மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியா- ஒரு முதலாளித்துவ நாடு

ஆச்சாரி

Sep 15, 2013

கொஞ்ச காலத்திற்கு முன் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வந்தார். இதனை இந்திய அரசாங்கமும், ஊடகங்களும் வெகுவாக வரவேற்று மகிழ்ந்தன. இது மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு. இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்பதற்கு இச்சம்பவம் மிக அவசியமானது. இது போன்ற எண்ணற்ற பல இனிமையான சொற்றொடர்கள் இங்கு ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன.

கோடான கோடி உழைக்கும் மக்கள் மீது உண்மையான அன்பும், அக்கறையும் கொண்டவர்களுக்கு இந்தச் சம்பவம் பல பாடங்களைப் புகட்டியிருக்கின்றது. அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும், மக்களுக்கும் எவ்வளவு இடைவெளி இருக்கிறதென்பதையும், அரசு பற்றிய தெளிவின்மையோடு மக்களை எவ்வாறு பார்த்துக் கொள்கிறார்கள் என்பதையும் இச்சம்பவம் நன்றாகவே எடுத்துகாட்டியிருக்கிறது.

எந்த நாட்டில் வாழ்ந்து கொண்டியிருக்கிறோமோ, அந்த நாட்டை இயக்குவதற்குப் பயன்படும் அமைப்பு பற்றிய தெளிவு அடிப்படையில் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியா அமைப்பு மக்களாட்சி, ஜனநாயகம், குடியரசு, மக்கள் நல அரசு என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

மேற்சொன்ன பெயர்களை ஒரே சொல்லில் அழைப்பது என்றால் “முதலாளித்துவ அரசு” என அழைப்பதே பொருத்தமாக இருக்கும். பொருளாதாரவாதிகளுக்கும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் இந்தப் பெயர் ஒன்றும் புதியதுமல்ல, அவர்களுக்கு அந்நியப்பட்டதுமல்ல ஆனால் பாடப்புத்தகங்களிலோ, ஊடகங்களிலோ, ஏன் சட்டத்தில் கூட இச்சொல் பிரயோகத்தைக் காண முடிவதில்லை.

மிக முக்கியமான இந்த உண்மை இங்கு நமக்கு அந்நியமாகப்பட்டிருக்கிறது. சில ஆண்டுகளாக, வர்த்தகம், சந்தைப் பொருளாதாரம், பங்குச்சந்தை, நிதி மூலதனம், வியாபார ஒப்பந்தம் குறித்துப் பரவலாக கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளின் செயல்பாட்டையும், அரசு இவற்றிற்குத் தரும் முக்கியத்துவத்தையும் ஒருங்கிணைந்து நோக்குவோமாயின் இந்தியா ஒரு தெள்ளத் தெளிவான முதலாளித்துவ நாடு என்கிற எளிய உண்மை நமக்குப் புலப்படும்.

இந்த எளிய உண்மைப் புலப்பட்டதன் விளைவே இக்கட்டுரை எழுத என்னைத் தூண்டியது. ஒரு லட்சம் கோடி ஊழல் என்கிறார்கள், ஒபாமா 50 ஆயிரம் கோடி வியாபார ஒப்பந்தம் செய்தார் என்கிறார்கள், பங்குச்சந்தை 20,000 புள்ளியைத் தாண்டியது என்கிறார்கள். இவை எல்லாம் எப்படி இயங்குகின்றன. அரசுக்கும் இவற்றிற்கும் என்ன உறவு? இந்த நிர்வாகம் எப்படி இயங்குகிறது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைகளைத் தேடி அலைந்த போது தத்துவங்கள், இந்திய அரசியல் வரலாறு, இந்திய அரசியலமைப்புச் சட்டம், இவைகள் எல்லாம் எனக்குத் தராத விடைகளும், விளக்கங்களும் ஐரோப்பாவில் தோன்றி, இன்றைக்கு உலகமெல்லாம் பரவி நிற்கும் மார்க்சிய தத்துவத்தில் எனக்குக் கிடைத்தன.

