மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்த மண்ணு நம்ம பூமி

ஆச்சாரி

Feb 22, 2014

உடுமலை நாராயணகவி எழுதிய புகழ்பெற்ற பாடலொன்று “பட்டணம் தான் போகலாமடி பொம்பளே பணம் காசு தேடலாமடி” எனத் தொடங்கும். “எங்க வீட்டு மகாலட்சுமி (1959)” என்ற திரைப்படத்தில் மாஸ்டர் வேணு அவர்களால் இசை அமைக்கப்பட்டு, பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி.சுசீலா ஆகியோர் இந்தப் பாடலைப் பாடியிருப்பர்கள்.

இதனை நாட்டுப்புறப் பாடல் பாணியில் எழுதியிருப்பார் கவிஞர்.  இது ஒரு சாதாரண  கிராமியப்பாடல் அல்லது நாடோடிப்பாடல்,  இதற்கு மேல் இதில் என்ன இருக்கிறது என்று பெரும்பாலோர் நினைக்கலாம். ஆனால் இதனையே மானுடவியலாளர் (anthropologist) ஒருவர், “இலக்கியம் ஒரு காலத்தின் கண்ணாடி” என்று அறிந்தவர் நோக்கும் கோணம் வேறொன்றாக இருக்கும்.

பாடலின் கருத்து சுருக்கமாக; கிராமத்து விவசாயி ஒருவன் தனது மனைவியிடம் பட்டணத்திற்குப் பிழைக்கப் போகலாம் மூட்டையைக் கட்டிக் கொண்டு புறப்படு என்கிறான்.  மனைவி பட்டணத்திற்குப் பிழைப்பதற்குப் போனவர்கள் அனைவருக்கும் வாழ்க்கை நிலை சிரமம்தான். ஏதோ ஓரிருவர் வாய்ப்புக் கிடைத்து உயர்வர், பலருக்கு வாழ்க்கை துன்பமானதுதான், படித்தவர்களே படாத பாடு படுகிறார்கள், நம் ஊரிலேயே விவசாயம் செய்து பிழைக்கலாம் என்று கூறி, அனைவரையும் கவர்ந்திழுக்கும் பட்டண வாழ்கையின் மறுபக்கத்தை எடுத்துக் கூறுவாள்.  பிறகு கணவனும் மனைவி சொன்ன இந்த மண்ணு நம்ம பூமி இங்கேயே பிழைப்போம் என்ற வார்த்தையில் உள்ள அறிவுரைகளைப் புரிந்து விவசாயம் செய்து பிழைக்கலாம் என்று முடிவெடுப்பான் (முழுப்பாடலும் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது).

இது அக்காலத்தில், அறுபது ஆண்டுகளுக்கு முன்னர்,  கிராமமக்களின் வாழ்க்கை நிலையைப் படம் பிடித்துக் காட்டும் பாடல்.  நகரை நோக்கி கிராம மக்கள் பலர் பிழைப்பைத் தேடி புலம் பெயர்ந்ததை ஆவணப் படுத்துகிறது இப்பாடல்.

இது போலவே ஆங்கிலையர் இந்தியாவை ஆண்ட காலத்தில் பஞ்சம் பிழைக்க ரங்கூனுக்குப் போன ஒருவன் தான் பட்ட பாட்டையெல்லாம் சொல்லி அழுகிறான். அவன் கதை நாட்டுப் புறப்பாடலாக அமைந்திருகிறது.  பிழைக்க வழி தேடி புலம் பெயர்ந்த பாமர மக்கள் பற்றி இப்பாடல் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம்.

உள்ளூரிலேயே ஒழுங்காக வேலை பார்க்கத் தெரியாதவன் ஒருவன் தான் பணிபுரியும் இடங்களில் தினமும் அடி உதைப் பட்டு நோகிறான். அரசு அதிகாரி ஒருவன் அவனை அக்கரைச்சீமைக்கு பணியமர்த்த ஆளெடுக்கிறான்.  மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு,  தடுப்பூசி போட்டு, ஆடுமாடு போல கூட்டமாக அனைவருடனும் அவனைக் கப்பலில் அடைத்து  ரங்கூனில் உள்ள தேயிலை, ரப்பர் தோட்டத்திற்கு உழைக்க அனுப்புகிறார்கள். அங்கு ரப்பர் தோட்டத்தில் பாதி இராத்திரியிலும் வேலைக்கு கூப்பிட்டனுப்புகிறார்கள். பிறகு வேலை பார்க்கும் மற்றோரிடத்தில் மேஸ்திரி ஒருவன் இவனைக் கட்டி வைத்தும் அடிக்கிறான்.

