உற்பத்தியானது 50.8 மில்லியன் டன்னாக இருந்தது 2011-12ஆம் ஆண்டில் 257.4 மில்லியன் டன்னாக அதிகரித்தாலும் இது வளர்ந்துவரும் மக்கள் தொகைக்கு ஈடான அளவில் காணப்படவில்லை(GOI, Planning Commission). 2001-2011ஆம் ஆண்டுகளுக்கிடையே மக்கள் தொகை வளர்ச்சியளவு ஆண்டுக்கு 1.65 விழுக்காடாகும் ஆனால் உணவு உற்பத்தியின் வளர்ச்சியளவு 1.03 விழுக்காடு மட்டுமே. மேலும் 1967-68 மற்றும் 2007-08ஆம் ஆண்டுகளுக்கிடையான காலங்களில் உணவு பயிரிடும் பரப்பளவு 0.07 விழுக்காடும் பயறுவகைப்பயிரிடும் பரப்பளவு 0.06 விழுக்காடும் குறைந்துள்ளது. இது போன்ற போக்கினால் வேளாண்மைமையின் ஆண்டு வளர்ச்சியளவானது 2003-04ஆம் ஆண்டிற்கு பிறகு மொத்த தேசிய உற்பத்தி, தொழில் துறை, சேவைத்துறைப் போன்றவைகளைவிடக் குறைவான அளவிற்கே ஆண்டு வளர்ச்சி அளவு காணப்படுகிறது. இதன் வளர்ச்சிப்போக்கும் கடந்த காலங்களில் ஒரு நிலையற்றதாகவே பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்த நாடுகளில் மிகக்குறைவான விழுக்காடு மக்களே வேளாண்மையை நம்பி வாழ்ந்தாலும் அவர்களின் தேவைக்கான உற்பத்தியைச் செய்தும் உபரியானதை ஏற்றுமதியும் செய்கின்றனர். ஆனால் நம்நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டாலும் விடுதலைபெற்று 65 ஆண்டுகளைக் கடந்தபோதும் வேளாண்மை உற்பத்தியில் தன்னிறைவை நம்மால் முழுமையாக எட்டமுடியவில்லை. வளரும் நாடுகளில் வேளாண்மை உற்பத்திக்கான சலுகைகள் அதிக அளவில் வழங்கப்படுகிறது. நீர்ப்பாசனம், மின்சாரம், உரம் போன்றவைகளுக்கு அதிக மானியங்கள் தரப்படுகின்றன. உலக வர்த்தக அமைப்பினால் (World Trade Organisation) இதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் இந்த வளரும் நாடுகள் இதனை ஒரு பொருட்டாகவும் கருதுவது இல்லை.
இந்தியாவில் அதிக மக்களின் வாழ்வாதாரமாக உள்ள வேளாண்மைக்கு மிகக்குறைவான அளவே மானியங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் புதிய பொருளாதாராக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின் வேளாண்மைக்கான முக்கியத்துவம் வெகுவாகக் குறைந்துள்ளது. வேளாண்மையில், நீர்பாசனம், சேமிப்புக்கிடங்குகள், மின்சாரம், வங்கிக்கடன், வேளாண் ஆராய்ச்சி போன்றவைகளுக்கு 1980 மற்றும் 1990ஆம் ஆண்டுகளில் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. 2000ஆம் ஆண்டுகளின் இடையில் இதற்கான நிதி ஒதுக்கீடு அதிரித்தாலும் உலக நிதித்தொடர்பான சிக்கலால் பெரிய முன்னேற்றம் ஏதும் எட்டவில்லை. வேளாண்மையும் அதைச் சார்ந்த தொழில்களின் மொத்த முதலீட்டு ஆக்கமானது (Gross Capital Formation) தொடாந்து குறைந்துகொண்டு வந்துள்ளது. 2000-01ஆம் ஆண்டில் 12.17 விழுக்காடாக வளர்ச்சியடைந்த முதலீட்டாக்கம் 2011-12ஆம் ஆண்டில் 4.99 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்-2005 கிராமப்புறங்களில் வாழும் திறன்குன்றிய (Unskilled labourer) தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பினை உறுதி செய்வதும் கிராமப்புறக் கட்டுமானத்தை வளப்படுத்துவம் முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருந்தாலும் இத்திட்டத்தினால் வேளாண்மைக் கட்டமைப்புகள் போதுமானதாக வலுப்பெறவில்லை என்பதே உண்மை மாறாக இதனால் வேளாண்சாராத்தொழிலே அதிக பயன் பெற்றுள்ளது. 66ஆவது தேசிய மாதிரி ஆய்வின்படி சுமார் 40 விழுக்காடு வருவாய் கிராமப்புறங்களில் வேளாண்சாராத்தொழிலிருந்து பெறப்படுவதாக தெரியப்படுத்தியுள்ளது.