நாம் நினைப்பது போன்று இந்திய அரசாங்கம் மக்களுக்காகச் செயல்படும் அமைப்பு என்பது, நம் அறிவுக் கண்களுக்கு போடப்பட்டிருக்கும் வெறும் மாயத்திரைகளே என்பதை விளக்கப்போகிறேன். இந்தியச் சமுதாயம் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. பல்வேறு அரசமைப்புகளும், அரசு வடிவங்களும் தோன்றிய நாடு, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓர் அரசு வடிவம் இச்சமுதாயத்தை வழிநடத்தி வந்துள்ளது.

மிக அதிக நூற்றாண்டுகள் நிலப் பிரபுத்துவ அரசு முறையின் கீழே இந்தியா இயங்கி வந்துள்ளது. இவ்வரசு முறை இயங்கும் பொழுது இந்தியா ஒரே கட்டுப்பாட்டின் கீழ் வராமல் பகுதி பகுதியாகவே இயங்கி வந்தது. குறைவான உற்பத்தியும், வேளாண்மையை மையமாகக் கொண்ட உற்பத்தி முறையும் இக்காலகட்டத்தின் அடிப்படைகளாக இருந்தன.

உற்பத்தி உடைமைகள் யாவும் நிலப்பிரபு அல்லது பண்ணையாருக்கே சொந்தமாக இருந்து வந்தன. அப்பண்ணையில் உழைக்கும் யாவரும் அடிமைகளாகப் பேணப்பட்டு வந்தனர். இந்தியாவிற்கே உரிய சாதி என்கிற பிரிவும் இதை ஒட்டியே வளர்ந்து வந்தது. இங்கே வேத நூல்களாகவும், இதிகாசங்களாகவும் போற்றப்படுபவை இவ்வமைப்பைச் சார்ந்தே உருவானவைகளாகும். இன்றைக்கும் மக்கள் கலாச்சாரத்தோடு ஊறி நிற்கும் ஊர்ச்சேரி என்கிற பிரிவு, மத நம்பிக்கை, ஒன்று திரளாத மனோபாவம், மழுங்கடிப்பட்டுவரும் போராட்ட குணம் இவையாவும் நிலப்பிரபுத்துவத்தின் விளைவுகளே ஆகும்.

இதனோடே வளர்ந்த ஜமீன்தாரி முறை, மன்னராட்சி முறை அதாவது ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன் இருந்த அனைத்து நிர்வாக வடிவங்களும் நிலப்பிரபுத்துவ முறையின் சாராம்சத்தைக் கொண்டவையே எனலாம்.

அடிமை முறை, கூலி உழைப்பு, தீண்டாமை இந்த மூன்றும் ஆங்கிலேயர்கள் வரும் பொழுது மக்கள் மீது சுமத்தப்பட்டிருந்த பாரங்கள். 1789 ல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சிதான் அதுவரை உலகில் பல்வேறு பெயர்களில் இயங்கிக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவத்தை ஒழித்து முதலாளித்துவத்தை கொண்டு வருவதற்கு வழிகாட்டியாக இருந்தது. இதன் நீட்சியாக, உலகம் எல்லாம் தன் படையெடுப்பைத் தொடங்கிய முதலாளித்துவ முறையை செயல்படுத்தினர். அதுவரை இந்தியாவில் இருந்த அடிமை முறை, சாதி, மத, மொழிப் பிரிவுகள் அவர்கள் ஆட்சி புரிவதற்குப் பெரிதும் பயன்பட்டதெனலாம்.