உழைத்த பணத்தில் கள் குடிக்கச் செல்லும் பொழுது கலயத்தைத் தவறி உடைத்து விடுகிறான்.  பிறகு ஆட்டுக்குட்டி ஒன்று கத்தியதால் போதையில் மதியிழந்து அதன் கழுத்தைத் திருகிக் கொல்கிறான். அதற்கு ஈடாக குறைந்த விலை ஆட்டுக்கு பத்து வெள்ளி தண்டம் அழுதும், ஆட்டின் உரிமையாளன் பணத்தையும் வாங்கிக் கொண்டும், இவனை உதைத்தும் அனுப்புகிறான்.

கிறிஸ்துமஸ் விழா நடக்கிறது அவன் வேலை பார்க்கும் தோட்டத்தில், அதில் நல்ல கொண்டாட்டம். பிள்ளை பிறந்தால், பிள்ளை இறந்தால் என எந்த நிகழ்ச்சிக்கும் நல்ல பண உதவி செய்து ஆதரிக்கும் இவனது முதலாளி டங்கன் துரை கோபம் வந்தால் மனம் போன போக்கில் நன்கு  உதையும் கொடுப்பாராம். இரவு வேலைக்கும் தனியாக நல்ல சம்பளம்.  இவ்வாறு தாரள மனம் கொண்ட டங்கன் துரைக்கு சின்னப் பெண்களிடம் முறை தவறி நடக்கும் மனப்பான்மையும் உண்டாம்.

கங்காணிக்கு நிறையப் பணம் கொடுத்து அவனைத் தனது கைக்குள் போட்டுக் கொண்டு, அங்கு வேலை பார்க்கும் பெண்களிடம் கண்ணடிப்பது, அவர்களின் கையைப் பிடித்திழுப்பது போன்ற சில்லறைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவாராம். பஞ்சம் பிழைக்கச் சென்று படாத பாடு பட்டுவிட்டேன்,  என் கதையைச் சொன்னால் அது  கடவுளின் மனதையும் உருக்கிவிடும். தப்பி ஊருக்கே மீண்டும் ஓடி வந்து விட்டேன்.

    பஞ்சம் பிழைக்க ரெங்கோனுக்குப் போயி

        பட்டேனம்மா பாடெல்லாம்

    பட்ட பாட்டையெல்லாம் விட்டுச் சொன்னேனுண்ணா

        பகவானுக்கேற்காதம்மா!

நான் பட்ட துயரத்தை சொல்லி மாளாது, இனி ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் இனி அந்தத் தோட்டவேலைக்குப் போகவே மாட்டேன் என்று புலம்புகிறான் பஞ்சம் பிழைக்க ரங்கூனுக்குப் போன அந்தப் பாமரன். (முழுப்பாடலும் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது).

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ் படைப்புகளின் வழியாக  நாம் அக்கால மக்களின் வாழ்க்கைமுறையை அறியும் பொருட்டு ஆராயும் பொழுது, பெரும்பாலான நேரங்களில் நாடோடிப் பாடல்கள் குறிப்பதை, அந்த எளிய பாடல்கள் படம் பிடித்துக் காட்டும் மக்களின் வாழ்க்கைமுறைக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து அறிந்து கொள்ளாமல் தவறி விடுகிறோம்.

தமிழக நாட்டார் வழக்காற்றியலைப் பற்றி நாட்டுப்பாடல்கள் மூலம் அறிந்து கொள்ள விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டிய நூல்கள் இரண்டு. ஒன்று திரு. பெர்சி மெக்குவீன் (Percy Macqueen) அவர்கள் சேகரித்த பாடல்களை கி. வா. ஜகந்நாதன் அவர்கள் தொகுத்து வெளியிட்ட “மலையருவி” என்ற நூல். இது தஞ்சை சரஸ்வதி மகால் வெளியீடாக 1958 ஆம் ஆண்டு வெளிவந்தது.  இலக்கிய நயத்துடன் உள்ள பாடல்களைத் தெரிவு செய்து, நாடோடிப்பாடல்கள் பற்றிய சிறந்த ஒரு அறிமுக முன்னுரையையும் வழங்கியுள்ளார் ஆசிரியர்.