வேளாண் இடுபொருட்களின் விலை ஏற்றத்தினால் உற்பத்திச் செலவு அதிகரிப்பு, அதன் விளைவாக வருவாய் இழப்பு, ஒப்பந்த வேளாண் கூலி முறை பரவல், குறைவான கூலி, வேளாண்மையில் அதிக அளவு இயந்திரங்களின் பயன்பாட்டால் வேளாண் கூலித் தொழிலாளர்கள் வேலை இழப்பு, குறைவான பருவமழை, வேளாண்மை முதலீட்டின் திரும்பப்பெறும் வருவாய் இழப்பு அதிகரிப்பு, வேளாண் கடன் வசதி இன்மை, அதிக அளவிலான வேளாண்கடன் மீதான வட்டி, பன்னாட்டு வேளாண் பொருள் இறக்குமதியால் உள்நாட்டு வேளாண் பொருட்களின் தேவை வீழ்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் வேளாண் தொழிலிலிருந்து அண்மைக்காலமாக அதிக அளவு விலகுகின்றனர். 1991-2001ஆம் ஆண்டுகளுக்கிடையில் 8 மில்லியன் மக்கள் வேளாண்மை செய்வதை நிறுத்திவிட்டனர், 2004-05ஆம் ஆண்டு முதல் 2009-10ஆம் ஆண்டு வரையில் 21 மில்லியன் மக்கள் வேளாண் தொழிலிலிருந்து விடுபட்டுள்ளனர்.
இந்நிலையிலிருந்து வேளாண்மை விடுபட வேண்டிய கட்டாயம் வரும் காலங்களில் உள்ளதாக பல ஆய்வுகள் பகிர்கின்றன. வேளாண் பொருள் உற்பத்தியாளர்களுக்கான வருவாய் உத்திரவாதம், வறண்டபகுதிகளை விளைநிலமாக மாற்றுதல், பயிர் செய்யச் சாதகமான சுற்றுப்புறச்சூழல், விளைநிலங்களை பிற பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல், நீர்வளப்பாதுகாப்பு, தடையற்ற மின்சாரம் வழங்குதல், வேளாண்கட்டமைப்பை மேம்படுத்துதல், வேளாண் உள்ளீட்டுப் பொருட்களுக்கான மானியங்களை உயர்த்துதல், ஆதரவு கொள்முதல் விலையினை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாற்றி தருதல் போன்றவைகள் வேளாண்மை தொழிலை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள ஏற்ற நிலையாக அறியப்படுகிறது.
இரண்டாம் நிலைத்துறை என்பது தொழில் மற்றும் உற்பத்தியைச் சார்ந்ததாகும். இத்துறை பொருளாதார முன்னேற்றத்திற்கு மிக முக்கியப் பங்கை நிலையாக அளித்துவருகிறது. இது மொத்த தேசிய வருவாய்க்கு சுமார் நான்கில் ஒரு பங்கினைப் பங்களிப்பைத் தொடர்ந்து அளித்துவருகிறது. இந்தியா அடிப்படையில் தொழில்சார்ந்த நாடல்ல இந்திய விடுதலைக்குப் பின்பு தொழில்வளர்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அன்றைய பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். 1956ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தொழிற்கொள்கை இந்தியாவில் பொதுத்துறை முதலீடு தொழில்வளர்ச்சிக்கு அடிகோலியது. அதைத்தொடர்ந்து இந்திராகாந்தி தலைமையிலான அரசு வங்கிகளை தேசியமயமாக்கியும், சிறுதொழில் மேம்பாட்டிற்கும் வித்திட்டது. ஆனால் அவரது மகனான ராஜிவ் காந்தி இம்முறைகளுக்கு எதிராக தனியார் தொழில் மேம்பாட்டிற்கு அடிகோலினார். 1991ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கின் தாராளமயக்கொள்கையின் விளைவாகப் பொதுத்துறை நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி முடங்கத் துவங்கியது, தனியார் தொழில்கள் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டது. 1995ஆம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பில் இந்தியா பங்கேற்றபின் தொழிற்கொள்கையில் பல மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டது. இதன் விளைவாகப் பல துறைகளில் 75 முதல் 100 விழுக்காடு அந்நிய நேரடிமுதலீடு அனுமதி. சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைத்தல், பொதுத்துறையில் தனியார் பங்கேற்பு எனப் பல்வேறு நடவடிக்கைகள் நடந்தேறி வருகிறது.
புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபின் தொழில்துறையின் முக்கிய அங்கமான உற்பத்தித் துறையில் ஆயத்த ஆடை, துணி உற்பத்தி, தோல் பதனிடும் தொழில், வைரம் பட்டைதீட்டுதல் போன்றவைகள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைச் சந்தித்த துறைகளாகும். 2000ஆம் ஆவது ஆண்டுகளில் இரண்டாம் பாதியில் மின்பற்றாக்குறை, கச்சாப் பொருட்களின் பற்றாக்குறை, உற்பத்திச்செலவு அதிகரிப்பு, பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு போன்ற காரணங்களால் சிறுதொழில் பாதிப்படைந்தது. உலக அளவில் ஏற்பட்ட நிதி மற்றும் கடன் சிக்கல்களாலும் இந்தியாவின் ஏற்றுமதி பெரிய அளவு பாதித்தது. பன்னாட்டுச்சந்தையில் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதியான துணிப்பொருட்களின் தேவை கணிசமான அளவு சார்ந்தது. சீனா இந்தியாவிற்கு உலகச் சந்தையில் இப்பொருளுக்கான கடும் போட்டியை உருவாக்கிவருகிறது காரணம் அதன் நட்பு நாடான அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் இந்நாட்டின் துணிப்பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக ஆயுத்த ஆடை, பின்னலாடைத் தொழில்கள் நசிவுறத் தொடங்கியுள்ளது. பல சிறிய-பெரிய தொழில் நிறுவனங்களின் உற்பத்தியளவும் பலகாரணங்களால் குறைந்தது, இதன் விளைவு 3.7 மில்லியன், வேலைவாய்ப்பை இத்துறை 2004-05/2009-10ஆம் ஆண்டுகளில் இழந்தது, இதில் 3.1 மில்லியன் பேர்  (83 விழுக்காடு) பெண்கள் ஆவார்கள் (Jayan Jose Thomas, 2012).

இந்தியாவில் சேவைத்துறையானது தொடர்ந்து அதிக அளவு பங்கினை அளித்து வருகிறது. சேவைத்துறையின் வளர்ச்சி வேளாண்துறை மற்றும் தொழில்துறையின் வளர்சிக்கு உதவியாக இருக்கிறது. தகவல்தொடர்பு. வர்த்தகம், மனைத் தொழில். பொது நிர்வாகம், பாதுகாப்பு. வங்கிகள், போக்குவரத்து போன்றவைகள் குறிப்பிடத்தக்க சேவைத்துறைகளாகும். பொருளாதார சீர்திருத்தம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட பின் சேவைத்துறை பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கினைப் பெற்றுள்ளது. அதேசமயம் சேவைத்துறையின் வளர்ச்சியானது பணவீக்கத்தினை ஏற்படுத்தும் என ஆய்வுகள்  தெரிவிக்கிறது. இந்தியாவில் சேவைத்துறை தொடர்ந்து ஒட்டுமொத்தத் தேசிய உற்பத்திக்குப் பெரும்பங்கினைத் தொடர்ந்து அளித்துவந்தாலும், 1950-51ஆம் ஆண்டு ஒட்டு மொத்த தேசிய உற்பத்திக்கு 30 விழுக்காட்டுப் பங்கினை அளித்தது 2012-13ஆம் ஆண்டு 59.29 