மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இன்றைய உழைப்பாளர்களின் உண்மை நிலை (கட்டுரை)

ஆச்சாரி

May 1, 2013

இன்று மே 1 உழைப்பாளர் தினம். வட அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கம் 1886-ல் மே-1 ம் தேதி தொடங்கப்பட்டது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே வேலை தர வேண்டும் எனக் கோரி வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஒரு வெடிகுண்டுத் தாக்குதல் சிகாகோவில் நடந்தது. அதில் காவல் துறையினர், தொழிலாளர்கள் உட்பட 12 பேர் இறந்தனர். இதன் பின்விளைவாக தொழிலாளர்களின் தினசரி வேலைக்கால அளவு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நாளை ஐரோப்பிய, அமெரிக்க இடது சாரி இயக்கங்கள் உலகத் தொழிலாளர் தினமாக அனுசரிக்கத் தொடங்கின. சோவியத் அரசு உருவான போது அவர்களுக்கு வருடாந்திர சடங்கோற்சவங்கள் தேவைப்பட்டன. எதற்காகத் தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்பட்டது. மே 1 உலகமெங்கும் உள்ள சோவியத் தொழிலாளர்கள் அதை அப்படியே பின்பற்றி தங்கள் நாடுகளில் செயல்படுத்த ஆரம்பித்தனர். இதுவே மே 1 சர்வதேச தொழிலாளர் தினமான கதை.
வெவ்வேறு உலகெங்கும் உழைக்கின்ற தொழிலாளர்கள் இருக்கின்ற இந்த பூமியில் தங்கள் வியர்வை சிந்தி உழைக்கின்ற இந்த தொழிலாளர்களுக்காக உலகமெங்கும் கொண்டாடப்படும் ஒரே நாள் மே 1. இந்த நல்ல நாளில் நம் தமிழகத்தில் உழைக்கின்ற சாதாரண தொழிலாளர்கள் சிலரைப் பற்றி இங்கே காண்போம்.

கதிர்வேல் – (துணி தேய்ப்பவர்):
எனக்கு 60 வயது ஆகிறது. எனது சொந்த ஊர் கள்ளக்குறிச்சியில் உள்ள சங்கராபுரம். சென்னைக்குப் பிழைப்பு தேடி வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. எனக்கு 3 மகன்கள் உள்ளனர். எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்தத் துணி தேய்க்கும் வேலையில் ஒரு நாளைக்கு நிறைய துணிகள் வரும், ஒரு நாளைக்கு மிகக் குறைவாகவே வரும். குறைந்தது ஒரு நாளைக்கு 300 ரூபாய் வரை துணி தேய்த்துச் சம்பாதிக்கிறேன். சட்டைக்கு 5ரூபாய் , சேலை மற்றும் வேட்டிக்கு 10 ரூபாய்.
இப்போது மூன்று மகன்களும் திருமணமாகி சென்றுவிட்டதால் எங்களை யாரும் கவனிப்பதில்லை. நானும், என் மனைவியும் தனியாக வசித்து வருகிறோம். கடந்த 2006 ஜனவரி 26ல் எனது வலது கால் ஒரு விபத்தில் உடைந்து விட்டது. அதனால் காலுக்குள் ஒரு பிளேட் வைத்து நடக்கின்றேன். தொடர்ச்சியாக ஒரு நாள் முழுவதும் நின்று தேய்க்க முடியவில்லை. இதை விட எனக்கு பெரிய கஷ்டம் என்ன என்றால் நான் துணி தேய்த்துப் பல வருடமாக சிறுகச் சிறுக சேர்த்து வைத்த ஒன்னரை லட்சம் ரூபாயை எனது கடைசி மகன் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். அதனால் இந்த வயதான காலத்தில் செலவுக்குப் பணம் இல்லாமல் தவிக்கிறேன் என என்னிடம் கதறி அழுதே விட்டார். அதே போல இந்த தேனாம்பேட்டை பகுதியில் 30 வருடத்திற்கு முன்னால் ஒரு இடம் வாங்கி ஏமாந்துவிட்டேன் கடைசியில் இந்த இடம் அரசுக்குச் சொந்தமான இடமாம். இப்படி இந்த சென்னை வந்து நான் பலரிடம் ஏமாந்திருக்கேன் ஏதோ இந்தக் கால் நன்றாக இருக்கும் வரை நானும், என் மனைவியும் கால்வயிற்றுச் சோறாவது குடிப்போம். இல்லை என்றால் போய்ச் சேர வேண்டியது தான் என்றார். பெற்ற பிள்ளைகளின் ஏமாற்றத்தாலும், மற்றவர்களின் ஏமாற்றத்தாலும் வாழும் பல மனிதர்கள் இந்த மண்ணில் இருந்தாலும் வயதான காலத்தில் பிறரை நம்பி வாழாது தன்னை நம்பி வாழும் அவருக்கு தாழ்வான வணக்கம் சொல்வதைத் தவிர எனக்கு வேறொன்றும் தெரியவில்லை.