அதுவரை இந்தியாவின் பல முனைகளில் ஆட்சி புரிந்த எண்ணற்ற நிலப்பிரபுக்களுக்கும், மன்னர்களுக்கும், ஜமீன்தார்களுக்கும் பதிலாக இவ்விடத்தில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கட்டில் நிலை கொண்டது. இயற்கை வளங்களும், கோடிக்கணக்கான அடிமை மக்களும் யாருக்கு சொந்தம் என்பதை மையமாக வைத்து சுதந்திரப் போராட்டம் வெடித்தது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நடைபெற்ற இவ்வரலாற்று நிகழ்வுகளை உற்று நோக்கினால் நமக்கு மிகப்பெரிய உண்மை புலப்படும். ஆங்கிலேயர்களுக்கு முன் ஆண்ட இந்திய ஆளும் வர்க்கமானாலும், ஆங்கிலேயர்களானாலும், மக்களைச் சுரண்டப்படுவோராகவே வைத்திருந்தனர். ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய அரசு முறையின் செயல்பாட்டை நோக்குவோம்.

ஐரோப்பா முழுவதும் பரவிய நிலப்பிரபுத்துவ முறைக்கு எதிரான போராட்ட காலத்தில் இங்கு சுதந்திரப் போராட்டம் நடைபெற்றது. இந்திய மக்களால் முன் எடுக்கப்பட்ட போராட்டமாக சுதந்திரப் போராட்டம் அமையவில்லை. அதன் காரணத்தால் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவளிக்காத சக்திகளும் இந்தியாவில் இருந்தன. ஆனாலும் இந்திய முதலாளிகளுக்கும், நிலப்பிரபுக்களுக்கும் அவசியமாதலால் சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்தனர். இறுதியில் வெற்றியும் பெற்றனர்.

 1947-க்கு முன் வேளாண் உற்பத்தியையும், ஆசியக் கலாச்சாரத்தையும் பெற்றிருந்த இந்தியா, இப்பொழுது தொழில்களையும், பெரிய உற்பத்தி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அதுவரை பழைய கலாச்சாரத்திலும், அடிமை மனோபாவத்தோடும் உழன்று கொண்டிருந்தவர்கள் இப்பொழுது தன் உழைப்பை விற்று எங்கு வேண்டுமானாலும் கூலி பெறலாம் என்கிற கூலி உழைப்பிற்கு, உழைக்கும் மக்களின் பாத்திரம் மாற்றப்பட்டது. தன் நடை, உடை, பாவனை என சகலமும் ஐரோப்பிய பாணிக்கு மாறிவிட்ட நடுத்தர வர்க்கம் என்கிற ஒன்று புதியதாகத் தோன்றியது.

அடிமை விலங்கு சற்று அகற்றப்பட்டது. புதிய பொருட்களின் வாசத்தை முதன் முதலில் மக்கள் நுகர்கின்றனர். மொத்தத்தில் முதலாளித்துவம் மக்களுக்கும் முதல் நன்மையைச் செய்தது. இதுவே சுதந்திரம் என்று பெயர் சூட்டப்பட்டது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனப் பிரகடனப் படுத்தப்படுகிறது. எல்லோரும் இந்நாட்டின் மன்னர்கள், எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் கல்வி, இவை எல்லாவற்றிற்கும் மேல் ஓட்டுப்போடும் உரிமை, அடடா! எத்தனை? எத்தனை உரிமைகள், நாளெல்லாம் பண்ணையாருக்கே உழைத்து, அவன் தரும் கஞ்சிக்கும், கூழுக்கும் அவனையே தெய்வமாக பூஜித்து வந்த மக்களுக்கு மேற்கண்ட உரிமைப் பிரகடனங்கள் உயர்வாகத் தோன்றியது நியாயமானதே.

உலகில் வேறெங்கும் கண்டிராத “மனிதனை மனிதன் தீண்டக்கூட கூடாது” என்ற கொடுமையை அனுபவித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பதைத் தந்த அரசாங்கத்தை எல்லாம்வல்ல பரமபிதாவாகப் பார்ப்பது வரலாற்று ரீதியான உண்மையும் நியாயமும் ஆகும்.

