மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இன்றும் ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) சரியா?

ஆச்சாரி

Jan 11, 2014

மேடை முழுவதும் வேட்டி கட்டிய ஆண்கள். ஆளும் கட்சியின் கரைவேட்டிகள் சற்று தூக்கலாத்  தெரியும். மேடையின் கீழ் சவுக்கு கட்டையால் கட்டிய வேலிக்குள்  ஒரே மாதிரியான அரைக்கால் சட்டை மற்றும் மேலாடை அணிந்த இளைஞர்கள் கூட்டம். அத்தனை இளைஞர்களின் பார்வையும், மேடையின் கீழே இருக்கும் எட்டடி உயரம், மூன்றடி அகல ஒடுக்கமான (கிட்டி வாசல்) பாதையில் தான். ஒலி பெருக்கியில் “அடுத்து வருவது கருவனூர் வேல்முருகன் மாடுய்யா, இதை அணைஞ்சவங்களுக்குப் பரிசு  ராஜ்மகால் ஜவுளிக்கடை வழங்கும் ஆயிரம் ரூபாய் பட்டு சேலை” என்று குரல் ஒலிக்க வர்ணம் பூசப்பட்ட கருப்புக்  காளை அந்த ஒடுக்கமான பாதையில் இருந்து திமிரிக் கொண்டு வெளிவருகின்றது.பாதையின் இருபுறமும் வெகு அருகில் இருக்கும் ஒரு இளைஞர், மாட்டின் திமிலைப் பிடிக்கத் தாவ மாடு வழுக்கிக்கொண்டு ஓடுகின்றது. தூரத்தில் நின்ற இளைஞர்கள் இருவர் ஒரே நேரத்தில் ஓடி மாடின்  திமிலை இருபுறமும் இருந்து பிடிக்க “ஒருத்தர் பிடி, ஒருத்தர் பிடி” என்று ஒலி பெருக்கி அலற ஒரு இளைஞர் விலகி ஓடுகின்றார். மாட்டைப் பிடித்திருக்கும் இளைஞர் மாடுடன் குதித்து திமிலை விடாமல் மல்லுகட்டி கொண்டிருக்கையில் ஒலி பெருக்கியில் “மாடு பிடிமாடுயா” என்றும் “பிடிமாடு இல்லையா” என்றும் மாறி மாறி வர்ணனை வந்து கொண்டிருக்கும்.

சில நொடிகளில் மாடு வழுக்கி ஓடுகின்றது. “மாட்டுகாரனுக்கு பரிசுயா” என்று மேடையில் இருந்து பரிசுப் பொருள் கீழே மாட்டுக்காரரை நோக்கி போடப்படுகின்றது. “அடுத்து பாலையூர் ஆறுமுகம் மாடு ஒரு கிராம் தங்கக் காசு” என்று வெள்ளை நிற இளங்காளை அனுப்பப்படுகின்றது. மீண்டும் இளைஞர்கள் தாவ இடதுபுறம் இருந்து ஒருவரைக் கொம்பில் முட்டி தூக்கி வலதுபுறம் வீசுகின்றது. அடிபட்ட இளைஞர் எழுந்து ஓட மாடு மற்றவர்களிடம் இருந்து திமிறிக்கொண்டு ஓடுகின்றது.  வேலிக்கு வெளியில் நிற்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் இருந்து பெரும் கூச்சல் காதைப் பிளக்கின்றது. ஒலி பெருக்கியின் அலறலை மீறி கேட்கும் ஒரே வார்த்தை “பிடி”. “பிடிச்சிட்டான்யா, மாப்ள நம்மாளு சட்டையில ரத்தம், என்னப்பா கொஞ்ச நேரமா ஒன்னையும் பிடிக்கமாட்டேங்கிரானுக” என்பது போன்ற உரையாடல்கள் விசில் சத்தத்தில் கரைந்துவிடுகின்றன.

அனைவருக்கும் மகிழ்வான நிகழ்வாக ஏறு தழுவல் தோன்றினாலும் சிலர் மட்டும் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

ஏறு தழுவலுக்கு பயிற்சி என்பதன் பேரில் மாட்டைக் கொடுமைப்படுத்துகின்றார்கள்.
மாடு பிடிபடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாட்டின் வாயில் சாராயத்தை ஊற்றியும் கண்ணில் எலுமிச்சைச் சாறு அல்லது மிளகாய்ப்போடி தூவியும் அனுப்புகின்றார்கள். மாட்டைப் பிடிக்கும் பொழுது அதன் வாலைப் பிடித்து இழுக்கின்றனர், திருகுகின்றனர், சிலநேரம் கடிக்கின்றனர்.
கூச்சலில் நடுவே கூட்டத்தை பார்த்து மாடு பயந்து மிரள பலர் ஒரே நேரத்தில் பாய்ந்து துன்புறுத்துகின்றனர். அவ்வப்போது மாடு விழுந்து அடிபட்டுவிடுகின்றது. என்பது போன்ற பல குற்றச்சாட்டை விலங்குகள் நல அமைப்பினர் அடுக்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தை பிறப்பதற்கு முன்னரே விலங்குகள் ஆர்வலர்கள் தங்களது பரப்புரையையும், சட்டப் போராட்டத்தையும் தொடங்கிவிடுகின்றனர். இந்த ஆண்டும் இதற்கு விதிவிலக்கல்ல.  இத்தனை குறைகள் இருப்பதால் ஏறு தழுவலை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்பதே விலங்குகள் ஆர்வலர்கள் போராடும் கோரிக்கை.