மற்றொரு சிறந்த நூலாகக் கருதப்படுவது, தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறை அறிஞர் பேராசிரியர் திரு. நா. வானமாமலை அவர்கள் 1964 ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்’ என்ற நூல்.  இந்த நூலின் சிறப்பு முன்னர் இக்கட்டுரையின் துவக்கத்தில், உடுமலை நாராயணகவியின் பாடலில் சுட்டிக் காட்டியது போன்றே, நாட்டார் பாடல்களை சமுதாயக் கண்ணோட்டத்தோடு அணுகும் முறையை வானமாமலை அவர்கள் அறிமுகப்படுத்தியது.  தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறையில் இந்நூலின் வரவு ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்றால் மிகையாகாது. பாமர மக்களின் ஆன்மாவையே நமக்கு படம் பிடித்துக் காட்டுவதாகப் பாராட்டப்பட்ட இந்நூலின் வழிகாட்டுதலின் பேரில் பல நாட்டார் வழக்காற்றியல் துறை ஆராய்சிகள் வெளிவந்தன. பல ஆய்வறிஞர்களை சமுதாயக் கண்ணோட்டத்தோடு நாட்டுப்பாடல்களை அணுகும் இந்த முறை ஈர்த்தது என நூலின் முன்னுரையும் அறிவிக்கிறது.

பாமரர் இலக்கியமாகிய நாட்டுப் பாடல்கள் கிராமப்புற வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புள்ளவை.  நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் (ஐவர் ராஜாக்கள் கதை, பஞ்சபாண்டவர், மதுரை வீரன், ராஜா தேசிங்கு, காத்தவராயன், முத்துப்பட்டன், மதுரைவீரன் போன்ற கதைப்பாடல்கள்) தவிர ஏனைய மற்றப் பாடல்கள் நாட்டுப்புற வாழ்க்கையின் அன்றாட சம்பவங்களையே பொருளாகக் கொண்டவை. வாழ்க்கையின் சாதாரண சம்பவங்களான பிறப்பு, குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், காதல், பொருந்தா மணம், குடும்ப விவகாரங்கள், கிராமத் தொழில்கள், பஞ்சம், கிராம தேவதைகள் முதலியனவே பெரும்பாலான பாடல்களின் கருத்தாக இடம் பிடிப்பன.

உடுமலை நாராயண கவியின் “பட்டணம்தான் போகலாமடி” பாடலை நாம் நாட்டுப்புறப் பாடலாக வகைப்படுத்த முடியுமா எனப் பார்ப்போம். பொதுவாக நாட்டுப்பாடல் என்பது வாய்மொழிப் பாடல்கள் மட்டுமே, அவை இதுவரை எழுதப்படாத பாடல்கள், எழுதியவர் யாரென்றே அறிய வழியில்லாது தொன்று தொட்டு வழங்கி வரும் பாடல்களையே தூய நாட்டார் பாடல்கள் என்றும், அவையே சிறந்த நாட்டார் கலை இலக்கியம் என்ற எண்ணமும் வழக்கில் உள்ளது.

“நாட்டுப் பாடலின் பொதுத் தன்மை என்பது அதை உருவாக்கியதில் இல்லை, அப்பாடல் பரவுதலில் தான் இருக்கிறது” என்று Folk Song in England என்ற நூலின் ஆசிரியர் லாயிட் (A. L. Lloyd, 1908-82) கூறுவதாக குறிப்பிடுகிறார் பேராசிரியர் திரு. நா. வானமாமலை. நாட்டுப் பாடல் என்றாலே வாய்மொழிப் பரவல் என்ற நம்பிக்கை தவறாக ஏற்பட்டுவிட்டது, அத்துடன் எழுதியவர் பெயர் தெரிவதால் மட்டும் அது நாட்டுப் பாடல் தன்மையை இழந்து விடாது. அசல் நாட்டுப் பாடல் என்பது நாட்டாரின் பண்பாட்டு மதிப்புகளுக்கேற்ப எழுதி, அது பரவுமானால் அதுவும் நாட்டுப் பாடலேயாகும் என்று பேராசிரியர் வானமாமலை விளக்குகிறார். இதனைத் தவிர்த்து, வாய்மொழிப் பாடல், எழுதப்படாத பாடல், தூய நாட்டார் பாடல் என்ற விதிமுறைகளை முன்னிறுத்துவதெல்லாம் நாட்டுப் பாடலின் உருவாக்குதலையும், பரவுதலையும் பற்றிய அறியாமையால் எழுவது என்றும், எழுத்தில் பரவும் முறை வாய்மொழிப் பரவலைவிட விரிவானது என்றும் குறிப்பிடுகிறார் வானமாமலை.