சிவக்குமார், முருகன் (குப்பை பொறுக்குபவர்கள்):
தேனாம்பேட்டையில் அதிகாலை 7.30 மணிக்கு சொக்கலிங்கம் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். இந்த இருவரும் பிளாஸ்டிக் டப்பா, காகிதம், காலியான தண்ணீர் பாக்கெட் எனப் பலவற்றைப் பொறுக்கி பெரிய நைலான் கோணியில் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களிடம் இந்த குப்பை பொறுக்கும் வேலைப் பற்றிக் கேட்டபோது சொன்னார்கள், எங்க ஏரியா கொருக்குப் பேட்டை இந்தக் குப்பைகளை விற்றுத்தான் கடந்த 4 வருசமாக பிழைக்கிறோம். படிக்கவில்லை. வீட்டில் வறுமை, எவன்கிட்டயும் வேலை பார்க்கப் பிடிக்கவில்லை. அதனால் தான் இந்த சுயதொழில் வேலை செய்கிறோம். ஒரு கிலோ காகிதம் பொறுக்கிப் போட்டா 5 ரூபா கொடுப்பாங்க. பழைய வாட்டர் கேன்களை போட்டா கேனுக்கு 2 ரூபாய் கொடுப்பாங்க. தினமும் காலையில் இருந்து இரவு வரை இந்த காகிதம் பொறுக்கும் வேலைதான் செய்கிறோம். இரவில் எந்தக் கடையின் முன்போ அல்லது சாலை ஓரத்திலோ தூங்கி விடுவோம். மழை வந்தால் எங்கள் வேலை பாதிக்கும். ஒரு நாளைக்கு குறைந்தது 200 ரூபாய் சம்பாதிப்போம். அதிலேதான் நாங்கள் உணவு உண்கிறோம். எங்கள் தோற்றத்தைக் கண்டு எந்தக் கடையின் உள்ளே எங்களை சாப்பிட அனுமதிப்பதில்லை. ஆதலால் உணவை பார்சல் வாங்கி வெளியே சாப்பிடுவோம். இரவில் சாலை ஓரம் படுத்திருக்கும் போது, சில இரவு நேர காவலர்கள் எங்களை சந்தேகத்தின் பேரில் பிடித்துள்ளனர், அடித்துள்ளனர். சில நேரம் எங்களிடம் இருக்கும் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு போகும் காவலர்களும் உள்ளனர். ஏதோ வாழ்க்கை ஜாலியாக போய்க்கொண்டிருக்கிறது. தினமும் சாப்பிட்டாலே போதும். இதுதான் எங்கள் லட்சியம் என்று கூறும் இருவரையும் காணும் போது எனக்கு என்ன சொல்வதென்றே  தெரியவில்லை.
மிருகங்களின் அதிகபட்ச போராட்டம் உணவுக்காக மட்டுமே. இவர்களையும் காணும்போது மனிதர்கள் கூட நன்கு வளர்ச்சியடைந்த இக்காலத்தில் கூட உணவுக்காக மட்டும் வாழ வேண்டிய அவல நிலை இன்னும் இங்கே இருக்கிறது. எங்கே இந்தியா ஒளிர்கிறது? எங்கே வல்லரசாகிறது?