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ஆனால் இது பல வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது குறைந்த அளவே ஆகும். சேவைத்துறை மொத்த வேலைவாய்ப்பில் சுமார் 20 விழுக்காடு வேலைவாய்ப்பினை அளித்துவருகிறது. புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு சேவைத்துறையில் (1983/1993-94) 3.5 மில்லியன் வேலைவாய்ப்பு அதிகரிப்பு இருந்தது, நடைமுறைப்படுத்தப்பட்டபின் 1993-94/1999-00 ஆம் ஆண்டுகளில் 0.4 மில்லியன் மட்டுமே அதிகரித்துள்ளது. ஆனால் 2000ஆம் ஆண்டின் முன்பாதியில் 4.4 மில்லியனாக அதிகரித்தது பின் பாதியில் 0.3 மில்லியன் வேலை இழப்பை எதிர்கொண்டது. பொது நிர்வாகம், பாதுகாப்பு போன்ற துறைகளில் வேலை வாய்ப்பு குறைந்தது ஒரு முக்கியக் காரணமாக இதற்குச் சுட்டப்படுகிறது. சேவைத்துறை 2000ஆவது ஆண்டுகளின் முதல் பாதியில் தகுந்த ஆண்டு வளர்ச்சியை அடைந்திருந்தாலும் பின்பாதியில் அது வீழ்ச்சியடையத் தொடங்கியது. உலக அளவில் ஏற்பட்ட நிதி மற்றும் கடன் தொடர்பான சிக்கலினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. ஆனால் இது வேளாண் துறை. தொழில்துறையின் வளர்ச்சியைக் காட்டிலும் அதிக வளர்ச்சி விழுக்காட்டைப் பதிவுசெய்துள்ளது.
அமெரிக்காவில் 2007ஆம் ஆண்டில உருவான நிதிச்சிக்கலினாலும், ஐரோப்பிய நாடுகளில் 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட கடன் தொடர்பான சிக்கலினாலும் உலக அளவில் பல நாடுகள் பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது இந்தியா இதனால் பாதிக்கப்பட்டாலும், பொதுத் துறை அமைப்பு வலுவானதாக இருந்ததால் இதனை எளிதில் எதிர்கொண்டு பொருளாதாரா வளர்ச்சியைப் பாதுகாத்துக் கொண்டது. ஆனால் பல வளர்ந்த நாடுகள் இன்றும் இதிலிருந்து மீளாநிலையிலேயே உள்ளது. இவ்விரண்டு சிக்கலினால் இந்தியாவின் ஏற்றுமதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. காரணம் இவ்விரு பகுதிகளுக்கும் அதிக அளவிலான ஏற்றுமதியினை இந்தியா பெற்றுவந்துள்ளது. எனவே இந்தியா இதற்கு மாற்றாக அயல் நாட்டு வணிக நிலையை அமைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானது. இதன் அடிப்படையில் வளரும் நாடுகள் ஒன்றிணைந்து தங்களை பொருளாதாரத் தளங்களில் மேம்படுத்திக் கொள்ள பிரேசில், ரஷ்யா, இந்தியா, சைனா, தென்ஆப்பிரிக்கா (BRICS) நாடுகள் ஒன்றிணைந்தது. இந்தியா இந்த கூட்டமைப்பை பயன்படுத்திக்கொண்டு அயல் நாட்டு வாணிபத் திசையினை மாற்றியமைத்துக் கொண்டுள்ளது.