எழுத்தில் பரவும் நாட்டார் பண்பாட்டுப் படைப்புகள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்று வழங்கும் என்பதை எதிர்பார்க்க இயலாது, வாழுகிற மரபு என்பது எந்நாளும் வாழுகிற மரபும் அல்ல என்று குறிப்பிடும் அவர், சமூகப் பண்பாட்டு மாறுதல் ஏற்படும் வரை எந்த ஒரு மரபும் வாழும் பிறகு சிறுகத் தேய்ந்து புதிதாக உள்ள பண்பாட்டுப் படைப்புகளோடு சேர்ந்து புத்துருவம் கொள்ளும் என்று அதன் பரிணாம வளர்ச்சியையும் விளக்குகிறார்.

இதனை மேலும் விளக்கும் பொருட்டு:

(1) வாய்மொழிப் பரவல் => அச்சிடல் => அதிகப் பரவல் என்ற நிலையை அடைவது நாடோடிப் பாடல் அல்ல

(2) அச்சிடல் => வாய்மொழிப் பரவல் => அதிகப் பரவல் என்ற நிலையை அடைவது நாடோடிப் பாடல் ஆகும்

என்றும் குறிப்பிடுகிறார் பேராசிரியர் வானமாமலை.  அவர் குறிப்பிடும் பண்புகளைக் கொண்டு ஒப்பிட்டால், அதாவது… அசல் நாட்டுப் பாடல் என்பது நாட்டாரின் பண்பாட்டு மதிப்புகளுக்கேற்ப நாட்டார் வழக்காற்றியல் பற்றி எழுதப்பட்டு, அது பரவுமானால் அதுவும் நாட்டுப் பாடலாகும் என்பதைக் கருத்தில் கொண்டால் “பட்டணம் தான் போகலாமடி பொம்பளே” என்ற உடுமலை நாராயணகவியின் பாடலும் நாட்டுப் பாடல் வரிசையில் சேர்ந்துவிடுகிறது.

_____________________________________________________

பாடல்: பட்டணம்தான் போகலாமடி பொம்பளே

கவிஞர்: உடுமலை நாராயணகவி

காணொளி: http://youtu.be/9HpNCIItWN8

ஆண்:

ம்ம் ம்ம் .. மூட்டையைக் கட்டிக்கோ

பெண்:

எதுக்கு?

ஆண்:

பட்டணம் தான் போகலாமடி பொம்பளே

பணம் காசு தேடலாமடி

நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்

வாடி பொண்டாட்டி தாயே

பெண்:

டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே

டவுனாயிப் போயிடுவீங்க

அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம்

வேண்டான்னா கேளு மாமா

ஆண்:

கெட்டவுங்க பட்டணத்தை

ஒட்டிக்கோணும் என்பதாலே

பட்டிக்காட்டை விட்டுப்

போட்டு பல பேரும் போவதாலே

கட்டுச் சோத்தைக் கட்டிக் கொள்ளடி பொம்பளே

தட்டுச் சொன்னா கேக்க மாட்டேண்டி

நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும்

வாடி பொண்டாட்டி தாயே

பெண்:

வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க?

வெட்கக் கேட்டை சொல்றேன் கேளுங்க

அங்கே வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க?

வெட்கக் கேட்டை சொல்றேன் கேளுங்க

காலேஜு படிப்பு காப்பி ஆத்துதாம்

பி.ஏ. படிப்பு பெஞ்சு துடைக்குதாம்

ஆளை ஏய்ச்சி ஆளும் பொழைக்குதாம்

அஞ்சிக்கி ரெண்டு கஞ்சிக்கலையுதாம்

மேலே போனது நூத்திலே ஒண்ணாம்

மிச்சம் உள்ளது லாட்ரி அடிக்குதாம்

ஆண்:

எப்படி?