இவ்வாறாக இந்திய அரசு முறை முதன் முதலில் தன்னை மக்களுக்கான முதலாளியாகவும், தலைமை கர்த்தாவாகவும் நிலை நிறுத்திக் கொண்டது. 1958-ல் முதன் முதலில் ஆட்சி அமைத்த நேரு அவர்கள் ஐந்தாண்டுத் திட்டங்கள் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் திட்டங்கள் அமைத்தார்.

வங்கிகள், தொழிற்சாலைகள் முதலானவற்றை, அரசுடமையாக்கினர். இவ்வாறு அரசு இயந்திரம் தன்னை பலமிக்கதாக உருவாக்கிக் கொண்டது. இது ஒரு புறம், மறுபுறம் நிலம், கனரக தொழிற்சாலைகள், இரும்புத் தொழிற்சாலைகள், மடங்கள், மடங்களுக்குரிய சொத்துக்கள், வியாபார நிறுவனங்கள், இரப்பர் தோட்டங்கள், வியாபார நிறுவனங்கள் இன்னும் இது போன்ற சொத்துக்கள் யாவும் எப்படித் தனியார் வசம் இருந்தனவோ அப்படியே பாதுகாக்கப்பட்டது.

ஒரு சிறிய மாற்றம் என்னவென்றால் இதற்கு முன் அரசு அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. இப்பொழுது அரசின் பரிபூரண அனுமதிபெற்று, அதாவது பதிவுப் பெற்று இயங்கி வருகின்றன.

இவைகள் எல்லாவற்றையும், பாதுகாப்பதற்கும், அதாவது தனிச் சொத்துடமையை பாதுகாப்பதற்கும் அதனை மேலும் பெருக்குவதற்கும் அரசு என்கிற இயந்திரம் சிறப்பாகப் பணிபுரிந்து வருகின்றது. பண்ணையார்களும், முதலாளிகளும் புதிய வடிவம் எடுக்கிறார்கள். புது சக்தியைப் பெறுகிறார்கள். சொத்துக்கள் பெருக பெருக முதலாளிகளுக்கும், தொழிலாளிகளுக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகிறது. இதனூடே முதலாளிகள் தொழிலாளிகள் மீது செலுத்திய ஆளுகையும், பலாத்காரமும் பெருகிக் கொண்டே போகிறது. அவ்வதிகாரம் சட்டமாக வெளிப்படுகிறது. அதனைச் செயல்படுத்த நீதித்துறையும், காவல்துறையும், ராணுவத்துறையும் உருவாக்கப்படுகிறது.

இவ்வரசின் பாராளுமன்றப்  பாதையில் முதலாளிக்கும், தொழிலாளிக்கும் இருந்த உறவு மறைந்து, அரசிற்கும் மக்களுக்குமான உறவாக மாறிவிடுகிறது. இதையே முதலாளித்துவ அரசு முறை என்கிறோம். இந்த உருமாற்றம் ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் சர்வாதிகாரமாக வெளிப்பட்டது. இன்றைக்கு அமெரிக்க பாணியிலான வல்லரசு வடிவிலே இந்தியாவில் வெளிப்படுகிறது.

இந்திய அரசு முறையானது, சுரண்டுவோருக்கும், சுரண்டப்படுவோருக்கும் இடையே இணக்கம் காண முடியாததன் வெளிப்பாடே என்பது மேற்சொன்ன காரணங்கள் வாயிலாக நாம் தெரிந்துகொள்ள முடிகின்றது.

இதனால் சுரண்டுவோருக்கு பாதுகாவலனாகவும், சுரண்டப்படுவோரை அடக்குபவனாகவும் அரசு மாறி விடுகிறது. இப்படி மக்களைச் சிறிது சிறிதாக தனிமைப்படுத்திப் பொருளுக்கும், மனிதனுக்குமான உறவைப் பலப்படுத்தி, மனிதனுக்கும் சமூகத்திற்கும் உள்ள உறவை அறவே நீக்கிவிடுகிறது.