ரஞ்சித் (ஆட்டோ ஒட்டுநர்):
அண்ணாசாலையில் உள்ள காமராசர் அரங்கம் எதிரே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் இருக்கும் ரஞ்சித் என்ற ஆட்டோ ஓட்டுனரைச் சந்தித்தேன், அவர் கூறியதாவது எனக்கு வயது 29 ஆகிறது. பி.காம் படித்திருக்கிறேன். கடந்த 13 வருசமா இந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இது எனது சொந்த ஆட்டோ இல்லை. வாடகை ஓட்டுனராக வேலை செய்கிறேன். குறைந்தது ஒரு நாளைக்கு 150 ரூபாய் சம்பாதிப்பேன். இதில் ஆட்டோ ஓனருக்கு தினமும் 300 ரூபாய் கொடுத்து விடவேண்டும். மீதி, ஓட்டுவது தான் எனக்குச் சம்பளம்.
இங்கே நிறைய ஆட்டோக்கள் பெருகி விட்டதால் ஒரு சவாரி கிடைப்பது கூட குதிரைக் கொம்பு போல் ஆகி விட்டது. நாங்களாகவே சாலையில் செல்பவரை ‘வாங்க சார்’ என அழைக்க வேண்டியுள்ளது. சிலர் சவாரி செய்தபின் பேசிய பணத்தைச் சரியாகக் கொடுத்து விடுவர் சிலர் பேசியதற்கும் குறைவாகக் கொடுத்து போதும், போப்பா என விரட்டுவர்  சிலர். ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பகுதிக்குச் செல்லச் சொல்வர் அந்தக் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்றதும் இப்படி போங்க, இங்கே இல்லை, அங்கே எனக் கூறி அரை கிலோ மீட்டர் வரை அலையவிடுவர். பேசிய பணத்தையும் சரியாகக் கொடுக்காமல் சண்டை போடுவர். இதை விட பெரிய கொடுமை, இந்த சென்னை நகரத்திற்குள் ஆட்டோ ஓட்டுவது அதுவும், பயங்கரமான வாகன நெருக்கத்தில் (டிராபிக்) ஆட்டோ ஓட்டுவதும் எவ்வளவு கஷ்டம் என நீங்கள் ஓட்டும் போது தான் தெரியும். இங்கே ஓட்டும் பல பேருக்கு லைசன்ஸ் இல்லை, ஏன் சரியாக வண்டி கூட ஓட்டத்தெரியவில்லை, விழுகின்ற சிக்னலை மதிக்கத் தெரியவில்லை இவர்கள் செய்யும் தவறினால் பிற வாகனம் ஓட்டுபவர்கள், குழம்பி விபத்து ஏற்படும் அபாய சூழ்நிலை இங்கே நிலவுகிறது.
அடுத்த பிரச்சனை பெட்ரோல், டீசல் விலை உயர்வு இப்படி விலை ஏறுவதால் நாங்களும் கணிசமாக கட்டணத்தொகையை உயர்த்த வேண்டி உள்ளது. இதனால் வரும் பயணிகள் பயணத்தொகையைக் கேட்டதும் நடந்து விடுகின்றனர். இந்த விலை ஏற்றத்தால் இப்போது இந்த ஆட்டோவுக்கு (கேஸ்) எரிவாயுவைக் கொண்டு ஓட்டுகிறேன்.
இந்தச் சம்பளத்தைக் கொண்டு சென்னை நகரத்தில் என் மனைவி, இரண்டு குழந்தைகள், வாடகை வீடு போன்றவைகளை சமாளிக்க முடியவில்லை. இருந்தாலும் வாழ வேண்டிய கட்டாயச் சூழ்நிலை. இதில் காவலர் தொல்லை வேறு. சில காவலர் ஞாயமாக நடந்து கொள்கின்றனர். சிலர் தேவையில்லாமல் ஆட்டோவை மடக்கி சில்லரை சம்பாதிக்கின்றனர். தவறுகள் செய்து செய்து லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தவறே இல்லை என மக்கள் நினைக்கும் அளவிற்கு இங்கே சூழல் மாறிவருகிறது எனப் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு சவாரி அவருக்கு அமைந்ததும் ‘வரேன் சார்’ என எனக்கு விடை கொடுத்தார். அன்றே பி.காம் படித்தவர்களின் நிலை இப்படி என்றால் நாளை படித்து வரும் இளைஞர்கள் நிலை என்னவாகுமோ? என்ன வேலை செய்து பிழைக்கப்போகிறீர்களோ?