இந்தியா உலகில் ஐந்தாவது பொpய பொருளாதார நாடாக திகழ்கிறது. ஆசிய நாடுகளில் மிகப்பெரிய பொருளாதாரக் கேந்திரமாக செயல்பட்டுவருகிறது. இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை 1991ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டபின் பொருளாதாராவளர்ச்சி தொடர்ந்து உயர்ந்து கொண்டுள்ளது. இப்பொருளாதார வளர்ச்சி உண்மையில் பல்வேறு நிலைகளை உயர்த்தி உள்ளதா? இது உண்மையான வளர்ச்சியா? என்பது தற்போது பொருளாதார அறிஞர்களிடையே பெரிய விவாதப்பொருளாக உள்ளது. அதிகரிக்கும் பொருளாதார வளர்ச்சி என்பது மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியும், வறுமையின் அளவை குறைத்தும் இருக்க வேண்டும் என்பது பொருளியல் கோட்பாடு. இந்தியாவில் இன்றும் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். உலகஅளவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் நகர்புறங்களில் குடிசையில் வாழ்கின்றனர். 40 விழுக்காடு கிராம குடியிருப்புகளில் சாலை இணைப்பை உறுதிபடுத்தவில்லை. பாதியளவு குழந்தைகள் குறைவான ஊட்டச்சத்தினை உட்கொள்கின்றனர். சிசுமரணம் (IMR) 1000க்கு 50 என்ற அளவில் உள்ளது. பாதிக்கு மேற்பட்ட குழந்தைப்பேறு பாதுகாப்பற்ற முறையில் நடைபெறுகிறது. மருத்துவக்காப்பீடு பெற்றோர் 11 விழுக்காடு மட்டுமே. கல்வி அறிவு பெறாதவர்கள் நான்கில் மூன்று பங்காகும். உயர்கல்வி கற்கச் செல்வோர்18 விழுக்காடு மட்டுமே. சுகாதாரத்திற்கான பொதுச்செலவு 1.1 விழுக்காட்டு அளவிலும், கல்விக்கான செலவு 3.6 விழுக்காடாகவுமே உள்ளது. 90 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர்கள் முறைசாராப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். புதிய பொருளாதாராக் கொள்கை நடைமுறைபடுத்தப்பட்டபின் கிராம-நகர வேறுபாட்டு இடைவெளியும் வெகுவாக அதிகரித்துள்ளது
இவ்வாறு பல்வேறு நிலைகள் காணப்பட்டாலும் பொருளாதார வளர்ச்சி அளவு அதிகரித்ததாகக் கூறிக்கொள்வது ஏற்புடையதா? பொருளாதார வளர்ச்சி மட்டுமே நாட்டின் நிலையினை அளவிட முடியும் என்ற கருத்துக்கு மாறாக சமூக-பொருளாதார நிலைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கருத்து அண்மைக் காலங்களில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளது. மனிதவளக் குறியீடு அளவை முன்னிறுத்தி நாட்டின் நிலையைக் கணிப்பதுதான் சிறப்பானது என பல பொருளியல் அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர் மனிதவளக் குறியீட்டினை ஐக்கிய நாடுகளின் மன்றம் 1990ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. கல்வியறிவு, நல்வாழ்வு, வருமானம் போன்றவைகளைக்கொண்டு மனிதவளக் குறியீடு கணக்கிடப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் உலகில் உயர் பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுக்கொண்டிருக்கும் முதன்மையான 10 நாடுகளில் இந்தியா இடம் பெற்றிருந்தாலும் மனிதவளக் குறியீட்டு வரிசைப் பட்டியலில் உள்ள 186 நாடுகளில் இந்தியா 136வது இடத்தை 2013ஆம் ஆண்டு பெற்றுள்ளது, 2003இல் இந்தியா 128வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பித்தக்கது.
அண்மைக்காலமாக அதிகரிக்கும் பொது மற்றும் உணவுப் பணவீக்கம் (food inflation),மிகவும் குறைவான வேலைவாய்ப்பு பெருக்கம், குறைகின்ற பொதுத்துறை முதலீடுகள், அதிகரிக்கும் ஏழை-பணக்கார, கிராம-நகர இடைவெளி, அதிகரிக்கும் இறக்குமதி வளர்ச்சி அளவு, பற்றாக்குறையான உட்கட்டமைப்பு போன்றவைகள் இந்தியாவின் இயைந்த பொருளாதார வளர்ச்சிக்குத்(Inclusive Growth) தடையாக உள்ளது. அதேசமயம் வேறு எந்த நாட்டிலும் இல்லாத மூன்றில் ஒரு பங்கு உழைக்கும் (15-59 வயது) மக்கள் சக்தி வளரும் நாடுகளுடன் பன்னாட்டு அளவில் (BRICS) கூட்டமைப்பை ஏற்படுத்தி இருப்பது போன்றவைகளை திறனுடன் பயன்படுத்தினால் இந்தியா உலக அரங்கில் சிறப்பான உண்மையான வளர்ச்சியை எட்டும் என்பது உறுதி.

Despite the volume of historical information the www.homework-writer.com students possessed, they had little sense of how to use it productively for forming interpretations of events or for reaching conclusions

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியப் பொருளாதாரம் ஏற்றமா? இறக்கமா? (கட்டுரை)”

அதிகம் படித்தது