பெண்:

ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே

பண்ணாம தவிக்கையிலே

மாப்பிள்ளே ..ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே

பண்ணாம தவிக்கையிலே

உன்னாலே என்னாகும் எண்ணாம போனா

பின்னாலே கேளு மாமா

ஆண்:

ராத்திரி பகலா ரிக்ஷா இழுப்பேன்

நைசா பேசி பைசா இழுப்பேன்

அம்மா ..ஒதுங்கு ..ஒதுங்கு ..ஒதுங்கு…

ராத்திரி பகலா ரிக்ஷா இழுப்பேன்

நைசா பேசி பைசா இழுப்பேன்

டிராமா சினிமா சர்க்கஸ் பாப்பேன்

ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்

வேர்த்து புழுங்கினா பீச்சுக்குப் போவேன்

மீந்த பணத்திலே மீனு வாங்குவேன்

ஆத்தாடி உன் கையிலே குடுப்பேன்

ஆக்கச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்

பெண்:

மேலே?

ஆண்:

இதுக்கு மேலே சொல்ல மாட்டேண்டி பொம்பளே

இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி

நான் இப்போதே போவோணும்

உங்கப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி

பெண்:

மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை

வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை

கணக்குக்கும் மீறி பணம் வந்த போது

மனுஷனை சும்மா இருக்க விடாது

என்னை மறந்து உன்னை மறந்து

எல்லா வேலையும் செய்வே துணிந்து

இரவு ராணிகள் வலையிலே விழுந்து

ஏமாந்து போவே .. இன்னும் கேளு …

ஆண்:

அப்புறம்?

பெண்:

போலீசு புலி புடிக்கும் மாப்பிள்ளே

புர்ராவைப் பெயர்த்தெடுக்கும்

அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா

பொண்ஜாதி பேச்சைக் கேளு

ஆண்:

அப்பிடியா? ஆஹா…

நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி

நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி

ஊரு விட்டு ஊரு போனா

சீரு கெட்டுப் போகுமின்னு

உண்மையோட சொன்ன சொல்லு

நன்மையாக தோணுது

பட்டணம் தான் போக மாட்டேண்டி

உன்னையும் பயணமாக சொல்ல மாட்டேண்டி

நல்ல கட்டாணி முத்தே

என் கண்ணைத் தொறந்தவ நீ தான்

பொண்டாட்டி தாயே

பெண்:

மாமா…

ஆண்:

ஏம்மா?

பெண்:

என்னைத் தனியா விடவே மாட்டேனுன்னு

என் தலை மேலடிச்சி சத்தியம் பண்ணு

ஆண்:

எங்கப்பனானே சத்தியம் ..

சத்தியம் .. சத்தியம் ..

இருவரும்:

ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே

நீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி

நம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு

நாம் உல்லாசமாக வாழ்வோம்

_____________________________________________________

                ரங்கோன் வாழ்க்கை

பஞ்சம் பிழைக்க ரங்கோன் போனேன்

        கல்லைப் பிளக்கச் சொன்னான்

    கல்லைப் பிளக்க வகை தெரியாமே

        கையைப் பிளந்துக்கிட்டேன்.        [1]

 காளி சிலையைக் கணக்கா வரைந்துதான்

        கல்லிலடிக்கச் சொன்னான்

    கல்லுருட்டித் திரட்டி அடிக்கையிலே

        காலை ஒடிச்சுக்கிட்டேன்.           [2]

வீட்டுக்கு மூலைக் கல்லடிக்கச் சொன்னான்

        வீடெல்லாம் கட்டச்சொன்னான்

    வீட்டிலே குற்றங் குறையிருந்ததாலே

        வீசினான் சாட்டையாலே.           [3]

கோடிகோடிக் கல்லு கொண்டாரச் சொன்னான்

        குறுக்குக்கல் அடிக்கச்சொன்னான்

    குறுக்குக்கல் குட்டையாப் போனதனாலே

        கொடுத்தானே கன்னத்திலே.        [4]

நிலைக்கு மந்தாங்கியெல்லாமடிக்கச் சொன்னான்

        நிலையள வெல்லாஞ்சொன்னான்

    நேரா எல்லாத்தையும் பிளக்காததனாலே

        நிமிர்த்தினான் குச்சியிலே.          [5]

மூலமட்டத்தைக் கல்மேலே வைக்கச் சொன்னான்

        முலை வருவச் சொன்னான்

    மூலையிலே கொஞ்சம் கோணினதனாலே

        மூஞ்சி போச்சொரு குத்திலே.        [6]