பாண்டி (விவசாயக் கூலி,பறை வாசிப்புக் கலைஞர்)
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள நாட்டாமங்கலம் என்ற கிராமத்தில் வசிப்பவர் பாண்டி என்பவர் வயலுக்கு மருந்தடித்துக் கொண்டிருக்கும் இவரிடம் பேசியபோது, எனக்கு சொந்த ஊரு கொடிக்குளம். எனக்கு முக்கிய வேலை தப்படிக்கிறது தான் (பறை வாசிப்பது) . கல்யாணம் , காதுகுத்து, திருவிழா என்று வந்த விழாவுக்கு நாங்க சென்று தப்படிப்போம். எங்க குழுவில் நான் மற்றும் பள்ளியில் படிக்கக் கூடிய எனது இரண்டு மகன்களும் தப்படிப்பார்கள். இந்த தப்பாட்டத்தில் இரண்டு காளை மாடு வேசம் கட்டியும் ஆடுவோம். அதனால் எல்லா நாட்களிலும் விழாக்கள் வருவதில்லை. அதனால் எங்களுக்கும் தப்படிக்கும் வேலை இருக்காது. அப்படி விழாக்கள் இல்லாத நாட்களும் வயலில் களை வெட்டவும், கரும்பு வெட்டவும், வைக்கோல் கட்டவும், வரப்பு வெட்டவும், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சவும், வயலில் இரவு நேர காவலுக்கும், வயலில் பயிர்களுக்கு மருந்து அடிக்கவும் செல்வோம். இப்படித்தான் வாழவேண்டும் என்பதை விட எப்படியாவது வாழவேண்டும் என்பது தான் எங்களின் இன்றைய நிலை.

வயலில் கூட எல்லா நாட்களிலும் கூலி வேலை இருக்காது. மழை பொய்த்துப் போனால் கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் கிடைத்த கூலி வேலை செய்யக் கிளம்பி விடுவோம் இங்கு எந்த வேலை செய்தாலும், சொற்பமான பணமே கிடைக்கிறது. இதை விட்டால் எங்களுக்கும் வேறு வழி இல்லை. நான் படிக்கவும் இல்லை. எனது குழந்தைகளாவது நன்கு படித்து நல்ல வேலையில் அமர வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் இன்று அவர்களைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.
நாங்கள் முன்னேறும் நல்ல காலம் பிறக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. இவ்வாறு பல்வேறு தொழில்களைச் செய்து தானும் வாழ்ந்து கொண்டு பிறரையும் வாழவைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவரையும் போற்றி வணங்கும் பொன்னான நாள் இது.
உழைப்பாளர்கள்
சிலையில் கூட
உழைத்துக் கொண்டுதான்
இருக்கிறார்கள்
தலைவர்கள்
சிலையில் கூட
பேசிக்கொண்டுதான்
இருக்கிறார்கள்.
என்று கவிஞர் பொன்.செல்வ கணபதி எழுதிய கவிதையில் நாட்டின் எதார்த்த உண்மைகள் எப்படி வெளிப்படுகின்றன. இன்னும் இதுபோலவே இல்லாமல் இன்றைய தொழிலாளி, நாளைய முதலாளியாக உருவெடுக்க வேண்டும். என்பதைக் தவிர நம் ஆசை வேறென்ன இருக்க முடியும்.
அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!!

The group chat feature, which on one hand might be wonderful for homework sessions, can also allow cyberbullies to reach wider http://www.topspyingapps.com/ audiences

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இன்றைய உழைப்பாளர்களின் உண்மை நிலை (கட்டுரை)”

அதிகம் படித்தது