இவ்வாறாக அரசு இயந்திரம் மக்களிடமிருந்து தனிமைப்பட்டதாக, மாற்ற முடியாத சக்தி என்பதாக உருமாற்றப்படுகிறது. இந்தளவிற்கு முதலாளிகள் வளர்வதற்கு உழைத்த மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதன் பொருட்டு ஒன்று சேரவும், இயற்கையாக இவ்வமைப்பு வழிகோலுகிறது. இவ்வொன்று சேரும் பண்பு இன்று இந்தியாவில் மாநிலத்திற்குப் பல கட்சிகளாக மாறி நிற்கிறது.

இன்னும் குறிப்பாக ஒவ்வொரு சாதிக்கென்று ஓர் அமைப்பு, இவர்களுடைய ஒன்று சேருதல், இறுதியில் முதலாளித்துவ அரசு முறையில் இடஒதுக்கீடு கேட்டல், சம்பள உயர்வு கேட்டல் என்பதாக முடக்கப்பட்டு வருகிறது. அதற்கு மேல் இவ்வமைப்பில் எதையும் பெற முடியாத வகைக்குச் சட்டம் நம் கைகளுக்கு விலங்கு போட்டு வைத்திருக்கிறது. அவ்விலங்கை அறுத்தெறிவதற்கு மக்கள் பாட்டாளிகளாக எவ்வாறு சீனா, ரசியா, கியூபா, வட கொரியா போன்ற நாடுகளில் ஒன்று சேர்ந்தார்களோ அவ்வாறு சேராமல் பார்த்துக் கொள்வதிலும் இன்றைய ஆளும் வர்க்கம், மிகக் கவனம் செலுத்தி வருகிறது. இந்தக் கவனம் இவ்வரசு முறையின் தோல்விகளின் வெளிப்பாடுகளில் ஒன்று.

மக்களைச் சமாதானப்படுத்த அவ்வப்பொழுது சலுகைகள், இலவசத்திட்டங்கள், மக்கள் உயிர்வாழ சிறிய கூலிகள், நடுத்தர வர்க்கத்திற்கு கடன் உதவிகள் கொடுத்துத் தன்னைக் காப்பாற்றி வருவது முதலாளித்துவத்தின் வளர்ந்த நிலையைக் குறிக்கிறது.

இப்படித்தான் நாட்டு மக்களின் உழைப்பினால் தன் மூலதனத்தைப் பெருக்கிக் கொண்டு உலகமெங்கும் தன் தேச எல்லைகளைத் தாண்டி முதலாளித்துவம் தன்னை நிலை நிறுத்தி வருகிறது. தன்னைப் போன்ற நாடுகளோடு வர்த்தக உறவு, ஏற்றுமதி, இறக்குமதி செயல்பாடுகள், அன்னிய முதலீட்டிற்கு அனுமதி என்ற வகைகளில் இந்திய முதலாளித்துவ அரசு முறை தன்னை ஏகாதிபத்தியமாகப் புனரமைத்து வருகிறது. இதன் விளைவால் மக்களின் வாழ்க்கைச் சிதைந்து, வாழ்க்கைத்தரம் அடி நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

இப்பொழுது நாம் ஏகாதிபத்திய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே இதற்கெதிரான போராட்டங்களை முன்னெடுப்பதிலும் அதற்குத் தத்துவங்களைப் பரப்புவதிலும் ஈடுபட தவிர்க்க முடியாதவாறு நாம் இன்று தள்ளப்பட்டிருக்கிறோம்.

In this system, regionally-accredited institutions receive public funding in proportion to the do my essay for me cheap for http://essayprofs.com size of their student body

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

முதற் கருத்து பதிவாகியுள்ளது- “இந்தியா- ஒரு முதலாளித்துவ நாடு”
  1. bhairavi says:

    India-oru muthalithuva naadu article is one of the best articles. convey our regards to the author.

அதிகம் படித்தது