சொல்லா வரட்டிச் சொகுசா நடக்கிறான்

        பல்லாயிரந் தச்சன்தான்

    எல்லாக்கல் தச்சனும் நல்லாப் பேசையிலே

        எனக்கேனடி முதுகிலே.              [7]

ரோதை ஓடையிலே காதை வைச்சுக் கேட்டேன்

        ரோதை போட்ட சத்தத்தைப்

    பாதி ஓடையிலே பாதகன் பண்டாரம்

        பக்கென்றுதைத்தான் என்னை.        [8]

                                                ******

 அலுப்பா நான் ரோட்டிலே அசந்து தூங்கையிலே

        *சலுக்காராள் அங்கே வந்து

    தளுக்கா என் ஊர் பேரெல்லாமே விசாரித்து

        இழுத்தான் முதுகிலே ரெண்டு.        [9]

ஆனி முடிந்தாடி மாசக் கடைசியில்

        ஆவடிக்குப் போனேன் நான்

    ஆடிமாசம் அடி வைக்கக் கூடாதுண்ணு

        அப்பத்தான் கண்டேனே நான்.         [10]

ஆவடி டாக்டரு  அருமையாத்தான் பேசி

        அரையெல்லாம் பார்க்கணுமின்னு

    திரையெல்லாம் இழுத்து அரையெல்லாம் சோதிச்சு

        அனுப்பினார் கப்பலுக்கு.              [11]

மாலைபோட்டு மாட்டைப் பொங்கல் வைச்சாப்போலே

        ஆளையெல்லாம் கூப்பிட்டு

    ஆளுக்கொரு ஊசி அருமையாத்தான் ஏத்தி

        அனுப்பினார் கப்பலுக்கு.              [12]

ஆணையும் பொண்ணையும் ஆடுமாடு போலே

        அடுக்கினான் கப்பலிலே

    ஆவடியில் ஏழு நாளு இருந்த சுகம்

        அமைஞ்சுச்சே கப்பலிலே.             [13]

போனோம் அம்மா அம்மா போனோம் அம்மா அம்மா

        பொழுது விடியுமட்டும்

    குருவி மலையிலே குருவியைக் கண்டோமே

        மறுநாளோர் ஊர்கண்டோமே.          [14]

அஞ்சு நாளும் போச்சு ஆறுநாளும் போச்சு

        நெஞ்சுந் துடிக்கலாச்சு

    கொஞ்சங் கூடச் சுதி மதியில்லாமே போச்சு

        சஞ்சலம் மிகுந்துபோச்சு.              [15]

 தேயிலை ரப்பரு தோட்டத்துக்கு ஆளு

        திரண்டு திரண்டு போச்சு

    தட்டு முட்டெல்லாந் தோள் மேலெடுத்து வச்சுத்

        தட்டுத் தடுமாறிப்போச்சு.              [16]

பாலெடுக்க ஆளு பாதி ராத்திரியிலே

        பரந்தடிச் சோடணுமே

    பாலொண்ணு ஆளொண்ணு

       சாலொண்ணு கோலொண்ணு

        பார்த்தால் வேடிக்கைதானே.          [17]

கல்லுடைக் கையிலே பல்லெல்லாம் போச்சம்மா

        களைக்காடு போனேனம்மா

    கணக்குக் குறைஞ்சதால் களைக்காட்டு மேஸ்திரி

        கட்டிவைத் தடித்தானம்மா.            [18]

களைக்கொத்தைப் போட்டுட்டுக் குழிவெட்டப் போய் நான்

        கணக்கைம்பது முடித்து

    கள்ளுக் கடைக்குள்ளே களையாற்றப் போய் நான்

        கலயத்தை உடைத்துட்டேன் நான்.      [19]

இட்டிலி தோசை இருபது பட்சணம்

        இருந்துச்சே கடைக்குள்ளேதான்

    ஒரு வெள்ளிச் சாக்கணா ஒண்ணு முழுங்கினேன்

        மறுவெள்ளியும் முடிச்சேன்.           [20]

காட்டையா வீட்டிலே ஆட்டுக் குட்டி ஒண்ணு

        கத்திக்கிட்டிருந்துச்சம்மா

    கள்ளுப் போதையிலே கண்ணுத் தெரியாமே

        கழுத்தைத் திருகிவிட்டேன்.            [21]