ஆயிரகணக்கான ஆண்டுகளாக நடந்துவரும் இந்தக் காட்டுமிராண்டித் தனத்திற்கு இந்த நாகரிக காலத்தில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், உடன்கட்டை ஏறுதல் போன்ற முட்டாள் தனமான பாரம்பரியங்களை கைவிட்டதைப் போன்று ஏறு தழுவலையும் கைவிட வேண்டும் என்பது விலங்குகள் ஆர்வலர்களின் வாதங்கள்.

விலங்குகள் ஆர்வலர்கள் மிகச் சரியான கேள்விகளை எழுப்பி, தவறான தீர்வை முன்வைக்கின்றனர். ஒரு செயலில் தவறுகள் இருந்தால் தவறுகளைக் களைவது தான் சரியான தீர்வாக இருக்குமே ஒழிய அதைத் தடை செய்வது எப்படித் தீர்வாக இருக்க முடியும். நம் நாட்டின் முதல் நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகம் தொட்டு ஏறு தழுவல் நடந்து வருகின்றது. மொகஞ்சாதராவில் கண்டெடுக்கப்பட்ட நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முத்திரை ஒன்றில் தெளிவாக ஏறு தழுவல் சிற்பமாக பொறிக்கப்பட்டிருக்கின்றது. நீலகிரி மாவட்டத்தில் கரிக்கியூர் பகுதியில் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களிலும் ஏறு தழுவல் காணப்படுகின்றது. மனித வரலாற்றில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் ஒரே விளையாட்டாக ஏறு தழுவல் இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தொன்று தொட்டு ஏறு தழுவல் நடத்துபவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மாடுகளுடன் வாழ்பவர்கள். அதில்  பலர் மாடுகளின்றி தங்களுக்கு வேறு வருமானமும் இல்லை, வாழ்க்கையும் இல்லை என்ற நிலையில் இருப்பவர்கள். அவர்கள் யாரும் திட்டமிட்டு வேண்டும் என்று மாடுகளைத் துன்புறுத்துவதில்லை. இவர்கள் தங்கள் மாடுகளின் மீது இருக்கும் அன்பினால் மாட்டிறைச்சி என்றும் உண்பதில்லை. மத நம்பிக்கைகளுக்காகக் கூட மாடுகளைப் பலி கொடுக்க மாட்டார்கள்.  இருப்பினும் விலங்குகள் நல ஆர்வலர்கள் சுட்டிக்காட்டும் குறைகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

ஏறு தழுவல் விளையாட்டின் விதிமுறைகளை இன்றைய சட்டங்களுக்கு ஏற்ப மாற்றினால் இது போன்ற குறைகளைத் தவிர்க்க முடியும். நூற்றுகணக்கான ஆண்டுகளாக நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டில் கூட ஊக்க மருந்து பயன்படுத்துவது போன்ற குறைகளைத் தவிர்க்க புதிய விதிமுறைகளை சேர்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். விலங்குகள் ஆர்வலர்களின் உண்மையான கோரிக்கை மாடுகளைத் துன்புறுத்துவது தவிர்க்க பட வேண்டும் என்பது மட்டும் எனில், அவர்கள் ஏறு தழுவல் நடத்துபவர்களை எதிர்ப்பதை கைவிட்டு ஏறு தழுவல் நடத்துபவர்களுடன் இணைந்து செயல்படுவதே சாதகமான பலன் தரும்.

இரு துருவத்தினரும்  இணைந்து விலங்குகள் நலன்களுக்கான சட்டங்களை ஆராய்ந்து ஏறு தழுவலின் விதிமுறைகளைத் திருத்தி வெளியிட வேண்டும். ஏறு தழுவலின் விதிமுறைகளைச் சர்வதேச விளையாட்டுகளில் கடைபிடிப்பது போன்று வெளிப்படையாகவும்,  கண்டிப்பாகவும் கடைபிடிக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களையும், காளைகளையும் போட்டி முடிந்த உடன் அரசு விளையாட்டுத் துறை அலுவலர்களும் மருத்துவர்களும் பரிசோதிக்க வேண்டும். போட்டியின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு சிறை தண்டனை உடனடியாக வழங்கவேண்டும்.  ஏறு தழுவலைச் சீரமைத்து தமிழக அரசு விளம்பரப்படுத்தி வளர்க்க வேண்டும். இதை ஒரு மிகச் சிறந்த சுற்றுலாவாகக் கவரும் நிகழ்வாக அரசால் எளிதாக மாற்ற இயலும். அனைத்து மாவட்டங்களிலும் திட்டமிட்ட தேதிகளில் பெரும் விளம்பரத்துடன் ஆடம்பரமாக நடத்தி அரசிற்கும் பெரும் வருவாய் ஈட்ட முடியும். ஸ்பெயின் நாட்டில் நடக்கும் காளைப் போட்டியின் பொருளாதார மதிப்பு ஆண்டிற்கு பத்தொன்பதாயிரம் கோடி ரூபாய். ஸ்பெயினில் ஆண்டு தோறும் பத்தாயிரத்திற்கும் மேலானோர் இதனால் வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.

ஏறு தழுவலை ஊக்குவித்து சுற்றுலாப் பொருளாதாரத்தை வளர்த்தால் நலிவடைந்து வரும் விவசாய தொழிலாளர்களுக்குப் பெரும் நலமாக அமையும்.
பெருமளவில் ஏறு தழுவல் காளைகள் வளர்க்கப்பட்டால், கேரளாவிற்கு இறைச்சிக்கு அனுப்பவது ஓரளவிற்கு குறையும். மக்களுக்காகவும், மாடுகளுக்காவும் ஏறு தழுவலை சீரமைத்து தூக்கி விடவேண்டியது .அனைவரின் கடமை.

To http://trackingapps.org make matters worse, you can’t change or delete bad reviews

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இன்றும் ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) சரியா?”

அதிகம் படித்தது