    ஒத்தை வெள்ளி பெறும் ஆட்டுக் குட்டிக்கு நான்

        பத்து வெள்ளி கொடுத்தும்

    பத்தரதுண்ணு அந்தப் பாதகன் காட்டையா

        பத்துதையுங்கொடுத்தான்.              [22]

 மார்கழி மாசம் இருபத்தஞ்சாந்தேதி

        மகராசன் தோட்டத்திலே

    தேரு திருவிழா கொட்டு முழக்கென்ன

        சேசு பிறந்ததாலே.                      [23]

சேசு பிறந்தாரு கேசுந் துறந்தாரு

        பீசுங் கிழிச்சாரம்மா

    கண்டாங்கிச் சீலையும் கலருப்பாவாடையும்

        கணக்கில் அடங்காதம்மா.                [24]

புள்ளை பெற்றால் வெள்ளி புள்ளை செத்தால் வெள்ளி

        புண்ணியன் டங்கன்துரை

    இல்லையென்னாமே கொடுத்தாதரிச்சாலும்

        இஷ்டம்போல் உதைகொடுப்பான்.        [25]

ராத்திரி வேலைக்கு ராச்சம்பளம் வேறே

        ராசா என் டங்கன்துரை

    சேத்துக் கொடுத்தாலும் சேட்டை பண்ணுவாரே

        சின்னப்பெண்ணைக் கண்டுட்டால்.       [26]

காலுச்சட்டை போட்டுக் கையை உள்ளே விட்டுக்

        கண்ணை நல்லாச் சிமிட்டிக்

    கங்காணிமாரைத்தான் கைக்குள்ளேதான் போட்டுக்

        காசுகளை யிறைச்சு.                    [27]

காடுண்ணுமில்லை மேடுண்ணுமில்லை

        வீடுண்ணும் இல்லையம்மா

    கண்ட இடமெல்லாம் கண்டகண்ட பொண்ணைக்

        கையைப் பிடிச்சிழுப்பார்.                [28]

                                                ******

பஞ்சம் பிழைக்க ரெங்கோனுக்குப் போயி

        பட்டேனம்மா பாடெல்லாம்

    பட்டபாட்டையெல்லாம் விட்டுச் சொன்னேனுண்ணா

        பகவானுக்கேற்காதம்மா.               [29]

 முக்கி முக்கி மூணு நாளு சொன்னாலுமே

        முடியாதம்மா என் கதை

    தப்பிச்சுப் பிழைத்து ஊர் வந்து சேர்ந்தது

        தம்பிரான் புண்ணியமே.                [30]

அண்ணன்மாரே எங்கள் அக்காமாரே நானு

        அலசடிப் பட்ட கதை

    அஞ்சுநாளு சொல்லி நெஞ்சுலர்ந்திட்டாலும்

        ஆறாதே என் துயரம்.                   [31]

ஆயிரம் ரூபாயி கொடுத்திட்டாலும் அந்த

        அனாதிப் பயல் காட்டுக்கு

    அடியெடுக்கமாட்டேன் ஆடி மாசத்திலே

        அம்புட்டுப் போதுமம்மா.               [32]

________________________________________________________________________________

*சலுக்கார் ஆள் – சர்க்கார் அதிகாரி

படித்த நூல்கள்:

[1]

நூல்: மலையருவி (நாடோடிப் பாடல்கள்)

பாடல்கள் சேகரித்தவர்: திரு. பெர்சி மெக்குவீன் (Percy Macqueen)

தொகுத்தவர்: கி. வா. ஜகந்நாதன்

வெளியீடு: தஞ்சை சரஸ்வதி மகால் வெளியீடு எண்: 77

பதிப்பு: 1958 ஆண்டு பதிப்பு

http://www.tamilvu.org/library/nationalized/pdf/46.KI.VA.JA/MALAIARUVI.pdf

[2]

நூல்: தமிழர் நாட்டுப்பாடல்கள்

ஆசிரியர்: நா.வானமாமலை,எம் ஏ.,எல்.டி.

பதிப்பகம்: நியூ செஞ்சுரி புத்தக வெளியீட்டகம்

பதிப்பு: ஆறாம் அச்சு, 2006

http://www.tamilvu.org/library/nationalized/pdf/13-navanamamalai/TamizharNattupPadallagal.pdf

 


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்த மண்ணு நம்ம பூமி”

அதிகம் படித்தது